Showing posts with label காதலிக்கலாம் வா. Show all posts
Showing posts with label காதலிக்கலாம் வா. Show all posts

Tuesday, July 26, 2011

காதலிக்கலாம் வா - 6

சின்ன சின்ன கண்ணைக்கொண்டு
கொத்தித் தின்றாய் என்னையின்று
வண்ண மயில் தோகையென்ன
காட்டி நின்றாய் சேலைகொண்டு

பெண்மை உந்தன் நடையைக்கண்டு
தத்தளித்தேன் தரையில் நின்று
பேதை உன்னை முழுதும் கண்டு
பித்தனானேன் சித்தம் கொன்று

ஜென்ம ஜென்ம பந்தமென்று
சொல்லி வைத்த விந்தையெல்லாம்
உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
ஆனதிங்கு உண்மையென்று...

Thursday, July 21, 2011

காதலிக்கலாம் வா - 5

காலர் தூக்கிய சட்டை
சவரம் செய்யா தாடி
டீக்கடை கேலிப் பேச்சு
தீயாய் அழிக்கும் கோபம்
பார்ப்போர் அஞ்சும் பார்வை
யார்க்கும் வணங்கா திமிரு
லட்சியம் இல்லா போக்கு
எல்லாம் தொலைந்தது எங்கோ - உன்
கொல்லும் பார்வையால் இன்று...

காதலிக்கலாம் வா - 4

கண்ஜாடை காட்டிப்புட்ட
அழகாக - அது
என்னையுந்தான் ஆக்கிடுச்சு
புள்ளாக

சொன்னாயே ஒரு சொல்லை
பதமாக - அது
சொர்க்கந்தான் காட்டுதெனக்கு
இதமாக

ஊர்முழுக்க மேளம்கொட்டி
சொல்லிப்புட்டு - உன்னை
பரிசமிட்டு பாய்ஞ்சணைக்க
ஓடிவர்றேன்...

பரிசமதை போடுமுன்னே
பரிசாக - காதல்
கரிசனத்தால் முத்தம்தாயேன்
சிறுசாக...

காதலிக்கலாம் வா - 3

வரமதை வேண்டி பெண்பாவாய்
தவமாய் தொடர்ந்தேன் பலநாளாய்
கண்மொழி படித்தே என்வாழ்வின் - முதல்
காதலைச் சொன்னேன் நீ கேளாய்

பதிலது வேண்டி காத்திருக்கேன்
விதியெது என்று சோர்ந்திருக்கேன்
நாணத்தை விடுத்து சொல்லிவிடு - உயர்
காதலோ சாதலோ தந்துவிடு...

காதலிக்கலாம் வா - 2

உன் காலடி தொட்ட கடல் நீ்ரெல்லாம் பன்னீராக ஆனதடி
பாதம் தொடாத நன்னீர் கூட கண்ணீராய் கடல் சேருதடி
உன் முகம் தழுவிட தென்றலும் இங்கே வாசனை திரவியம் ஆனதடி
தழுவிட முடியா தென்றலும் புயலாய் மரங்களை பிடுங்கி வீசுதடி
இத்தனை கண்டும் என்மனம் ஏனோ உன்னையே காண தேடுதடி
என்விதி என்ன ஆகிடும் என்று என்விழி பார்த்து கூறிடடி...

காதலிக்கலாம் வா - 1

சிறகில்லாமல்
வானில் பறக்கிறேன்
உன் ஒற்றைப் பார்வையது
ஓரமாய் விழும் போதெல்லாம்...

கருவிகள் ஏதுமின்றி
இசையமைக்கிறேன்...
கூவும் குயிலாய்
நீ பேசும் போதெல்லாம்...

பாதை தெரியாமல்
தடு(டம்) மாறுகிறேன்...
களுக்கென சிரித்தென் கண்ணை
களவாடும் போதெல்லாம்...

கைக்குவளை நீருந்தன்
தாகத்தைத் தீர்க்கையிலே
எந்நாவும் துடிக்குதடி.
தாகத்தால் தவிக்குதடி...

இப்படியே எத்தனை நாள்
உன்னை நீ காக்க வைப்பாய்...
பார்வையிலே பரிசளித்து
பறந்துவிட கரம் கொடுப்பாய்...