Wednesday, August 10, 2011

சுயம்

பாங்காய் நாடகமொன்று
பாதி முடிந்திருக்க
போட்ட வேடமது
மேடை புழுக்கத்தினால்
வழியும் வியர்வைபட்டு
கலைய இளித்துநிற்கும்
அவல நிலையினதாம்
மறைத்த சுயங்களெலாம்
மறைவை விட்டுவரும்
மனிதனின் ஒப்பனைகள்...

நாடக வேளையிலே
கலையும் ஒப்பனைதாம்
மறைவை விட்டுவரும்
மறைத்த சுயங்களுமே...

Monday, August 1, 2011

பேருந்து பயணம்

அழுதரற்றும் குழந்தையை சமாதானமாக்கும்
அம்மாக்களின் தேற்றல்கள்...

அன்றைய அலுவலின் வேதனைகளை
அலுப்புடன் பகிரும் வட்டங்கள்...

சாய்ந்தவாறமர்ந்து கிசுகிசுக்கும்
காதல் ஜோடிகள்...

நண்பர்களுடன் சேர்ந்து
கூத்தடிக்கும் கேலிப்பேச்சுக்கள்...

சில்லறைக்காய் சிடுசிடுக்கும்
நடத்துனரின் முகபாவங்கள்...

இத்தனை இருந்தும் - அனைத்தும்
இரைச்சலின் இம்சையாகவே இருந்தது

நெரிசல் மிகு பேருந்தின்
நெடிய பயணத்தில் தனித்திருப்பவனுக்கு...

பெரியர்??? சிறியர்???

எவரெல்லாம் பெரியரோ சொல்லிடு - இங்கு
எவரெல்லாம் சிறியரோ என்று...

கற்றாரெல்லாம் பெரியரா - மட்டு
கல்லாதோர்தான் சிறியரா...

பணம் கொண்டோர் எல்லாம் பெரியரா - அன்றி
பணமில்லாதார்தான் சிறியரா...

பலம் கொண்டோர் எல்லாம் பெரியரா - எதிர்க்க
பலமில்லாதார்தான் சிறியரா...

கற்றவன் பெரியவன் ஆகிட - அவனினும்
கற்றோர் முன்னவன் பெரியனா...

இங்ஙனம் எல்லாம் மாறிடும் - இவ்வுண்மை
எங்ஙனம் மறந்தனம்...

பார்வையில் தானிங்கு அனைத்துமே - உணர்ந்து
பார்த்திட பாரெலாம் சுபிட்சமே...

நான்

புரியாத ஒன்றையும்
தெரியாத ஒன்றையும்
ஒத்துக்கொள்ளாத மனம்
இல்லாததாக்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறது...

ஏற்றமென்னும் சொர்க்கவாசலின்
தேடல் கதவுகளைப்
பூட்டி வைக்கிறது...

இறுகிய மனம்
இறுமாப்புடன் சமாதானம் சொல்கிறது...
இருப்பதைக் கொண்டு இன்பமுறுகிறேனென்று...

அடைபட்ட கதவினை உடைத்து விடாதிருக்க
நாணாமல் நிற்கிறது...
நான்.!

எப்படி மாறினேன் நான்

எப்படி மாறினேன் நான்???

முதலில்
வாழ்த்துகளுக்கு மகிழ்ந்தாலும் - குறைகளைத்
தேடிக் களையவே விழைந்தேன்...

பின்னொரு நாள்
வாழ்த்துகளுக்கு மகிழ்ந்தாலும் - குறைகளை
வாங்கிக் கொள்ளவே விழைந்தேன்...

இன்றோ
வாழ்த்தை விரும்பி - குறைகளை
வார்த்தை ஜாலத்தால் விலக்குகிறேன்...

எது மாற்றியது என்னை...

யோசித்திருக்கும் வேளையில்
ஒலிக்கிறது என்னுள்
"நீதான் சரி"

எப்படி மாறினேன் நான்...