Tuesday, June 28, 2011

கிறுக்கல் - 59

அழகுப் பொருட்களுக்கோர் பெட்டி

ஆபரணக் கற்களுக்கோர் பெட்டி

இனிப்பை காத்திடவோர் பெட்டி

ஈட்டும் பொருளுக்கோர் பெட்டி

உடைகள் வைத்திடவோர் பெட்டி

ஊழலாய் வாங்கிட ஓர் பெட்டி

எனப்பெட்டிகள் எத்தனை பெட்டிகளோ…

பெட்டிகள் பலதை பார்த்திருந்தும்

ஒப்பனை பலமாய் செய்து கொண்டு

அழுகும் உடலைத் தான் சுமக்கும்

சவப்பெட்டிபோல் எதையும் பார்த்ததுண்டோ

இப்பெட்டிக்கு இணையாய் வேறுமுண்டோ…

Monday, June 27, 2011

கிறுக்கல் - 58

விட்டத்தைப் பார்த்திருந்தவன்
சட்டெனத் தேடுகிறேன் பெயரை கைபேசியில்...
பேசும் பொத்தானை
அழுத்திய நொடியில் நிறுத்தவும் செய்கிறது...
பெருவிரல்.!
பல்லிளிக்கிறது...
பணிந்து போகா சுயகௌரவம்.!

கிறுக்கல் - 57

பாதை தெரியாமல் ஓடிய நான்
பறந்தேன்...
பறத்தலின் சுகம் அனுபவிக்கும் முன்னே
விழுந்தேன்...
விழுந்திட்ட வேகத்தில் அறுபட்ட மணிமாலையாய்
சிதறினேன்..
வரிசை மாறிய சிதறிய மணிகளாய்
கோர்க்கப்பட்டேன்...
கைகோர்த்த கணம் உணருமுன்னே ஓடுகிறேன்
பாதை தெரியாமல் - மீண்டும்.

Saturday, June 18, 2011

குழந்தைப் பாடல் - 5

வெள்ளை சட்டை போட்டு
என்னை தோளில் தூக்கி
செல்ல தாத்தா நேற்று
சந்தை கூட்டி போனார்


கையில் போட வளையும்
கழுத்தில் மாட்ட மணியும்
வண்ண வண்ண பந்தும்
வாங்கி எனக்குத் தந்தார்




பள்ளி விட்டு போனதும்
வீட்டுப்பாடம் முடித்து நான்
துள்ளி விளையாடுவேன்
சாதம் உண்டு தூங்குவேன்...


Friday, June 17, 2011

கிறுக்கல் - 56

பின்னொரு நாளில்
இந்நாளின் பெருமைக்காய்
இறக்கி வைத்த சுயங்களெலாம்
என்னைப் பார்த்து எள்ளலாம்...
சுயமில்லா நானும் சிரிக்கலாம்...
வலியில்லா மகிழ்வோடோ
வலிமிகுந்த வருத்தத்தோடோ...