Monday, September 5, 2011

ஏக்கம்

தோல்வியின் துயரால்
துவண்டு விழும்போதெல்லாம்
தூணாய் தாங்குவாய்...

ஊரறிய சிரிக்கும் என்னால்
நம்பி அழ முடியும்
உன் மடியில் மட்டும்...

என்னதான் மாயம் செய்வாயோ
தாங்கொனாத் துயரிலும் என்னுள்
தென்றலாய் உறக்கம் தர...

உறங்கும் கேசம் வருடி
உச்சி முகர்ந்து செல்வாய்
உள்ளம் உயிர்த்தெழச் செய்வாய்...

என்ன செய்வேன் இன்று
கண்ணீரோடு நான்
கடல் தாண்டி நீ...

இன்னும் எத்தனை நாளோ
எண்ணித் தவிக்கிறேன்...
உன்மடி புதைந்தழும் நாளுக்காய்.!

Friday, September 2, 2011

பொத்தல் - அதீதம் இதழில் வெளியானது

கூப்பிடு தூரத்தில் பள்ளிக்கூடமிருந்தும்

முதல் ஆளாகவும் கடைசி ஆளாகவுமே

வருகிறான் போகிறான்… வகுப்பறைக்கு அவன்…


எனது கேள்விகள் மாணவரைத் தேடும்போதெல்லாம்

கூனிக் குறுகி ஒளிந்துக்கொள்ளவே பார்க்கிறான்…

இத்தனைக்கும் படிப்பில் மோசமில்லை அவன்.!


ஆட்டம் பாட்டம் ஓட்டம்… ஏன்…

சிறுநீர் கழிக்கவும் வெளிச்செல்ல மறுக்கிறான்…

என்ன ஆயிற்று இவனுக்கு.!


இன்றெப்படியும் கேட்டு விட வேண்டும்…

எல்லா மாணவர்களும் போனபின்

எழுந்து வரச்சொன்னேன் என்னிடம்…


நெருங்கி வந்தவனை என்கேள்வி தொடுமுன்னே

தொட்டது என்னை “ஏய், போஸ்ட்பாக்ஸ்”….

ஜன்னலிலிருந்து.!!!


அதீதத்தில் பார்க்க : http://www.atheetham.com/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D