Monday, September 24, 2012

திரிசங்கு

படிப்பில்
முனைவருமில்லை
அரிச்சுவடியுமில்லை...

பதவியில்
உயர்ந்துமில்லை
கடையிலுமில்லை...

வருவாயில்
பணக்காரனில்லை
ஏழையுமில்லை...
என்ன கொடுமை இது...
வாழ்க்கையில் மட்டுமல்ல
நடக்கும் வழியிலுமா இப்படி...

வேகமாய்ச் செல்லும் நண்பர்கள் நால்வர்
ஆமையாய்த் தங்கும் நண்பர்கள் நால்வர்

முன்செல்லவா
பின்தங்கவா...

முன்னவருடன் சேர்ந்தால்
பின்னவர்க்கு கோபம்...

பின்னவருடன் தங்கினால்
முன்னவர்க்கு வருத்தம்...

முடிவு செய்து விட்டேன்...
தனிமையே என்றாலும்
திரிசங்கே நிம்மதி தான்.!

சந்தர்ப்பம்

இரவை மட்டுமே பார்த்திருப்பவன்
விண்மீணைச் சிலாகிக்கிறான்...
எத்தனைச் சூரியன்கள்.!

பகலைப் மட்டுமே பார்ப்பவன்
சூரியனைச் சிலாகிக்கிறான்...
ஒன்றே நன்று.!

இரவிற்கான
பகலின் விண்மீணாய்
பகலிற்கான
ஒற்றைச் சூரியனாய்
வலம்வர காத்திருக்கிறேன்...

பகல் விண்மீணாயும்
இரவுச் சூரியனாயும்
புடம் போட்டபடி...

எனக்கான காலம் நோக்கி.!

ஆறாம் அறிவு

பல காலமாக எழுத நினைத்த பதிவு இது...
 
மனிதன் பிற உயிரிணங்களை விட ஒரு படி மேலானவனாம்... காரணம் என்ன என்று கேட்டால் அவனுக்கு தான் ஆறாம் அறிவு இருக்கிறதாம்... சரி, அந்த ஆறாம் அறிவைப் பயன்படுத்தி என்ன செய்தாயடா என்றால், இன்று காலையில் எழுவதில் இருந்து உறங்கும் வரை உபயோகம் செய்யும் பொருட்கள் எல்லாமே இந்த ஆறாம் அறிவால் வந்தது தான் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கண்டுபிடித்திருக்கிறான் மனிதன்... எதனைக் கண்டுபிடித்தவனும், தான் மட்டும் உபயோகம் செய்ய எதையும் கண்டுபிடிக்கவில்லை. மனிதர் அனைவருக்கும் பயன்படட்டுமே என்று தான் கண்டுபிடித்தான்...
 
ஆனால், எதனையும் கண்டுபிடிக்காமல், நம்மைப் போன்ற மக்கள் நலனுக்காக நாம் ஏதும் செய்ய முடியுமா என்று சிந்திக்காமல், ஊர் சுற்றித் திரியும் சிலர் இந்த ஆறாம் அறிவால் என்ன செய்தார்கள் தெரியுமா... விளம்பரம் தேடிக் கொள்வது... பெருமை பேசித் திரிவது... என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... அதையும் எப்படி செய்தார்கள் தெரியுமா.... தன் சொந்தத்தில் ஒருவன் சாதித்தால், எங்கள் சாதியே இவ்வளவு அறிவுமிக்கவர்கள் என்றும், தன் சொந்தத்தில் இல்லாமல், தன் ஊர்காரனாயிருந்தால் அவன் எங்க ஊருடே என்றும், தனது மாவட்டம் என்றால், என்னுடைய மாவட்டம் என்றும், தனது மொழி பேசுபவன் என்றால் தன் மொழிக்காரன் என்றும், தனது மாநிலம் என்றால் தன் மாநிலத்துக்காரன் என்றும், தனது நாட்டவன் என்றால் தன் நாட்டவன் என்றும் சொல்லி சொல்லி பெருமைப்பட்டு கொள்வது...
 
எதற்கடா இவன் யாரோ சாதித்ததற்கு, இத்தனை பெருமை அவனுக்குத் தேடித் தருகிறான் என்று ஆழ்ந்து பார்த்தல் தான் தெரியும், அது சாதித்தவனை பெருமைப்படுத்த அல்ல, சாதித்தவனை வைத்து தன்னை முன்னிலைப்படுத்தி தற்பெருமைப் பட்டுக் கொள்ள செய்யும் தந்திரம் என்று. இது மட்டுமா செய்வான் இவன், தான் சாராத மற்றவர்களை சமயம் பார்த்து மட்டம் தட்டவும் செய்வான். ஏன் என்றால் அப்பொழுதும் தன்னைத் தவிர, தன்னைச் சார்ந்தவர்களைத் தவிர அனைவரும் மட்டமானவர்கள் என்று சொல்லி தன்னை முன்னிலைப்படுத்தி தற்பெருமை தேடிக் கொள்ளவே...
 
எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்... எத்தனை நாள் உயிரோடு வாழ்வோம் என்று தெரியாத இந்த அற்ப வாழ்வில், தான் தான் பெரியவன் என்று யாருக்கு நிரூபிக்க இத்தனை போராட்டம்... உண்ணும் உணவிற்கு உழைத்தோமா, உடன் இருப்பவர்களுக்கு உதவினோமா, உதவ முடியாத பட்சத்தில் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்தோமா என்றில்லாமல் எதையேனும் செய்து தன்னை முன்னிலைப்படுத்தி தற்பெருமைத் தேடிக் கொள்ளும் இந்த அற்பமான எண்ணம் தான் ஆறாம் அறிவா...
 
வீடு நாம் இருக்க ஒரு இடம், மொழி நமது உணர்வை பகிர ஒரு கருவி, இறை நம்மை நாம் கட்டுப்பாடோடு வைக்க உதவும் ஒரு நிலை என்பதை நாம் என்று உணரப் போகிறோம்... எங்கும் எதிலும் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள, சக மனிதனை மனிதனாகப் பாராமல் பிறருக்குத் தீங்கு செய்வது எதற்காக... தான் தான் சரி என்று தன்னை உயர்த்திக் காண்பித்து அடுத்தவனை தனக்கு கீழ் கொண்டு வரச் செய்யும் முயற்சிகள் எதற்காக...
 
விளங்கவில்லை... நமக்கு கிடைத்த இந்த ஆறாம் அறிவால் நாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறோம்... எத்தனை பேருக்கு உதவிகரமாக இருக்கிறோம்... இல்லை எவருக்கும் உபாதையாக இல்லாமலாவது இருக்கிறோமா... விளங்கவில்லை... இனியேனும் சாதி, மதம், மொழி, இனம், நாடு என்று நம்மை முன்னிலைப்படுத்தாமல் மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்து தன்னைப் போல பிறரையும் எண்ணி வாழ நமக்கு உதவுமா நம் ஆறாம் அறிவு... ?????

Thursday, September 13, 2012

தனிமையின் செலவு

யாருமற்ற பொழுதுகளில்
செய்வதறியாது
செலவு செய்ய எத்தனிக்கிறேன்...

உடைக்க முடியாத
உண்டியலில் உலுக்கி எடுத்தவாறு...
சில நினைவுகளை.!

வட்டியாக வளர்ந்து நின்றது
செலவு.!

அவள்

அத்த பொண்ணா எனக்கு ஆசையக் காட்டி
மனசை என்னுள்ளார தச்சுட்டு போன..
மிச்சம் மீதியின்னு ஏதும் இல்லாம
என்னை உன்னுள்ளார அள்ளிட்டுப் போன...

கையப் புடிச்ச நாளு முதலா
காலைப் பொழுதைஉன் கண்ணில் முழிச்சேன்...
ஓடி ஆடி என் வேலைய முடிச்சு
மிச்சப் பொழுதைஉன் நெஞ்சில் கழிச்சேன்...

மஞ்சம் சேர்ந்தஎன் மாமன் மவளே
என்னை விட்டுட்டு நீ எங்கடீ போன...
என்ன செய்யுவேன் ஏது செய்யுவேன் ..
எங்கே தேடிநான் உன்னைச் சேருவேன்...

பெத்தவ வீட்டுக்கு சொல்லிட்டு போவ...
மத்தவ வீட்டுக்கும் சொல்லிட்டு போவ...
இத்தனை நாளில் இன்னைக்கு மட்டும்
சொல்லாம கொள்ளாம எங்கடீ போன...

ஒத்த வார்த்தையில சொல்லிட்டுப் போடீ - இல்லை
என்உசுருக்கும் கொள்ளியை வச்சுட்டுப் போடீ...
போன வழியெது காட்டிட்டுப் போடீ...
நானும் அங்குவாரேன் உன்னையத் தேடி...

பசிப்பிணி

பசியாறப் பணத்திற்காய்
விளைநிலங்கள்
விலைநிலங்களாகிக் கொண்டிருந்தன...
பசிப்பிணியை நிரந்தரமாக்கியவாறு.!

தனுஷ்கோடி

எண்ணற்ற கனவுகளோடும்
எஞ்சிய நினைவுகளோடும்
உறங்கிக் கொண்டிருந்தவர்கள்
ஆர்ப்பரித்த புயலால் அமைதியாக உறங்குகிறார்கள்...
ஆழ்கடலில்.!
அழிந்து போனவர்களும்
மறைந்து போனதும்
எழுப்பிய கூக்குரல் தொடர்ச்சியின் நீட்சி
விம்மலாய் கரைக்கு வந்து சொல்கிறது...
கதைகளாய்.!
எஞ்சியிருக்கும் மனிதர்க்கும்...
மிஞ்சியிருக்கும் மாற்றத்திற்கும்...

அண்ணாமலையார் அற்புதங்கள்

பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கையரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைச் சொல்லிச்
சேய்போல் இருப்பர் கண்டீர், உண்மை ஞானம் தெளிந்தவரே…
நேற்று இரவு மன அமைதிக்காக வேண்டி, அண்ணாமலையார் அற்புதங்கள் இசைத்தட்டை கேட்டவாறு நித்திரையில் ஆழ்ந்தேன்... அப்பொழுது இந்த பாடலைக் கேட்க நேர்ந்தது... ஆஹா, ஆஹா, என்ன ஒரு செய்தி...
உண்மைதான், பெரிய பெரிய ஞானியரெல்லாம் பல சமயம் நம் கண்களுக்கு ஏதோ பித்து பிடித்தவர் போலவே நம் கண்ணுக்குத் தெரிகின்றனர்... ஆனால் உண்மையில் நாம் தான் பல வித பித்துகளைப் பிடித்துக் கொண்டு அலைகிறோம்... இப்பாடலைக் கேட்டதிலிருந்து எனக்கும் எப்பொழுது இந்த மாதிரி உண்மை ஞானம் தெளிந்து, பேய் போல் திரிந்து பிணம் போல் கிடப்போம் எனும் எண்ணம் ஆட்கொண்டு விட்டது...
நமசிவாயா நின்தாள் பணிந்தேன்;நின் பார்வை
எமைக்கண்டு நான்;அழிக்கும் நாளதுவும் எந்நாளோ
அந்நாளைக் கண்டிடவே எப்போழ்தும் என்நாவில்
உன்நாமம் வீற்றிருக்கத் தா..

முத்தொள்ளாயிரத்தில் இருந்து ஒரு பாடல்

புல்லாதார் வல்லே புலர்கென்பார்; புல்லினார்
நில்லாய் இரவே நெடிதுஎன்பார் நல்ல
விராஅமலர்த் தார்மாறன் ஒண்சாந்து அகலம்
இராஅளிப் பட்டது இது

இரவை கண்டு இரக்கப்படுகிறாள் ஒரு மாது... யார் அவள்... பாண்டியனைப் பிரிந்து வருத்தத்தில் இருக்கும் மாது, தன் சோகத்தை மறைக்க இரவை ஏளனம் செய்து பாடுவதாக அமைகிறது இந்த பாடல்.
 
சே, காதல் படுத்தும் பாடு தான் என்ன...

இந்த மாது சொல்கிறார், தன் துணையைத் தழுவாதவங்க/ தழுவ முடியாதவங்க இந்த இரவு சீக்கிரம் போயிட கூடாதா, நாளை பகல் பொழுது சீக்கிரம் வந்துட்டா தன் காதலனை பார்க்கலாமேனு இரவைச் சீக்கிரம் போகச் சொல்லுவாங்களாம்...

தன் துணையைத் தழுவியவாறு இன்புற்று இருக்கும் பெண்கள், விடிஞ்சா எங்க தன்னோட கணவன் தன்னை விட்டுப் போயிடுவானோனு வருத்தத்தோட இரவே நீ அப்படியே இன்னும் ரொம்ப நேரத்துக்கு இரேன்னு கெஞ்சி கேட்பாங்களாம்...
 
இதை ரெண்டத்தையும் சொல்லி, மலர் மாலையையும் சந்தணத்தையும் தடவி இருக்கும் மங்கை ஒருத்தி இரவைப் பார்த்து உன்னோட நிலைமை தலைவனை விடவும் முடியாம, தலைவன் கூட பேசவும் முடீயாம இருக்குற நிலைமையை விட மிகவும் இரக்கத்துக்குரியதா இருக்கேனு கேலி செய்றாங்களாமாம்...
 
ஹ்ம்ம், இந்த பொண்ணுங்க தன்னோட கஷ்டத்தை மறக்க அடுத்தவங்க கஷ்டத்தைச் சொல்லி சந்தோஷப்படுவாங்களோ எப்பவுமே... நீங்க என்ன நினைக்கறீங்க...

சுழியம்

சுழியத்தை உணராது
சுழியத்தையும் அதன் தொடக்கத்தையும்
தேடி சுற்றுகின்றனர்...
சுழியத்திற்குள்ளாக.!