Monday, September 24, 2012

ஆறாம் அறிவு

பல காலமாக எழுத நினைத்த பதிவு இது...
 
மனிதன் பிற உயிரிணங்களை விட ஒரு படி மேலானவனாம்... காரணம் என்ன என்று கேட்டால் அவனுக்கு தான் ஆறாம் அறிவு இருக்கிறதாம்... சரி, அந்த ஆறாம் அறிவைப் பயன்படுத்தி என்ன செய்தாயடா என்றால், இன்று காலையில் எழுவதில் இருந்து உறங்கும் வரை உபயோகம் செய்யும் பொருட்கள் எல்லாமே இந்த ஆறாம் அறிவால் வந்தது தான் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கண்டுபிடித்திருக்கிறான் மனிதன்... எதனைக் கண்டுபிடித்தவனும், தான் மட்டும் உபயோகம் செய்ய எதையும் கண்டுபிடிக்கவில்லை. மனிதர் அனைவருக்கும் பயன்படட்டுமே என்று தான் கண்டுபிடித்தான்...
 
ஆனால், எதனையும் கண்டுபிடிக்காமல், நம்மைப் போன்ற மக்கள் நலனுக்காக நாம் ஏதும் செய்ய முடியுமா என்று சிந்திக்காமல், ஊர் சுற்றித் திரியும் சிலர் இந்த ஆறாம் அறிவால் என்ன செய்தார்கள் தெரியுமா... விளம்பரம் தேடிக் கொள்வது... பெருமை பேசித் திரிவது... என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... அதையும் எப்படி செய்தார்கள் தெரியுமா.... தன் சொந்தத்தில் ஒருவன் சாதித்தால், எங்கள் சாதியே இவ்வளவு அறிவுமிக்கவர்கள் என்றும், தன் சொந்தத்தில் இல்லாமல், தன் ஊர்காரனாயிருந்தால் அவன் எங்க ஊருடே என்றும், தனது மாவட்டம் என்றால், என்னுடைய மாவட்டம் என்றும், தனது மொழி பேசுபவன் என்றால் தன் மொழிக்காரன் என்றும், தனது மாநிலம் என்றால் தன் மாநிலத்துக்காரன் என்றும், தனது நாட்டவன் என்றால் தன் நாட்டவன் என்றும் சொல்லி சொல்லி பெருமைப்பட்டு கொள்வது...
 
எதற்கடா இவன் யாரோ சாதித்ததற்கு, இத்தனை பெருமை அவனுக்குத் தேடித் தருகிறான் என்று ஆழ்ந்து பார்த்தல் தான் தெரியும், அது சாதித்தவனை பெருமைப்படுத்த அல்ல, சாதித்தவனை வைத்து தன்னை முன்னிலைப்படுத்தி தற்பெருமைப் பட்டுக் கொள்ள செய்யும் தந்திரம் என்று. இது மட்டுமா செய்வான் இவன், தான் சாராத மற்றவர்களை சமயம் பார்த்து மட்டம் தட்டவும் செய்வான். ஏன் என்றால் அப்பொழுதும் தன்னைத் தவிர, தன்னைச் சார்ந்தவர்களைத் தவிர அனைவரும் மட்டமானவர்கள் என்று சொல்லி தன்னை முன்னிலைப்படுத்தி தற்பெருமை தேடிக் கொள்ளவே...
 
எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்... எத்தனை நாள் உயிரோடு வாழ்வோம் என்று தெரியாத இந்த அற்ப வாழ்வில், தான் தான் பெரியவன் என்று யாருக்கு நிரூபிக்க இத்தனை போராட்டம்... உண்ணும் உணவிற்கு உழைத்தோமா, உடன் இருப்பவர்களுக்கு உதவினோமா, உதவ முடியாத பட்சத்தில் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்தோமா என்றில்லாமல் எதையேனும் செய்து தன்னை முன்னிலைப்படுத்தி தற்பெருமைத் தேடிக் கொள்ளும் இந்த அற்பமான எண்ணம் தான் ஆறாம் அறிவா...
 
வீடு நாம் இருக்க ஒரு இடம், மொழி நமது உணர்வை பகிர ஒரு கருவி, இறை நம்மை நாம் கட்டுப்பாடோடு வைக்க உதவும் ஒரு நிலை என்பதை நாம் என்று உணரப் போகிறோம்... எங்கும் எதிலும் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள, சக மனிதனை மனிதனாகப் பாராமல் பிறருக்குத் தீங்கு செய்வது எதற்காக... தான் தான் சரி என்று தன்னை உயர்த்திக் காண்பித்து அடுத்தவனை தனக்கு கீழ் கொண்டு வரச் செய்யும் முயற்சிகள் எதற்காக...
 
விளங்கவில்லை... நமக்கு கிடைத்த இந்த ஆறாம் அறிவால் நாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறோம்... எத்தனை பேருக்கு உதவிகரமாக இருக்கிறோம்... இல்லை எவருக்கும் உபாதையாக இல்லாமலாவது இருக்கிறோமா... விளங்கவில்லை... இனியேனும் சாதி, மதம், மொழி, இனம், நாடு என்று நம்மை முன்னிலைப்படுத்தாமல் மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்து தன்னைப் போல பிறரையும் எண்ணி வாழ நமக்கு உதவுமா நம் ஆறாம் அறிவு... ?????

No comments:

Post a Comment