Monday, December 28, 2009

பிறந்தநாள் வாழ்த்து

அம்மா வலியில் துடியாய் துடிக்க
அப்பா அவஸ்தையில் நடையாய் நடக்க
இனியும் தாய்க்குப் பாரம் வேண்டாம்
என்றே எண்ணித் தரையை நீதொட்ட
நாளாம் இன்று நண்பா உனக்கு
துன்பம் வாழ்வில் மலையாய் வரினும்
துனிவை கொண்டு பனிபோல் ஆக்கி
இன்புற்று நீயும் பல்லாண்டு வாழ
இறைவனை வேண்டும் நண்பன் எனது
இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்து….

Saturday, December 26, 2009

பெயரில்லாதது

அழுக்கால் நிறைந்த உடல்
அழுக்கை இழந்த பின்னே
அரிப்பால் அவதி படும்
குற்றங்கள் நிறைந்த உள்ளம்
குற்றத்தை நிறுத்திய பின்னே
குறுகுறுப்பால் அவதி படும்.

அரிப்புக்கு பயந்து
அழுக்குடன் வாழ்ந்தால் – யாரும்
அருகே வரமாட்டார்.
குறுகுறுப்புக்கு பயந்து
குற்றத்துடன் வாழ்ந்தால் – உனது
சுற்றமும் வரமாட்டார்.

குழுமம்-வெண்பா

முகமறியா மக்கள் பலரைநட் பென்னும்
முகத்தால் இணைக்கும் குழுமம் தனிலே
அகமாய் அமையும் எழுத்தாம் அதனை
நயமாய் அமைத்தல் நலம்.

Thursday, December 24, 2009

தாயே வரமருள்வாயே

தண்ணீர் குடத்தினின்று
தரையிலே கால்பதிக்க
தன்னுயிரை பனயம்வைத்து
என்னுயிரை அளித்தவளே

உயிர்கொடுத்த அசதிவிலகி
உணர்வது திரும்பியதும்
உள்ளங்கையில் அள்ளியெடுத்து
உச்சந்தலை முகர்ந்தவளே

உள்ளங்கை சிலிர்ப்பினிலே
உம்மென்று சினுங்கியதும்
உதிரத்தை பாலாக்கி
உணவாகத் தந்தவளே

உணவுன்னும் வேளையிலோ
உடைமாற்றும் வேளையிலோ
உறங்குகின்ற வேளையிலோ
உறக்கத்தில் நான்சினுங்க
உள்ளமது பதறிநீயும்
உடனென்னை பார்த்தவளே

தவழ்ந்துநானும் வந்தபோதும்
தத்திதத்தி நடந்தபோதும்
தவறிவிழ நேரும்பொது
தாங்கியெனைப் பிடித்தவளே

பல்லில்லா வாய்தனிலே
பேசச்செய்த முயற்சியதை
பாடல்நானும் பாடுவதாய்
பார்ப்பவர்க்கு உரைத்தவளே

பாடமது படிப்பதற்கு
பள்ளிக்குச் சென்றுவந்து
பலகதைகள் நான்சொல்ல
பணிவிடுத்து கேட்டவளே

விழாகால கூட்டத்திலே
வீதியிலே நடக்கும்போதும்
வழிதவறி போகாவன்னம்
விரல்பிடித்து சென்றவளே

நடந்துபோன நாட்களிலும்
நடக்கின்ற நாட்களிலும்
வாழ்த்ததனை சொல்லியென்னை
வழிகாட்டி நடத்தியவளே

வாழும்காலம் எல்லாமெனக்காய்
வாழ்ந்துவந்த அன்புத்தாயே
வாரிசாக நீயேயெனக்கு
பிறந்திடவோர் வரமருள்வாயே…

Wednesday, December 23, 2009

காதல் கிறுக்கல்

சூரியனைச் சுற்றும் பூமியாய்
உன்னைச் சுற்றும் நான்
பூமியைச் சுற்றும் நிலவாய்
என்னைச் சுற்றும் அவள்
ஒன்றை விரும்பும் மற்றொன்றாய்
என்றும் இணையா கோள்களாய்…

பார்ப்பவர் பார்வைக்கு
இரவில் பூமியின்
ஒருபாதியில் மறைந்தாலும்
மறுபாதியில் ஒளிவீசும்
பகலவனாய் என்றும்
என்(னில்)னுள் ஒளிவீசும் நீ…

Tuesday, December 22, 2009

எங்கிருந்தாலும் வாழ்க

உன்னைக் கரம்பிடிப்பேன் அன்றேல் உயிரிழப்பேன்
என்றே சிரமடித் துன்மேல் உறுதியிட்ட
மங்கை மணவோலை தந்தபின்னும் காதல்
மனதாரச் சொல்லிடும் வாழ்த்து.

Tuesday, December 15, 2009

புகைப்படமும் வெண்பாவும்பயங்கரவாத
கைகளில்
சிறையுண்டது
சமாதானம்
(அ)
பயங்கரவாத
கைகளில்
சிறையுண்டது
அமைதி…

சிறகை விரித்து கரத்தை விடுத்து
பறக்க விழையும் புறா.

கரத்தில் பிடித்து அடைத்தப் பிறகும்
சிரத்தை உடனே சமயத்தைப் பார்த்து
சிறகை விரித்து சிறையை உடைத்து
பறக்க முயலும் புறா.

Sunday, December 13, 2009

எனது வெண்பாக்கள்

அன்டத்தை காண்பித்து நம்மோடு வாழ்கின்ற
அன்புரு கொண்டவள் தாய்.

பிறப்பின் விதையை அளித்துபுவிக் குன்னைச்
சிறப்பித்த தெய்வம் பிதா.

அறியாமை நீக்கி அழியாதச் சொத்தாய்
அறிவை அளிப்போர் குரு.

விவேகம் இருந்தால் ஒழிய விரயமாகு
மன்றோ செயலில்வே கம்.

Tuesday, December 8, 2009

பரத்தை

கண்ணிற்கு மையால்
கருப்பு கலரடித்து
உதட்டுக்கு லேசாய்
சிவப்பு சாயமிட்டு
முகத்தினை முழுவதும்
ஒப்பனையால் நிரப்பியே
அழகாய் மினுக்கும்
ஆடையை உடுத்தி
விழியால் கனைகளை
வீதியிலே தினம்வீசி
மானம் இழந்து
வாழ்க்கை நடத்தி
பகலில் ஓய்வெடுத்து
அடுத்த இரவிலும்
ஆட்டம் போட
அழகுப்படுத்தும்
மங்கையிவள்
வாழ்க்கைப் போராட்டத்தில்
விளக்கில் விழும்
விட்டில் பூச்சியா அல்ல
சுட்டெரிக்கும் சூரியனைத்
தொட்டுவிட முயலுகின்ற
பீனிக்ஸ் பறவையா…

Sunday, December 6, 2009

கவிஞன்

புள்ளிகளைக் கோர்த்து எழுத்தாக்கி
எழுத்துக்களைக் கோர்த்து சொற்களாக்கி
சொல்லைக் கோர்த்து வரியாக்கி
வரிகளைக் கோர்த்து கவிதையாக்க
புள்ளியைப் புதிதுபுதிதாய்த் தேடுபவன்…

கிறுக்கல்

விதையாய் சேற்றில்
விதைத்தவனை விடுத்து
நாற்றாய் ஈன்ற
நிலத்தையும் விடுத்து
பயிராய் வாழ்ந்த
புதுவயலையும் விடுத்து
மகசூல் தந்து
மரித்த பயிராய்
மகவை ஈன்றதும்
மரித்த தாய்…