Friday, November 19, 2010

கிறுக்கல் - 53

பின்னொரு நாளில்
குற்றத்திற்காய் தண்டனையோ
துரோகியாய் பழிச்சொல்லையோ
சுமக்கும்போது வலிக்காது எனக்கு
செய்யாத குற்றத்திற்கும்
செய்யாத துரோகத்திற்கும்
தண்டனையும், பழிச்சொல்லும்
இன்று நான் சுமப்பதால்...

Tuesday, November 16, 2010

தாய்-ஹைக்கூ குறள்கள்




















சுமைகருதா(து) ஈரைந்து மாதம் இமைபோல்
சுகமாய்க் கருவைக்காப் பாள்.

அகத்தில் சுமந்த வலியை மறப்பாள்

மகவது மண்தொடக் கண்டு.


பசிக்கும் குழந்தை ருசிக்கத் தருவாள்

ரசித்து முலைப்பால் உணவு.


நாவால் உணவை வெளித்தள்ளும் பிள்ளைக்குப்

பாங்காய் படைப்பாள் உணவு.


மழலை மொழியை உலகினர் மெச்ச

பலமொழி என்பாள் புகழ்ந்து.


தவழும் குழந்தை நடந்திடச் செய்யும்

தவத்தினில் தன்னைமறப் பாள்.


நடைபயிலும் பிள்ளை நடந்திட தானும்

நடைபயில்வாள் பிள்ளை உடன்.


ஓடித் தொடவரும் பிள்ளை சிரித்திட

ஓடியும் தோற்பாள் அவள்.


பாடம் பயிலும் குழந்தை மொழிந்திட

பாடம் பயில்வாள் அவள்.


தோல்வியில் பிள்ளை துவண்டு விழுந்திட

தோள்தரு வாள்விழுதாய் தாய்.


(திருத்தம்: நன்றி, துரை ஐயா)

கிறுக்கல் - 52

பின்னொரு நாளில்
சோர்ந்து விழுகையில்
மலைப்பான விஷயங்களும்
முற்றுப்பெறாத கவலைகளும்
ஒன்றுமில்லாததாகத் தோன்றலாம்
முற்றுப்பெறாத என்னை
முழுமையாக்கிய என் மனைவியால்...

Monday, November 15, 2010

வரிகள் மாற்றப்பட்டது - சின்னம்மா கல்யாணம்(அபியும் நானும்)

எங்கக்கா கல்யாணம் நேரமில்ல நேரில்வர

எங்கக்கா கல்யாணம் நேரமில்ல நேரில் வர

கண்டிடஇரு கண்ணிருந்தும்

கண்டிடவோர் வழியும் இல்ல

கணினியில கண்ணை வைச்சு

பார்த்திடவும் வசதியில்லை

உடலால இல்லையுன்னு

உதறாதே என் வாழ்த்தை

மனசார வாழ்த்திடுறேன்

பல்லாண்டு நீ வாழு

கிறுக்கல் - 51

பின்னொரு நாளில்

எனது சேமிப்பெல்லாம் கரைந்து

சுயத்தை இழந்து

சுயமாக வாழ்வை முடிக்க விரும்பும் தருணம்

என்னால் இன்று

தற்கொலயால் காக்கப்பட்ட ஒருவன் சொல்லலாம்

தற்கொலை தவறென்று...

கிறுக்கல் - 50

எதையோ

தேடித் தேடி அலைந்தேன்

ஊருக்குள் பேசிக்கொண்டனர்

நான் தொட்டதெல்லாம் வென்றவனென்று

இருந்தும் நான்

இன்னும் எதையோ தேடுகின்றேன்

தேடல் இன்னதென்று புரியாமல்

என் தேவை இன்னதென்று புரியாமல்...

Tuesday, November 2, 2010

கிறுக்கல் - 49

பின்னொரு நாளில்
பேசுவதற்காய்
சேமித்து வைக்கிறேன்
உனக்காய் எழுதிய
மடலில்
உள்ளத்தில் இருந்தும்
உரையில் எழுதாத
வார்த்தைகளை...