Thursday, July 28, 2011

அப்பாற்பட்ட சிந்தனை

பிரச்சினைகள் வீரியமாகும் போதெல்லாம்
பிள்ளையை நாடுகிறேன்...
பிரச்சினையை கதையாய்ச் சொல்ல.!

முடிவில்லா கதையை
முடிக்காமல் நிறுத்த
அனாயசமாய் முடித்துத் தருகிறாள்...
கதையையும் எனது பிரச்சினைகளையும்.!

Tuesday, July 26, 2011

காதலிக்கலாம் வா - 6

சின்ன சின்ன கண்ணைக்கொண்டு
கொத்தித் தின்றாய் என்னையின்று
வண்ண மயில் தோகையென்ன
காட்டி நின்றாய் சேலைகொண்டு

பெண்மை உந்தன் நடையைக்கண்டு
தத்தளித்தேன் தரையில் நின்று
பேதை உன்னை முழுதும் கண்டு
பித்தனானேன் சித்தம் கொன்று

ஜென்ம ஜென்ம பந்தமென்று
சொல்லி வைத்த விந்தையெல்லாம்
உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
ஆனதிங்கு உண்மையென்று...

Monday, July 25, 2011

ஆடி கிருத்திகை ஸ்பெஷல்

ஏனிந்த பிறவியோ முருகா – என்னை

எதற்காக படைத்தாயோ முருகா

என்செய்தேன் பாவங்கள் முருகா – மீண்டும்

பிறவாமல் இருக்கவே வழியேது முருகா


பிறப்பதனைத் தந்தாலும் முருகா – உன்னை

பிரியாத வரம்வேண்டும் என்வாழ்வில் முருகா

குறையில்லா உடல்வேண்டாம் முருகா – சிறுகுறை

ஒன்றை நான்கேட்பேன் அதுவேண்டும் முருகா


குறையென்றால் குறையில்லை முருகா – நோயாம்

பசியாக்கும் வயிறில்லா உடல்வேண்டும் முருகா

உண்ணாமல் இருந்தாலும் முருகா – உன்னெண்ணத்தால்

உடல்வாட்டம் இல்லாமை வேண்டுமென் முருகா…


உயிராலும் உணர்வாலும் முருகா – உன்பேரை

மறவாத நிலைவேண்டும் முருகா

உலகைநான் பிரிந்திடினும் முருகா – உன்பதமலராய்

பூஜிக்கும் நிலைவேண்டும் முருகா…

கல்லூரிச் சாலை

நான் ரொம்ப நாளா எழுத நினைத்த ஒரு பதிவு... பள்ளிப் படிப்பு படிக்கும் காலத்தில் பத்தாம் வகுப்பு வந்தால் போதும்... இதுதான் வாழ்க்கையோட முதல் டர்னிங் பாயின்ட்டா, ஒழுங்காப் படி, இப்ப நீ படிக்கிறது தான் உன் லைபைத் தீர்மானிக்கும் ஏகப்பட்ட அறிவுரை வரும்... நாமளும் நம்மால முடிந்த வரை படிச்சு மார்க் எடுப்போம்...

பத்தாவது பாஸ் ஆன பின்னாடி ஒரு வருஷம் கொஞ்சம் குடைச்சல் இல்லாம இருக்கும், அப்புறம் பனிரெண்டாவது ஸ்டார்ட் ஆயிடும்... கூடவே, பத்தாவதுல கொடுத்த அட்வைஸ்களை விட அதிகம் அட்வைஸ்கள்... உன் வாழ்க்கையில நீ என்ன ஆகப் போறன்றதை தீர்மானிக்கப் போவது இந்த ஒரு வருஷம் தான்டானு.... ஏகப்பட்ட அறிவுரைகள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அப்படின்னு பல பேரு கிட்ட இருந்தும் வரும்... இதுலையும் கொஞ்சம் நல்ல மார்க் வாங்கிடுவோம்...

இப்பதான் ஒரு டிவிஸ்டு வரும் பல மாணவ, மாணவிகளோட வாழ்வில... என்னா அதுன்னா, பனிரெண்டாவது வரைக்கும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஆண்களும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி்யில் படித்த பெண்களுமாத்தான் பல பேர் படிச்சு இருந்திருப்பாங்க... அவங்களை எல்லாம் கல்லூரின்ற ஒரு வளாகத்துக்குள்ள இருபாலரும் இருக்கலாம்னு அடைச்சு வைக்கும் போது தடுமாறும் பாருங்க ரெண்டு பேரோட மனசும்... ஹ்ம்ம்ம்... இதில, சகோதரிகள் இல்லாத பசங்களும், சகோதரர் இல்லாத பொண்ணுங்களும் கல்லூரிக்கு வந்து எப்படி அடுத்தவங்களோட சகஜமா பழகுறதுனு தெரியாம, நட்பின் வட்டம் எதுனு புரியாம நட்பை காதலாக எண்ணி குழப்பமாவாங்க பாருங்க... அப்பப்பா... உண்மையிலேயே கல்லூரி படிப்புன்றது மாணவர்கள் வாழ்க்கையில, பின்னாடி டயர் வெடித்த லோடு லாரியை ஆக்சிடென்டாக்காம ஓரம் கட்டுறதுக்குச் சமம்...

இந்தச் சமயத்துல இன்னொரு கொடுமை என்னன்னா, கல்லூரிக்குப் போனதும் பெத்தவங்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே விழும் விரிசல்... பனிரெண்டாவது படிக்கும் வரை படினு சொல்ற பெத்தவங்க கூட கல்லூரி சேர்த்தறதும், அவன் கேட்கறப்ப பீஸு கட்டுறதும் தான் பெருசா நினைக்குறாங்க... இத்தனை வயசுக்கப்புறமும், படி படினு பிள்ளைகளைச் சொன்னா நல்லாருக்குமானு சொல்லாம விடறாங்க, அப்படிச் சிலர் சொன்னாலும் உனக்கு ஒன்னும் தெரியாதும்மா(ப்பா) என்று பெற்றவர்கள் வாயை அடைக்கும் பிள்ளைகளால சொல்றதை நிறுத்திடறாங்க...

இதனால என்னாகுது... பல மாணவர்கள் வாழ்க்கை ஆக்ஸிடென்டான லாரியாயிடுது... உண்மையிலேயே பத்தாவதும், பனிரெண்டாவதும் வாழ்க்கை என்ற கட்டிடத்திற்கு கடைகால்னா கல்லூரி வாழ்க்கை என்பது அது மேல கட்டுற வீடு மாதிரி... கல்லூரி வாழ்க்கையில அவங்க கட்டப் போற வீடு தான் அடுத்து வாழும் பல வருடங்களும் அவங்க குடி இருக்கப் போற இடமுனு கல்லூரி வாழ்க்கை முடியற வரைக்கும் மாணவர்களுக்குத் தெரியறதில்லை... தெரிஞ்சுக்க விரும்புறதில்லை... அப்படித் தெரிஞ்சுக்கிட்டு நல்ல வீடா கட்டிக்கிறவன் கட்டுன வீட்டுக்குள்ள ஜாலியா உட்கார்ந்து மீதி வாழ்க்கை வாழுறான்... கட்டாதவனும், கட்டிக்கத் தெரியாதவ்னும் வெயிலிலும், குளிரிலும் மாறி மாறி கஷ்டப்படுறான்...

சோ, படிக்கும் இளைஞர்களே, கல்லூரி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க, அதே சமயத்துல உங்கள் எதிர்கால வாழ்க்கையையும் படிக்கும் போதே நினைச்சு பாருங்க... மூன்று, நான்கு அல்லது ஐந்து வருட கல்லூரி வாழ்க்கையை ஜாலியா போக்கிட்டு, ஏதோ பேருக்கு டிகிரி வாங்கிட்டோம்னு இல்லாம, கல்லூரியை விட்டு வெளிவரும் பொழுது என்னவா வெளிவரணும்னு முடிவு பண்ணிட்டு வெளியில வாங்க...

கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்...

Friday, July 22, 2011

சமாதானம்

அப்பப்பா இது ஆகாதப்பா
அழுகையை நீ கொஞ்சம் குறைச்சிடப்பா
பந்துண்டு கலர் பலூனுண்டு
கீகொடுத்தால் ஓட காருண்டு

பார்முழுக்க நீ பவனிவர
யானையாக இங்கு நானுமுண்டு
பாலுண்டு இனிக்கும் தேனுண்டு
படுத்துறங்க ஆடும் தூளியுண்டு

கலகலப்பாய் பல கதைகள்சொல்ல
காவலனாய் இங்கு நானுமுண்டு
எதுவேண்டும் அதைக் கேட்டிடப்பா
அரற்றுவதை நீ நிறுத்திடப்பா

எனைவிடுத்து நீ எங்கேயோ
எதைக்கண்டு நீ சிரிக்குறியோ
அஹ்ஹஹ்ஹா வந்துவிட்டாள் – உன்
அன்னை தரிசனம் தந்துவிட்டாள்

வித்தைகள் பலது நான்புரிஞ்சும்
வீம்பாய் அழுது அரற்றியநீ
வாசலில் அன்னையைக் கண்டவுடன் – பொக்கை
வாயினில் சிரிப்பது விந்தையப்பா…

Thursday, July 21, 2011

காதலிக்கலாம் வா - 5

காலர் தூக்கிய சட்டை
சவரம் செய்யா தாடி
டீக்கடை கேலிப் பேச்சு
தீயாய் அழிக்கும் கோபம்
பார்ப்போர் அஞ்சும் பார்வை
யார்க்கும் வணங்கா திமிரு
லட்சியம் இல்லா போக்கு
எல்லாம் தொலைந்தது எங்கோ - உன்
கொல்லும் பார்வையால் இன்று...

காதலிக்கலாம் வா - 4

கண்ஜாடை காட்டிப்புட்ட
அழகாக - அது
என்னையுந்தான் ஆக்கிடுச்சு
புள்ளாக

சொன்னாயே ஒரு சொல்லை
பதமாக - அது
சொர்க்கந்தான் காட்டுதெனக்கு
இதமாக

ஊர்முழுக்க மேளம்கொட்டி
சொல்லிப்புட்டு - உன்னை
பரிசமிட்டு பாய்ஞ்சணைக்க
ஓடிவர்றேன்...

பரிசமதை போடுமுன்னே
பரிசாக - காதல்
கரிசனத்தால் முத்தம்தாயேன்
சிறுசாக...

காதலிக்கலாம் வா - 3

வரமதை வேண்டி பெண்பாவாய்
தவமாய் தொடர்ந்தேன் பலநாளாய்
கண்மொழி படித்தே என்வாழ்வின் - முதல்
காதலைச் சொன்னேன் நீ கேளாய்

பதிலது வேண்டி காத்திருக்கேன்
விதியெது என்று சோர்ந்திருக்கேன்
நாணத்தை விடுத்து சொல்லிவிடு - உயர்
காதலோ சாதலோ தந்துவிடு...

காதலிக்கலாம் வா - 2

உன் காலடி தொட்ட கடல் நீ்ரெல்லாம் பன்னீராக ஆனதடி
பாதம் தொடாத நன்னீர் கூட கண்ணீராய் கடல் சேருதடி
உன் முகம் தழுவிட தென்றலும் இங்கே வாசனை திரவியம் ஆனதடி
தழுவிட முடியா தென்றலும் புயலாய் மரங்களை பிடுங்கி வீசுதடி
இத்தனை கண்டும் என்மனம் ஏனோ உன்னையே காண தேடுதடி
என்விதி என்ன ஆகிடும் என்று என்விழி பார்த்து கூறிடடி...

காதலிக்கலாம் வா - 1

சிறகில்லாமல்
வானில் பறக்கிறேன்
உன் ஒற்றைப் பார்வையது
ஓரமாய் விழும் போதெல்லாம்...

கருவிகள் ஏதுமின்றி
இசையமைக்கிறேன்...
கூவும் குயிலாய்
நீ பேசும் போதெல்லாம்...

பாதை தெரியாமல்
தடு(டம்) மாறுகிறேன்...
களுக்கென சிரித்தென் கண்ணை
களவாடும் போதெல்லாம்...

கைக்குவளை நீருந்தன்
தாகத்தைத் தீர்க்கையிலே
எந்நாவும் துடிக்குதடி.
தாகத்தால் தவிக்குதடி...

இப்படியே எத்தனை நாள்
உன்னை நீ காக்க வைப்பாய்...
பார்வையிலே பரிசளித்து
பறந்துவிட கரம் கொடுப்பாய்...

Sunday, July 17, 2011

பசி - வெண்பா

பிறப்பில் தொடங்கி இறக்கும் வரையில்
இருக்கும் பிணியே பசி.

தாயின் வயிற்றில் கருவாய் தரித்ததும்
நோயாய் பிறக்கும் பசி.

மொழிந்திடா பிள்ளை பசியது வந்திட
மொழியுமே பாங்காய் அழுது.

புதிதாய் பிறந்த குழந்தையும் பாலாய்
உதிரம் குடிக்கும் பசிக்கு.

வளரும் குழந்தை தளரும் நடையில்
பசியால் தவிக்கும் பொழுது.

பசியின் பிணியை மனிதர்க்கு போக்கிட
மருந்தாய் இருப்பது உணவு.

பசிக்கு உணவின்றி பலநாள் இருக்க
மடிவான் மனிதனும் தான்.

மனிதனின் பத்து மதிக்கும் குணங்கள்
பசிவர போகும் பறந்து.

எளியோன் இரக்கும்; வலியோன் திருடும்
பழியைத் தருமே பசி.

பசியை அடக்கும் வழியைத் தெரிந்திலார்
ஆசையை வென்றோரும் ஆம்.

இறந்த உடலுக்கு இரைப்போம் அரிசி
இறுதி மருந்தாய்ப் பசிக்கு.

அதீதம் இதழில் : http://www.atheetham.com/story/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF

சிக்னல் வியாபாரம்

மூன்று நிமிடத்திற்கு அரை நிமிடம்
மூச்சைக் கையில் பிடித்து
உயிரைப் பணயம் வைத்து
நின்றபடி உறுமும் வாகனங்களுக்கிடையே
ஓடியபடி கூவுகிறான்…
காற்றிற்காகத் திறந்த சன்னலின்
ஏழை நடுத்தர வர்க்கத்தின் முன்னும்…
குளிரூட்ட மூடிய சன்னலின்
உயர்தர வர்க்கத்தின் முன்னும்…
மனக்கதவு திறந்து
பணப்பை நிறையாதா என்று.!