Monday, May 30, 2011

உடல்தானம்

சில நொடிகள் முன்வரை
இருந்தவர்
இப்போது இல்லை...
எங்கே போனார்???
தெரியவில்லை...
எப்படி போனார்???
தெரியவில்லை...

எனது தேவைக்காய்
என்னை வருத்தி
எனது எஜமானனாய் வாழ்ந்திருந்தவர்...
வேலையாளை மாற்றி விட்டாரோ!!!

எரிக்கவா புதைக்கவா???
சூடாய் விவாதிக்கிறார்கள்
இரண்டும் வேண்டாம் தானமாகக் கொடு...
எஜமானன் இல்லை.!
எனைச் சொல்ல வைக்க...

இதோ எரிக்கப் போகிறார்கள்
என்னோடு சேர்த்து
எனது ஆசையையும்...

ஒருவரிடமாவது சொல்லி இருந்திருக்கலாம்...
நான் ஆசைப்பட்டு எழுதி வைத்த
உடல்தான உயிலை...
எஜமானன் இருந்த போதே.!

திகம்பரன் கதை - வெண்பா வடிவில்

தவஞ்செய் முனிகள் சிவனை மறக்க
அவருள் செருக்கு மரமாய் வளர
பிறந்த உடலொடு நின்றான் - பொருளை
இரந்து பெறவே எழில்மிகு ஈசன்;
சிவனின் அழகில் முனிபத் தினிகள்
மயங்கி அவன்பின் தொடர; சினந்த
முனிகள் அபிசார யாகம் நடத்தி;
புலியை அனுப்ப அதனை அழித்து
உடையாய் அணிந்தான் உடுக்கை விரும்பி;
சினமது தணியா முனிகள் தொடர்ந்து
அனுப்பினர் மானையும் பாம்பையும் தாக்க;
அதனையும் ஈசன் அணிகலன் ஆக்க
அனுப்பினர் பூத கணங்களைத் தாக்க;
கணங்களை ஈசன் படையினில் சேர்க்க
சளைக்கா முனிகள் களிறினை ஏவ;
களிறை அழித்ததன் தோலை பரமனும்
போர்வையாய் ஆக்கி குறுநகை வீச;
அகத்தில் முனிகள் சிவனை நினைத்து
தொழுதிட அவரின் செருக்கை அழித்து
திகம்பரன் ஆனான் அறி.

தோல்வியும் சுகம்

உன்னோடு பேசும்
ஒவ்வொரு முறையும்
தோற்று நிற்கிறேன் நான்.!
முடிவெடுத்தேன்
எப்படியும் இன்று ஜெயித்து விடுவதாய்...
உன் வரவை எதிர்பார்த்து.!

உன்னைக் கண்டதும்
பேசாமலே வெற்றி பெற்றதாய் உணர்வு...
மெதுவாய் கேட்டேன்
என்னுள் நீ எப்படி இருக்கிறாய் தெரியுமா?

கள்ளச் சிரிப்புடன்
சொல்லேன் கேட்கலாம்! என்றாய்...

நுரையீரலில் சுவாசகாற்றாய்
இதயத்தின் துடிப்புகளாய்
மூளையின் சிந்தனை ஓட்டமாய்
என்னுடல் முழுதும் வியாபித்திருக்கிறாய் என்றேன்...

பொய்யாக முகம் வாடி
எனக்கு நீ அவ்வாறு இல்லை என்றாய்...
பின் எப்படி என்றேன் நான்?
என்னுள்ளே மட்டுமல்ல
என் வெளியேயும்
பார்க்குமிடமெங்கும் நீயே வியாப்பித்திருக்கிறாய் என்றாய்...
வெற்றிச் சிரிப்போடு.!

இன்றும் எனை வென்று விட்டாயா
இறுக்கத்துடன் கேட்டேன்...
உன்னைப் போல பேச கற்றுத் தாயேன்?

இறுக்கி அனைத்து சொன்னாய்
நீ நீயாக இருப்பதாலேயே எனக்குப் பிடித்திருப்பதாய்.!

இறுக்கி அனைத்தபடி நானும் சொன்னேன்
என்றும் தோற்கவே விரும்புவதாய்...


வியப்போடு கேட்டாய்...
என்ன! என்றும் தோற்க வேண்டுமா?

ம்ம்ம்... உன் இந்த அணைப்பிற்காய்
என்றுமே தோற்கலாம்...

ச்சீய் போடா
சினுங்கினாய் சில்லறையாய்...
கையேந்தி நின்றேன்...

என்ன? என்றாய்...

சேகரித்தேன் உன் சினுங்கல்களை
மருதானிக்கு மருதானி வைக்கவென்றேன்...

என்னைப் பேசியே கொல்லாதேடா என்றாய்
காதைப் பொத்தியவாறு...

என்கையையும் கொடுத்தேன் காதைப் பொத்த...

கைபட்ட கணத்தில் சிலிர்த்து நின்றாய்
காதலைக் கண்ணோடு கொடுத்து நின்றாய்
மூச்சினை வேகமாய் இழுத்து விட்டாய் - உன்னுள்
மூழ்கவும் வைத்தெனை தவிக்க வைத்தாய்

இமைகள் துடிக்காமல் உனை பார்த்து
இதழைக் கொடுக்கவா என கேட்க
இதய படபடப்பிலுன் உடல் நடுங்க

இதுவே போதுமென நான் விலக
இழுத்தாயுன் பிடியுள் இமைப்பொழுதில்
அழுத்திக் கொடுத்தாய் நீ முத்தம் மறுநொடியில்

இதயத்தின் படபடப்பும் உடலின் சிலுசிலுப்பும்
அடங்கி இருந்தது உன்னுள்
தொடங்கி இருந்தது என்னுள்...

சிலிர்த்து நின்ற என்னைக் கண்டு
சிரித்து நின்றாய்...
மீண்டும் தோற்றாயா என்னிடமென்று.!

சொல்லத்தான் நினைக்கிறேன்
இப்பொழுதும் நான்...
என்றும் தோற்கவே வேண்டுமென்று.!

மழை

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
வானம் தான் பொத்தல் ஆனதோ - இல்லை
மேகம் தான் பொங்கி வந்ததோ...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
இடிச்சத்தம் காதைப் பிளக்குதே - தாய்
மடிதேட என்னைத் தூண்டுதே...


என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
மின்னல் வந்து வின்னை வெட்டுதே - இதை
கண்ணில் பார்க்க வழியுமில்லையே...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
மண் வாசம் தேடி வந்ததே - என்னை
பெண்வாசம் தேட வைக்குதே...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
அனல் காற்றும் தென்றல் ஆனதே - எந்தன்
மனம் இன்று ஊஞ்சல் ஆடுதே...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
வானம் தான் பொத்தல் ஆனதோ - இல்லை
மேகம் தான் பொங்கி வந்ததோ...

இணையப் போலிகள்

இணையத்தில் நான்தான்
வாடிக்கை இன்று

தெரிந்தவர் ஒருவரின்
பலவீனம் காண
தெரிந்தவர் ஒருவரால்
வேடிக்கையாய் பிறப்பேன்…

அன்பான பேச்சால்
சுவையான சிரிப்பால்
வளர்ந்தே நாளும்
வசியமாய் மாறுவேன்…

தேனில் விழுந்த ஈயாய் அவரும்
என்னுள் விழுந்து வெளிவர வாட
இழந்த சுயத்தை என்னுள் தேட
இளிப்பேன் நானும் வஞ்சக னாக…

எனக்கென சொல்லும்
எனக்கென உணர்வும்
நானா கேட்டேன்
தானாய் கொடுத்தார்…

இன்பமாய் நானும் வாழ்ந்திட இன்று
துரத்திட நினைத்தால் விடுவனோ நானும்
என்னையும் அழிப்பேன் எந்தையும் அழிப்பேன்
என்னை அழித்திட நினைக்கையில் நானும்…

வெண்பாக்கள் சில

சொல்லில் வன்மையையும் சிந்தைத் தெளிவினையும்
அள்ளித் தருவாளே அட்சயப் பாத்திரமாய்
கல்விக்கு அதிபதியாம் எங்கள் கலைமகளை
உள்ளில் நினைத்து விட.


இன்பம் எதுவென்று தேடியே வாழ்க்கையின்
இன்பப் பொழுதுகளை வீன்செய்து வாழத்
திரும்புமோ இன்பப் பொழுதும் அதனால்
இருத்தலில் இன்பம் அடை.


எண்ணும் எழுத்தும் என்னுள் விதைத்து-நல்
எண்ணம் வளர்த்திவ் வுலகோர் வியந்திட
என்னையும் ஆக்கிய என்குரு அன்பினை
எண்ணிடும் நன்னாள்;இன் று.


பரியும் கரியும் உறுமும் களத்தில்
பயந்து நடுங்கி பதுங்கி நுழைந்து
இறந்த உடலின் சிரத்தைப் பறித்தே
இறைபவன் வீரனோ சொல்.

கிறுக்கல்கள் இரண்டு

கற்பு:

கற்போடே வாழ்கிறேன்.!
உறவாடும் பொழுதில்
இன்னொருவனை நினையாமல்...
பணத்திற்காய் மட்டுமே பாயை விரித்தாலும்
நான்...
பத்தினியாய் வாழும் பலர்???


பெயரில்லாதது
:

எதிர்காலமே நீயென்றிருந்ததால்.!
எதிர்காலத்தின் பயம்
இருந்ததில்லை என்றும்
உன்நிழலில் இருந்த பொழுதுகளில்...

Tuesday, May 10, 2011

தொடர் பயணம்

பயணித்துக் கொண்டிருக்கிறேன்...
யாருமற்ற தனிமையில்
கால்களின் ஓட்டத்தில்
எங்கு செல்கிறேன் என புரியாமல்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்...


என்னோடு சேர்ந்து
எனக்குத் தெரியாமலே
என்னைத் தொடர்ந்து வருகிறாள்...

ஓரப்பார்வையின் உறுத்தலில்
நான் திரும்ப
முகம் மறைக்க எத்தனிக்கிறாள்
மேகத்தைக் கொண்டு...

என்னையும் பார்க்குமிவள் யாரோ????

ஆடை விலகாதோ - முழு
தரிசனம் கிடைக்காதோ...
திரும்பி பார்த்து திரும்பி பார்த்து
பயணிக்கிறேன்...

சட்டென்ற ஒரு பொழுதில்
வெட்கம் விட்டு முழுமுகம் காட்டினாள்...
பட்டென நின்றதென் கால்கள்...

கண்ணோடு கண் நோக்கியவள்
முழுதுமாய் மறைத்தாள்
கனப்பொழுதில் தன்னை...

கண்வழியே நுழைந்தவள்
கனவாகி மறைந்தனள்...
முன்னோக்கி நகர மறுத்தன கால்கள்
மண்ணோக்கி பார்க்க மறுத்தன கண்கள்...

முடிவானது...
யாருமற்ற தனிமையில்
கால்களின் ஓட்டத்தில்
கண்களின் துணைதேடிய பயணம்
நாளையும்.!!!

இன்னொருமுறை

எங்கோ… என்றோ…
விட்டுச் சென்றதைத்
தொடர்ந்து முடிக்க
இங்கே இன்று ஜனித்திருக்கிறேன்…

விட்ட பணி நினைவுடன்
கருவறையில் தவம்கிடந்தேன்…
தவம்கலைந்த நொடியில்
தவத்திற்கான காரணம் தொலைத்தேன்…

ஏதேதோ தேடல்
புறத்திலும் அகத்திலுமாய்…
தேடும் பொருள்
இன்னதென்றுணராமல் தேடுகின்றேன்…

தேடலின் காரணம்
உணர்ந்தபொழுதில்
தேடி நின்றது மரணத்தை
எனதுடல்…

தேடலை விட்டு வைத்து
மீண்டும் தவம்கிடக்கிறேன்…
தேடலை முடிக்க; கருவறையில்…
இன்னுமொருமுறை.!

Thursday, May 5, 2011

தேடல் துவங்கியதே

முதல்பார்வை சொல்லிடுமோ நமக்குள்ள சொந்தமதை

முகம்பார்க்க பொங்கிடுமோ நம்முள்ளே காதல்மழை

எனக்காகப் பிறந்தவளே எங்கேநீ உள்ளாயோ

என்னென்ன கனவுடனே என்னைநீ தேடுறியோ

அஞ்ஞாத வாசமது முடிந்திடும்நாள் எப்போதோ

அன்னியமாய் இருந்திடும்நாம் சேர்ந்திடும்நாள் அப்போதோ…

Wednesday, May 4, 2011

பயணங்கள் இனிப்பதில்லை

சன்னலோர இருக்கை இல்லாமல்
குழந்தையின் அழுகை சத்தம் இல்லாமல்
பாட்டோ படமோ இல்லாமல்
நடத்துனர் கொடுக்க மற(று)க்கும் சில்லரை இல்லாமல்
பேச பக்கத் துணை இல்லாமல்
மூட்டை முடிச்சுகளின் இடிபாடு இல்லாமல்
பயணங்கள் இனிப்பதில்லை...
சிலருக்கு மட்டும்
பயணச்சீட்டு வாங்காத பயணம் இல்லாமல்.!

Tuesday, May 3, 2011

கருக்கலைப்பு

நான் என்ன தவறு செய்தேன்?

மரணித்துக் கொண்டிருக்கும்
என் இறுதி நேர
மரண சாசணம் இது...

நான் நீதி கேட்கவில்லை
காரணத்தைக் கேட்கிறேன்....
நான் என்ன தவறு செய்தேன்?

மூன்று திங்களுக்கு முன்பு
இலட்சம் கோடி எதிரிகளை வென்று
வெற்றிக்கனியை ருசித்தவன் நான்...

வெற்றிப்பெருமிதத்தில்
நாளுக்கு நாள்
சதை போட்டு விட்டேன்...

மூன்று நாட்களுக்கு முன்புதான்...
எனது இருப்பை உணர வைக்க
நான் வாழ்ந்த இடத்தில்
புரட்சி செய்தேன்...

புரட்சி... ஆம்.!
நான் வாழ்ந்த இடத்தின்
உரிமையாளருக்குக் குடலைப் புரட்டும்
புரட்சி.!

அன்றிலிருந்து
ஊட்டமில்லை - எனக்கு
வாழத் தெம்புமில்லை...

சக்தியற்று கிடந்த என்மேல்
இன்று
திராவக வீச்சு...

இத்திராவகத்தின் எரிச்சல்
தாங்க முடியவில்லை...
இதோ.! இறந்து கொண்டிருக்கிறேன்...

மீண்டும் கேட்கிறேன்...
காரணத்தைச் சிந்தியுங்கள்...
என் மரணத்திற்குப் பின்னாவது...
நான் என்ன தவறு செய்தேன்?