Wednesday, August 25, 2010

கிறுக்கல் - 47

ஆற்றங்கரையில் நண்பர்களுடன் அளவலாவும் நேரம்

பெருக்கெடுத்து வரும் ஆழிப்பிரளயமாய் வெள்ளம்வர

பயத்தில் தான்கொண்ட பொருளை விடுத்து

பின்னங்கால் பிடரியில்பட உயிருக்காய் அனைவரும்ஓட

தாவிநீரை அணைத்திட தவழுமோர் குழந்தையாய்

அலுவலகப் பணியில் அகப்பட்ட நாள்இன்று…

Saturday, August 21, 2010

திருமண வாழ்த்துப்பா

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே

விழியோடு இமைபோலவே பிரியாமல் துணையோடு

பல்லாண்டு நீவாழ்கவே

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே

குழந்தைபல பெற்று நல்குடும்பமாய் வாழும்

மணவாழ்வின் ஆரம்ப நன்னாளிது

இன்பதுன்பம் யாவும் பகிர்ந்துகொண்டு வாழும்

இல்லறத்தின் ஆரம்ப நன்னாளிது

சந்தேகம் மனதில் இல்லாமல் வாழ்ந்தால்

இல்வாழ்க்கை ஆனந்தமே

சந்தேகம் தோன்ற மனம்விட்டுப் பேச

பறந்தோடும் சந்தேகமே

இன்றுபோல் என்றும் இன்பமுடன் வாழ

இறையருளை நாளும் வேண்டுவேன் நானும்

பல்லாண்டு நீவாழ்கவே

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே...


Thursday, August 19, 2010

கிறுக்கல் -46
துடுப்பிழந்த படகைக் காக்கும் துடுப்பாய்
வழிதவறிய காட்டில் வழிகாட்டியாய்
வன்முறை வெறியர்களை வேட்டையாடும் காவலனாய்
பறவைகளோடு போட்டி போட்டு பறக்கும் மனிதப்பறவையாய்
பாம்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில்
பாம்பை பிணைத்து கயிறாக்கும் மாயாவியாய்
நடக்கும் நிகழ்வனைத்திலும் நாயகனாகவே - நனவில்
நடக்குமா எனத் தெரியாத நான் கண்ட கனவுகளில்....

Monday, August 16, 2010

கிறுக்கல் - 45

மனமே மனமே பேசவிடு

குமுறுலைக் கொட்டித் தீர்த்துவிட

பேசா வார்த்தைகள் சேர்ந்து என்னுள்

பேதைமை இன்னும் வளர்த்திடுது

ஒருநாள் எதிர்த்து பேசியதால்

ஒவ்வா நட்பாய் நானானேன்

ஒருமுறை செய்த தவறாலே

ஒவ்வொரு முறையும் தவறானேன்

பேசிட என்னை அனுமதித்தால்

பேதைமை மறைய வாய்ப்புமுண்டு

மனமே மனமே பேசவிடு

குமுறுலைக் கொட்டித் தீர்த்துவிட…

Monday, August 9, 2010

வரதட்சினை

பெண்ணின் நிறம் குறைவு
அரசாங்க உத்தியோகம்
வீட்டிற்கு ஒரே பையன்
மணமகன் வீட்டில் பேசப்பேச
அடுத்து காத்திருக்கும் பெண்களை எண்ணி
மணமகள் வீட்டில் தவிப்பு
எத்தனை பவுனில் நிற்குமோ
மூத்தவள் புக்கக விலை...


வரதட்சனை வாங்கேனென்ற
கொள்கையால் மனம் நொந்தேன்
எனை நொந்தே வெளி வந்தேன்...
மச்சி வீடிருக்கு
மாருதி காரிருக்கு,
அரசாங்க பணியிருக்கு
மவராசன் பொலிருக்கான்
இருந்தும் ஏன் கேட்கலையோ
வரதட்சனை இவனுந்தான்
தெரியாத இடத்தினிலே
குறையேதும் இருந்திடுமோ
தெரிஞ்சுகிட்டே பேசிடலாம்
மத்தகதை என்றேதான்
முனுமுனுத்த கிழவி பேச்சால்...

கிறுக்கல் - 44

குளித்து முடித்த
ஈரக் கூந்தலைத்
துவட்டியப் பின்னரும்
சொட்டிய நீராய்
உந்தன் மனதில்
எந்தன் காதல்...

கிறுக்கல் - 43

நிறம் இனம் மொழி வேறுபாட்டால்
பாலியல் பலாத்காரத்தால்
பரிதவித்து மரித்த உயிர்கள்
தேடியே அலைகின்றன்
மனித நேயத்தை...

Saturday, August 7, 2010

கிறுக்கல் - 42

இறந்த பின்
தேடி அலைகிறான்
எனது சுவடுகளை
வெற்றுக்காகிதத்தில்
அவனைப் பற்றி
நான் எழுதிய
எண்ணக்குவியல்களில்...

Tuesday, August 3, 2010

தமிழ்த்தென்றல் மின்னிதழில் என் படைப்பு: வெண்பா உரையாடல்

வெண்பா, தெரியாததற்கு முன் இது நமக்கு எதற்கு என்று உங்களைப் போல விளையாட்டாக நினைத்தவன் தான் நானும். இன்று ஏதோ இந்த வெண்பா சுவை கண்டு விலக முடியாமல் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி என்ன இருக்கு இந்த வெண்பாவில், அப்படியே கத்துக்கிட்டு பேசினாலும் யாருக்குப் புரிய போகுது, வெட்டி வேலை அப்படின்னு நினைக்கிறீர்களா. வெண்பா வடிவில் எல்லாத்தையும் சொல்லலாம்ன்றது நான் கத்துக்கிட்ட பிறகும் பல பேர் எழுதிய வெண்பாக்களைப் படித்த பிறகும் புரிந்து கொண்டேன். நாம் பேசும் ஒவ்வொன்றையும் வெண்பா வடிவில் சொல்லனும்னா குறள் வெண்பாவில் ஈசியா சொல்லிட முடியும். இந்த பகுதியில் ஒரு சின்ன வெண்பா உரையாடல் ஏதோ எனக்குத் தெரிந்த இலக்கண அறிவோட எழுதி இருக்கேன். ஒரு குழந்தை பள்ளிக்குச் சென்று வீடு திரும்புகிறது. அக்குழந்தைக்கும் அக்குழந்தையின் தாய்க்கும் நடக்கும் ஒரு சிறு நிகழ்வுதான் இந்த வெண்பா உரையாடல்.


பிரசாத்: “புசிக்க உணவைப் படைத்திடு தாயே

பசியால் தவிக்கும் எனக்கு”


இலட்சுமி: “அதிசயம் என்ன குழந்தாய்; பகர்வாய்

மதியம்நீ உண்டாயா என்று”


பிரசாத்: “தேன்சுவை விஞ்சும் உணவதை நானுமே

வீன்செய்யா(து) தின்றேன்;அம் மா”


இலட்சுமி: "தட்டினில் சூடாய் இருக்குது இட்லியும்;

சட்னிசேர்த்து மிச்சமின்றி உண்”


பிரசாத்: "உண்டு முடித்ததும் அம்மா; விளையாடச்
சென்று வருகிறேன் நான்".

இலட்சுமி: " பாடம் எழுதி முடித்திடு சீக்கிரம்
ஆடலாம் ஆட்டம் பிறகு."

பிரசாத்: " விளையாடி வந்தே எழுதி முடிப்பேன்
பிழையின்றி பாடமதை நான்."

இலட்சுமி:" அப்பா வருமுன்பு ஆடிவிட்டு; நேரமது
தப்பாமல் வீட்டிற்கு வா."


இப்படி எல்லா விஷயத்தையும் வெண்பா வடிவில் சொல்லலாம். இதே போல இன்னுமொரு பதிவுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

பண்புடன் மின்னிதழில் என் படைப்பு

பதுக்கல்

பெட்ரோலியப் பொருட்களின் விலை ஒவ்வொரு முறை உயரும் போதும் சாமானியன் சுரண்டப்படுகிறான். பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும் அரசும், மக்கள் மேல் அக்கறை கொண்டு, விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாய் நாடகமாடும் எதிர்கட்சிகளும் தன் சொந்த ஆதாயங்களுக்காகவே செய்கின்றனவேயொழிய மக்களுக்காக அல்ல.


திரைப்படத்தில் திரைக்கு முன்னும், திரைக்குப் பின்னும் நடக்கும் கூத்துக்களைப் போன்று, இந்த பெட்ரோல் விலை உயர்வென்னும் நாடகத்திலும் திரைக்கு முன்னும் திரைக்குப் பின்னும் பலவகை கூத்துகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது. இந்த நாடகங்களால் பலருக்கும் பல்வேறு ஆதாயங்கள் இருந்தாலும் வலிக்காமல் பிள்ளை பெறுவது போல பெட்ரோலை சில்ல்றையாக நுகர்வோருக்கு விற்கும் பெட்ரோல் பங்குகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடத்தும் பதுக்கல் நாடகங்கள் பிரசித்தி பெற்றவை.
பொதுவாகவே ஒரு பொருளுக்குத் தேவை அதிகமாக இருக்கும்போது அதைச் சந்தையில் எளிதில்கிடைக்காமல் முடக்கி வைத்து அந்தப் பொருளின் சந்தை மதிப்பை செயற்கையாக உயர்த்தி அதன் மூலம்கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத்தான் பதுக்கல் என்கிறோம். இத்தகைய பதுக்கல்கள் பெரும்பாலும் அரிசி, சீனி, சமையல் எண்ணெய் போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் வகையிலேயே நடைபெறும் இத்தகைய பொருட்கள் உடனே கெட்டுப் போய் விடாதென்பதால் விலை உச்சத்தை எட்டும் வரையில் இதனை வாரக்கணக்கில் மாதக்கணக்கில் பதுக்கி வைத்துப் பெரும்பணம், சம்பாதிப்பதென்பது வியாபார உலகின் வாடிக்கையாக இருந்து வந்தது. இப்போது இந்த வரிசையில் அரசின் உதவியோடு பெட்ரோல்பங்குகள் கடும் கொள்ளையில் ஈடுபடுகின்றன.


ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை உயரும் போதும், விலை உயர்வைக் கண்டித்தும், எதிர்த்தும் பல தரப்பில் இருந்தும் குரல்கள் எழுப்பும் பத்தில் ஒரு சதவீதம் கூட இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வின் போது நடத்தப்படும் பதுக்கல் நாடகங்களுக்கு குரல் எழுப்புவதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். இது கண்ணால் கண்ட ஒரு உண்மைச் சம்பவம்.


அன்று பகல் ஒரு பத்து மணி இருக்கும். எனது அலுவலகப் பணிக்கு நாங்கள் வாடகைக்கு எடுத்த காரின் டிரைவர் என்னிடம் வந்து, “ சார், பெட்ரோல் போடனும். இரண்டாயிரம் ரூபாய் தாருங்கள், மாலைக்கு மேல் பெட்ரோல் கிடைக்காது” என்றான். நான், ஏன் “மாலை பெட்ரோல் கிடைக்காது”, “மாலை வெளியே போக வேண்டிய வேலை இருக்கிறது, அப்படியே பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம்” என்று சொன்னேன். அதற்கு அவன், “ சார், இன்று இரவில் இருந்து பெட்ரோல் விலை உயர்கிறது”, அதனால் ஆறு மணி வாக்கில் நோ ஸ்டாக் போர்ட் போட்டு விடுவார்கள். “மீதமிருக்கும் பெட்ரோல், டீசலை பனிரெண்டு மணிக்கு மேல் புதிய விலைக்கு விற்பார்கள்” என்றான். நானும், எதற்கு வம்பு என்று பணம் கொடுத்து பெட்ரோலை நிரப்பி வரச் செய்தேன்.

அன்று மாலை, அலுவலக வேலை காரணமாக, சுமார் 120 கி,மீ தொலைவு தேசீய நெடுஞ்சாலையைச் ரோந்து செய்ய நேர்ந்தது. எதேச்சையாய் கவனித்தேன். அனைத்து பெட்ரோல் பம்பு நிலையங்களின் முன்னாலும் ஏகப்பட்ட லாரிகள் டீசலுக்காய் காத்திருந்தது. டிரைவர் சிரித்தபடி, “ சார் நான் காலையிலேயே சொன்னேன். பார்த்தீர்களா” என்றான். நான் ரோந்து செய்த சாலையில் சுமார் பதினைந்து பெட்ரோல் பம்பு நிலையங்கள் இருந்தன. அதில் குறைந்தது பத்து பெட்ரோல் பம்பு நிலையங்களில் “நோ ஸ்டாக் போர்டு” இருந்தது. இலட்சக்கணக்கில் மதிப்புடைய பொருட்களையோ, கோடிக்கணக்கில் மதிப்புடைய பொருட்களையோ, மாதக்கணக்கில், வருடக்கணக்கில் பதுக்கினால் தான் பதுக்கல் என்றில்லாமல் ஒரு ரூபாய் மதிப்புள்ள பொருளை ஒரு மணி நேரம் பதுக்கினாலும் பதுக்கல்தான் என்றுணர்ந்து இந்த மாதிரி பதுக்கல் கொள்ளைகளை தடுத்து நிறுத்த வழி தான் என்ன…?

இம்மாதிரி பெட்ரோல் பங்குகள் செய்யும் பதுக்கல், பணத்தை மட்டுமல்ல மனதையும் சேர்த்து சுரண்டுவதுதான் வருந்தத்தக்க விஷயம். இருசக்கர வாகணம் வைத்திருந்தும் நேரத்திற்கு அலுவலகமோ, நேர்கானலோ செல்ல முடியாமல் பேருந்திற்காய் காத்திருக்கும் இளைஞர்கள், பேருந்து நெரிசலில் இடிபட்டு மனம் நொந்து கொள்ளும் மகளிர் என இவர்கள் செய்யும் ஆறு மணி நேர எரிபொருள் பதுக்கலால் எத்தனை சிரமம். இவ்வாறு இவர்கள் விற்கும் அதிகப்படியான பணம், கருப்பு பணமாக பெட்ரோல் பங்கு உரிமையாளர்களின் கல்லா பெட்டியில். இதுயெதுவும் பங்குகளுக்கு, பெட்ரோல் சப்ளை செய்யும் நிறுவணங்களுக்குத் தெரியாதா. அல்லது அமைதியாக வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகளுக்குத்தான் தெரியாதா. தெரிந்தும் ஏன் இன்னும் மௌனம். இந்த பதுக்கல் நாடகங்களுக்கு முடிவுதான் என்ன…?