Sunday, March 25, 2012

நட்புடன் குழும கரகாட்டக்காரன் - நகைச்சுவைக்காக மட்டும்

(நண்பர்களே, இதில் வரும் காட்சி அமைப்புகள் அனைத்தும் விளையாட்டிற்காக கற்பனையாய் உருவாக்கப்பட்டதே... எனது இவ்வெழுத்துகள் யாரையாவது காயமேற்படுத்தினால், அதற்கு முன்கூட்டிய மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...)

காட்சி 1 : பாலாஜி மாம்ஸும் ஆகாஷும்

பாலாஜி மாம்ஸ்: டேய் ஆகாஷ்…

ஆகாஷ் : அண்ணே, இதோ.! வந்துட்டேன் அண்ணே… என்ன அண்ணேகூப்பிட்டீங்களாஅண்ணே…

பாலாஜி மாம்ஸ்: இந்தா ஒரு மடலு… போயி குரூப்புல இருந்து ரெண்டு பேரைபுடிச்சுட்டுவாஇன்னைக்கு நகர்வலம் போக…

ஆகாஷ் : டிரீட் வாங்கவா, டிரீட் கொடுக்கவா…

பாலாஜி மாம்ஸ் : எதுக்காச்சும் கூட்டிட்டு வாடா… போடா…

ஆகாஷ் : ரெண்டு பேரு…


காட்சி 2 : ஜோசப் அண்ணாவுடன் ஆகாஷ்

ஆகாஷ்: குழுமக்காரரே, எங்க அண்ணன் ரெண்டு பேரைக் கூப்பிட்டு வரச்சொன்னாரு…

ஜோசப் அண்ணா : உங்க அண்ணன் என்ன கலெக்டரா… மேட்டரைச் சொன்னாயாராச்சும்ரெண்டுஆளு வரப்போறாங்க…

ஆகாஷ் : சரி சரி, ரெண்டு ஆளுஎனக்கு வேணும்…

ஜோசப் அண்ணா : உனக்கு ரெண்டு ஆளு வேணுமா… (நோ ரெண்டு சிம்மு)

ஆகாஷ் : ரெண்டு ஆளு

ஜோசப் அண்ணா : ஆளு ரெண்டு

ஆகாஷ் : ரெண்டு ஆளு

ஜோசப் அண்ணா : ஆளு ரெண்டு

ஆகாஷ் : ரெண்டும் ஆளு...

ஜோசப் அண்ணா : உன் கூட தலைவலிய்யா… சரி மேட்டரைச் சொல்லு…

ஆகாஷ்: மேட்டரைச் சொல்கிறார்…

ஜோசப் அண்ணா: நீயே கூப்பிட்டக்க…

(ஜெஹபர் மற்றும் ஹாஜா அவர்களை நகர்வலத்துக்கு ஏற்பாடுசெஞ்சுக்கிட்டுஆகாஷ்திரும்புகிறார். அப்பொழுது இருவரிடமும் கொஞ்ச நேரம்நல விசாரிப்புகள் எல்லாம்முடிஞ்சு,சுற்றும் முற்றும் திருதிருன்னு பார்த்துட்டு,ஆகாஷ், ஜெஹபர் அண்ணாவைப் பார்த்து, “என்னமனுஷன்யா நீரு, வீட்லகைக்குழந்தையை வச்சுகிட்டு நகர்வலம்னு சொன்னதும்பல்லைஇளிச்சுகிட்டுவர்ரீரே… போய்யா”… என்று விரட்டாத குறையாய் பேசிவிரட்டிவிடுகிறார்.ஹாஜாவை மட்டும் அழைத்துக் கொண்டு தனியே பாலாஜிமாம்ஸிடம் திரும்புகிறார்.)


காட்சி 3 : பாலாஜி மாம்ஸுடன் ஆகாஷ்

ஆகாஷ் : இந்தாங்கண்ணே…என்று ஹாஜாவைக் கை காண்பிக்கிறார்…

பாலாஜி மாம்ஸ் : எதுக்கு இவரு ?

ஆகாஷ் : நகர்வலத்துக்கு…

பாலாஜி மாம்ஸ்: நான் உன் கிட்ட எத்தனை பேரைக் கூப்பிட்டு வரச்சொன்னேன்?

ஆகாஷ் : ரெண்டு…

பாலாஜி மாம்ஸ் : ஒருத்தரு இங்க இருக்காரு… இன்னொருத்தரு எங்கே் ?

ஆகாஷ் : அந்த இன்னொருத்தரு தான் அண்ணே இவரு…

பாலாஜி மாம்ஸ்: டேய், நான் உங்கிட்ட என்ன சொன்னேன்…

ஆகாஷ் : ஆள் பிடிச்சுட்டு வரச் சொன்னீங்க…

பாலாஜி மாம்ஸ் : என்னன்னு சொல்லி

ஆகாஷ் : நகர்வலம்னு சொல்லி…

பாலாஜி மாம்ஸ் : எத்தனை பேரை பிடிச்சுட்டு வரச் சொன்னேன்…

ஆகாஷ் : ரெண்டு பேரு…

பாலாஜி மாம்ஸ் : ஒருத்தரு இங்க இருக்காரு… இன்னொருத்தரு எங்கே…

ஆகாஷ் : இன்னொருத்தரு தான் அண்ணே இது…

பாலாஜி மாம்ஸ்: ப்ச்… உட்காரு… டேய் நான் உங்கிட்ட என்ன சொன்னேன்..

ஆகாஷ் : ஆள் பிடிச்சுட்டு வரச் சொன்னீங்க…

பாலாஜி மாம்ஸ் : எத்தனை பேரை பிடிச்சுட்டு வரச் சொன்னேன்…

ஆகாஷ் : ரெண்டு பேரு…

பாலாஜி மாம்ஸ் : என்னன்னு சொல்லி

ஆகாஷ் : நகர்வலம்னு சொல்லி…

பாலாஜி மாம்ஸ் : நகர்வலத்துக்கு எத்தனை பேரு

ஆகாஷ் : ரெண்டு பேரு

பாலாஜி மாம்ஸ் : ஒருத்தரு இங்க இருக்காரு… இன்னொருத்தரு எங்கே…

ஆகாஷ் : இன்னொருத்தரு தான் அண்ணே இது…

பாலாஜி மாம்ஸ் : டேய்……


காட்சி 4 : மோருசுப்ராவுடன் பாலாஜி மாம்ஸ்

மோருசுப்ரா: என்ன அண்ணே, இவன் கிட்ட போய் சண்டை போட்டுக்கிட்டு…இவரு நம்ம கட்சி…

பாலாஜி மாம்ஸ் : என்ன? நம்ம கட்சி… பொல்லாத நகர்வல கட்சி… அவன்என்ன செஞ்சிருக்கான்…

மோருசுப்ரா : என்ன செஞ்சிருக்கான் ?

பாலாஜி மாம்ஸ் : நீ கேளு.. (ஆகாஷைப் பார்த்து) டேய் உட்காருடா…

பாலாஜி மாம்ஸ் : (மோருவைப் பார்த்து) தம்பி, ஒரு நகர்வலம் போக ரெண்டுபேரை பிடிச்சுட்டு வரச் சொன்னேன்… ஒருத்தரு இங்க இருக்காரு…இன்னொருத்தரு எங்கேனு நீயே கேளு…

மோரு சுப்ரா : இதுக்குப் போயி அவன் கிட்ட சண்டை போட்டா எப்படிச்சொல்லுவான்…


காட்சி 5 : ஆகாஷுடன் மோருசுப்ரா

மோருசுப்ரா : (ஆகாஷைப் பார்த்து) கண்ணே, அண்ணன் உன்கிட்ட என்னசொன்னாரு…

ஆகாஷ் : ஆள் பிடிச்சுட்டு வரச் சொன்னாரு…

மோருசுப்ரா: என்னன்னு சொல்லி

ஆகாஷ் : நகர்வலம்னு சொல்லி…

மோருசுப்ரா: எத்தனை பேரை பிடிச்சுட்டு வரச் சொன்னேன்…

ஆகாஷ் : ரெண்டு பேரு…

மோருசுப்ரா : ரெண்டு பேரைக் கூட்டியாரச் சொன்னாரில்ல… நீ கூப்பிட்டுவந்தவங்கள்லஒருத்தரு இங்க இருக்காரு, இன்னொருத்தரு எங்க இருக்காரு…

ஆகாஷ் : அட, அந்த இன்னொருத்தரு தாங்க இவரு…

பாலாஜி மாம்ஸ் : அடேய்…அடேய்… (துள்ளி ஆகாஷை அடிக்க முற்படுகிறார்)

மோரு சுப்ரா : ( பாலாஜி மாம்ஸை சமாதானமாக்கும் விதத்தில்) அண்ணே,அண்ணே, அண்ணே… சொன்னா கேளுங்க…


காட்சி 6 : ஜாரியா அக்கா, மோருசுப்ரா, ஆகாஷ் மற்றும் பாலாஜி மாம்ஸ்

ஜாரியா அக்கா : இந்தா, இந்தா , இந்தா, இந்தா.! எங்க இன்ன சண்டை… எங்கஇன்ன சண்டை…

மோருசுப்ரா : ஒன்னுமில்ல அக்கா… அண்ணன், ஆகாஷை நகர்வலம் போகரெண்டு பேரைக் கூட்டியாரச் சொல்லி இருக்காரு…ஒருத்தரைக் கூட்டியாந்துகைல கொடுத்துட்டாரு, இன்னொருத்தரு எங்கேனு கேட்டா அதுவும்இவருதான்றாரு… நீயே கேளுக்கா…

ஜாரியா அக்கா : (ஆகாஷைப் பார்த்து) இந்தா, உன்கிட்ட என்ன சொல்லிஅனுப்புனாரு…

ஆகாஷ் : ஆள் பிடிச்சுட்டு வரச் சொன்னாரு…

ஜாரியா அக்கா: என்னன்னு சொல்லி

ஆகாஷ் : நகர்வலம்னு சொல்லி…

ஜாரியா அக்கா: எத்தனை பேரு

ஆகாஷ் : ரெண்டு பேரு

ஜாரியா அக்கா : கூப்டுட்டு வந்தீங்களா…

ஆகாஷ் : வந்தேனே…

ஜாரியா அக்கா : ஒருத்தரு இங்க இவருகிட்ட இருக்காரு, இன்னொருத்தருஎங்க…

ஆகாஷ் : அட, இன்னொருத்தருதாம்மா இது…

பாலாஜி மாம்ஸ் : அடேய், மறுபடியும் மறுபடியும் அதே சொல்றான்டா…

ஜாரியா அக்கா : இந்தா, இந்தா, இந்தா சத்தம் போட்டு அசிங்கம் பண்ணாதீங்க…ஒரு ஆளு குறைஞ்சதுக்கு இவ்ளோ பெரிய சண்டையா…

பாலாஜி மாம்ஸ் : ஏய்.! என்ன ஆளைச் சாதாரணமா சொல்லிட்ட… ஆளுதானேபெரிய விஷயம்… ஒத்தை ஆளால எத்தனை பிரெண்ட்ஸுங்க பிரெண்டிஷிப்பிரிஞ்சு ஒருத்தன் டாஸ்மாக் போறான், ஒருத்தன் தேவதாஸா சுத்துறான்… அதுலவ் பண்ற ஆளு… இது நகர்வலத்துக்கு ஆளு. ஆனா பிரச்சினை எல்லாம் ஒன்னுதான்…

பாலாஜி மாம்ஸ் : (எல்லோரையும் பார்த்து சாந்தமாய்) விடுங்கைய்யா, நீங்கவிடுங்கைய்யா…


காட்சி 7 : ஆகாஷுடன் பாலாஜி மாம்ஸ்.

பாலாஜி மாம்ஸ் : (ஆகாஷைப் பார்த்து குனிந்தவாறு) டேய், வாடா இங்க… நான்உன்கிட்ட என்ன சொன்னேன்…

ஆகாஷ் : ஆள் பிடிச்சுட்டு வரச் சொன்னீங்க…

பாலாஜி மாம்ஸ் : எத்தனை பேரை பிடிச்சுட்டு வரச் சொன்னேன்…

ஆகாஷ் : ரெண்டு பேரு…

பாலாஜி மாம்ஸ் : என்னன்னு சொல்லி

ஆகாஷ் : நகர்வலம்னு சொல்லி…

பாலாஜி மாம்ஸ் : நகர்வலத்துக்கு எத்தனை பேரு

ஆகாஷ் : ரெண்டு பேரு

பாலாஜி மாம்ஸ் : குழுமத்துல போய் கூப்டியா…

ஆகாஷ் : கூப்டனே…

பாலாஜி மாம்ஸ் : குழுமத்துலர்ந்து வந்தாங்களா…

ஆகாஷ் : வந்தாங்களே…

பாலாஜி மாம்ஸ் : எத்தனை பேரு வந்தாங்க…

ஆகாஷ் : ரெண்டு பேரு வந்தாங்க..

பாலாஜி மாம்ஸ் : ஒருத்தரு இதோ, இங்க இருக்காரு… இன்னொருத்தருஎங்கே…

ஆகாஷ் : இன்னொருத்தரு தான்யா இது…

பாலாஜி மாம்ஸ் : அடேய், உன்னைக் கொல்லாம விட்டேனாபார்ரா(துரத்துகிறார்)…

ஜாரியா அக்கா : அடிக்காதீங்க… அடிக்காதீங்க… (பின்னால் ஓடியபடி)…


- திரை விழுகிறது.

Friday, March 23, 2012

கவுஜ

தாகம்:

தாகத்தில் வறளும் நாக்கு
தூரத்தில் மின்னும் தண்ணீர்
எதிர்திசையில் பறக்கும் பறவை
பின் தொடர்ந்து செல்லும் வேடன்

மரணம்:

விதி மீறல்
கையூட்டாய்ப் பணம்
பறக்கும் வாகணம்
எதிரில் இயமன்.

மோகம்:

உடையில் மாற்றம்
சினிமா விளம்பரம்
எதிரினக் கவர்ச்சி
உயிர்த்தெழும் உடற்பசி.

கையூட்டு:

விரைவு சேவை
எதிலும் முதல் இடம்
சரியாய் தவறு செய்தல்
ஒழுகவிடும் ஓட்டை சட்டம்.

மறுஜென்மம்

இருளுக்கும் வெளிச்சத்திற்கும்
இடைப்பட்ட பொழுதொன்றில்
யாருமற்று தனியே நின்றிருந்தேன்
என்னையே பார்த்தபடி...

சட்டென்று என்னை
அள்ளிச் சென்ற வாகனத்தில்
என்னை எனக்குள் திணித்தபடி சிலர்...

மெதுமெதுவாய் என்னை இழக்க
முனகியபடி துள்ளி எழுந்தது
என் உடம்பு...

எதுவுமேத் தெரியாமல்.!

அரவான் என்ற அரசகுமாரன்

அரவான்... சாமுத்ரிகா லட்சணங்கள் நிறைந்த ஒரு ஆண்மகன். அங்கஹீனமே ஒருபொழுதும் ஏற்படாத ஆண்மகன்... இதென்ன பெரிய விஷயம், இங்கு பெரும்பாலும் எல்லோரும் அங்கஹீனம் இல்லாமல் தானே இருக்கிறோம் என்கிறீர்களா... ஒரு சிறிய கத்தி வெட்டு, அல்லது ஒரு சிறு கல்லினை கால் தட்டி இரத்தம் சிந்தியிருந்தாலும் கூட நாம் அங்க ஈனம் அடைந்தவர்களாகவே கருதப்படுவோம்.

அரவான், தான் பிறந்தது முதல் இறக்கும் வரையில் அங்க ஈனமே இல்லாமல் வாழ்ந்து மடிந்தவன். யார் இந்த அரவான்? அரவான் கதைதான் என்ன எனக் கேட்கிறீர்களா. வாருங்கள் பின்னோக்கிச் சென்று மகாபாரதத்தைச் சற்று புரட்டிப் பார்ப்போம். அரவானைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மகாபாரதத்தின் ஆதிபர்வத்தைப் புரட்டிப் பார்த்தே ஆக வேண்டும்.

மகாபாரதத்தில், பாண்டவர் ஐவருக்கும் பாஞ்சாலி ஒருத்தி தான் மனைவி என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் பாண்டவர்களுடனான பாஞ்சாலியின் இல்வாழ்க்கை மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்தது. பாஞ்சாலி பாண்டவர் ஐவருக்கும் மனைவியே ஆயினும், அவளுடனான இல்வாழ்க்கையில் ஐவரில் ஒரு ஆண்டுக்கு ஒருவரே பங்கு கொள்ள முடியும். இவ்வாறு ஒருவருடன் பாஞ்சாலி இருக்கும் பொழுது அவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாரேனும் ஒருவர் நடந்து கொண்டால் இடையூறு செய்தவர் ஒரு வருடம் பெண்வாசம் இன்றி வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் அந்நியதிகளுள் முக்கிய அம்சமாகும்.

இப்படி பாண்டவர்கள் வாழ்ந்து வரும் சமயம், ஒரு நாள் அந்தணன் ஒருவன் தனது மாடுகளைக் கள்வர்கள் கவர்ந்து செல்வதாகவும், அதனை மீட்டுத் தருமாறும் அர்ஜுனனிடம் வேண்டுகிறான். அர்ஜுனன் நிரைகளை மீட்க வேண்டி, தனக்குத் தேவையான வில் மற்றும் அம்புகளை எடுக்கச் செல்லும் போது தருமரும் பாஞ்சாலியும் இருக்கும் அறையைக் கடக்க நேரிட்டது. தவறுதலாக அர்ஜுனனும் அவர்கள் கால் விரல்களை பார்த்து விட்டான்.

நிரைகளை அந்தனர்க்கு மீட்டுக் கொடுத்த அர்ஜுனன், தருமரிடம் நடந்ததற்காக மன்னிப்புக் கோரி, நியதிப்படி தான் ஓராண்டிற்குத் தீர்த்த யாத்திரைப் புறப்படும் முடிவையும் சொன்னான். தருமரோ, நீ யாதொரு இடையூறும் எங்களுக்குச் செய்யவில்லை. மேலும் அவசர காலத்தில் ஒருவர்க்கு உதவுவதென்பது அரச தர்மமாகும். அதன்பொருட்டு நீ வில் அம்பு எடுக்க வந்ததால் இது நியதியை மீறியதாகாது என்று எடுத்து இயம்புகிறார்.

இருப்பினும், அர்ஜுனன் தனது மன சாந்திக்கு வேண்டியாவது, தான் தீர்த்த யாத்திரை மேற்கொள்வது தேவையாகிறது எனச் சொல்ல தருமரும் இசைவு தெரிவிக்கிறார். அர்ஜுனன் தனது தீர்த்த யாத்திரையை தெற்கிலிருந்து தொடங்கி அனைத்து புண்ணிய தலங்களுக்கும் சென்று இறைவனை தரிசித்துவிட்டு கங்க நதியை வந்தடைகிறான். கங்கா நதி உற்பத்தி ஆகும் இடத்தில் சில காலம் அர்ஜுனன் தங்கி இருக்க தீர்மானித்தான்.

இவ்வாறு அர்ஜுனன் கங்கை நதி கரையில் வீற்றிருக்கும் போது, அவனைக் கண்டு மயங்கிய நாக கன்னிகையான உலுப்பி அர்ஜுனனை நாக தேசத்திற்கு அழைத்துச் சென்று அவனுக்குத் தேவையான பணிவிடைகள் செய்து, பின் தனது விருப்பமாக அர்ஜுனனை மணக்க விரும்புவதாகக் கூறுகிறாள். அரசர் மரபில் எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றாலும் அர்ஜுனன், தான் ஓராண்டிற்கு பெண்வாசம் இல்லாமல் இருக்க வேண்டிய நியதியை உலுப்பிக்கு எடுத்தியம்பி அவளை மணக்க மறுக்கிறான்.

அர்ஜுனனிடம் தன் மனதை இழந்த உலுப்பியோ அர்ஜுனனின் சொல்லுக்குச் செவி சாய்க்காமல், தன்னை மணக்க வேண்டும் அன்றேள் அக்கணமே உயிர் நீப்பதாகக் கூறி, ஒரு பெண்ணின் உயிரைக் காத்தல் அரச தர்மம். அதனை நீங்கள் மீறலாகாது எனச் சொல்லியவாறு தற்கொலைச் செய்து கொள்ள முனைகிறாள். இத்தர்மசங்கடமான நிலையில் அர்ஜுனன், உலுப்பியின் உயிரைக் காக்கும் பொருட்டு உலுப்பியைக் காந்தர்வ விவாஹம் செய்து கொண்டு அவளுடன் சில காலம் இல்லற வாழ்வை நடத்துகிறான்.

அதன் காரணமாக உலுப்பிக்கு அர்ஜுனன் வாயிலாக ஒரு ஆண்மகவு பிறக்கிறான். அவனே அரவான். தீர்த்த யாத்திரை முடிந்து அர்ஜுனன் திரும்புகையில் உலுப்பி அர்ஜுனனுக்கு, நம் மகனை நானே வளர்க்கிறேன். உங்களுக்குத் தேவையான சமயத்தில் நீங்கள் அவனை அழைக்க அவன் உங்களிடம் வந்து சேர்வான் என்று வாக்கு கொடுத்து வழியனுப்பி வைக்கிறாள்.

இவ்வாறு நாக தேசத்தில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த அரவான் போர்க்கலையிலும் நல்ல தேர்ச்சி பெற்று ஓரு ஆகச் சிறந்த ஆண்மகனாக வாழ்ந்து வருகையில் தனது தந்தையை துரியோதனனும் அவனது கூட்டாளிகளும் ஏமாற்றி, அவமானப்படுத்தியதைக் கேட்டு உள்ளம் கொதித்தெழுந்து அவர்களை அழித்தொழிக்க புறப்படுகையில் அவனது தாய் அவனை, உன் தந்தை உன்னை அழைக்கும் போதே நீ அங்கு செல்ல வேண்டுமென்று தடுத்து விடுகிறாள்.

பாண்டவர்கள் சூதாட்டத்தில் தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தை, வனவாசத்தை முடித்து திரும்பி வந்து கேட்க, துரியோதனன் ராஜ்ஜியத்தை தர மறுத்ததால், போர் செய்வது என்று முடிவாகி இரு தரப்பு படையினரும் குருஷேத்திரத்தில் குழுமி இருந்தனர். போரில் வெற்றி பெற களப்பலியாகக் காளிக்கு நரபலி கொடுப்பது அப்பொழுது வழக்கமாய் இருந்து வந்தது. பலி கொடுக்கப்படும் ஆள் அங்கஹீனமே இல்லாத அரசகுமாரனாக இருக்க வேண்டும்.

பாண்டவர்கள் அங்கஹீனம் இல்லாத அரசகுமாரன் யார்? யாரைக் களப்பலிக்குத் தேர்வு செய்வது என்று குழம்பி இருந்த சமயத்தில் உதவி வேண்டி கிருஷ்ணரை நாடினர். கிருஷ்ணர், நம் தரப்பில் களப்பலிக்குத் தகுதியானவர்களாக இருப்பவர்களாக தன்னோடு சேர்த்து அர்ஜுனனும் அரவானுமே எனக் கூறி, அரவானை களப்பலி கொடுக்கலாம் எனக் கூற, மனவருத்தத்துடன் அர்ஜுனன் அரவானைக் களப்பலி கொடுக்க அழைக்கிறான்.

போரில் இருக்கும் சமயம் தன் தந்தை நம்மை அழைக்கிறாரே நமது எதிரிகளை அழிக்க இது நல்லதோர் வாய்ப்பு என்று அரவான் குருஷேத்திரம் விரைகிறான். குருஷேத்திரம் வந்த மகன் அரவானை பாண்டவர்கள் உச்சி முகர்ந்து வரவேற்று அழைத்த விபரத்தைச் சொல்ல அரவான், தம் பெற்றோருக்காக எதனையும் செய்யத் தயார் என்று தன்னை பலி கொடுக்க முன் வருகிறான். அவ்வாறு தான் பலி ஆகும் முன்பு தனது விருப்பமாக கிருஷ்ணரிடம் மூன்று வரங்களைக் கேட்கிறான்.

அதன்படி, அரவான் தன்னை பலி கொடுத்தாலும் அவன் போரில் ஈடுபட்டு வீர மரணம் ஏற்பட வேண்டுமென்றும், போர் முழுவதையும் காணும் ஆற்றலை தனக்கு வழங்க வேண்டுமென்றும், தான் களப்பலி கொடுக்கப்படுவதற்கு முன்பு தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று மூன்று வரங்களை அரவான் கிருஷ்னரிடமிருந்து பெறுகிறான்.

அதன்படி, களப்பலிக்குத் தன்னைக் கொடுத்து, கிருஷ்னன் அருளால் மீண்டும் உயிர்பிழைத்து எட்டு நாள் போரில் பங்கேற்று வீர மரணம் எய்த பின்னும், துண்டான தலையோடு அரவான் மீதிப் போரைக் கண்ணுற்றான் என்பது செய்தி.

எது எப்படியோ, களப்பலிக்காகத் தன்னுயிரைக் கொடுக்க வந்த அரவான் வீரன் மட்டுமல்ல தியாக குணம் படைத்தவன் கூட என்பது மட்டும் தின்னம். மகாபாரதம் உள்ள வரை அரவான் என்ற அரசகுமாரனின் கதையும் நிலைத்து நிற்கும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்காது என்பது மட்டும் நிஜம்.

நன்றி: அதீதம்: http://www.atheetham.com/story/aravan

Sunday, March 4, 2012

கம்பன் வீட்டு கட்டுத்தறியும்

தமிழ்க்கவியுலகில் கம்பருக்கென்று தனி இடம் ஒன்று எப்பொழுதும் உண்டு. கம்பனின் கவிநயத்தைக் கண்டு பொறாமைப்படாமல் இருக்க யாராலும் முடியாது. அவன் தொட்டுச் சென்ற ஒவ்வொரு விஷயமும் அவன் சொல்வழியே நம் கண் முன்னால் நிற்கும். அவன் எழுதிய கவிதைகள் ஆயிரம் கதைகள் சொல்லும்.


கவிஞர்களுக்கு எப்பொழுதுமே சற்று கர்வம் அதிகம். அது கல்விச்செல்வத்தால் வரும் பெருமிதம் கலந்த கர்வம். கவிஞர்களின் இந்த கர்வம் எவரையும் எந்த கோணத்திலும் பாட வைக்கும் சக்தியை அவர்களுக்குக் கொடுக்கும். கம்பனும் இப்படி கர்வத்தோடு தான் எழுதும் ராமாவதாரத்திற்கு பந்தம் பிடிக்க ஒருவரை ஆணையிட்டான்... யாரைத் தெரியுமா... காளியை...


ஆம்... ஒற்றியூரை உறைவிடமாகக் கொண்டு வாழும் காளி தேவியை பந்தம் பிடிக்கச் சொல்லி கட்டளையிட்டானாம் கம்பன். அதுவும் எப்படி,


"ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே

வொற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை-பற்றியே

நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்

பிந்தாமற் பந்தம் பிடி"


என ஆணையிட்டானாம்.


அதாவது, ஒற்றியூரை காத்து நிற்பதற்காக இங்கு தங்கியிருக்கும் காளியே, ஒற்றியூரை காத்த அரசனாம் ராமனின் உண்மை சரிதத்தை பற்றி நான் சொல்வதை தன் மாணாக்கர்கள் தொடர்ந்து தங்கு தடையின்றி பிழையேதுமின்றி எழுதி முடிக்க அனைவருக்கும் ஒளி சீராகத் தெரியும் வகையில் பந்தம் பிடிப்பாயாக என்று கம்பர் கட்டளை இட்டாராம்...


கம்பரின் கட்டளையை ஏற்று காளி பந்தம் பிடிக்க ராமாவதாரம் எழுதி முடிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்...


இப்படிப்பட்ட கம்பரின் புகழைச் சொல்ல நாம், "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்னு" சொல்வது சரிதானுங்களே...


இரத்த புளியம்பழம்

வீட்டுக்கு வந்தால் எப்பொழுதும் தோப்புக்கு ஒரு முறை சென்று வருவது போல இன்றும் மின்சாரம் இல்லாத நடுப்பகலில் தோப்புக்குச் சென்றேன். தோப்பைச் சுற்றிக் கொண்டு வரும் பொழுது கண்ணில் பட்டது புளியம்பழம். எக்கி எக்கி குதித்து ஒரு வழியாக ஒரு பழத்தை பிடுங்கி வாயில் வைத்தேன்...

புளியம்பழத்தின் புளிப்பு என்னை எனது பள்ளிக் காலத்திற்கு அழைத்துச் சென்றது. வருடத்தில் ஒவ்வொரு சீசனில் ஒரு விளையாட்டு என மாறும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மே வரையில் எப்பொழுதும் விளையாட்டாக எங்களுக்கு அமைவது கில்லி தாண்டலும், ஒத்தையா இரட்டையாவும் தான்...

ஒத்தையா இரட்டையாவில் பெரும்பாலும் கையில் பிடிக்கும் பொருள் புளியங்கொட்டை தான். வீட்டில் முறத்துக்கு புளியங்கூழைத் தடவி முறத்தை தடிமனாக்க வைத்திருக்கும் புளியங்கொட்டையில் சிறிது எடுத்துக் கொண்டுச் சென்று விளையாடுவது வழக்கம். அது போக பள்ளியின் பின்புறம் இருக்கும் சந்தையில் ஆங்காங்கே வளர்ந்திருக்கும் புளியம்ரம் தான் எங்கள் ஒத்தையா ரெட்டையா விளையாட்டுக்கு ஜீவன்.

ஒரு முறை இப்படி சந்தையின் பின் புறம் இருக்கும் புளியமரத்தில் இருந்து புளியங்கொட்டை எடுக்க அம்மரத்தில் இருந்த புளியம் பழத்தை பிடுங்கிச் சாப்பிட்டோம். எப்பொழுதும் புளிப்பாக புளியம்பழம் சாப்பிட்டுப் பழகிப் போன எனக்கு அந்த புளியம்பழத்தின் இனிப்புச் சுவை மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.

நண்பர்களிடம் விசாரிக்க அதை இரத்த புளியம்பழம் என்றார்கள். அதைச் சாப்பிட வாயெல்லாம் சிவப்பு நிறமாக மாறியது போலவும் ஒரு தோற்றம். (புளி சாப்பிட்டா நாக்கு பொங்குவதால் ஏற்பட்ட அச்சரச் சிவப்பு அல்ல அது). அன்று முழுவதும் இரத்த புளியம்பழம் பற்றித்தான் பேச்சு வகுப்பு முழுவதும்.

ஏன் அதுக்கு இரத்தப் புளியம்பழம்னு பேரு வந்தது தெரியுமாடா? வருஷா வருஷம் அந்த மரத்துக்குச் சேவல் இல்லை ஆடு வெட்டி அதோட இரத்தத்தை மரத்துக்கு ஊத்தி பூஜை செய்வாங்கடா... அதான் அது இரத்தச் சிவப்பா இருக்கு இனிப்பாவும் இருக்கு... இப்படி பல கதைகள் அன்று முழுவதும் வகுப்பில்... உண்மை எதுவென இன்று வரை தெரியவேயில்லை...

இதையெல்லாம் நினைத்துக் கொண்டே தோப்பைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க தென்னம் புருடை காலை வழுக்கி கால் பிரள... சர்ரக்.... என்ன பார்க்குறீங்க... சர்க்கார் முள் காலைக் குத்திடுச்சு... நான் காலில் இருக்குற முள்ளை எடுத்துப் போட்டுட்டு நெருப்பால சுடணும்... என்னோட புளியம் பழம் கதை கேட்டாச்சுல்ல... உங்களுக்கு இந்த இரத்த புளியம்பழம் பத்தி ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்க உண்மையான சமாச்சாரமா இருந்தாலும் சரி, இல்லை கதையா இருந்தாலும் சரி...

குறும்பாக்கள்

தாகம்:

தாகத்தில் வறளும் நாக்கு

தூரத்தில் மின்னும் தண்ணீர்

எதிர்திசையில் பறக்கும் பறவை

பின் தொடர்ந்து செல்லும் வேடன்


மரணம்:

விதி மீறல்

கையூட்டாய்ப் பணம்

பறக்கும் வாகணம்

எதிரில் இயமன்.


மோகம்:

உடையில் மாற்றம்

சினிமா விளம்பரம்

எதிரினக் கவர்ச்சி

உயிர்த்தெழும் உடற்பசி.


கையூட்டு:

விரைவு சேவை

எதிலும் முதல் இடம்

சரியாய் தவறு செய்தல்

ஒழுகவிடும் ஓட்டை சட்டம்.

சராசரி மனிதன்

இன்று மாலை இருசக்கர வாகணத்தில் அப்பாவோடு பயணம் செய்து கொண்டிருந்தேன்...தேசிய நெடுஞ்சாலை ஏழு கிருஷ்னகிரியில் சேலம் சாலையும், சென்னை சாலையும் சந்திக்கும் இடம்.

கடமை தவறாத அதிகாரிகள் வண்டியை ஓரம் கட்டச் சொன்னார்கள். எனக்கு முன்பு ஒருவனையும் ஓரம் கட்டச் சொல்லி இருந்தார்கள்... எனகு பின்னால் வருபவர்களையும் ஒவ்வொருவராக ஓரம் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.

எனக்கு முன்னால் சென்றவன், எதற்காக ஐயா வண்டியை ஓரம் நிறுத்தச் சொல்கிறீர்கள் என்றான்...

அதிகாரி சிரித்துக் கொண்டே, ம்ம்ம்... பணத்துக்குத்தான், எடு பணத்தை என்கிறார்.

எதற்கு ஐயா பணம் என்றான்...

ம்ம்ம்... ஓட்டுனர் உரிமம் இருக்கா என்றார்.

இல்லை, வீட்டில இருக்கு... வீடு இங்க தான் என்று ஏதோ முகவரி சொல்லிக் கொண்டிருந்தான்...

நானும் அப்பாவும் இறங்கினோம்...

அப்பா, எதற்கு இவர்களிடம் வம்பு என்று பணத்தை எடுத்தார்... ஓட்டுனர் உரிமம் இல்லையா சார் என்றான் அப்பாவைப் பார்த்து...

அப்பாவிடம் லைசன்ஸ் இருந்தது. வண்டி ஓட்டிய என்னிடம் தான் லைசன்ஸ் இல்லை... இல்லை என்றால் சில மாதங்களுக்கு முன்பு பேருந்தில் ஒரு புண்ணியவான் எனது கைப்பையை அவரது அவசரத் தேவைக்காகவோ, அல்லது எனது அஜாக்கிரதையாலோ தவறிப் போனதில், எனது ஓட்டுனர் உரிமமும் தவறிப் போனது.

அப்பா, அவரது லைசன்ஸைக் காண்பிக்க முற்படுகையில் என்னுடைய லைசன்ஸைக் கேட்டார். நான் தொலைந்து விட்டது. இல்லை என்றேன்...

இருநூறு ரூபாய் கொடுங்கள் என்றார்.

சரி, என்று அப்பாவும் பணத்தைக் கொடுக்க, லைசன்ஸ் எடுங்க சார் என்று என்னைப் பார்த்துச் சொல்லியவாறு பணத்தை வாங்கி பையில் போட்டுக் கொண்டார்.

மாதம் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பங்கு இப்படி அநியாயமாகக் கொடுக்கப்பட்டு விட்டதே, என்று எனக்கு ஏகத்துக்கும் வருத்தம்...

அப்பாவிடம் மெதுவாகக் கேட்டேன்... அப்பா, உரிமம் இல்லாமல் ஓட்டினால் எவ்வளவு அபராதம் இருக்கும்... நாம் அபராதத் தொகை கட்டியிருக்கலாமே ரசீதுடன் என்றேன்.

அப்பா சிரித்துக் கொண்டே, உனக்கு என்ன நீ நாளைக்கு ஊருக்குப் போயிடுவ. யாரு இந்த அபராதத்தைக் கட்ட நீதிமன்றம் போறது... போடா போடா, மாசக் கடைசி ஆச்சே, சிட்டி லிமிட் தாண்டற வரைக்கும் நாம ஓட்டிக்கலாமான்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. உன்கிட்ட பேசிட்டே வந்ததுல மறந்து போயிட்டேன் என்றார்...

கம்முனு நான் நிறுத்தாம வந்திருக்கலாமோன்னு கேட்டேன்... சொல்லி வாயை மூடும் முன்னே சாலையோரமாக நின்ற்ய் கொண்டிருந்த சாலை ரோந்து வண்டி ஒன்றை நாங்கள் கடக்க நேரிட்டது...

உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன், அங்க அபராதம் கட்டாமல் ஏமாற்றி தப்பிப்பவர்களை மடக்கிப் பிடிக்க நின்று கொண்டிருப்பார்களோ என்று...

ஹ்ம்ம்... என்ன தான் நாமெல்லாம் வாய் கிழிய சட்டம் பேசினாலும், சட்டத்திற்கு முன்னால் எல்லாம் சராசரி மனிதர்கள் தானே...

பி.கு: மக்களே இது மாசக் கடைசி, அதனால ஓட்டுனர் உரிமம் கையில் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுங்க... இல்லாட்டி கையில் நூறு அல்லது இருநூறு ரூபாய் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுங்க...