Sunday, March 4, 2012

கம்பன் வீட்டு கட்டுத்தறியும்

தமிழ்க்கவியுலகில் கம்பருக்கென்று தனி இடம் ஒன்று எப்பொழுதும் உண்டு. கம்பனின் கவிநயத்தைக் கண்டு பொறாமைப்படாமல் இருக்க யாராலும் முடியாது. அவன் தொட்டுச் சென்ற ஒவ்வொரு விஷயமும் அவன் சொல்வழியே நம் கண் முன்னால் நிற்கும். அவன் எழுதிய கவிதைகள் ஆயிரம் கதைகள் சொல்லும்.


கவிஞர்களுக்கு எப்பொழுதுமே சற்று கர்வம் அதிகம். அது கல்விச்செல்வத்தால் வரும் பெருமிதம் கலந்த கர்வம். கவிஞர்களின் இந்த கர்வம் எவரையும் எந்த கோணத்திலும் பாட வைக்கும் சக்தியை அவர்களுக்குக் கொடுக்கும். கம்பனும் இப்படி கர்வத்தோடு தான் எழுதும் ராமாவதாரத்திற்கு பந்தம் பிடிக்க ஒருவரை ஆணையிட்டான்... யாரைத் தெரியுமா... காளியை...


ஆம்... ஒற்றியூரை உறைவிடமாகக் கொண்டு வாழும் காளி தேவியை பந்தம் பிடிக்கச் சொல்லி கட்டளையிட்டானாம் கம்பன். அதுவும் எப்படி,


"ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே

வொற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை-பற்றியே

நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்

பிந்தாமற் பந்தம் பிடி"


என ஆணையிட்டானாம்.


அதாவது, ஒற்றியூரை காத்து நிற்பதற்காக இங்கு தங்கியிருக்கும் காளியே, ஒற்றியூரை காத்த அரசனாம் ராமனின் உண்மை சரிதத்தை பற்றி நான் சொல்வதை தன் மாணாக்கர்கள் தொடர்ந்து தங்கு தடையின்றி பிழையேதுமின்றி எழுதி முடிக்க அனைவருக்கும் ஒளி சீராகத் தெரியும் வகையில் பந்தம் பிடிப்பாயாக என்று கம்பர் கட்டளை இட்டாராம்...


கம்பரின் கட்டளையை ஏற்று காளி பந்தம் பிடிக்க ராமாவதாரம் எழுதி முடிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்...


இப்படிப்பட்ட கம்பரின் புகழைச் சொல்ல நாம், "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்னு" சொல்வது சரிதானுங்களே...


No comments:

Post a Comment