Monday, April 25, 2011

பாலாஜி பாமாலை

அன்பைச் செலுத்தி அபயம் புகுந்திட

நண்பனாய்க் காப்பான் ஹரி.

ஹரியை நினைக்க எதிர்வரும் துன்பம்

பரியாய் பறக்கும் அறி.

அறியா(து) அவன்பெயர் சொன்னாலும் தேடிகுறை

தீர்த்துநிற்பான் எங்கள் ஹரி.

ஹரியெனும் நாமம் நினைத்திட தீரும்

பிறவிப் பெருநோய் பசி.

பசிக்கும் வயிறுக்(கு) உணவாய் அமையும்

இனித்திடும் வேங்கடவன் அன்பு.



(இது சும்மா ஒரு முயற்சி தான்...

நெஞ்செல்லாம் நிற்கும் திருமால் புகழ்பாட
இப்பிறவி போதா(து) எனக்கு.)

கிறுக்கல் இரண்டு

பெயரைக் கண்டு
புரட்டாத பொக்கிஷங்கள்...
சில மனிதர்கள்.!
சில புத்தகங்களைப் போல்.
..


புத்தகத்தின்
வரிகளுக்கிடையான
எதிர்பார்ப்பிற்கும்
நிஜத்திற்குமான தூரம்தான்...
மனிதனுக்கும்.!
பல சமயங்களில்...

Friday, April 22, 2011

ஏக்கம்

நீ வருவாய் என எதிர்பார்த்தேன் - என்
நினைவுகளில் நான் உனைப் பார்த்தேன்
உன் நினைவாய் உனது மடல் பார்த்தே
என்னுயிரில் உனது மணம் சேர்த்தேன்

மடலும் உடலும் நலிந்ததடா - என்
மனமோ உனையேத் தேடுதடா
எழுத்தில் சொன்னது கொஞ்சமடா
ஏங்கித் தவிக்குது நெஞ்சமடா

கவிதை என்னும் கவன்வில்லால் - என்
மனதை அன்பால் உடைத்தாயே
மறந்தாயோ நீ அப்பொழுதை - நான்
மறைந்திடும்முன் நீ வருவாயே...

(கரு: ஷைலஜா அக்காவின் கவிதை ஒன்று)

Tuesday, April 19, 2011

கிறுக்கல்

பின்னொரு நாளில்
அதிசயமாய் அதிகாலை எழும்பி
அவசரமாய் பல் துளக்கி
பலமுறை கண்ணாடியில் முகம் பார்த்து
என்றுமே இல்லாமல்
வெளியில் செல்வதைச் சொல்லிச் செல்லலாம்
என்னிடம் என் மகன்...
புரிந்தும் புரியாதவனாய்
சிரித்தபடி வழியனுப்பலாம் நானும்...
எனது இளமையை நினைத்து...!