Tuesday, June 28, 2011

கிறுக்கல் - 59

அழகுப் பொருட்களுக்கோர் பெட்டி

ஆபரணக் கற்களுக்கோர் பெட்டி

இனிப்பை காத்திடவோர் பெட்டி

ஈட்டும் பொருளுக்கோர் பெட்டி

உடைகள் வைத்திடவோர் பெட்டி

ஊழலாய் வாங்கிட ஓர் பெட்டி

எனப்பெட்டிகள் எத்தனை பெட்டிகளோ…

பெட்டிகள் பலதை பார்த்திருந்தும்

ஒப்பனை பலமாய் செய்து கொண்டு

அழுகும் உடலைத் தான் சுமக்கும்

சவப்பெட்டிபோல் எதையும் பார்த்ததுண்டோ

இப்பெட்டிக்கு இணையாய் வேறுமுண்டோ…

Monday, June 27, 2011

கிறுக்கல் - 58

விட்டத்தைப் பார்த்திருந்தவன்
சட்டெனத் தேடுகிறேன் பெயரை கைபேசியில்...
பேசும் பொத்தானை
அழுத்திய நொடியில் நிறுத்தவும் செய்கிறது...
பெருவிரல்.!
பல்லிளிக்கிறது...
பணிந்து போகா சுயகௌரவம்.!

கிறுக்கல் - 57

பாதை தெரியாமல் ஓடிய நான்
பறந்தேன்...
பறத்தலின் சுகம் அனுபவிக்கும் முன்னே
விழுந்தேன்...
விழுந்திட்ட வேகத்தில் அறுபட்ட மணிமாலையாய்
சிதறினேன்..
வரிசை மாறிய சிதறிய மணிகளாய்
கோர்க்கப்பட்டேன்...
கைகோர்த்த கணம் உணருமுன்னே ஓடுகிறேன்
பாதை தெரியாமல் - மீண்டும்.

Saturday, June 18, 2011

குழந்தைப் பாடல் - 5

வெள்ளை சட்டை போட்டு
என்னை தோளில் தூக்கி
செல்ல தாத்தா நேற்று
சந்தை கூட்டி போனார்


கையில் போட வளையும்
கழுத்தில் மாட்ட மணியும்
வண்ண வண்ண பந்தும்
வாங்கி எனக்குத் தந்தார்
பள்ளி விட்டு போனதும்
வீட்டுப்பாடம் முடித்து நான்
துள்ளி விளையாடுவேன்
சாதம் உண்டு தூங்குவேன்...


Friday, June 17, 2011

கிறுக்கல் - 56

பின்னொரு நாளில்
இந்நாளின் பெருமைக்காய்
இறக்கி வைத்த சுயங்களெலாம்
என்னைப் பார்த்து எள்ளலாம்...
சுயமில்லா நானும் சிரிக்கலாம்...
வலியில்லா மகிழ்வோடோ
வலிமிகுந்த வருத்தத்தோடோ...

குழந்தைப் பாடல் - 4

காகம்போன்ற கருப்பு கார்
வேகமாக ஓடும் பார்
மேடு பள்ளம் எதிலுமே
தோதாய் கடந்து போகுமே

தள்ளி விடும் தேவையே
எந்தன் காரில் இல்லையே
சாவி கொடுத்தால் போதுமே
காத தூரம் ஓடுமே...

Wednesday, June 15, 2011

இரு வெண்பாக்கள்

பெண்ணாசைக் கொண்டு மடிந்தானே ராவணன்
மண்ணாசைக் கொண்டு மடிந்தானே நல்துரியன்
சொன்னாலும் துர்குணத்தால் கேட்காமல் மந்தியைப்போல்
எந்நாளும் ஏங்கும் மனம்.

கற்போடு வாழ்ந்திருப்போர் கண்கொண்டு சொல்லுங்கால்
நில்லென்றால் நின்றிடவும் பெய்யென்றால் பெய்திடவும்
செய்திடுமாம் வான்மழையும்; ஈற்றாக வைத்திட்டார்
பெண்ணொருத்தி சொல்லிட என்று.

Friday, June 10, 2011

குழந்தைப் பாடல் - 3

சின்ன சின்ன மழைத்துளி

சினுங்கும் ஓசை மழைத்துளி

ஓட்டின் மீது விழுகுது

சோளப் பொறியாய் வெடிக்குது

மெல்ல மெல்ல நடக்கிறேன்

மெதுவாய் கதவைத் திறக்கிறேன்

கூரை சிந்தும் மழையை நான்

கின்னம் வைத்துப் பிடிக்கிறேன்

தாளம் மழை போடுது

வானம் வெடி போடுது

வானம் வெடி போடையில்

பூமிப் பந்து மிளிருது

மின்னல் இடி கண்டுநான்

மிரண்டு உள்ளே ஓடினேன்

அன்னை மடி தேடிநான்

என்னை நானும் மூடினேன்...

குழந்தைப் பாடல் - 2

ஓடி ஆடும் வேளையில்
தேடி வந்தாள் தோழியும்
சாவி தந்தால் ஓடிடும்
காவி நிறக் காருடன்..

பார்க்க பார்க்க பரவசம்
காரும் இல்லை என்வசம்
இருந்தும் சேர்ந்து ஆடினேன்
இன்பம் கொண்டு பாடினேன்...

என்னைத் தேடி அன்னையும்
வீதி எல்லாம் கூப்பிட
ஓடிச் சென்று நானுமே
காரைப் பற்றி பாடினேன்...

எந்தன் ஆசை கேட்டதும்
கொஞ்ச நேரம் யோசித்து
அன்னை தந்தாள் சில்லறை
திங்க ஏதும் வாங்கிட...

தந்த காசை நானுமே
சேர்த்து வைப்பேன் நாளுமே
நிறைய பணம் சேர்ந்ததும்
நானும் காரை வாங்குவேன்...

குழ்ந்தைப் பாடல் - 1

ஜவ்வு மிட்டாய் மாமா
கூவும் ஓசை கேட்டது
கூவும் ஓசை கேட்டதும்
ஓடிச் சென்று தேடினேன்...

கையில் கட்டும் வாட்சுபோல்
காதில் போடும் தோடுபோல்
கழுத்து மணி மாலைபோல்
பத்து மிட்டாய் வாங்கினேன்...

எனக்கு பிடித்த உருவத்தில்
இனிக்கும் ஜவ்வை வாங்கியே
எச்சில் ஒழுக பார்த்துநான்
வீட்டை நாடி ஓடினேன்...

வீட்டில் வந்து சேர்ந்ததும்
சுவைத்துப் பார்க்கும் வேளையில்
சின்னத் தம்பி வந்துஎன்
மொத்த ஜவ்வைப் பிடுங்கினான்...

ஆசை வைத்த ஜவ்வது
இல்லை என்று ஆனதும்
அம்மா பேரைச் சொல்லியே
வீடு அதிர தேம்பினேன்...

ஓடி வந்த அம்மாவோ
ஏன்டி இந்த அழுகையோ
என்று விஷயம் கேட்டுபின்
பகிர்ந்து இனிப்பைத் தந்திட்டாள்...

தம்பி பாதி தின்கிறான்
நானும் பாதி தின்கிறேன்
பிணக்கு தீர்ந்து நாங்களும்
இனிக்கும் ஜவ்வாய் ஆகினோம்...

நன்றி : இக்கவிதைக்குக் கரு கொடுத்த புதுகை அப்துல்லா அவர்களுக்கும், அக்கருவை என் கண்ணில் காட்டிய VIDHOOSH அவர்களுக்கும்...

Thursday, June 9, 2011

மரணம்

தோல்வியின் வலியிலும்
சிரித்தவாறே நிற்கும் நான்
கர்வத்தோடே திரிந்தேன்...
என் நிழலையும் உன்னால்
தொட இயலாதென்று...
அழுகையின் முன்னே.!

எதிரில் வந்து ஏளனப்பட்டவள்
வஞ்சனையால் வென்றாள்...

உலகமே உறங்கும் பொழுதில்
மரணதேவனின் கைகோர்த்து
என்னுயிராய் வளர்த்த பசுவைப் பிரித்தாள்...

ஆம்...
நானில்லா பொழுதில்
வாயில்லா ஜீவன்மேல்
வன்மமாய் புதுவலியைத் தந்தாள்...

வலி தாளா என்னுயிர்
கட்டிய மூக்குக்கயிறை அறுத்து
நா வறள கத்தி
நாதியற்று மடிந்திருந்தது...

பிரிவல்ல அது...
என்னுயிர் பசுவின்
மரண ஓலம்.!

மடிந்திருந்த கோலமும் - மண்ணில்
பதித்திருந்த மரண வலியும்
அழித்தது என் கர்வத்தை...

அழுகிறேன்
அடக்க முனைந்து விசும்புகிறேன்
விசும்பல் மீண்டும் வெடித்து அழுகிறேன்...

எதிரில் என்னை நோக்கி
எக்காளமிட்டவாறு வந்துகொண்டிருந்தார்கள்
இணைபிரியா தோழிகளாக...
மரணமும் அழுகையும்.!

Monday, June 6, 2011

பறப்பதெல்லாம் பறவையாமோ...

காற்றைக் கிழிக்கும் பறவையை விஞ்சிநான்

காற்றால் பறந்தே உயரமாய்ச் செல்ல

பறவையினும் மேலென்ற எண்ணம் வளர

மறந்தேன் எனைநான் களிப்பில் திளைத்து

அடங்கிய காற்றால்;என் ஆட்டம் அடங்கிட

உண்மை உணர்ந்தேன்; பறவையாய் ஆகிலேன்

வின்னைத் தொடினுமே நான்.