Thursday, June 9, 2011

மரணம்

தோல்வியின் வலியிலும்
சிரித்தவாறே நிற்கும் நான்
கர்வத்தோடே திரிந்தேன்...
என் நிழலையும் உன்னால்
தொட இயலாதென்று...
அழுகையின் முன்னே.!

எதிரில் வந்து ஏளனப்பட்டவள்
வஞ்சனையால் வென்றாள்...

உலகமே உறங்கும் பொழுதில்
மரணதேவனின் கைகோர்த்து
என்னுயிராய் வளர்த்த பசுவைப் பிரித்தாள்...

ஆம்...
நானில்லா பொழுதில்
வாயில்லா ஜீவன்மேல்
வன்மமாய் புதுவலியைத் தந்தாள்...

வலி தாளா என்னுயிர்
கட்டிய மூக்குக்கயிறை அறுத்து
நா வறள கத்தி
நாதியற்று மடிந்திருந்தது...

பிரிவல்ல அது...
என்னுயிர் பசுவின்
மரண ஓலம்.!

மடிந்திருந்த கோலமும் - மண்ணில்
பதித்திருந்த மரண வலியும்
அழித்தது என் கர்வத்தை...

அழுகிறேன்
அடக்க முனைந்து விசும்புகிறேன்
விசும்பல் மீண்டும் வெடித்து அழுகிறேன்...

எதிரில் என்னை நோக்கி
எக்காளமிட்டவாறு வந்துகொண்டிருந்தார்கள்
இணைபிரியா தோழிகளாக...
மரணமும் அழுகையும்.!

No comments:

Post a Comment