Saturday, August 20, 2011

துவங்கும் வாழ்க்கை

நேற்று வரை ஏன்
இன்று காலை வரைக் கூட
இந்தப் படபடப்பு இல்லையே...

எப்படி?
எப்படி ஒட்டிக் கொண்டது படபடப்பு
இப்போது மட்டும்...

மேளம் வாசிப்பவர்களால் இருக்குமோ...
இல்லையே...
காலையில் இருந்து வாசிக்கிறார்களே...

பட்டுச்சட்டை வேட்டியிலிருந்து
ஒட்டி இருக்குமோ
குழப்பமாக இருக்கிறதே...

ஆங்...
ஐயரின் மந்திர வார்த்தைகளால் இருக்குமோ
இருக்கலாம்... இருக்கலாம்...

அடடா... என்ன இது...
கை அதிகம் படபடக்கிறதே... ஆண்டவா.!
தாலிச்சரடு கை நழுவக்கூடாதே...

ஸ்ஸ்ஸ்.... அப்பாடா...
ஒருவழியாய் முடிந்துவிட்டது...
தாலி கட்டி முடிந்து விட்டது...

என்ன முடிந்துவிட்டது...
இப்போதுதானே ஆரம்பிக்கிறது...
இனிதே இல்வாழ்க்கை.!

தொலைந்த வாழ்க்கை

அதிகாலைப்பொழுதில்
மயிலிறகால் கால்பெருவிரல் வருடும்
சுமையான சுகமில்லை...

சுப்ரபாதமாய் கேட்கும்
"
நேரமாச்சு எந்திரிங்க"
ம்ஹூம், இன்னும் இல்லை...

காலைக்கடனுக்கு முன்னே
கமகமக்கும் காபியும் இல்லை...
நாளிதழ் முடிக்கும் முன்னே
"
நாழியாச்சு.. குளிங்க..."
இல்லை...

என்ன ஆயிற்று இன்று?

தட்டுத்தடுமாறி
கைத்தடியால் ஊன்றி
தேடிச் சென்று பார்க்கிறேன்...

தொலைத்த பொருளையெல்லாம்
தேடித் தந்தவள் - வராமல் உறங்குகிறாள்...
நானென் வாழ்க்கையைத் தொலைத்துநிற்க.!

பண்புடன் தளத்தில் எனது படைப்பு - கைக்கடிகாரம்

என் வாழ்வின் மிக முக்கியமானத் தருணங்களில் ஒன்றாகக் கருதியது. கல்லூரி நாட்களில் எனது கனவாக இருந்த பன்னாட்டு நிறுவனத்தில் பத்து மணிக்கு நேர்காணல். காலை முதலே லேசாக படபடப்பு இருந்தாலும் இத்தனை நாளைய எனது வேலை அனுபவத்தால் சற்று தைரியமாகவே இருந்தேன். நேரம் கரைந்து கொண்டிருந்தது. பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நேரம் பார்க்க எண்ணியவனாய் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன். ஒன்பதைக் கடந்து நேரம் மெதுவாய் முன்னேறிக் கொண்டிருந்தது. எனது நினைவோ கைக்கடிகாரத்தைக் கண்டதும் பின்னோக்கி நகர்ந்தவாறு இருந்தது.


அது எனது பள்ளிக்காலம். அன்றைய நாளில் எனது தந்தைதான் எனது ஹீரோ. எனது தந்தை என்றால் நினைவுக்கு வருவது வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியில் பட்டை பட்டையாக நெற்றி நிறையத் திருநீறு அணிந்த அந்தக் களையான முகமும், அவரது மணிக்கட்டில் எப்பொழுதும் பளபளக்கும் இறுக்கமான கைக்கடிகாரமும் தான். எனக்கு எப்பொழுதும் அந்தக் கைக்கடிகாரத்தின் மேல் ஒரு பிரியமான பொறாமை, என்னைவிட அதிக நேரம் என் அப்பாவுடன் இருப்பதால்.

அப்பாவின் அந்த மிடுக்கான தோற்றத்திற்கு காரணம் அந்த கைக்கடிகாரம் என்பதாக எனது எண்ணம். யாரேனும் அப்பாவை நேரம் கேட்கும் பொழுது லாவகமாக கையைத் திருப்பி அவர் நேரம் சொல்லும் விதம், இன்றும் கண் முன்னே நிழலாடுகிறது. அப்பாவின் கைக்கடிகாரத்தைப் பார்த்து பார்த்து வளர்ந்த எனக்கு கைக்கடிகாரம் என்றாலே அத்தனை விருப்பம். ஆனால் வீட்டிலோ, "சின்னப் பையன், நேரம் பார்க்கவேச் சரியாத் தெரியாது; இதுல உனக்கு கைக்கடிகாரம் கேடா" என்று எனது விருப்பத்தைச் சுக்கல் சுக்கலாக்கி விட்டார்கள். இருந்தும் எனது கைக்கடிகாரத்தின் மீதான மோகம் நாளுக்கு நாள் கூடியதே அன்றி குறைந்தபாடில்லை.

ஆறாம் வகுப்பு முடித்த ஆண்டு விடுமுறை என நினைக்கிறேன். எனது மாமா வீட்டில் மூன்றாவது மாமா வைத்திருந்த எலக்ட்ரானிக் கடிகாரம் பார்த்ததில் இருந்து நேரம் எளிதாகப் பார்க்க முடிந்ததால் எலக்ட்ரானிக் கடிகாரத்தின் மீது எனது பார்வை திரும்பியது. அதன் பின், எங்கள் ஊர் திருவிழாவின் போது கீழே கிடைத்த ஒரு உடைந்த எலக்ட்ரானிக் கடிகாரம் கொண்டு விளையாடியதும், கடிகாரங்கள் பார்க்கும் போதெல்லாம் ஏக்கமாக அப்பா அம்மாவைப் பார்க்கும் பார்வையிலுமாக அதற்குப் பின்னாளைய நாட்கள் கழிந்தன.

எனது பெரிய அண்ணன், என்னை விட ஐந்து வயது மூத்தவனை கல்லூரியில் படிப்பதற்காக சேலத்தில் சேர்த்தினர். அவனுக்கு அங்கு நேரம் பார்க்கவும் அலாரம் வைக்கவும் என ஒரு கைக்கடிகாரம் அப்பா அவனுக்கு வாங்கித் தந்தார். கருப்புக் கலரில் அந்தக் கடிகாரம் என்னைக் கொள்ளைக் கொண்டது. அந்தக் கடிகாரத்தின் இன்னொரு சிறப்பம்சம் அலாரம் மணி சேவல் அகவும் ஓசையில் இருந்தது தான். எத்தனையோ நாள் போட்டி போட்டுக் கொண்டு நானும் என் அண்ணனும் அதில் அலாரம் வைத்து, சேவல் அகவும் ஓசையைக் கேட்டிருப்போம்... ஒரு நாள் எனக்கும் என் அண்ணனுக்குமான சண்டையில் அந்தக் கடிகாரம் உடைந்தது... எனது பார்வை மீண்டும் அப்பாவின் கடிகாரத்தின் மேலே திரும்பியது...

நாட்கள் உருண்டோடின... கல்லூரியில் என்னைச் சேர்த்தினார் அப்பா... அண்ணனுக்கு கல்லூரியில் சேரும் போழுது வாங்கிக் கொடுத்ததைப் போன்று எனக்கும் ஒரு கடிகாரம் வேண்டும் எனச் சொல்ல புறப்பட்ட நாக்கு அப்பாவைக் கண்டதும் அமைதியாக மூடிக் கொண்டது. இரண்டு மாதம் போயிருக்கும். எனது பெரிய அண்ணன், அவனது சம்பாத்தியத்தில் அப்போது பிரசித்தமாக இருந்த டைட்டனின் சொனாடா கடிகாரத்தை எனக்கும், எனது சிறிய அண்ணனுக்கும் அவனது சம்பள பணத்தில் இருந்து வாங்கிக் கொடுத்தான்.

அன்றைய நாள், இன்னும் நினைத்துப் பார்க்கிறேன். எனது மனம் இறக்கைக் கட்டி வானில் பறந்தது. எவ்வளவு சந்தோஷம்... எனக்கே எனக்கான முதல் கடிகாரம். யாரும் சண்டைக்கு இல்லை. யாரும் இனி என்னைச் சின்னப் பையன் என ஓரம் கட்டப் போவதில்லை. எனது வாழ்வின் முதல் கைக்கடிகாரத்தைக் கட்டிய நொடியில் எனக்கு ஒரு மிடுக்கான தோற்றம் தோன்றியதாக என்னுள் ஒரு எண்ணம். நானும் பெரிய பையன் ஆகி விட்டேன் என்கிற மிதப்பு. தெருவில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் எனது புதிய கடிகாரத்தைக் காட்டிப் பார்க்கும் பார்வையில் உலகையே வென்ற ஒரு பெருமிதம்... ஹ்ம்ம்...

காலம்தான் எத்தனை வேகமாக ஓடி விட்டது. சற்று முன் கூட நேரம் பார்த்தது அதே கடிகாரத்தில் தான்... என்னை யாரோ இடித்துக் கொண்டு ஓடுவது போலிருக்கச் சுயநினைவுக்குத் திரும்பியவன், எனக்கான பேருந்து வந்து விட்டதா எனப் பார்க்கும் போது பின்னாலிருந்து ஒரு குரல், " சார், மணி என்ன ஆச்சு?". கேட்டவரைப் பார்க்காமலேயே, கையை லாவகமாக ஒரு சுழற்று சுழற்றி நேரம் பார்த்துச் சொன்னேன் "ஒன்பதே காலென்று".


நன்றி: http://www.panbudan.com/story/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

Tuesday, August 16, 2011

மோகம்... காதல்... ???...

அரும்பு மீசை துளிர்த்த வயதில்
குறும்பாய் ஆரம்பித்த மோகம்
அனைவர்க்கும் காதலி மீது
எனக்கோ காதல் மீது...

ஆம்.!
காதலைக் காதலிக்கத் தொடங்கினேன்...
முகமில்லாக் காதலின் முகம்தேடி
ஏகப்பட்ட கற்பனைகள் எனக்குள்...

ஒரு முகமும் நிலைக்கவில்லை
நிலைக்கவில்லையா.!.
இல்லை... இல்லை...
பிடிபடவில்லை

தொடுதலில் மாறிடும்
பாதரசத் திரவமாய்...
எத்தனை வடிவம் இந்த காதலுக்குத்தான்...
வியப்பின் விக்கிப்பில்...

விதையாய் விழுந்த காதல்
விருட்சமாய் இன்று...
விருட்சத்தின் விரிப்பில் ஒதுங்கவில்லை யாரும்...
இன்னும் நிழலுக்காய்...

தருதலிலும் அனுபவித்தலிலும்???
எவ்வாறிருக்கும் நிழலின் நிகழ்வுகள்...
தொடங்கும் முன்னே
கேள்வி என்முன்...

கவிதையின் புழுக்கம்

எவரும் எள்ளாதவாறு
எழுத்துகளைப் பகிர
எழுதியும் பகிராமல் இருக்கிறேன்...

தன்நிலை நொந்தவாறு
புழுங்கிக் கொண்டிருக்கலாமோர் கவிதை...
சேமித்த கோர்வைக்குள்.!

கணபதி துதி

ஆனை முகத்தோனே பானை வயிற்றோனே
ஞாலம் வலம்வாரா ஞானம் அடைந்தோனே
நாளும் அருள்கொண்டு நானை அழித்தென்னை
வாழும் நிலை;தரு வாய்.

எதிர்பாராதவை

எதிர்பார்க்கும் எவரும் கொடுப்பதில்லை என்றாள்
என்னவோ என ஏறிட்டுப் பார்த்தேன்...
அன்பைதான் என்றாள் ஓரவிழி சிரிப்போடு.!

வாங்கியதைக் கொடுக்கையில் ரெட்டை மகிழ்வென்றாள்
என்னவோ என ஏக்கத்துடன் பார்த்தேன்...
அன்பைதான் என்றாள் உள்ளூர நகைப்போடு.!

சுவைக்க சுவைக்க திகட்டவில்லை என்றாள்
அன்பையா என்று அமைதியாகக் கேட்டேன்...
இதழ்பதித்து போனாள் பேசி;மூடா என்னிதழோடு.!

Wednesday, August 10, 2011

ஆடிக்கு அழைத்தல்

தமிழ்ப்புத்தாண்டு, ஆடிக்கழைத்தல்(ஆடிப்பெருக்கு), தீபாவளி, பொங்கல் இவைதான் தமிழர்களால் பண்டைய காலங்களில் கொண்டாடப்பட்டு வந்த பெரும் பண்டிகைகள்...

இவை நான்கு பண்டிகைகளையும் பாருங்கள்... சரியாக காலாண்டிற்கு ஒரு பண்டிகை வீதம் வருவதைக் காணலாம்...

சித்திரை, வைகாசி ஆனி விடுத்து பின் ஆடியில் ஆடிப்பெருக்கு , ஆவனி புரட்டாசி விடுத்து பின் ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகை மார்கழி விடுத்துப் பின் தையில் பொங்கல்...


இப்படி தன் தாயின் வீட்டில் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணைத் திடீரென்று புது இடத்திற்கு அனுப்பி விட்டால், அவள் பிறந்தகத்தை அதிகம் இழப்பதாய் பெண்ணிற்கும், பெண்ணுடைய பெற்றோருக்கும் தோன்றும்... அதனாலேயே திருமணம் ஆன பின் இந்த அத்தனை விசேஷங்களுக்கும் முதல் முறை வரும் பொழுது சிரத்தை காண்பிக்கிறார்கள்... ஒரு வருடம் மற்ற நாட்களில் புகுந்த வீட்டில் பழகி விட அவர்களுக்கு அடுத்து இப்பண்டிகைகளை புகுந்த வீட்டில் கொண்டாடுவது என்பது உளவியல் ரீதியாக வருத்தம் இருக்காது...

அப்படி என்றால் ஆடிப் பெருக்கு அன்று மட்டும் வரவழைத்துக் கொள்ளலாமே எனக் கேட்கலாம்... ஆடியில் தான் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் ஆடிக்கிருத்திகை திருவிழா எல்லா ஊரிலும் சிறப்பாக கொண்டாடப்படும், அதன் பின் ஆடி அமாவாசையன்று இறந்த பெரியவர்களுக்கு கொடுக்கும் தர்ப்பனம், அதன் பின் ஆடிப்பெருக்கு(ஆடிப்பதினெட்டு) இப்படி வரிசையாக மூன்று பெரிய விசேஷங்கள் நடக்கும்... ஒவ்வொரு விசேஷத்திற்கும் புகுந்தகத்தில் அனுமதி கேட்டால் கிடைக்குமா... அதற்குத்தான் ஆடி மாதம் முழுவதும் வீட்டில் தங்க வைத்துக் கொள்கிறார்கள்... மேலும் ஆடியில் கருத்தரித்தால் பிள்ளைப் பேறு சித்திரையில் வரலாம்... பிள்ளைப் பேற்றின் போது அதிக அளவு பெண்ணின் உடலில் இருந்து நீர்போக்கும் ஏற்படும்... அந்தப்பொழுதில் வெய்யில் காலம் அதிகமாக இருந்தால் தாய்க்கு அழற்சி ஏற்படும் வாய்ப்பும் அதிகம்... மேலும் சித்திரை மாதம் என்பது பெரும்பாலும் அந்த காலத்தில் பெரியம்மை போடும் வாய்ப்பு அதிகமாக இருந்த காலம்... பெரியம்மைக்கான தடுப்பூசி இல்லாத காரணத்தால், சிறுகுழந்தைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கிடக் கூடாது என்பதற்காக தவிர்க்கப்பட்டதாகவும் இருக்கலாம்...

ரொம்ப அதிகமா போறேனோ... இன்னும் யோசிச்சா மண்டையிலிருந்து மூளை காது வழியா வந்துடும்னு பயந்துக்கினு இத்தோட நிப்பாட்டுறேன்...

( டேய் பிரசாத்து, எப்படிடா உனக்கு மட்டும் இம்பூட்டு அறிவு...)

சுயம்

பாங்காய் நாடகமொன்று
பாதி முடிந்திருக்க
போட்ட வேடமது
மேடை புழுக்கத்தினால்
வழியும் வியர்வைபட்டு
கலைய இளித்துநிற்கும்
அவல நிலையினதாம்
மறைத்த சுயங்களெலாம்
மறைவை விட்டுவரும்
மனிதனின் ஒப்பனைகள்...

நாடக வேளையிலே
கலையும் ஒப்பனைதாம்
மறைவை விட்டுவரும்
மறைத்த சுயங்களுமே...