Tuesday, January 31, 2012

பிரளயத்தின் பிடியில் (அதீதத்தில் வெளிவந்த கவிதை)

சாலையைக் கழுவி விட்ட புதுமழையாய்
பூமியைக் கழுவியபடி...
ஆழிப்பேரலைகள்.!!!

ஆழிப்பேரலையின் அகோரப் பசிக்குணவாய்
ஆறாம் அறிவின் அதிசயங்கள்...

தக்கன வாழும் உயிராசையில்
அஃறிணையானபடி உயர்திணைகள்...

நன்றி : http://www.atheetham.com/story/pralayathin

ஊடல்-காதலின் உயிர் (அதீதத்தில் வெளிவந்த எனது படைப்பு)

காதல், இந்த ஒரு வார்த்தைக்குத்தான் எத்தனை வலிமை. அது என்னமோ தெரியலைங்க… காதல் வந்துட்டாலே பசங்கன்னாலும் சரி, பொண்ணுங்கன்னாலும் சரி, தன்னை மறந்துடறாங்க… மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி ஆயிடறாங்க…

காதல், இந்த உணர்வு தனக்குள்ள இருப்பதை பெரும்பாலும் எப்போ, எப்படி எல்லோரும் உணருறாங்கன்னு தேட ஆரம்பிச்சப்ப எல்லா பக்கத்தில் இருந்தும் எனக்குப் பதிலா அமைஞ்சது பிரிவு தாங்க. என்னடா, காதலிக்கவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள பிரிவான்னு யோசிக்குறீங்களா… நிஜமா, பிரிவுதாங்க காதலை உணர்த்தும் கருவி. ஏன், பிரிவை காதலின் பிறப்பிடம்னு கூட நான் சொல்லுவேன்.

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உயிருக்கு உயிராக பழகுவார்கள். அவர்களுக்குள் இருப்பது நட்பா, காதலானு அவர்களுக்கே தெரியாது. ஆனால், இருவருக்குள்ளும் உண்மையான காதல் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குள் ஏற்படும் ஒரு நாள் பிரிவு கூட, அவர்களுக்குள் இருக்கும் காதலை அவர்களுக்கு உணர்த்தி விடுங்க. அதுதாங்க இந்த காதலில், பிரிவுக்கு இருக்கும் வலிமை.

அது சரி, என்ன தான் பிரிவு, காதலின் பிறப்பிடமா இருந்தாலும் ரெண்டு பேரும் பிரிஞ்சே இருந்தா எப்பத்தான் பிறகு காதலிக்கிறது. எத்தனை காலத்திற்கு இப்படி காதலர்கள் பிரிஞ்சே இருக்கலாம். இதிலெல்லாம் ஒரு குழப்பம் இருந்துட்டே இருந்ததுங்க… சரி, குழப்பத்தோட எவ்வளவு நேரம் இருப்பது, விடையைத் தேடலாமேனு யோசிச்சப்ப தான் சட்டென நினைவுக்கு வந்தது, எல்லா விஷயத்தையும் சொல்லும் தமிழர் நூலாம் உலகப் பொதுமறை திருக்குறள் இருக்கேனு.

தேடலின் விளைவாய், எனக்கான பதிலாய் என் உள்ளுணர்வில் பட்டது முதலில் இந்த குறள் தாங்க. என்ன குறள்னு நீங்களும் தான் பாருங்களேன்.

“ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.”

வள்ளுவர் என்ன சொல்றாருன்னா, காதலை உணரும் வரையில் எத்தனை காலம் வேணும்னாலும் ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கலாம், ஆனால் அதே சமயம் காதலை உணர்ந்த பின்னால, காதலர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்து செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். ஏன் அப்படி சொல்றாருன்னா காதலர்கள் பிரிஞ்சு போய்ட்டா மறுபடி அவர்கள் சேருறது ரொம்ப கஷ்டமாம்.

என்ன தான் ஒரு பக்கம் மனசு இதை ஒத்துக்கிட்டாலும், இன்னொரு பக்கம், மனசு கிடந்து அடிச்சுக்குச்சுங்க. அது எப்படி காதலின் பிறப்பிடமான பிரிவு, காதலையே பிரிச்சுடுமா. இன்னும் குழப்பம் அதிகமாச்சு. சரி, இன்னும் திருக்குறளைத் தேடிப் பார்க்கலாமேன்னு தேடுனப்ப இன்னொரு குறள் கிடைச்சது. அது இதுதாங்க…

“உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.”

அப்படி என்னதான் சொல்றாருன்னு கேட்கறீங்களா… காதலில் இந்த ஊடலெனும் பிரிவு எப்படி இருக்கணும்னா உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய உப்பு போல இருக்கணுமாம். எப்படி உப்பு குறைவாப் போட்டுக்கிட்டு சாப்பிட்டா சாப்பாட்டுல ருசி இல்லாம அதிகமாப் போச்சுன்னா வாயிலேயே வைக்க முடியாம இருக்கோ, அப்படித்தான் காதலுக்கு ஊடலும்னு சொல்றாருங்க வள்ளுவரு.

ஒரு வழியா மனசை அமைதியாக்கிட்டு தூங்கலாம்னு நினைச்சப்பத்தான், இதே கருத்துடைய ஒரு அழகான முத்தொள்ளாயிரப் பாடல் நினைவுக்கு வந்ததுங்க. அதையும் தான் கடைசியா பார்த்துடலாமே…

"ஊடல் எனஒன்று தோன்றி அலர்உறூஉம்

கூடல் இழந்தேன் கொடிஅன்னாய் நீள்தெங்கின்

பாளையில் தேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்

காளையைக் கண்படையுள் பெற்று."

அப்படி, என்னதான் இந்த பாட்டுல சொல்றாங்கன்னு கேட்கறீங்களா… உயர்ந்து வளர்ந்த தென்னை மரத்தின் பாளையில் தேனினைத் தொடுக்கும் தேனீக்களையும், பாய்ந்தோடும் நதியையும் தன்னகத்தே கொண்ட சோழனைத் தான் தொலைத்து விட்டதாக ஒரு பெண் தன் தோழியிடம் சொல்கிறாள். அதுக்கு என்ன காரணத்தைச் சொல்றானு பார்த்தா, ஊடல் தான் காரணம்னு சொல்றா.

எப்படின்னா, சோழன் வரும் போது, அவன் மேல் கோபம் கொண்டது போல நடிச்சு முகத்தை திருப்பி வைச்சு ஊடலோடு காத்திட்டு இருந்திருக்கா அந்த பெண். சோழன் இந்த பெண், தன் மீது உண்மையாவே கோபமா இருக்கான்னு நினைச்சு அவளைத் தழுவாமலேயே தனியே விடுத்து அவன் வழியே திரும்பி போய்ட்டானாம். இதுக்குத்தாங்க சொல்றது ஓவர் ஆக்ஷன் செய்யக்கூடாது்ன்னு…

காதலின் ரகசியத்தை தெரிஞ்சுக்கிட்டீங்க இல்லை… இனி நீங்களாச்சும், முத்தொள்ளாயிரப் பாடல் பெண் போல இல்லாம எல்லாம் பிளான் போட்டு செய்யுங்க… காதலில் நிச்சயம் வெற்றி தான்.

நன்றி: அதீதம்.

Thursday, January 26, 2012

வரிகள் மாற்றப்பட்டது - எந்தன் கண் முன்னே (நண்பன்)

நண்பன் படத்தில் வரும் எந்தன் கண் முன்னே பாடல் ...

எந்தன் நெஞ்சத்தை நெஞ்சத்தை பாராமல் போனாயே…
யாரும் கேட்காத சில்வண்டின் ரீங்காரம் ஆனானே
உலகம் முடியும் நிலை பார்த்தேன்
கனவா நனவா உனை கேட்டேன்
உலகம் முடியும் நிலை பார்த்தேன்
கனவா நனவா உனை கேட்டேன்
மனம் கேட்கிறேன் இடம் மறுக்கிறாய்
உனைக் கேட்கிறேன் உயிரதைப் பறிக்கிறாய்
மனதை மனதை உடைத்தாயே மருந்தினைத் தருவாயா
ரணங்கள் ரணங்கள் கொடுத்தாயே உணர்ந்துநீ வருவாயா

Saturday, January 14, 2012

என்றும் தமிழ் இனிச் சாகாது

நண்பர்களே,

சமீப காலமாக இணையத்தில் அதிகம் உலாவ முடியாமல் போனாலும், இணையத்திற்கு வந்து பார்க்கையில் அதிகம் புலப்படும் விஷயங்களில் ஒன்றாக, "இதனால் தமிழ் அழிந்து போகும், அதனால் தமிழ் அழிந்து போகும்" என்பதும் ஆகி விட்டது... நண்பர்களே, ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் அந்த மொழி முகம் போன்றது. பிற மொழிகள் முகப்பூச்சுகள் போன்றது. முகப்பூச்சு பூசுவதால் முகம் அழிந்து போகுமா என்ன...

முகப்பூச்சைப் பூசுவதால் முகம் அழிந்து விடும் என்று சொல்லி மக்களைப் பயப்படுத்துவதை விடுத்து உண்மையான அழகு முகமே அன்றி முகப்பூச்சில் இல்லை என்பதை மக்களுக்கு உணர வைக்க வேண்டும். சமீபகாலமாக இன்னும் அதிகம் பேசப்படுவது வொய் திஸ் கொலைவெறி பாடல் தமிழ்ச்சமுதாயத்தைக் கெடுத்து விட்டது என்று. மக்களே சினிமா பாடல்களில் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதும், பொருள் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவதும் ஏதோ இன்று வந்தது போல பேசிக் கொண்டு இருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது.

நான் சிறுவயதில் இருக்கும் போது அதிகம் பேசப்பட்ட பாடல் முக்காலா முக்காபுல்லா... அன்றும் எனக்கு பொருள் தெரியாது, இன்றும் தெரியாது... ஆனால் அந்த பாடல் இன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோமா... இல்லையே... ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமான இசையை பெரும்பாலனவர்களின் மனம் விரும்பும். பிறமொழிச் சொற்கள் கொண்ட பாடல்களின் வாழ்நாள் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல தான்... பிறமொழி சொற்கள் கொண்ட பாடலால் தமிழ் கெட்டுப் போய் விட்டது, தமிழ் அழிந்து விடும் என்று புலம்பாமல் தமிழில் பாடல்களை எழுதுங்கள்... அதை ஊக்குவியுங்கள்... தானாக பிறமொழிச் சொற்கள் கொண்ட பாடல்கள் அழிந்து விடும்.

இந்தியை ஒழிப்போம் என்று குரல் கொடுத்து தமிழகத்திலிருந்து இந்தியை ஒழித்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்குச் சென்று நாமும் கஷ்டப்படுகிறோம். பிற பகுதிகளில் இருந்து வரும் மக்களும் இங்கு கஷ்டப்படுகிறார்கள். இந்தி மட்டும் அல்ல, ஆங்கிலம் மட்டும் அல்ல உலகின் அனைத்து மொழிகளையும் நம் தமிழ் மக்கள் கற்க வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். அந்த வாய்ப்பு மற்ற மொழிகளில் இருக்கும் நல்லவற்றை தமிழில் மொழிபெயர்க்கவும், தமிழில் இருக்கும் உயர்ந்த கருத்துகளை பிறமொழிகள் பேசுபவரிடம் சேர்ப்பிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

எங்கள் ஊரில் பேச்சு வழக்கில், நாம் பேசிக் கொண்டிருப்பதை கடவுள் அவ்வப்போது கேட்க வருவார் என்றும், அதனால் எப்போதும் நல்லதையே பேசுவோம்,நல்லதே நடக்கும் என்றும் சொல்வதுண்டு. இதற்கு ஒரு கதை கூட சொல்வார்கள். ஒரு மரக்கிளையில் இரண்டு சிறுவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள். மரக்கிளை உடைந்து கொண்டிருந்தது. அதனைப் பார்த்து விட்ட ஒரு சிறுவனி அம்மா கையை விட்டுடாதடா என்று கூவிக் கொண்டு செல்ல அந்த சிறுவன் கையை விட்டு விட்டானாம்... ஆனால் இன்னொரு சிறுவனின் அம்மாவோ கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள் என்று சொல்லியபடி ஓடிச் சென்றாளாம். அந்த சிறுவன் மரக்கிளையை கெட்டியாகப் பிடித்தபடி இருந்தானாம்.

அதுபோல, தமிழை வாழ வைக்க வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள் இனி, என்றும் தமிழ் இனிச் சாகாது என்று சொல்லி தத்தம் வீடுகளிலிருந்து தமிழை வாழ்விக்க போராடலாம்... ஆங்கிலம் தமிழை அழித்து விடும், இந்தி தமிழை அழித்து விடும், பிறமொழிகள் தமிழை அழித்து விடும், சினிமா பாடல்களின் பிறமொழி கலப்பு தமிழை அழித்து விடும் என்று தமிழின் காவலர்கள் போல உணர்ச்சிப்பூர்வமாக மேடைகளிலும் பொது இடங்களிலும் பேசி விட்டு, தனது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிக்க அனுப்பும் போலிகளின் பேச்சில் மயங்கிவிட வேண்டாம்.

முகப்பூச்சுகள் ஒருநாள் காணாமல் போகும், முகம் காணாமல் போகாது. அதனால்,

என்றும் தமிழ் இனிச் சாகாது என்று மனப்பூர்வமாக நம்புங்கள்... என்றும் தமிழ் இனிச் சாகாது...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

நன்றி: இந்நேரம்.காம்

http://www.inneram.com/articles/common-articles/tamil-2311.html

பொங்கல் - என் அனுபவம்

அதீதம் வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்... இந்த பொங்கல் திருநாளில் நானும் உங்களுடன் சற்று எனது பள்ளிக்கால பொங்கல் நாளைத் திரும்பிப் பார்க்கப் போகிறேன்... இன்றைய தலைமுறை நான் அனுபவித்த பொங்கல் நன்னாள் மகிழ்ச்சியை அனுபவிக்கிறதா??? விடை தேட சற்று பின்னோக்கி பயணிப்போமா...

பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது விடுமுறை தான்... ஒரு நாளா, இரண்டு நாளா, நான்கு நாட்கள் விடுமுறை ஆயிற்றே... முதல் நாள் போகி... எல்லோரும் சொல்வார்கள், பழையன கழிதலும், புதியன புகுதலும் போகி, அதனால் பழையவற்றை எரிக்க வேண்டும் என்று... எனக்குத் தெரிந்து எங்கள் ஊரில் பழையனவற்றை எல்லாம் குப்பைக் கொட்டும் இடங்களிலேயே போகி அன்றும் கொட்டுவார்கள்... எதனையும் எரிக்க மாட்டார்கள்...


மேலும் இந்த போகி எனக்கு பிடிக்கவே பிடிக்காது... காரணம் என்ன தெரியுமா, பொங்கல் தினத்தன்றும், மாட்டுப் பொங்கல் தினத்தன்றும் சமைப்பதற்குத் தேவையான அவரைபருப்பிற்கு அவரைக்காய் உரிக்கும் வேலை இருக்கும்... அதிலும் எங்கள் அண்ணன் தம்பி மூவருக்கும் அம்மா, ஒவ்வொருவரும் எவ்வளவு அவரைக்காய்கள் உரிக்க வேண்டும் என்று பங்கு பிரித்து தருவார்கள்... இத்தனைக்கும் எனது பங்கு குறைவாகத் தான் இருக்கும்... ஆனாலும் என்னால் சீக்கிரம் உரிக்கவே முடியாது... பிறகு என்ன, அண்ணன் ஏமாறும் பொது அவனது பங்கில் என்னுடையதைச் சேர்த்து விட்டு வம்பு வளர்க்க வேண்டியது தான்... சண்டை போடுகிறார்களே என்று அம்மா வந்து இருவரையும் சமாதானம் செய்வித்து விட்டு, தான் உரிப்பதற்காக எனது பங்கில் சிறிது எடுத்துக் கொண்டும் செல்வார்கள்...


போகி அன்று இரவு, தெருவே களை கட்டும்... அனைத்து வீட்டிலிருந்தும் சிறியவர்கள் பெரியவர்கள் எனத் தங்கள் வீட்டின் முன்புறத்தை அழகாக்க, சாணம் தெளித்து கோலப்பொடியுடன் கூடிவிடுவோம்... ஒவ்வொரு வீட்டின் வாசலும் பெரியதாக இருக்கும்... அதுவும் எங்கள் வீட்டின் வாசல் நீளத்திற்கு கோலம் வரைய, இரண்டு மணி நேரமாவது குறைந்தது பிடிக்கும் அம்மாவிற்கு... அம்மா வரையும் கோலத்திற்கு, நானும் எனது அண்ணன்களும் இருபுறமும் கரும்பு வரைவோம்... அதுதான் எங்களது வேலை... பிந்தைய பள்ளிப் பருவத்தில், அம்மா கோலம் வரையத் துணையாக நிற்பது போல பாசாங்கு செய்து கொண்டு, தெருவை கண்களால் வட்டமடித்துக் கொண்டிருந்தோம்... ஹ்ம்ம்...


பொங்கலன்று, சூரியனுக்கு பொங்கல் வைத்து படைத்து பின் சாப்பிட்டு முடித்தால் இன்னொரு பிரச்சினை தலைவிரிக்கும்... அது, மாட்டுப் பொங்கலன்று சமைப்பதற்கு, ஊற வைத்திருக்கும் அவரைப் பருப்பின் தோலை பிதுக்கி விதையை மட்டும் எடுக்க வேண்டிய வேலை... மாட்டு பொங்கலன்று, பிதுக்கிய அவரைப்பருப்பு சாம்பாரும், பூசணிக்காயும் சிறப்பு என்பதால் இதனைத் தவிர்க்கவே முடியாது... பொங்கல் அன்று இரவும் கோலம் போடுவது கொண்டாட்டமாய் நடக்கும்...


மாட்டுப் பொங்கல், விடியும் பொழுதே வேலையுடன் தான் விடியும்... என்ன பெரிய வேலை? என்கிறீர்களா... மாடுகளைக் குளிப்பாட்டுவது தான்... காலையில் எழுந்ததும், மாடுகளைத் தேய்த்து குளிப்பாட்ட படும் பாடு இருக்கிறதே அப்பப்பா, அழுகையே வந்து விடும்... ஆனாலும் அண்ணன்களுக்கும் எனக்கும், எவருடைய மாடு களையாக இருக்கிறது என்ற போட்டி இருப்பதால் மிகவும் மெனக்கெட வேண்டி இருக்கும் மாட்டை அழகுபடுத்த... மாட்டைக் குளிப்பாட்டி விட்டு வந்து, நாங்களும் குளித்து முடித்து சமையல் முடிய நடுப்பகல் ஆகிவிடும்...
மாட்டுப் பொங்கல் அன்று சிறப்பே, பொளி சோறு தான்... அது என்ன பொளி சோறு என்கிறீர்களா... பொங்கலுடன், பிதுக்கிய அவரைப் பருப்பு சாம்பார், பூசணிக்காய், பொரியல், வெல்லம், வாழைப்பழம், கட்டித்தயிர் எல்லாம் ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்து அப்பா அதனை பிசைந்து கவளம் கவளமாக செய்து கொடுப்பார்... பூஜை முடிந்ததும் மாடுகளுக்கு அந்த கவளங்களை ஒவ்வொன்று கொடுத்து விட்டு பிறகு நாமும் சாப்பிட வேண்டியது தான்... எத்தனை முயன்றாலும் மாட்டுப் பொங்கலன்று படைக்கும் பொளி சோறு போல வீட்டில் நம்மால் சமைக்கவே முடியாது... பூஜை முடிந்து அப்பொழுது தான் சாப்பிட அமர்வோம்... ரேடியோ சத்தம் கேட்கும்...
ஆஹா, சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள்... மாட்டுப் பொங்கலன்று விசேஷமே ஊரில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் தான்... இப்பொழுது நான் சொன்னது கூட அப்போட்டி பற்றிய அறிவிப்பு வரும் ரேடியோ சத்தம் தான்... ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், ஸ்லோ சைக்ளிங், சாக்கு கட்டிக் கொண்டு ஓடும் பந்தயம், வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், உயரத்தில் கயிற்றில் கட்டி இருக்கும் முறுக்கை கையைப் பின்னால் கட்டிக் கொண்டு எம்பி எம்பி வாயால் கடித்து இழுக்கும் போட்டி, கபடி போட்டி என சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வித விதமான போட்டிகள் நடக்கும்... போட்டிகள் எல்லாம் முடிய இரவு பத்து மணிக்கும் மேலாகி விடும்...


அடுத்த நாள் தான் இன்னும் குதூகலமே... அப்படி என்ன குதூகலம் என்றா கேட்கிறீர்கள்... கடைசி நாளான உழவர் திருநாளில் தான் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விளையாட்டு நடக்கும்... மாமன் மகள்/ன் மேல் தண்ணீர் ஊற்றி விளையாடுவது, பிடித்த பெண்/ஆண் மேல் தண்ணீர் ஊற்றி விளையாடுவது என ஒவ்வொருவரும் தங்கள் உள்ளக்கிடக்கையை நாசூக்காய் மற்றவருக்குத் தெரிவிக்கும் நாள்... பகலெல்லாம் மஞ்சள் நீரில் விளையாடினால், மாலைப்பொழுதில், காளை விடும் நிகழ்ச்சி நடக்கும்... எங்கள் ஊரில் காளை அடக்கும் போட்டிகள் எல்லாம் இல்லை... வயல் வெளியில் காளைகளை ஓட விடுவது, பின் அதே காளைகளை தெரு தெருவாய் வடக்கயிற்றால் இருபுறமும் கட்டி அவற்றை உசுப்பேற்றி இருபுறமும் அலைக்கழிக்க வைப்பது என்று கடைசி நாள் அமர்க்களமாய் முடியும்...

பொங்கல் முடிந்தாலும் அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளிக்கூடத்தில் பொங்கல் பற்றிய விவாதங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்... ஹ்ம்ம்... இன்றைய தலைமுறை நான் அனுபவித்த இத்தனை சந்தோஷங்களை அனுபவிக்கிறதா என்றால், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னாலேயே அவர்களது நான்கு நாட்களும் கழிகிறது என்று தான் வேதனையுடன் சொல்ல முடிகிறது... ம்ம்ம்... மீண்டும் ஒரு பள்ளிக்கால பொங்கல் விழாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் ...


ஏருபூட்டி நீரிறைச்சு ஆழுழுது வித்திட்டு

நாத்தாக்கி சேடையிலே நட்டநெல்லு முத்திவிட

காரணமாம் சூரியர்க்கு நன்றிசொல்ல கூடிடுவோம்

பாரத்தை ஏத்துக்கிட்டு நாள்முழுக்க சேத்துனுல

கால்கடுக்க ஏரிழுத்த காளைகளை ஓட்டிவந்து

சுத்தமாக்கி பொட்டுவைச்சு மாலைகளால் பூட்டிடுவோம்

காடுகாத்த சூரியற்கும் கஷ்டப்பட்ட காளைகட்கும்

சொந்தபந்தம் ஒன்னுசேர்ந்து பொங்கவச்சு பூசையிட்டு

பாடிடுவோம் பொங்கல்;வாழ்த் து...

நன்றி: அதீதம். காம்

லிங்க்: atheetham.com/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

Wednesday, January 4, 2012

தந்தை சொல் மந்திரமா???

இந்த உலகத்தில் உள்ள உயிரினங்களிலேயே மனித இனம் தனிச்சிறப்பு வாய்ந்ததுங்க. இல்லையா பின்ன, மற்ற எல்லா உயிரினங்களிலும் தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு, தந்தைக்கும் பிள்ளைக்குமான உறவு எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான். ஆனால் இந்த மனித இனத்தில் தான் தாய், தந்தை பிள்ளை உறவைத் தாண்டி, தாத்தா, பாட்டி இப்படின்னு உறவுகள் என்றுமே தொடர்ந்துக்கிட்டு இருக்கும்.

உறவுன்னுச் சொன்ன உடனே தான் நினைவுக்கு வருதுங்க. நாம உறவுகளை உறவுகளா மட்டும் பார்க்காம ஒவ்வொரு உறவையும் எப்படிப் பார்க்கணும்னும் நம்ம முன்னோர்கள் சொல்லி வைச்சிருக்காங்க. என்ன தான் எல்லா உறவும் முக்கியம்னாலும் ஒரு குழந்தைக்கு தாயும் தந்தையும் எவ்வளவு முக்கியம்ன்றதை எவ்ளோ அழகா சொல்லி இருக்காங்க பாருங்க இந்த பாட்டுல,

“தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை….”

என்ன ஒரு அர்த்தம் பொதிந்த வரிகள் இல்லையா…

இந்தப் பாட்டுல ஒரு வரி இருக்கு பாருங்க, “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” அப்படின்னு இது எப்ப கேட்டாலும் எனக்கு நினைவுக்கு வர்ரவர் பரசுராமர் தாங்க. யாருடா இந்த பரசுராமர், எதுக்கு இவரு நினைப்பு இவனுக்கு வரணும்னு பார்க்குறீங்களா… சொல்றேன் கேளுங்க…

ஜமதக்னி முனிவருக்கும், இரேணுகை அம்மையாருக்கும் நான்காவதாக பிறந்து, கண்ணனின் பத்து அவதாரங்களில் ஒருவராக கருதப்படுபவர் தான் இந்த பரசுராமருங்க. இவர் ஏன் நினைவுக்கு வரணும்னு தானே கேட்கறீங்க, சொல்லுறேன்… பெத்த தாயை எந்த மகனாச்சும் வெட்டிக் கொல்வாங்களாங்க. ஆனா இந்த பரசுராமர் செஞ்சார். ஏன்? தன் அப்பா ஜமதக்னி முனிவர் சொன்னார்ன்ற ஒரே காரணத்துக்காக பரசுராமர் தன் தாயை வெட்டிக் கொன்றார். அப்படி என்ன தான் அந்த அம்மா பாவம் செஞ்சாங்கன்னு கேட்கறீங்களா…

இரேணுகை அம்மையார் கற்புநெறி தவறாது வாழ்ந்து வந்ததால், ஆற்று மணலில் குடம் செய்து அதில் தினமும் தன் கணவரான ஜமதக்னி முனிவரின் பூஜைக்குத் தேவையான கங்கை நீரை எடுத்து வரும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர். இப்படி இருக்கையில் ஒரு நாள் இரேணுகை அம்மையார், கங்கையில் நீர் எடுத்து வரச் சென்றிருந்த போது, கங்கை ஆற்று நீரில் தெரிந்த கந்தர்வனின் பிம்பம் ஒன்றைப் பார்த்து இப்படி ஒரு அழகிய ஆண்மகனா என மனம் சஞ்சலப்பட்டு விட்டாராம்.

அதனால் மண்குடம் உடைந்து விட, இரேணுகை அம்மையாரால் அதன்பின் எத்தனை முறை முயற்சி செய்து பார்த்தும் ஆற்று மணலால், ஒரு குடத்தை உருவாக்க முடியவில்லையாம். இரேணுகை நீர் முகர்ந்து வரச் சென்று நெடுநேரமாகியும் வராத காரணத்தைத் தன் தவவலிமையால் கண்டு கொண்ட ஜமதக்னி முனிவர் தன் மகன்களை ஒவ்வொருவராய் கூப்பிட்டு அவர்கள் தாயைக் கொல்லச் சொல்ல, ஜமதக்னியின் முதல் மூன்று புதல்வர்களும், தாயைக் கொல்ல மாட்டோம் எனச் சொல்லி மறுத்து விட்டு தந்தையின் சாபத்திற்கு ஆளான சமயத்தில், பரசுராமர் தன் தந்தை கட்டளை ஏற்று தாயைக் கொலைச் செய்தாராம். தன் சொல்லைக் கேட்டு நடந்த பரசுராமனைத் தழுவி மகிழ்ந்த ஜமதக்னி முனிவர், பரசுராமரிடம், என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, பரசுராமர் தன் தாயும் தமையன்களும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாராம்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அப்படின்னு என்ன தான் நம்ம முன்னோர்கள் சொல்லி வைத்தாலும், இனியவை நாற்பது என்ன சொல்லுது தெரியுங்களா…

தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
கொண்டு அடையான் ஆகல் இனிது

அதாவது, சொல்லுவது தந்தையே ஆனாலும், தான் என்னும் அகந்தை கொண்டு, பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலைச் சொன்னால் அதனைச் செய்யாதிருத்தல் தான் நல்லதுன்னு சொல்லுதுங்க…

இப்படித்தான், நம்ம ஊருல ஒரு அப்பாவும் பையனும், ஐஸ்கிரீம் கடைக்குப் போனாங்களாம். அந்த அப்பாவுக்கு, கடைக்குப் போன பிறகு தான் தெரிஞ்சிருக்கு பணப்பையை வீட்டுல வைச்சிட்டு வந்துட்டது. சரினு பையனை வீட்டுக்கு அனுப்பி பணத்தை எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கார். பையனோ என்னைய விட்டுட்டு நீங்க சாப்டுட்டீங்கன்னா, நான் போக மாட்டேன் அப்படின்னு அடம் பிடிச்சானாம். அப்பாவோ, நீ வர்ர வரைக்கும் சாப்பிட மாட்டேன்டானு சத்தியம் செய்து மகனை வீட்டுக்கு அனுப்பி வைச்சாராம்.

போன பையன் ரொம்ப நேரமாகியும் வராம போக, கையில் இருந்த ஐஸ் உருகுதேனு வாய் வைக்கப் போனாராம் அப்பா. அவ்வளவு நேரமும் கடை வாசலிலேயே மறைஞ்சுக்கினு அப்பாவை கவனிச்சுட்டு இருந்த பையன், பார்த்தீங்களா.! இப்படி ஏமாத்துவீங்கன்னு தெரிஞ்சு தான் நான் கடை வாசலிலேயே மறைஞ்சு நின்னு பார்த்துட்டு இருந்தேன்னு சொன்னானாம்…

இது எப்படி இருக்குங்க...

விதையாவோம்

சமீபத்தில் பார்த்து மனதை அதிகம் சலனப்படுத்திய படம்... எங்கேயும் எப்போதும்... இங்கு பலரும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கலாம். பல வித எண்ணங்கள் தோன்றியும் இருக்கலாம் இப்படத்தைப் பார்த்ததும்...

விபத்து எங்கேயும் எப்போதும் நிகழலாம் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் படத்தின் தலைப்பும், அவ்வாறு விபத்தில் இறந்தாலும் நாம் வாழ நம் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுக்க முடியும் என்ற செய்தியுடன் படம் முடிவதும் என்னுள் ஏதோ செய்து கொண்டிருக்கிறது இன்னும்...

படத்தின் இறுதிப்பாடல்(இறுதிக்காட்சி) உயிர் அறுந்ததே... உடல் விழுந்ததே... மனதை பிசைந்து கொண்டே இருக்கிறது... அந்த இசை காதை விட்டு அகல இன்னும் மறுக்கிறது... இவ்வளவு பாதித்த இசையில் கண் தானம் பற்றியும், உடல் உறுப்பு தானத்தைப் பற்றியும் சொன்னால் என்ன என்று தோன்றியது... அதன் விளைவே இந்த வரிகள்...

உயிர் விழுந்திட உடல் அழுகுமே
ம்ம்ம்ம்ம்ம்….
ஓ…. எரிந்திடும் உடல் உயிர் வழங்குமே
ஓஓஓ…. விழிகளைத் தந்தே விதைத்திடு உன்னை
நாம் உடலினைத் தந்தே உறங்குவம் மண்ணில்
ஓஓஓஓஓ……
இது மண்ணிலே மாயும் கூடு
உன்னை தானம் ஆக்கி வாழு.!
உயிர் விடும் முன்னே….

இவ்வரிகளை எங்கேயும் எப்போதும் படக்குழுவிற்கு மானசீகமாக சமர்ப்பிக்கிறேன்...

சமாதானம்

கத்தி குண்டு கையிலே
எடுத்துக் கொண்டு வாழ்விலே
கலகம் செய்து பாரையே
எரித்து வாழும் வீனரே...

உங்கள் நன்மைக் காகவும்
உலக நன்மைக் காகவும்
நல்ல மொழி ஒன்றைநான்
சொல்லு கின்றேன் கேளிரே...

கலகம் நினைக்கும் மனத்தினில்
கணக்காய் அன்பை நிறுத்திடீர்
மீறி கலகம் வந்திட
வெள்ளைக் கொடியில் பேசிடீர்...

அழிக்க நினைக்கும் வைரியும்
எதிர்த்து நிற்கும் படைகளும்
அமைதி வழி நாடிட
அடங்கிப் போவர் அறிவிரே...

பிறப்பும் இறப்பும் ஒருமுறை
நமக்கு நாமே வரையறை
புரிந்து நிற்க நடைமுறை
வணங்கி நிற்கும் தலைமுறை...