Saturday, January 14, 2012

என்றும் தமிழ் இனிச் சாகாது

நண்பர்களே,

சமீப காலமாக இணையத்தில் அதிகம் உலாவ முடியாமல் போனாலும், இணையத்திற்கு வந்து பார்க்கையில் அதிகம் புலப்படும் விஷயங்களில் ஒன்றாக, "இதனால் தமிழ் அழிந்து போகும், அதனால் தமிழ் அழிந்து போகும்" என்பதும் ஆகி விட்டது... நண்பர்களே, ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் அந்த மொழி முகம் போன்றது. பிற மொழிகள் முகப்பூச்சுகள் போன்றது. முகப்பூச்சு பூசுவதால் முகம் அழிந்து போகுமா என்ன...

முகப்பூச்சைப் பூசுவதால் முகம் அழிந்து விடும் என்று சொல்லி மக்களைப் பயப்படுத்துவதை விடுத்து உண்மையான அழகு முகமே அன்றி முகப்பூச்சில் இல்லை என்பதை மக்களுக்கு உணர வைக்க வேண்டும். சமீபகாலமாக இன்னும் அதிகம் பேசப்படுவது வொய் திஸ் கொலைவெறி பாடல் தமிழ்ச்சமுதாயத்தைக் கெடுத்து விட்டது என்று. மக்களே சினிமா பாடல்களில் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதும், பொருள் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவதும் ஏதோ இன்று வந்தது போல பேசிக் கொண்டு இருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது.

நான் சிறுவயதில் இருக்கும் போது அதிகம் பேசப்பட்ட பாடல் முக்காலா முக்காபுல்லா... அன்றும் எனக்கு பொருள் தெரியாது, இன்றும் தெரியாது... ஆனால் அந்த பாடல் இன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோமா... இல்லையே... ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமான இசையை பெரும்பாலனவர்களின் மனம் விரும்பும். பிறமொழிச் சொற்கள் கொண்ட பாடல்களின் வாழ்நாள் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல தான்... பிறமொழி சொற்கள் கொண்ட பாடலால் தமிழ் கெட்டுப் போய் விட்டது, தமிழ் அழிந்து விடும் என்று புலம்பாமல் தமிழில் பாடல்களை எழுதுங்கள்... அதை ஊக்குவியுங்கள்... தானாக பிறமொழிச் சொற்கள் கொண்ட பாடல்கள் அழிந்து விடும்.

இந்தியை ஒழிப்போம் என்று குரல் கொடுத்து தமிழகத்திலிருந்து இந்தியை ஒழித்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்குச் சென்று நாமும் கஷ்டப்படுகிறோம். பிற பகுதிகளில் இருந்து வரும் மக்களும் இங்கு கஷ்டப்படுகிறார்கள். இந்தி மட்டும் அல்ல, ஆங்கிலம் மட்டும் அல்ல உலகின் அனைத்து மொழிகளையும் நம் தமிழ் மக்கள் கற்க வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். அந்த வாய்ப்பு மற்ற மொழிகளில் இருக்கும் நல்லவற்றை தமிழில் மொழிபெயர்க்கவும், தமிழில் இருக்கும் உயர்ந்த கருத்துகளை பிறமொழிகள் பேசுபவரிடம் சேர்ப்பிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

எங்கள் ஊரில் பேச்சு வழக்கில், நாம் பேசிக் கொண்டிருப்பதை கடவுள் அவ்வப்போது கேட்க வருவார் என்றும், அதனால் எப்போதும் நல்லதையே பேசுவோம்,நல்லதே நடக்கும் என்றும் சொல்வதுண்டு. இதற்கு ஒரு கதை கூட சொல்வார்கள். ஒரு மரக்கிளையில் இரண்டு சிறுவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள். மரக்கிளை உடைந்து கொண்டிருந்தது. அதனைப் பார்த்து விட்ட ஒரு சிறுவனி அம்மா கையை விட்டுடாதடா என்று கூவிக் கொண்டு செல்ல அந்த சிறுவன் கையை விட்டு விட்டானாம்... ஆனால் இன்னொரு சிறுவனின் அம்மாவோ கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள் என்று சொல்லியபடி ஓடிச் சென்றாளாம். அந்த சிறுவன் மரக்கிளையை கெட்டியாகப் பிடித்தபடி இருந்தானாம்.

அதுபோல, தமிழை வாழ வைக்க வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள் இனி, என்றும் தமிழ் இனிச் சாகாது என்று சொல்லி தத்தம் வீடுகளிலிருந்து தமிழை வாழ்விக்க போராடலாம்... ஆங்கிலம் தமிழை அழித்து விடும், இந்தி தமிழை அழித்து விடும், பிறமொழிகள் தமிழை அழித்து விடும், சினிமா பாடல்களின் பிறமொழி கலப்பு தமிழை அழித்து விடும் என்று தமிழின் காவலர்கள் போல உணர்ச்சிப்பூர்வமாக மேடைகளிலும் பொது இடங்களிலும் பேசி விட்டு, தனது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிக்க அனுப்பும் போலிகளின் பேச்சில் மயங்கிவிட வேண்டாம்.

முகப்பூச்சுகள் ஒருநாள் காணாமல் போகும், முகம் காணாமல் போகாது. அதனால்,

என்றும் தமிழ் இனிச் சாகாது என்று மனப்பூர்வமாக நம்புங்கள்... என்றும் தமிழ் இனிச் சாகாது...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

நன்றி: இந்நேரம்.காம்

http://www.inneram.com/articles/common-articles/tamil-2311.html

No comments:

Post a Comment