Thursday, October 13, 2011

வாழ்க்கை எனும் தொடர் புதிர்

வாழ்க்கை ஒரு வித்தியாசமான தொடர் புதிர். எதிர்வரும் முதல் புதிருக்கு விடை தெரிந்தாலும் தெரியாமல் போனாலும், விடை சரியாக இருந்தாலும், இல்லாமல் போனாலும் அடுத்தடுத்து புதிர் வந்து கொண்டே இருக்கும்.

புதிரின் சுவாரசியம், அப்புதிருக்கான விடை தேடலில் அடங்கி இருக்கும் சூட்சமத்தில் தான் இருக்கிறது. அச்சூட்சமம் உணரும் வரை புதிர் மிகவும் கடினமாக இருக்கும். சூட்சமம் விளங்கி விட்டால், ப்பூ... இவ்வளவுதானா... என்று புதிரை எண்ணத் தோன்றும். ஆனால் புதிரின் சூட்சமத் தேடல்களை திரும்பி பார்க்க, சிரிப்பாக இருக்கும்.

வாழ்க்கையும் இது போல தான். வாழ்க்கையெனும் தொடர் புதிரில், ஒவ்வொரு புதிரின் சூட்சமத்திலும் அடங்கி இருக்கிறது வாழ்க்கை. என்ன, ஒவ்வொரு புதிரின் விடைக்கான சூட்சம தேடலும் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த புதிருக்கான சூட்சமம் எளிதில் விளங்கும். சூட்சமத்தின் தேடல் எங்கு தடம் மாறுகிறதோ அங்கு ஆரம்பிக்கிறது சூட்சமத் தேடல்களின் கடினமும், புதிருக்கான தவறான விடைகளும்.

சாதாரணமான தொடர் புதிர் விளையாட்டில் சரியான விடை சொன்னால் தான் அடுத்த புதிருக்குள் நுழையலாம். ஆனால் வாழ்க்கை தான் விசித்திரமான தொடர் புதிர் ஆயிற்றே. நமது பதில் சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அடுத்த புதிர் வந்து நிற்கும் நமது பதிலுக்கு ஏற்ப.

நீங்கள் சிக்கலுண்ட நூற்கண்டை கண்டிருக்கிறீர்களா. நூற்கண்டின் சிக்கலை அறிய நிதானமாக ஒரு முனையிலிருந்து ஆரம்பித்து நிதானமாக முன்னேறி ஒவ்வொரு இடத்தின் சிக்கலையும் லாவகமாக விலக்கினாலே நூல் முழுமையாக சேதமடையாமல் கிடைக்கும். அதை விடுத்து முனையைத் தேடும் பொறுமையின்றியோ, அல்லது முனையில் இருந்து ஆரம்பித்தாலும் சிக்கலை லாவகமாக அவிழ்க்கும் பொறுமையின்றியோ போனால் சிக்கல் அதிகமாகி நூல் முழுமையாக பிரிக்க முடியாமல் துண்டு துண்டாகவே கிடைக்கும்.

இத்தகைய சிக்கலான தொடர் முடிச்சுகளைக் கொண்ட தொடர் புதிர் தான் வாழ்க்கை. வாழ்க்கையில் எதிர்வரும் ஒவ்வொரு புதிரையும் லாவகமாக கையாண்டு விடையைக் கண்டு கொண்டால் நமது வாழ்க்கை நமக்கு முழுமையாக இனிமையாக கிடைக்கும். அன்றேல் நமது வாழ்க்கை சின்னா பின்னமாகிவிடும்.

புதிரின் முடிவு எத்தகையதாக இருந்த போதும், வாழ்க்கையின் இறுதியில் நாம், நாம் கடந்து வந்து புதிர்களைத் திரும்பி பார்க்கையில் எஞ்சி நிற்பவை இரண்டு உணர்ச்சிகளே. அது, புதிரை சரியாக கனித்தவன், சே... இத்தனை எளிய புதிரைக் கையாள நாம் எத்தனை அரிய முயற்சியைக் கையாண்டோம் என்ற நகைப்பும், புதிரைத் தவறாக கனித்தவன், சே... இத்தனை கடின புதிரை நாம் எத்தனை எளிமையானதாக நினைத்து நாம் நம்மை ஏமாற்றிக் கொண்டோம் என்ற சிந்தனையும் மட்டுமே.

விளையாட்டுப் புதிராகட்டும், வாழ்க்கைப் புதிராகட்டும்... புதிரை நமக்குள் இறக்கித் தேடுவதை விட, புதிரைக் காட்சிப் பொருளாக்கி, அதில் சிக்கல் இருக்கும் இடத்தைத் தேடி அடையாளம் கண்டு கொள்ள வெற்றி நமக்குத்தான்.

வாழ்க்கை ஒரு தொடர் புதிர் தான்.... ஆனால், விடையே இல்லாத புதிரல்ல...

எழுதாத டைரிக் குறிப்புகள்

கையில் பிரம்புடன், கொடுத்து பத்து நாட்களாகியும், திருப்பித் தராத முன்னேற்ற அறிக்கையைக்(Progress Report) கேட்டவாறு வகுப்பாசிரியர்.

பிரம்பின் வடு தெரியாமல் இருக்கும் என்றெண்ணி, தலையில் இருந்த எண்ணெயைத் தடவி கை நீட்ட, பிரம்பின் வடு இப்பொழுது தான் அப்பட்டமாய்த் தெரிந்தது.

பிரம்பின் "சுளீர்" வலிக்கவில்லை, அடுத்த நாளுக்குள் முன்னேற்ற அறிக்கையில் தந்தையின் கையொப்பம் வாங்கி வராவிட்டால் வகுப்பில் அனுமதி இல்லை என்ற ஆசிரியரின் சொல் நெஞ்சைத் தொட்டதும்.

வீட்டில், என்ன சொல்ல? எப்படி ஆரம்பிக்க ? புரியவில்லை...

வீட்டிற்கு வந்தும் விளையாடப் பிடிக்கவில்லை. விளையாடப் பிடிக்கவில்லை என்பதை விட, அன்றைய இரவு நாடகத்தின் முதல் படலமே, விளையாட போகாமல் என்னை இருத்திக் கொண்டது என்று சொல்லலாம்.

நல்ல பிள்ளை போல புத்தகப் பையைத் திறந்து வைத்தாலும், பாடத்தில் மனம் இலயிக்காமல், பார்வை மட்டுமே இலயித்திருந்தது.

அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனைக்கு, சாவு மணி அடிப்பது போன்று அப்பாவின் காலடிக்கு ஸ்ருதி சேர்க்கும் அப்பாவின் செருப்புச் சத்தம்.

சைக்கிளை வெளியே நிறுத்திய அப்பா, எப்போதும் போல முகம் அலம்பி திருநீற்றை கை நிறைய எடுத்து பட்டையாக நெற்றியில் பூசிக் கொள்கிறார்.

புத்தகத்தில் அரை கண்களும், அப்பாவின் மேல் அரை கண்களுமாய் என் பார்வை அலைமோதுகிறது. மீண்டும் மனதை அரிக்கும் கேள்விகளாய், எப்படி ஆரம்பிப்பது, எங்கே ஆரம்பிப்பது, எப்பொழுது ஆரம்பிப்பது.

அப்பா என்றால் சாதாரணமாக நிற்கும் போது நடுங்கும் என் கால்கள், அன்று சப்பனங்காலிட்டு அமர்ந்திருந்தும் நடனம் ஆட ஆரம்பித்தது.

நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை. அப்பா வந்து இரண்டு மணிக்கும் மேலாக கரைந்திருக்கலாம்.

ஊர்க்கோடி மசூதியில் இருந்து வரும் தொழுகைச் சத்தமும், ஊரில் இரவு எட்டு மணிக்கு ஊதும் சங்குச் சத்தமும் ஒன்றாய்ச் சேர்ந்து கேட்க, அடுப்படியில் இருந்து வரும் அம்மாவின் "சாப்பிடலாம் வாங்க" என்ற குரல் என் காதுக்குள் கேட்காமலேயே போனது.

மெதுவாய் புத்தகப் பையிலிருந்து எடுத்து, நடுங்கும் கால்களுடன் அப்பாவிடம் முன்னேற்ற அறிக்கையை நீட்டினேன். பாதம் தரையில் நின்றாலும் தொடையின் நடுக்கம் எப்போது நான் கீழே விழுவேனோ என்று அஞ்சும்படி இருந்தது.

மெதுவாய் முன்னேற்ற அறிக்கையைப் பார்த்த அப்பா, ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருப்பதைக் கண்டு என்னை நோக்கி ஒரு பார்வை பார்த்தார்.

உண்மையில் எனது சப்தநாடிகளும் அப்பார்வையில் அடங்கிப் போனதாய் உணர்வு. இதுவரை என்னை அடித்திராத அப்பாவின் அடுத்த செயல் என்னவாய் இருக்குமோ என்ற பயம்.

உண்மையைச் சொல்லப் போனால், அப்பா இதுவரை என்னையும் சரி, என் அண்ணாக்களையும் சரி ஒருமுறை கூட அடித்ததில்லை. அப்பாவின் அடி எப்படி இருக்கும் என்று யாரும் பார்த்ததும் இல்லை. ஆனால் அம்மா ஒவ்வொரு முறை கோபத்தின் உச்சிக்குச் செல்லும் போதும், உன் அப்பாவிடம் சொல்கிறேன். அவர் அடிக்கும் அடியில் நீ சுவரோடு ஒட்டிக் கொள்ளப் போகிறாய். அப்பொழுது தான் உனக்கு புத்தி வரும் என்றுச் சொல்லுவார்கள். அம்மா உச்சஸ்தாயியில் இதை, ஒவ்வொரு முறை சொல்லும் போதும் யாருக்கும் சப்த நாடிகளும் அடங்கி விடும் என்பதே நிஜம்.

எனது அப்பாவின் பார்வை தந்த அனல் தகிப்பில், சிவபெருமான் நெற்றிக் கண்ணில் நெருப்பைக் கக்குவார் என்ற மொழி உண்மையாகத் தான் இருக்கும் என்று நம்பத் தொடங்கினேன் நான். கையொப்பம் கிடையாது என அறிக்கையை விட்டத்தில் விட்டெறிந்தார். முன்னேற்ற அறிக்கை எங்கு விழுந்தது என்று கூட பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் நிறைந்திருந்தது.

ஒரு நாளும், " எழுப்பாமல், தானாய் எழும்பி படிப்பதில்லை, எழுப்பினாலும் தூங்கி விழுந்துக் கொண்டே படித்தால் இப்படித்தான் ஆகும்" என்று அப்பா நிறுத்தாமல் பாடினார் வசைகானம்.

காதில் விழுந்தாலும் இதைப்பற்றி எதுவும் கேட்காதவாறு அம்மா, சமைத்தவற்றை பரிமாற எடுத்து வந்து வைக்க, எங்கோ விழுந்த முன்னேற்ற அறிக்கையைத் தேடிப் பிடித்து புத்தகப்பையில் பத்திரப்படுத்தினேன் நான்.

விழுங்க முடியாமல் சாப்பாட்டை மென்று விழுங்க, முதல் சாப்பாட்டோடு கை கழுவிக் கொண்டு எழுந்தேன்.

எல்லோரும் படுத்தாகி விட்டது. கண்களை இறுக்க மூடி, தூங்க பிரம்ம பிரயத்தனம் செய்தாலும் முடியவில்லை. ஆசிரியர் வகுப்பில் சொன்னதும், அப்பாவின் வசவுமே மனக்கண்ணில் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பா, இரண்டு நாட்கள் வெளியூருக்கு ஏதோ வேலை விஷயமாக, அடுத்த நாள் அதிகாலையிலேயே புறப்பட இருப்பதால் துணி மணி அடுக்கி வைக்க அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.

ஐயோ, இதென்ன அடுத்த இடி... இரண்டு நாளா???

ஏதேதோ பல சிந்தனைகள். எப்பொழுது தூங்கினேன், நினைவில்லை. சட்டென விழிப்பு வந்தது. அப்பா குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கண்களைத் துடைத்தவாறு புத்தகத்தை திறந்து வைத்தேன். இப்பொழுது உண்மையாகவே படித்தேன். படிப்பது போல் நடிக்கவும் செய்தேன். குளித்து வந்த அப்பா என்னைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

எப்பொழுதும் போல், குளித்து வந்ததும் இறைவனைப் பிரார்த்தித்து நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டார். வெளியூர் செல்ல அவசரமாக வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து கிளம்பத் தயாரானார்.

எங்கிருந்து வந்ததோ அந்த துணிச்சல். அசட்டுத் துணிச்சல். மீண்டும் முன்னேற்ற அறிக்கையை எடுத்துக் கொண்டு அப்பாவின் முன் வந்து மௌனமாக நின்றேன். அப்பாவும் எதுவும் பேசவில்லை. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சட்டென வாங்கி கையொப்பம் இட்டு, இனியாவது ஒழுங்காகப் படி என்றார் அமைதியாக.

அப்பாவின் கையொப்பமிட்ட முன்னேற்ற அறிக்கையை வாங்கிக் கொண்ட நான் சிலையாக நின்றேன். ஒரு புறம் கையொப்பம் வாங்கிவிட்ட மகிழ்ச்சி. மறுபுறம் எப்படியும் அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டுமே என்ற பயம்.

அடுத்து வந்த பொழுதுகள் யாவும் அந்தப் பொழுதைப் போல புலரவில்லை. எழுப்பாமல் எழும்பும் என்னையும் நான் பார்க்கவில்லை.

- எழுதாத டைரிக் குறிப்புகளிலிருந்து.

நானும் கடவுள் ஆகலாம் - அதீதம் இதழில் வெளிவந்தது

காலையில் கண்விழித்ததில் இருந்து, ஆழ்மனதில் கீறலிட்ட இசைத்தட்டாய் மீண்டும் மீண்டும் பலமுறை இப்பாடலைப் பாடிக் கேட்டாகிவிட்டது. கண்ணதாசன் தான் எத்தனை பெரிய கவிஞன். இல்லையா பின்னே?


"பூஜ்ஜியத்துக்குள்ளே ராஜ்ஜியத்தை வைத்து ஆளுகின்றான் ஒருவன்
அவனைத் தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்"

இப்படித்தான் என்னை முதலில் லேசாக உசுப்பி விட்டார். அப்புறம்,"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்" என்று ஆரம்பித்து என் சிந்தனையை இப்பொழுது ஒரு வழி செய்து விட்டார். ம்ம்ம்...


நானும் கடவுள் ஆகலாம்???

சொல்லிப் பார்க்கும் போதே எனக்குள் ஏதோ இனம் புரியாத பரவசம், கடவுள் ஆகி விட்டது போன்ற ஒரு மதமதப்பு. கடவுள் ஆகிவிட்டதாய் கனவு. அனைத்து உயிர்களையும் ஆட்டுவிப்பதாய் எண்ணம். எத்தனை நேரம் ஆடினேன்??? தெரியவில்லை...

சட்டென ஒரு விழிப்பு... சே! நானா இப்படி... நாள்முழுதும், "கடவுளைச் சேர்வது எப்படி" என்ற சிந்தனையில் இருந்த என்னுள் எப்படி எழுந்தது இந்த எண்ணம்??? உலக வாழ்க்கையைத் துறந்ததாய், பற்றுகளை அறுத்ததாய் நினைத்திருந்த என்னுள் எப்படி இந்த எண்ணம்??? என்ன இது, சம்பந்தா சம்பந்தம் இன்றி "எறும்புத்தோலை உரித்து பார்க்க யானை வந்ததடா" என்ற பாடல் வரிகளை மனதின் இன்னொரு புறம் பாடிக் கொண்டிருக்கிறேனே.

என்ன ஆனது எனக்கு? எனது நேற்றைய பேச்சாக இருக்குமோ... என்னதான் நான் பேசினேன் அப்படி!!!


"கடவுளை நான் உணரமுடியாததற்குக் காரணம் நான் தான். ஆம்! நானும், எனது எண்ணமும் தான். அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் இறைவன் நானாகவும் எனது எண்ணமுமாகவும் இருக்கிறான் என்று அறியாமல் போனதே நான் கடவுளை உணர முடியாததற்குக் காரணம். "எங்கும் நான், எதிலும் நான்" என்று, நான் என்பதை எனது இந்த பூத உடலுக்கு அகங்காரம் சேர்க்க பாடுபட்ட என்னால், "நான் என்பது இந்த உடல் இல்லை, இந்த உடலைத் தந்தவனே" என்பதை உணர பாடுபடாமல் போனதே காரணம். நான் என்பதை கடவுளாக ஏன் என்னால் உணர முடியவில்லை. வீட்டிலும், வெளியேயும் கிடைக்கும் பொருட்களில், இந்த உடலுக்குப் பிடித்ததை எல்லாம், இது என்னுடையது, இது எனக்கானது என்று தேடித் தேடி எடுத்தவை யாவும், நிரந்தரமாய் எனதாயும், எனக்கானதுமாயும் என்றுமே இருந்ததில்லை என்பதை ஏன் என்னால் உணர முடியவில்லை. இந்த உடலின் தேவைக்காய், இது எனது, எனக்கானது என்று சேகரிப்பதையும் என்னால் ஏன் நிறுத்த முடியவில்லை.


இந்த "நான்" என்பதை விடுக்கும் பொழுது அகங்காரம் இல்லாமல் போவதாலும், "எனது" என்பதை விடுக்கும் பொழுது உலகப்பற்று அறுபட்டு போவதாலும், "நானே", "கடவுள்" என்பதை அனைவரும் உணர்வார்கள் என என்னால் அறிந்து கொள்ள முடியாமல் போனது தானே காரணம்."

இப்படித்தானே என்னுள்ளத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன்... பிறகு எப்படி???

ம்ம்ம்... எனது பேச்சின் முடிவில், என்னை உறுத்திய "அகங்காரமும், உலகப்பற்றும் விடுத்து கடவுளை உணர முற்படுகையில் நான் கடவுளாகிறேன், நானே கடவுள் என்று பிறர் எனக்கு உணர்த்தும் பொழுது மீண்டும் அகங்காரமும், உலகப்பற்றும் பெற்று மனிதனாகிறேனே, இறுதி வரை நான் கடவுளை உணரவே முடியாதா" என்ற கேள்விக்கான பதிலா இது ?

என்ன இது? மீண்டும் என் மனதின் இன்னொரு புறம் ஏதோ வரிகள் ஓடுகிறதே... என்ன வரிகள் இவை..." மெல்ல ஒரு அம்பெடுத்து என்னைக் கொல்வாய் இராமா
மோகமெனும் மாயப் பிசாசதனை மூளி செய்குவாய் ராமா "

அப்படியானால், நானும் கடவுள் ஆகலாம். ஒருவேளை நான் கடவுள் ஆனால் இந்த உலகமே என் கையில். சொடக்கு போடும் நேரத்தில் மாட மாளிகைகளைக் கட்ட முடியும். நவரத்தினங்களும் என் காலடியில். உலகத்தின் முதலதிபன் நான் தான்.


போச்சு போச்சு. கடவுளானாலும் காசாசை போகவில்லையே எனக்கு ? நான் எனது என்ற எண்ணமும் போகவில்லையே...

“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”

இந்த கண்ணதாசனின் வரிகள் என்னை சவுக்கால் அடிக்கிறதே.

"நான் கடவுள்" என்பதை, "இந்த நான்" என்னுள் இருக்கும் வரை உணர முடியாது என்பது தான் நிதர்சனம் போல.

நன்றி: http://www.atheetham.com/story/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

சுட்ட வடு

எனது
நலமாகத்தான் இருக்கிறேனுக்கு

அவன் கேட்கும்
உண்மையாகவா ...

ஒவ்வொரு முறையும்
கீறிப் பிய்த்துச் செல்கிறது...

இரணத்தை மூடியிருக்கும் பொக்குகளை.!

முருகா சரணம்

உன்னை நினைத்திடும் என்னை உனதிடம்
என்றும் நிலைத்திட எண்ணம் உடைத்துநீ
துன்பம் தருகிறாய் தஞ்சம் எனக்கினி
உன்பதம் ஒன்றே;முரு கா.

உன்னை நினைத்திடும் என்னை உனதிடம்
என்றும் நிலைத்திட எண்ணம் உடைத்துநீ
துன்பம் தருகிறாய் தஞ்சம் எனக்கினி
உன்பதம் ஒன்றே முருகு.

உன்னை நினைத்திடும் என்னை உனதிடம்
என்றும் நிலைத்திட எண்ணம் உடைத்துநீ
துன்பம் தருகிறாய் கண்ணா(ந்தா) எனக்கினி
உன்பதம் ஒன்றே கதி.

தேவதைகள் வாழும் வீடு - பண்புடன் இதழில் வெளி வந்தது

வண்ணத் தூரிகைகளை
வாரி இறைக்க
உயிரோட்ட ஓவியமானது
வெள்ளைக் காகிதங்கள்...

அடுக்கி வைத்த நீர் பாத்திரங்களில்
மஞ்சள் பூசி எழுகிறது
மூழ்கி எழும் பிரஷ்...

சட்டென ஒரு அதட்டலில்
ஓவியங்களும், குளித்த பிரஷ்ஷும்
குடிபுகுந்தன சிறைக்குள்...

வரையப்படாத ஓவியங்களும்
புதியதோர் குளியலுக்காய் பிரஷ்ஷும்
காத்திருக்கிறது விடுதலை வேண்டி...

அடுத்த பள்ளி விடுமுறைக்காய்.!

காதலிக்கலாம் வா - 10

பிடிக்காத கூட்டமொன்றில்
பிடித்தது ஒரு வாசம்...

பரிமளமாய், நறுமணமாய்
அவதரித்த புதுமலராய்
இருவிழியாள் கணைதொடுத்தாள்
அவளறியாது எனையிழுத்தாள்...

அகம் மறந்தேன்; புறம் மறந்தேன்
அகிலமதை உடன் மறந்தேன்...
மனம் தொலைத்தேன் பரிதவித்தேன்
மொழி அறியா நிலைவெறுத்தேன்...

பெண் அவளோ கன்னமிட்டாள்
என் நிலையை பின்னமிட்டாள்
அன்னமவள் மனமறிய
என் உறக்கம் அவள் பறித்தாள்...

என்ன இனி தெரியவில்லை
ஏங்கும் மனம் அடங்கவில்லை
சொன்ன மொழி கொஞ்சமிங்கே - மிச்சம்
சொல்ல இல்லை மொழியுமிங்கே...

காதலிக்கலாம் வா - 9

இருக்கையில் இருந்தபடி
அமர்ந்தவாறு
அழகிய கச்சேரி ஒன்று இயலுமா???

அவள் செய்தாள்...

அலைபாயும் கூந்தல்
ஏழு ஸ்வரத்திற்கப்பால் ஓர் ஸ்வரம் அமைக்க
உருண்டு திரண்ட கருவிழிக் கோளங்கள்
எண்திசையும் இசை மீட்ட
கருவிழியின் கட்டளையேற்று
இமைகள் ஸ்ருதி சேர்க்க
நெற்றி கன்னம் மூக்கு இம்மூன்றும்
உணர்ச்சியால் கீதத்திற்கு உயிரூட்ட
புன்னகையில் மௌன ராகத்தையும்
அளவான சிரிப்பில் காதல் கீதத்தையும்
அழகாக இதழ் பாட
காற்றினில் கண்டேன் நான்!!!
கையால் ஒரு நடனம்...

ஆஹா...
எப்படி இவளால் மட்டும் முடிகிறது???
பரதமும் கதகளியும் குச்சிப்புடியும் கலந்து
மேல்நாட்டு நடனத்தை இடையில் புகுத்தி
காற்றுக்கும் வலிக்காமல்
கைகளும் சோர்வுறாமல்
நடனமாடி முடிக்க...

ஏய்!!! கடவுளே...
உனக்கு நான் என்ன குறை வைத்தேன்...
காணக் கிடையா இக்கச்சேரி காண
இன்னும் பல கண்கள் கொடாமல் போனது ஏன்???
எனக்கு மட்டும்...

காதலிக்கலாம் வா - 8

விரல்களின் தழுவலில் வீனையின் மீட்டலாய்
கரங்களில் ஆங்கவள் கரண்டியை மீட்டினாள்...
மெல்லவள் இதழ்நாட மேலெழும் கிளர்ச்சியில்
அள்ளிய அன்னமோ துள்ளுது மகிழ்ச்சியில்...

இதழ்சேர் அன்னமோ இணைந்தது சொர்க்கமே
எஞ்சிய அன்னமோ விழுந்தது நரகமே
இதழ்பட்டு சிதறிய இன்னும்சில அன்னமோ
இடையினில் கண்டது திரிசங்கு சொர்க்கமே...

உடனடித் தேவைக்கு திரிசங்கு போதும்
உயிருடன் வாழவோ சொர்க்கமே வேண்டும்
என்னிதழ் வாடுது நரகினில் இங்கே
ஏங்குது வாழ்ந்திட சொர்க்கமெங்கு என்றே...

காதலிக்கலாம் வா -7

கண்டதும் வந்திடும் காதல்
நல்ல கதையடா எனநான் நகைத்தேன் - ஒரு
நங்கையைக் கண்டதும் நானே
நகைபொருள் ஆகினேன் தானே...

என்னுளே ஏனிந்த மாற்றம்
எப்படிச் சொல்லஎன் வாட்டம்
கண்களில் தேங்குது ஏக்கம்
எங்குதான் போச்சுதோ தூக்கம்...

பெண்ணவள் வந்திடக் கண்டு
பித்தனாய் ஆகினேன் இன்று
என்னவள் இவளென என்று
தன்னிலை மறந்தது நெஞ்சு

நித்தமும் அவளையேக் காணும்
பித்தமும் சிரசினை ஆளும்
இத்தனைக் கொடுமையா காதல் - ஐயகோ
சித்தமே உனக்குளேன் மோதல்

பெண்ணவள் சேர்ந்திடும் வழிகாண்
என்னதான் செய்யவோ இனிநான்
தெள்ளிய நண்பர்காள் வகையாய் - என்
சிந்தையில் ஏற்றுவீர் தெளிவாய்...

குட்டி குட்டி கவிதைஸ்

நாற்றம்

கழிவுநீரின் துர்நாற்றம்
வாசனையாகிப் போகிறது - அவளின்
" ஐய, நாத்தம்... சீச்சீ... " என்ற வார்த்தையில்.!


கான்கிரீட் காடுகள்


வறண்ட பூமியின்
முதல் மழை...
மண்வாசனை இல்லை.!


அடுக்குமாடி குடியிருப்பு

பௌர்ணமி நிலவு
பார்க்க முடியவில்லை...
தரைத்தளத்தில் நான்.!


அறிவியல்

கணக்கர்கள் தேவையில்லை
கணிப்பொறியும், கால்குலேட்டரும் இருக்க...
கூட்டலுக்கும், கழித்தலுக்கும் கூட.!


கண்ணாடி பாலீஷ்

கொட்டும் மழையில்
சிக்னல் நிறுத்தத்தில்
கூவி விற்காமலேயே காலியாகிறது...
மொத்தமாய் எல்லா பத்திரிக்கைகளும்.!

பாசம்

பாசத்தோடு...
கூட ஒரு துளி உப்பும், உரப்பும்...
தேவாமிர்தமாகிறது...
மாலை நேர குளிருக்கு
காய்கறி வடிநீர்.!

காத்திருப்பு

மொட்டு...
மாலையிடத் தயார்...
மலராகி.!

கண்ணாமூச்சி

பாதையைப் பார்த்து
பலகதைகள் பேசி
பயணமானபடி இரு மனங்கள்...

சாலையோர மறைவில்
சட்டென மறைந்துக்கொண்டு
சிரித்தபடி வேடிக்கைப் பார்க்கும் ஒன்று...

எதையோ இழந்ததாய்
எதேச்சையாய் திரும்பிப்பார்த்து - தொலைத்த
ஏமாற்றத்தில் ஒன்று

தொலைத்த உயிரை
தொலைத்த இடம்தேடி - பின்னோக்கித்
துழாவும் இருவிழிகள்...

தேடும் விழிகளை - இன்னும்
தேட வைக்க மறைவிடம்
தேடும் இரு விழிகள்...

தேடும் விழிகளின் விசும்பலில்
தேடக் கொடுத்தது கரைய
நாடிச் சேர்ந்தது மலர...