Saturday, July 14, 2012

காதல் அந்தாதி


நட்பாய் நுழைந்தவள் நெஞ்சத்தில் தங்கிட

கட்டினேன் காதல்;கோட் டை.


கோட்டையைக் கட்டிட வேட்டையாடி னாள்;எந்தன்

தூக்கத்தை உள்ளே நுழைந்து...நுழைந்தவள் தைத்தாள் நெருஞ்சியின் முள்ளாய்

கலைந்ததென் காதல் கனவு.


கனவது பொய்க்க கடவுளை வேண்டி
நெருங்கினேன் நட்பினைத்;தே டி.


தேடி கிடைத்ததும் நட்பினுள் காதலை

தேடித் தவிக்குது;நெஞ் சம்.


நெஞ்சம் தவிக்க நினைவுகள் கொதிக்க
தகிக்குது அனலாய் உடல்.


உடலைத் தொடர்ந்தே உயிரில் கலக்க
உருகித் தவிக்குது;கா தல்.


காதல் உணர்த்திட தேவை பிரிவென

சென்றேன் பிரிந்து தொலைவு.தொலைவில் அவள்முகம் பார்த்ததும் வானில்
சிறகை விரிக்குது நெஞ்சு.


நெஞ்சத்துக் காதல் நயமாய் உணர்த்த
நெருங்கித் தொடர்ந்திட்டேன் நட்பு.

Monday, July 9, 2012

ஆதாரம்

ஆதாரம்ன உடனே நம்ம நினைவுக்கு வர்ரது ரெண்டு விஷயம். ஒன்னு குற்றத்தை நிரூபிக்கத் தேவையான சாட்சி இன்னொன்னு தாங்கு கோல்/அடிப்படை அதாவது ஒரு கொடி வளர்வதற்கு, கொம்பானது ஆதாரமாக/உதவியாக இருப்பது. இன்னைக்கு நாம பேசப் போற ஆதாரம் முதல் வகை. அதாவது சாட்சியைப் பத்தி.

ஆதாரத்துல என்னப்பா இருக்குன்றீங்களா… இருக்கே… நம்பிக்கையை மூட நம்பிக்கையாக்குறதும், மூட நம்பிக்கையை நம்பிக்கையாக்குறதும் இந்த ஆதாரம் தானுங்களே… உதாரணத்துக்கு, கடவுள் இருக்குறார் என்பது ஒரு சாரார் நம்பிக்கை. அது இல்லை, கடவுள் என்பது மூட நம்பிக்கைனு சொல்றவங்க தரப்பு வாதம் என்னானு ஆராய்ஞ்சு பார்த்தா, கடவுள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதனால கடவுள் என்பது மூட நம்பிக்கைம்பாங்க…

இப்படித்தான், நாம பாட்டி வைத்தியம், கை வைத்தியம்னு சொன்னதெல்லாம் சுத்த பேத்தல் மூட நம்பிக்கைனு சொல்லிட்டு அதே வைத்தியத்தை அடுத்தவன் விஞ்ஞானம்ன்ற பேர்ல பார்முலாவா மாத்தி, மாத்திரையாக் கொடுத்ததும் அதை விஞ்ஞானம்னு கொண்டாடுறோம். இதுக்காக எல்லாம் ஒரு விஷயத்தை யாராச்சும் சொன்னா ஆதாரம் இல்லாம கேட்டுக்க முடியுமா… முடியாது இல்லைங்களா…

எல்லா விஷயத்தையும் ஆராய்ஞ்சு பார்த்து அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரம்/சாட்சி இருந்தாதானே நாம ஆறறிவு படைச்ச மனுஷன்னு ஒத்துக்க முடியும். இன்னைக்கு நம்ம வாழ்க்கையில, நிச்சயமாய் கெட்டவன்னு பலரைத் தெரியும். ஆனால், அவனை ஒன்னுமே செய்ய முடியாது. காரணம் கேட்டாக்க, அவன் கெட்டவன்னு நிரூபிக்க போதிய அரசாங்கத்துக்கிட்ட ஆதாரம் இல்லைம்போம்…தப்பு பண்ணா தண்டனைன்றது போய், ஆதாரம் இருந்தா தான் தண்டனைன்னா நம்மாள வேற என்ன செய்ய முடியும்.

அதுக்காக, ஒருத்தன், இன்னொருத்தனை தப்பானவன்னு சொன்னா உடனே தண்டிச்சுடலாமான்னா அதுவும் முடியாதே. ஒருத்தன் இன்னொருத்தன் மேல இருக்குற பொறாமையால பொய்யா புகார் செய்தா, அப்ப தேவையில்லாம ஒருத்தன் தண்டிக்கப்படாம காப்பாத்தறது இந்த ஆதாரம் தானுங்களே. அதுவும் இன்னைக்கு இருக்குற சூழ்நிலையில சொல்லவா வேணும். அறிவியல் விஞ்ஞானம்னு இவ்வளவு வளர்ர்சியடைந்த பின்னாலயும், ஒருத்தன் செய்யாததை செஞ்சான்னும், செஞ்சதை செய்யவே இல்லைன்னும், பேசாததை பேசுனான்னும், பேசியதை பேசலைன்னும், வாய் புளிச்சுச்சோ மாங்காய் புளிச்சுச்சோனு வாய்க்கு வந்ததை பேசிட்டு போறவனும், இணையத்துல குப்பையா எழுதி வைக்கறவனும் இருக்கத்தானே செய்யுறாங்க…

இணையத்துல அங்கங்க இருக்குற இந்த மாதிரி தகவல்களை எல்லாம் பொய்யுனும், மெய்யுனும் ஒருத்தரை ஒருத்தர் தங்கள் தரப்பை நிரூபிக்க, அடுத்த தரப்பை போலியாக்க ஆதாரம் கொடு, ஆதாரம் கொடுன்னு மாத்தி மாத்தி கேட்டுக்கிடுவாங்க பாருங்க… இன்னைக்கு இருக்குறதுலயே சூப்பரான பொழுதுபோக்கு எதுடான்னா, இணையத்துல இந்த மாதிரி விவாதங்களை வேடிக்கை பார்க்குறதுதாங்க… மனிதனோட சராசரி இயல்புகளை எல்லாம் இங்கன இருந்து கண்டுக்கிடலாம். பொழுதுபோக்குன்னு சொன்ன உடனேயே எனக்கு இந்த ஆதாரத்தை வைச்சு விளையாடின விளையாட்டு தாங்க நினைப்புக்கு வர்ரது…

ஒருத்தனோட கண்ணை இன்னொருத்தன் பொத்திக்கிட மத்தவங்க எல்லாம் ஓடிப் போய் அங்க அங்க முட்டை சைஸுல மணலைக் குவிச்சு வைச்சுட்டு அதோட இல்லாம கையில கிடைக்குற கூடை, பேப்பர், ஓலைன்னு எதை எதையோ போட்டு மறைச்சும் வச்சுட்டு வந்துடுவோம். கண்ணை மூடிகிட்டிருக்குற பையன் ஒன்னுலர்ந்து நூறு வரைக்கும் எண்ணிட்டு, கூழை முட்டையை விட்டுட்டு நல்ல முட்டையைக் கண்டுபிடிம்போம். மத்தவங்க மறைச்சு வச்ச எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டான்னா அவன் ஜெயிச்சதாயும், பாதிக் கண்டுபுடிச்சு மீதிக் கண்டுபுடிக்கலைன்னா, மணலைக் குவிச்சு வச்சவங்களை இன்னும் எத்தனை முட்டை இருக்குனு கேட்டு மீண்டும் கண்டுபுடிக்கச் சொல்லுவோம். அப்படியும் கண்டுபுடிக்க முடியலைன்னா முட்டையா மணலைக் குவிச்சு வைச்சவனே அவன் சொன்ன அளவு முட்டைகளைக் கொண்டு போய் காட்டணும். அப்படி அவன் மறைச்சு வச்ச முட்டைகளை அவன் மறந்துட்டான்னாவோ, இல்லை அவன் சொன்ன எண்ணிக்கையில குறைஞ்சுடுச்சுன்னாவோ முட்டையை மறைச்சு வச்சவன் தோத்தவனாய்டுவான்…

ஆதாரம்ன்றதை விளையாட்டுல கூட வைச்சு, மனுஷன்னா எதையும் ஆராய்ஞ்சு அனுபவிச்சுத்தான் உண்மையத் தெரிஞ்சுக்கணும்னு சொல்லிக் கொடுத்தவக தான் நம்ம பெரியவங்க… இதுக்காக எல்லாத்துக்கும் ஆதாரம் வேணுமானும் கேட்க கூடாது. தீயைத் தொட்டா சுடும்னு மத்தவங்க சொன்னா கேட்டு நடந்துக்கிடணும். அதை விட்டுபுட்டு நான் தொட்டு பார்த்து தான் உணருவேன்னா வலியை அனுபவிக்கத் தானே வேணும்… என்ன நான் சொல்றது…

பயணங்கள் - 2

கோவில் தரிசனம் முடீத்து விட்டு காலைச் சிற்றுண்டி முடித்து ஓட்டல் அறைக்குத் திரும்ப, நண்பனின் உதவியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார் எங்களுக்காய் காத்திருந்தது. அடுத்து நேராகச் சென்றது ஆரோவில். ஆரோவில் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் என்னுடன் வந்த நண்பர்கள் அதனைப் பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தார்கள்.

ஆரோவில், மரங்கள் நிறைந்திருந்தாலும் காற்று வரவில்லை... முதலில் சென்றது ஆரோவில்லின் முகப்பில் கட்டப்பட்டுள்ள ஆரோவில்லைப் பற்றிய புகைப்படங்களும் புத்தகங்களும் இருக்கும் அலுவலகம் போன்ற ஒரு கட்டிடம். ஆரோவில்லின் உள் சென்று பார்த்து வர ஒரு நாள் முன்னதாகவே முன்பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம் என்று பாதுகாவலர்கள் சொன்னதால் வியூ பாய்ன்டிற்குச் சென்று தொலைவிலிருந்து ஆரோவில்லை ரசித்தோம். மாத்ரி மந்திரை தொலைவில் தான் பார்க்க முடீந்தது... அடுத்த முறை முன்னதாக பதிவு செய்து உள்சென்று பார்த்து விட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டீ விட்டது ஆரோவில்.

ஆரோவில்லின் இயற்கைக் காட்சியை ரசித்து முடித்து அடுத்துச் சென்றது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு. வாவ்... என்ன ஒரு பிரம்மாண்டம். பார்க்க பார்க்க கண்களுக்கு விருந்தாக வானுயர நின்றிருந்தார் ஆஞ்சநேயர். பஞ்சவடி ஆஞ்சநேய்ரை தரிசிக்க கண்கள் இரண்டு எனக்கு போதாதாக இருந்தது. ராம ராம என்று மனம் உச்சரிக்கத் தவறாது அச்சூழ்நிலையில். பஞ்சவடியில் இருந்து வெளியே வர கோவில் பிரசாதம் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். சுடச்சுட இருகையளவு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு ரசித்துச் ருசித்துச் சாப்பிட்டோம். நெய் ஏகத்துக்கும் இருந்தது பொங்கலில். என்ன தான் வீட்டில் நெய் அதிகம் விட்டு பதார்த்தங்கள் செய்தாலும் கோவில் பிரசாதங்களுக்கு ஈடு எங்குமே கண்டதில்லை நான்... ஹ்ம்ம்...

பஞ்சவடி ஆஞ்சநேயருக்கு அடுத்ததாக நாங்கள் சென்றது பாதாள காளி கோவிலுக்கு. பஞ்சவடி ஆஞ்சநேயர் பிரம்மான்டம் என்றாள் பாதாள காளி ருத்ர தாண்டவம் ஆடுகிறாள். பாதாளத்தில் இருக்கும் காளியைத் தரிசிக்க தரைத்தளத்திலிருந்து கீழிறங்கி உள் செல்ல உடலுக்குள் நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு... அப்பப்பா, இப்பொழுதும் நினைக்க புல்லரிக்கிறது...காளியின் உக்கிரமும், கோவிலின் உடுக்கைச் சத்தமும், கோவில் முழுதும் நிறைந்திருந்த சித்த்ர்கள் மற்றும் ரிஷிகளின் புகைப்படமும் நம்மையும் அறியாமல் நம்முளே ஏகத்தக்கும் ஒரு அமைதியை ஏற்படுத்தி விடுகிறது. நிச்சயம் பாதாள காளி கோவிலின் தரிசனம் எனது வாழ்நாளில் மறக்க முடியாதது... அனுபவித்தாலேயே அந்த நிலையை உணர முடியும்... எழுத வார்த்தைகள் இல்லை...

அடுத்ததாகச் சென்றது சுண்ணாம்பாறு படகுத் துறைக்கு. நடுப்பகல் வேளையில் படகுத்துறையில் பெடல் போட் செய்த கூட்டம் நாங்களாகத் தான் இருப்போம். அரை மணி நேரம் பெடல் செய்ய வியர்வை மழையில் தெப்பலாக நனைந்து வெளியே வந்தோம்...

அங்கிருந்து நேராக மதிய உணவுக்காகச் சென்றோம்... ஒரு ஆளுக்கு அறுபது ரூபாய்க்கு ஏசி ரூமில் ஒரு முழு மதியச் சாப்பாடு என்பது தேவாமிர்தமாக இருந்தது... மற்ற நகரங்களை ஒப்பிட மனநிறைவாகவும் இருந்தது சாப்பாடு. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டென்பார்கள்... உண்ட களைப்பு தீர ஓய்வெடுக்க எங்களது அறைக்குத் திரும்பினோம்.

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, அரவிந்தா ஆஸிரமம் சென்றோம். மிகவும் அமைதியான ரம்மியமான சூழல் அது. எல்லோர் முகத்திலும் சாந்தம். பெரும்பாலும் வெளி நாட்டினர் அதிகம் வந்திருந்தார்கள். அங்கு அரவிந்தரின் போதனைகளும், அவரது கருத்துகள் அடங்கிய புத்தகங்களும் விற்பனைக்கு பல்வேறு மொழிகளில் வைத்திருந்தார்கள்...

ஆஸிரம் முடித்து அப்படியே மணக்குள விநாயகரின் தரிசனம். உள்ளே கணபதியை தரிசித்து விட்டு வந்து வெளியே கண்பதியிடம்(யானையார்) காசு கொடுத்து ஆசி பெற்றோம். பாண்டிச்சேரி வரை சென்று கடற்கரை செல்லாமல் இருந்தால் என்னாவது? இறுதியாக பாண்டிச்சேரி கடற்கரைக்குச் சென்றோம். மற்ற கடற்கரைகளைப் போல் நீரில் விளையாட முடியாத படி இருந்தாலும் நாம் தடுப்புச் சுவரைத் தாண்டி கல்லின் மேல் மோதிச் செல்லும் கடலலையைத் தொட்டு வந்த போது ,ஏதோ சிறுகுழந்தை பறக்கும் பலூனைத் தட்டி தட்டி விளையாடுவது போன்ற மகிழ்வைத் தந்தது அந்த நிகழ்வு...

எல்லாம் முடித்து, எந்த வேலைக்காக பாண்டிச்சேரி சென்றோமோ, அதான்பா பிரெண்டோட கல்யாண ரிசப்ஷன் அதையும் போய் அட்டென்ட் செய்துட்டு, திருப்தியா ரிசப்ஷன் சாப்பாடை ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டு பெங்களூரு திரும்பினோம்...

விழியன் அண்ணா, ஒரு பயணக் குறிப்பில் சொல்லி இருந்தது போல, பயணங்கள் பல்வேறு அனுபவத்தையும் களைப்போடு சேர்ந்தே தந்தாலும் ஒரு பயணத்தின் முடிவு இன்னொரு பயணத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறது என்பதை இங்கு நினைவு கூர்ந்து அடுத்த பயணத்திற்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்...

பயணங்கள் - 1

வாழ்க்கையின் பயணத்தில்தான் எத்தனை பயணங்கள். சில பயணங்கள் மறக்க முடியாதவையாகி விடுகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் சென்றது கடந்த சனியன்று சென்ற ஒரு நாள் புதுச்சேரி பயணம். உடன் படித்த உற்ற நண்பன் ஒருவனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. திருமணத்திற்குச் செல்ல இயலாததால்(அலுவலக காரணம் காட்டி) திருமண வரவேற்புக்கு(பயபுள்ள விடுமுறை நாளில் வச்சுட்டான்) கண்டிப்பாக செல்ல வேண்டியதாயிற்று.

வெள்ளி இரவு பெங்களூருவிலிருந்து என்னோடு சேர்ந்து மேலும் இரு நண்பர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம். எங்களது வருகையை முன்கூட்டியே சொல்லியிருந்ததால் தங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை நண்பன் ஏற்கனவே செய்திருந்தான். நேராக தங்குமிடம் சென்று பயணக்களைப்பு நீங்க குளித்து முடித்தோம். உடன் வேலை செய்யும் இன்னொரு நண்பரின் உதவியொடு ஒரு காரை அன்று முழுவதும் ஊர் சுற்றுவதற்காக ஏற்பாடு செய்து விட்டு இருக்கும் நேரத்தை வீனாக்க வேண்டாமென்று அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றோம்.

"ஓம் நமோ நாராயணாய" என்று நாராயணன் எங்களை உள்ளே அழைத்தான். அதிகாலை நாராயணன் தரிசனம், கண்ணுக்கும் மனதுக்கும் இனிமையைத் தந்தது. கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் ஏராளமான ஓவியங்கள். கண்ணனின் அவதாரங்களை வடித்து வைத்திருந்தார்கள். கண்ணனின் அவதாரப் பெயர், அந்த சிலை இருக்கும் ஊர் என்று ஏராளமான தகவல்கள். சுற்றுப்புறச் சுவர் முழுவதையும் இரசித்துக் கொண்டே வந்த என்னை மூன்று படங்கள் அதிக நேரம் நிறுத்தியது.

முதலாவது படம், திருவட்டாறில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்த ஆதி கேசவப் பெருமாளின் அனந்தசயன படம். அந்தப் படத்தில் அப்படி என்னதான் விஷேஷம் என்று கேட்கிறீர்களா. பெருமாள் இந்த படத்தில் மற்ற இடங்களுக்கு மாற்றாக இடமிருந்து வலமாக பள்ளி கொண்டிருக்கிறார். பெரும்பாலும் தலைக்கு வலது கையை தலையனையாக வைத்திருப்பது போன்ற அமைப்பே பார்த்திருந்த எனக்கு இடது கையை தலையனையாகக் கொடுத்து படுத்திருக்கும் ஆதி கேசவப் பெருமாளைக் கண்டு ஆச்சரியம் தாளவில்லை... ஏன் பெருமாள் திருவட்டாறில் இப்படி காட்சியளிக்கிறார் என்ற கேள்வி இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை...

இரண்டாவது படமும், மூன்றாவது படமும் வாமன அவதாரத்தைச் சித்தரிக்கும் படங்கள். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மூன்று அடி நிலம் தானமாகப் பெற்று முதல் அடியை பூமிக்கும் இரண்டாவது அடியை வானத்திலும் வைத்து மூன்றாவது அடிக்கு இடம் எங்கே எனக் கேட்டார் என்ற அளவில் தான் வாமன அவதாரம் பற்றிய கதை தெரியும் எனக்கு. ஆனால் பூமியை வலது காலின் அடியில் அளந்தாரா, அல்லது வானத்தை வலது காலின் அடியில் அளந்தாரா. பூமியை அளந்தது எந்த பாதம், வானத்தை அளந்தது எந்த பாதம் என்று இதுவரை தெரியாமல் தான் இருக்கிறேன். அந்த குழப்பத்தை மேலும் அதிகபடுத்தும் விதமாக, திருக்கோவிலூரின் திரிவிக்ரமன் வலது காலால் வானத்தை அளக்கும் விதமாகவும், திருக்காழிச்சீராமவின்னகரத்தின் தாடாளன் இடது காலால் வானத்தை அளக்கும் விதமாகவும் வடிவமைக்கப்படிருப்பதாகக் கண்டேன்...

இதில் எது சரி, ஏன் இவ்வாறு சிலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது... விடை இன்னும் தெரியவில்லை...

சரி, நேரத்தை வீனாக்காமல் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்...

-தொடரும்.