Monday, July 9, 2012

பயணங்கள் - 1

வாழ்க்கையின் பயணத்தில்தான் எத்தனை பயணங்கள். சில பயணங்கள் மறக்க முடியாதவையாகி விடுகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் சென்றது கடந்த சனியன்று சென்ற ஒரு நாள் புதுச்சேரி பயணம். உடன் படித்த உற்ற நண்பன் ஒருவனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. திருமணத்திற்குச் செல்ல இயலாததால்(அலுவலக காரணம் காட்டி) திருமண வரவேற்புக்கு(பயபுள்ள விடுமுறை நாளில் வச்சுட்டான்) கண்டிப்பாக செல்ல வேண்டியதாயிற்று.

வெள்ளி இரவு பெங்களூருவிலிருந்து என்னோடு சேர்ந்து மேலும் இரு நண்பர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம். எங்களது வருகையை முன்கூட்டியே சொல்லியிருந்ததால் தங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை நண்பன் ஏற்கனவே செய்திருந்தான். நேராக தங்குமிடம் சென்று பயணக்களைப்பு நீங்க குளித்து முடித்தோம். உடன் வேலை செய்யும் இன்னொரு நண்பரின் உதவியொடு ஒரு காரை அன்று முழுவதும் ஊர் சுற்றுவதற்காக ஏற்பாடு செய்து விட்டு இருக்கும் நேரத்தை வீனாக்க வேண்டாமென்று அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றோம்.

"ஓம் நமோ நாராயணாய" என்று நாராயணன் எங்களை உள்ளே அழைத்தான். அதிகாலை நாராயணன் தரிசனம், கண்ணுக்கும் மனதுக்கும் இனிமையைத் தந்தது. கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் ஏராளமான ஓவியங்கள். கண்ணனின் அவதாரங்களை வடித்து வைத்திருந்தார்கள். கண்ணனின் அவதாரப் பெயர், அந்த சிலை இருக்கும் ஊர் என்று ஏராளமான தகவல்கள். சுற்றுப்புறச் சுவர் முழுவதையும் இரசித்துக் கொண்டே வந்த என்னை மூன்று படங்கள் அதிக நேரம் நிறுத்தியது.

முதலாவது படம், திருவட்டாறில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்த ஆதி கேசவப் பெருமாளின் அனந்தசயன படம். அந்தப் படத்தில் அப்படி என்னதான் விஷேஷம் என்று கேட்கிறீர்களா. பெருமாள் இந்த படத்தில் மற்ற இடங்களுக்கு மாற்றாக இடமிருந்து வலமாக பள்ளி கொண்டிருக்கிறார். பெரும்பாலும் தலைக்கு வலது கையை தலையனையாக வைத்திருப்பது போன்ற அமைப்பே பார்த்திருந்த எனக்கு இடது கையை தலையனையாகக் கொடுத்து படுத்திருக்கும் ஆதி கேசவப் பெருமாளைக் கண்டு ஆச்சரியம் தாளவில்லை... ஏன் பெருமாள் திருவட்டாறில் இப்படி காட்சியளிக்கிறார் என்ற கேள்வி இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை...

இரண்டாவது படமும், மூன்றாவது படமும் வாமன அவதாரத்தைச் சித்தரிக்கும் படங்கள். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மூன்று அடி நிலம் தானமாகப் பெற்று முதல் அடியை பூமிக்கும் இரண்டாவது அடியை வானத்திலும் வைத்து மூன்றாவது அடிக்கு இடம் எங்கே எனக் கேட்டார் என்ற அளவில் தான் வாமன அவதாரம் பற்றிய கதை தெரியும் எனக்கு. ஆனால் பூமியை வலது காலின் அடியில் அளந்தாரா, அல்லது வானத்தை வலது காலின் அடியில் அளந்தாரா. பூமியை அளந்தது எந்த பாதம், வானத்தை அளந்தது எந்த பாதம் என்று இதுவரை தெரியாமல் தான் இருக்கிறேன். அந்த குழப்பத்தை மேலும் அதிகபடுத்தும் விதமாக, திருக்கோவிலூரின் திரிவிக்ரமன் வலது காலால் வானத்தை அளக்கும் விதமாகவும், திருக்காழிச்சீராமவின்னகரத்தின் தாடாளன் இடது காலால் வானத்தை அளக்கும் விதமாகவும் வடிவமைக்கப்படிருப்பதாகக் கண்டேன்...

இதில் எது சரி, ஏன் இவ்வாறு சிலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது... விடை இன்னும் தெரியவில்லை...

சரி, நேரத்தை வீனாக்காமல் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்...

-தொடரும்.

No comments:

Post a Comment