Tuesday, April 23, 2013

மதில் மேல்


உரசி விட்டு
ஒன்றுமறியாதவனாய் நிற்கிறான்...
கூட்டத்தினூடே.!

அருகருகே இருந்தவை
விலகி நிற்கின்றன

உரசலா.!!! விரிசலா.!!!

***********************************


கல்லெறிந்து விட்டு
காணாமல் போனான்...
காற்றாக.!

கண்ணாடித் தண்ணீர்
கடல் அலையாய்

கலங்குமா??? நிலைக்குமா???

***********************************


காதலிக்கிறீர்களா
கேட்டு விட்டு மறைந்தான்...
கணப்பொழுதில்.!

பிணைப்பில் இருந்தவை
பிரிவைத் தேடின

நட்பா... காதலா...


Friday, April 19, 2013

சிரிப்பான்


வெறுப்பை எழுத்தில் விலக்க சரியாய்
சிரிப்பான் எழுதி பழகு.

எதிர்வரும் வாதம் பதராய் உணர
சிரிப்பான் பதிலாய் இருத்து.

வார்த்தையின் பின்தொடர் வாதம் தவிர்க்க
சிரிப்பான் சிறந்த மொழி.

உறவினைப் பாழாக்கும் கோபமொழி நீங்க
சிரிப்பானை  உன்மொழி ஆக்கு.

நகைச்சுவை காண நகையாய் அதற்கு
சிரிப்பானைத் தந்து பழகு.

சிறுமையைக் கண்டு விலக நினைத்தால்
சிரிப்பானைக் கையில் எடு.

வளர்த்த விரும்பாத வாதமா? முற்றாய்
சிரிப்பானை போட்டு முடி.

தவிர்க்க விரும்பும் வாதமா? காட்டாய்
சிரிப்பான் அளித்து உணர்த்து.

சிரிப்பானின் வாயிலாய் எள்ளலைக் காட்ட
சிறுமையே நல்கும் அது.

சிரிப்பார்; சிரித்து திரிப்பார்; அவர்க்கு
சிரிப்பான் சிறந்த மொழி.

Tuesday, April 9, 2013

பனிப்பொழிவு


இதோ கொட்டிக் கொண்டிருக்கிறது
குளிர்காலப் பனிப்பொழிவு

வேலை நாள்தான்
ஆனால் விடுப்பு கொடுத்து விட்டார்கள்
அலுவலகத்தில்.

என்ன செய்ய?

இறுக்கி அணைத்து
சல்லாபித்திருக்க
மனைவி இன்னும் அமையவில்லை…

குளிருக்கு இதமாய்
ஆல்கஹாலைப் பருக
இன்னும் கற்றுக் கொண்டிருக்கவில்லை

உடன் பிறந்தவர்களுடனோ
நட்புகளுடனோ
பனியை வீசியெறிந்து விளையாட
நான் இந்த நாட்டுக்காரனில்லை…

சில காலம்
பணி நிமித்தமாய் கடல் கடந்த
வந்தேறிகளுள் ஒருவன்

வெப்பமூட்டப்பட்ட அறையில் நின்றவாறு
சாளரத்தின் வழியே வேடிக்கை பார்க்கிறேன்

துணையேதுமின்றி
ஓடியாட…
உறங்க…
வழியேதுமின்றி

பசிக்கு கத்தவும் வழியின்றி
ஒடுங்கிக் கொண்டு
பனிப்பொழிவை வெறித்துக் கொண்டிருக்கிறது அது….

என்னைப் போல.!


படத்துக்கு நன்றி: http://wuppenif.com/tag/nature/

பிரசுரித்தமைக்கு நன்றி : வல்லமை