Friday, October 26, 2012

சுயநலம்

எப்பொழுதும் போல அறையில் தொலைக்காட்சிப் பெட்டியின் ஏதோ ஒரு அலைவரிசையில் பழைய திரைப்பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது...
 
//
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
//
என்ற கவிஞர் வாலியின் வரிகளை கேட்டதும் என்னையும் மீறி ஏதோ ஒன்று என்னைச் சிரிக்க வைத்தது.
 
கவிஞர் அவர்கள் இப்பாடல் வரிகளை எழுதிய காலத்தில் வேண்டுமானால் இவ்வரிகள் சரியானதாக இருந்திருக்கலாம்... ஆனால் இன்று நிலைமை இப்படித்தான் இருக்கிறதா...
 
பூமி மட்டுமல்ல பூமியின் மேல் ஓடும் நீரையும் மனிதன் தன சுயநலத்திற்காக இன்று பிரித்து வைத்து வேடிக்கைப் பார்க்கிறான்... இதே நிலை தொடர்ந்தால் காற்றையும், வானத்தையும் நெருப்பையும் கூட மனிதன் பிரித்து விடுவானோ என்ற அச்சம் எனக்குள் எழத் தொடங்கி விட்டது...
 
அதே சமயம், பஞ்சபூதங்களும் மானுடர் எவர்க்கும் சொந்தம் என்று உணராது சுயநலத்தோடு மனிதன் தன்னுள் அவற்றை அடைத்து வைக்க பார்க்கும் இந்த பைத்தியக்காரத்தனத்தை எண்ணிப் பார்க்கையிலே அச்சத்தையும் மீறி சிரிப்பு வந்து தொலைகிறது...
 
பெரும் பூமியை ஒருவன் அடக்கி ஆண்டாலும் அவன் இறந்த பின் அவனுக்கு கிடைப்பது என்னவோ ஆறடி மண் தான்... அந்த ஆறடி மண்ணும் அவனுக்கு சொந்தமில்லை. அந்த மண்ணுக்கு தான் இவன் உணவாகிறான்.
 
ஒருவன், தன்னிடம் இருக்கும் நீரைத் தர மறுத்து தன்னிடமே தண்ணீரை சேமித்து வைக்க எண்ணினாலும் தலைக்கு மேலே தண்ணீர் போனால் அந்த தண்ணீரிலேயே அவன் முழுகி உயிர் விட வேண்டியது தான்...
 
உயிர் போகும் தருவாயில் இதனை உணர்ந்து பயன் என்ன? இருந்தும் நம்மில் பலர் " செத்த பின் பாலை ஊற்றுவேன், ஆனால் தாகத்திற்கு தண்ணீர் தர மாட்டேன்" என்று தானே வாழ்ந்து வருகிறோம்...
 
ஈகைத் திருநாளான இன்றைய நன்னாளிலாவது இதனைச் சிந்தித்து பார்த்து, நம்மிடம் இருப்பதை முடிந்த அளவு பிறருக்கு கொடுத்து நாமும் மகிழ்வுடன் இருந்து பிறருக்கும் மகிழ்ச்சி தர எத்தநிப்போம் ...
 
இதுவும் இல்லையா, தர்மம் தலைகாக்கும் என்னும் சுயநலம் கொண்டேனும் பிறருக்கு கொடுத்து வாழ்வோம்.
 
இதுவும் இல்லையா, கொடுத்து வாழவில்லை என்றாலும் பிறரைக் கெடுத்து நாம் நமது சுயநலத்தைப் பேணாதிருப்போம்.
 
இருப்போமா..?

Thursday, October 25, 2012

அழுக்கு

மாடு வளர்ப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா... பார்த்திருந்தால் நான் சொல்வது உங்களுக்கு எளிதில் புரியும். மாடுகளை மண் தொழுவத்தில் சில வீடுகளில் கட்டி வைத்திருப்பர். இந்த மண் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாடுகளை பொங்கல் அன்றோ அல்லது சில விசேஷ தினங்களிலோ குளிப்பாட்டுவர். அவ்வாறு மாடுகளை குளிப்பாட்டும் போது அந்த மாடுகளின் மேல் இருக்கும் சாணி, கோமியம் கலந்த மண் முதலான அழுக்குகள் அனைத்தும் சுத்தமாகத் தேய்த்து போகும்படி சுத்தமாக குளிப்பாட்டுவர். அவ்வாறு குளிப்பாட்டி முடித்து மாடுகளைத் திரும்ப தொழுவத்திற்கு அழைத்துச் செல்லும் போது மாடுகள் வழி நெடுகும் ஏதாவது புற்போரிலோ அல்லது மரத்திலோ தன்னை உரசித் தேய்த்தவாறு செல்லும். இது அந்த மாடுகளின் மீதிருந்த அழுக்குகள் நீங்கியதால் அவற்றுக்கு ஏற்படும் தினவு தரும் தொல்லை. மாடுகள் தினவு தரும் தொல்லையைச் சற்று பொறுத்துக் கொண்டால் சுத்தமாக இருக்க முடியும். ஆனால் தினவு தரும் தொல்லையைத் தாங்காமல் குளிப்பாட்டிய ஈரம் காயாத போதே மண்ணிலும் அழுக்கிலும் புரண்டால் குளிக்கும் முன் இருந்த அழுக்கைக் காட்டிலும் குளித்த பின் அதிக அழுக்குடையதாக அந்த மாடு ஆகி விடும்.
 
இது போலத்தான் மனிதர்களாகிய நாமும். நம்மிடையே இருக்கும் தீய பழக்கங்களான மன அழுக்குகளை விட்டொழிக்கும் போது மன அழுக்குகள் நீங்கியதைத் தாங்காமல் மனமானது மீண்டும் அழுக்குகளை நாடிச் செல்லும். அவ்வாறு மனம் மீண்டும் அழுக்குகளை நாடிச் செல்லும் பொழுது மனதைக் கட்டுபடுத்த நாம் நற்பேருகளைப் பெறுவோம். அன்றி மனத்தைக் கட்டுபடுத்தாமல் மீண்டும் அழுக்கை நோக்கி நாம் செல்வோமானால் நம்மை அது பேரழிவிற்கு இட்டுச் செல்லும்.
 
தீதோன்றை விட்டுவிட மீண்டுமதை தீண்டாதே
தீண்ட;வரும் மீளாப் பழி.

Wednesday, October 24, 2012

தாய்மொழி

கடந்த சனிக்கிழமை திருப்பதி சென்றிருந்தேன். பெருமாளின் தரிசனத்துக்காக அறைகளில் அடைக்கப்பட்டிருந்த நான் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்தவாறு பொழுது போக்கி கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் சில குழுந்தைகள் குழுமமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே பேசிக் கொண்டிருந்ததில் இருந்து உறவினர்கள் என்று தெரிந்து கொண்டேன்... அதில் ஒரு குழந்தையைப் பார்க்கும் போது நான் சிறுவயதில் திருப்பதிக்கு சென்றிருந்த பொது நடந்து கொண்ட விதத்தை எனக்கே மறுஒளிபரப்பு செய்வது போல இருந்தது அந்நிகழ்வு. என்ன, சிறு சிறு வித்தியாசங்கள். நான் ஆண், அந்த குழந்தை பெண். நான் தமிழ் பேசுபவனாக இருந்தேன் அன்று இந்த குழந்தை தெலுங்கு பேசுபவராக இருக்கிறார். அவ்வளவே...
 
நடந்தது என்ன எனக் கேட்கிறீர்களா? இதுதான் நடந்தது. குழுமமாக இருந்த குழந்தைகள் அனைவரும் உறவினர்களாக இருந்த போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகுப்பில், ஒவ்வொரு மொழியின் வாயிலாக தங்கள் பள்ளிப்படிப்பைப் படிப்பவர்களாக இருக்கிறார்கள் போலும். சில குழந்தைகள் தெலுங்கு வழியாக படிப்பவர்களாகவும் சில குழந்தைகள் ஆங்கிலம் வழியாக படிப்பவர்களாகவும் இருந்ததை அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து அறிந்து கொண்டேன்...
 
அந்த குழந்தைகளுக்கு இடையே நடந்த விளையாட்டு இதுதான். விளையாட்டுக்கு நடுவராக அந்த குழந்தைகளின் தாய்களில் ஒருவர் இருந்தார். குழந்தைகளில் ஒரு குழந்தை பெருக்கல் வாய்ப்பாடிலிருந்து ஒரு பெருக்கல் கேள்வியை முன்வைக்க அதற்கு மற்ற குழந்தைகள் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு குழந்தை மட்டும் மிகவும் வேகமாக பதிலைச் சொல்லி விட்டு, எனது பதில் சரிதான் என்ன பந்தயம் எனக் கேட்டவாறு இருந்தது...மெல்லிய புன்முறுவலுடன் அடுத்து என்ன நடக்கிறது எனப் பார்க்கலானேன்.
 
இந்த விளையாட்டு ஒரு புறமிருக்க நடுவராயிருந்த அந்த தாய், குழந்தைகளைப் பார்த்து சரி ஒவ்வொருவராக பெருக்கல் வாய்ப்பாடு சொல்லுங்கள் எனக் கேட்கலானார். ஒவ்வொரு குழந்தையாக பெருக்கல் வாய்ப்பாடு சொல்லிக் கொண்டிருந்தனர். சில குழந்தைகள் தெலுங்கிலும் சில குழந்தைகள் ஆங்கிலத்திலும் பெருக்கல் வாய்ப்பாடைச் சொல்ல நடுவராக இருந்த தாய் ஆங்கிலத்தில் வாய்ப்பாடு சொல்பவர்களை தெலுங்கில் வாய்ப்பாடு சொல்லக் கேட்க ஆங்கில வழியில் படித்த குழந்தைகள் தெலுங்கில் பெருக்கல் வாய்ப்பாடைச் சொல்ல முடியாமல் தவித்தார்கள். என்னதான் நாம் ஆங்கிலத்தில் படித்தாலும் நமது தாய்மொழியில் பெருக்கல் வாய்ப்பாடு கூட சொல்ல முடியாத அளவிற்கா நாம் நமது தாய் மொழியை மறப்பது என்று நொந்து கொண்டவாறு எப்படி பெருக்கல் வாய்ப்பாடை தெலுங்கில் பாடுவதேன்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
அங்கு கவனித்த விஷயங்கள்,
அந்த குழந்தைகளில் தாய் மொழியில் படித்த குழந்தைகள் வேகமாக பெருக்கல் வாய்ப்பாடை படித்தார்கள். ஆங்கில வழியில் படித்தவர்கள் ஆங்கில வழியில் பெருக்கல் வாய்ப்பாடை படிக்க கஷ்டப்பார்கள். நிச்சயம் கடினமாகத் தானே இருக்கும். ஏனென்றால் மனதில் தாய்மொழியில் இருப்பதை அக்குழந்தை தாய் மொழியில் சொல்லத் தெரியாமலேயே அதனை ஆங்கிலத்தில் மொழி மாற்றி ஒப்புவிக்கும் பொழுது நேரம் அதிகம் எடுக்கத் தானே செய்யும் .
 
இன்னொன்று ஆங்கில மோகத்தால், தமிழ் மட்டுமல்ல பிற மொழிகளும் பாதிப்புக்கு உள்ளான வண்ணம் இருக்கிறது ஆனால் பிற மொழி பேசும் பெற்றோர்கள், தமது குழந்தை ஆங்கிலம் பேசினாலும் தமது தாய் மொழியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு தங்களது தாய்மொழியை குழந்தைகளுக்கு கற்பிக்கவும் செய்கிறார்கள்... தமிழ் பேசும் நாமும் நம்மைச் சூழ்ந்துள்ள அக்கம் பக்கத்தினரும் இதனைச் செய்கிறோமோ????
 

( சிறுவயதில் நானும், சுற்றத்தார் சூழ்ந்திருக்கும் போது தமிழில் பெருக்கல் வாய்ப்பாடை வேகமாகச் சொல்லியும், எண்களை வேகமாக எண்ணியும் என்னை அனைவரும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு விளையாடிய விளையாட்டை, இன்று அந்த குழந்தைகள் குழுமத்தில் தெலுங்கு பேசும் ஒரு குழந்தை செய்வதைப் பார்த்ததும் என்னை நானே பார்ப்பதாக உணர்ந்தேன்... ஹ்ம்ம்...)

Sunday, October 14, 2012

இன்னுமா இருக்கிறது காதல்?


"காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல் "
 
என்றான் பாரதி. சாவினைத் தேடிக் கொள்ளத் தூண்டும் அளவிற்கு காதல் கொடுமையானது எனப் பாரதி சொல்லியிருக்கிறானே. அப்படி என்னதான் இருக்கிறது இந்த காதலில்? காதல் என்பது உண்மையில் இருக்கிறதா, இல்லையா? எனத் தேடி புரிந்தவற்றை வகையாகச் சொல்லவே இந்த கட்டுரை.
 
காதலைப் பற்றித் தெரிந்து கொள்ள பாரதிக்கு முன்னர் யாரேனும் சொல்லி இருக்கிறார்களா எனத் தேடித் பார்த்தால், இதிகாசங்கள், புராணங்கள், சங்க இலக்கியங்கள் என எல்லாமே காதலைத் தொட்டு சென்று இருப்பதைக் காண முடிந்தது. ஒவ்வொன்றையும் படிக்க படிக்க காதலில் இத்தனை வகையா என ஆச்சர்யமூட்டும் அளவிற்கு தகவல் குவிகிறது. எல்லாவற்றையும் எழுத நேரம் போதாதாகையால் காதலை பண்டைய நூல்கள் சொல்லிய விதத்தினை மேலோட்டமாக பார்த்து விட்டு நகரலாம்.
 
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"  என்று ஒருவனுக்கு ஒருத்தி எனும் கொள்கையோடு இராமாயணம் சென்றால், இன்னொரு பக்கத்தில் மகாபாரதமோ, அர்ஜுனன் திரௌபதி, சுபத்திரை, உலூபி என பல மாதர்களுடன் காதல் புரிந்ததைச் சொல்கிறது. இராமாயணம், சூர்ப்பனகைக்கு ராமன் மேல் எழும் ஒரு தலைக் காதலைச் சொன்னால், மகாபாரதமும், ஊர்வசிக்கு அர்ஜுனன் மேல் எழும் ஒரு தலைக் காதலைச் சொல்லி இருக்கிறது. இதிகாசங்களைக் கடந்தும் பார்த்தோமானால் முத்தொள்ளாயிரத்தின் பல பாடல்கள் காதலையும், காதலின் பிரிவையும், காதலின் பிரிவால் வாடும் காதலர்க்கு வரும் பசலை நோயையும் எத்தனைப் பாங்காய்ச் சொல்லி இருக்கிறது. இவை மட்டுமல்ல இன்னும் எத்தனை எத்தனையோ இலக்கிய நூல்கள் எடுத்துக் கொண்டாலும் அவை அத்தனையிலும் காதல் இழையோடியிருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
 
பொருந்தும் காதலை மட்டுமல்ல பொருந்தாக் காதலையும் நமது முன்னோர்கள் கைக்கிளை, பெருந்திணை என வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது என்ன பொருந்தும் காதல், பொருந்தாக் காதல்? ஒத்த வயதுடைய ஒரு ஆடவனும் பெண்ணும் காதல் புரிந்தார்கள் என்றால் அது உலக வழக்கத்திற்கு பொருந்துவதாக இருப்பதைக் குறிப்பிட அதனைப் பொருந்தும் காதல் என்றும், ஒரு வயது முதிர்ந்த ஆடவன் இளம் பெண்ணைக் காதலிக்கிறான் என்றால் அதனை பொருந்தாக் காதல் (கைக்கிளை) எனவும், ஒரு வயது முதிர்ந்த பெண், இளம் ஆடவன் மேல் கொள்ளும் மையலுக்கு பொருந்தாக் காதல் ( பெருந்திணை) எனவும் குறிப்பிட்டு வந்துள்ளனர் நமது முன்னோர்கள்.
 
இப்படி பலதரப்பட்டதாக கருதப்பட்ட காதலானது இன்று எப்படி இருக்கிறது அல்லது இன்னுமும் காதல் இருக்கிறதா? என நடைமுறையை நோக்குங்கால் நம்மக்களும் பண்டைய குறிப்பேடுகளில் இருக்கும் காதலுக்கு சளைத்தவர்கள் அல்ல என்னும் சொல்லும் வகையில் பலதரப்பட்ட காதலோடு வாழ்ந்து வருகிறார்கள் என்பதே கூடு. கீழே விழுந்த பெண்ணின் கைக்குட்டையை அவளிடம் எடுத்துக் கொடுக்கும் ஆடவனுக்கு அவள் மேல் காதல் வந்து விடுகிறது. முகவரி கேட்கும் பெண்ணுக்கு முகவரி சொல்ல அப்பெண் மேல் காதல் வந்து விடுகிறது சில காளைகளுக்கு. ம்ம்ம், இன்னும் சொல்லப் போனால் ஒருவரை ஒருவர் பார்த்து சில காதல், ஒருவரை ஒருவர் பாராமல் தொலைபேசி, இணையம் வாயிலாக சில காதல்கள், தடுக்கி கீழே விழப் போனவளைத் தாங்கி பிடிக்க சில காதல்கள் என இன்றைய காலத்திலும் வகைவகையானக் காதல்கள். பண்டையக் காலத்தில் அகத்திணையில் குறிப்பிட்ட கைக்கிளை, பெருந்திணைக் காதல்களுக்கும் இன்று பஞ்சமில்லை.
 
பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை காதலில் காமம் கலந்திருந்தாலும் காதலும் காமமும் வெவ்வேறு என வகைப்படுத்துவது தான் எப்படி? உண்மையில் காதல் என்ற ஒன்று, இன்று இருக்கிறதா, அல்லது காமம் மட்டுமே காதலாக கருதப்படுகிறதா? இன்றைய நாளேடுகளில் காதலைப் பற்றிய செய்தி வராத நாளேடு கிடையாது எனலாம். நாடகக் கலையின் வளர்ச்சியாகக் கருதப்படும் சினிமாவோ அப்பப்பா, புது வகைக் காதல்களை நாள்தோறும் உற்பத்தி செய்த வண்ணம் இருக்கிறது. நாளேடுகளும், சினிமாவும் காதலை ஒரு காமத்திற்கான வடிகாலாக சித்தரித்து இன்றைய தலைமுறையினரை காமத்தையே காதல் என்று நம்பும் வகையில் செய்திருக்கிறது எனச் சொன்னாலும் அது மிகையாகாது. உண்மையில் காமம் மட்டும் தான் காதலா? இன்றைய தலைமுறையிடம் காதல் இருக்கிறதா...
 
இந்த கேள்விகளுக்கு பதிலாக, நாம் ஒன்றைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காமம், காதல் இரண்டும் வெவ்வேறு. காதலில் காமமும் இருக்கிறது என்பதுவே அது. காமத்தின் வடிகாலாக இருக்கும் ஒரு விலைமாதுவிடமோ/ விலைஆடவரிடமோ  ஒரு ஆண்/பெண் காமத்தை மட்டுமே பகிர முடியும். ஆனால் ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆணுக்கும் இடையேயான புரிந்துணர்வுடனும், ஒருவர் பிறர் நலம் விரும்புதலுடனும் கூடிய காமத்தில் மட்டுமே காதலை உணர முடியும். இத்தகைய காதலை இன்றையத் தலைமுறையினர் புரிந்து வைத்துள்ளார்களா என்பதை ஒரு சிறு விளக்கம் கூறி இக்கட்டுரையை முடித்து விடுகிறேன்.
 
கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு இல்லை எனப் பதிலைச் சொல்பவர்களைப் பற்றிய கவலைத் தேவையில்லை நமக்கு. ஆனால் இருக்கிறார் எனச் சொல்பவர்கள் அக்கடவுளை எவ்வாறு காண்கின்றனர் என்பதைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியமாகிறது. வெறும் கற்சிலைகளைக் கடவுள் என்று நினைப்பவனால் எப்படி கடவுளைக் காண முடியாதோ, கற்சிலைக்குள் இருக்கும் கடவுளைக் கண்டவன் எப்படி கடவுளைக் குறித்து பேருவகை அடைகிறானோ அப்படியே காதலும்... காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை எனப் பதில் சொல்பவர்களைப் பற்றிய கவலைத் தேவையில்லை நமக்கு. ஆனால் காதல் இருக்கிறது எனச் சொல்பவர்களுள் சிலர் காமத்தை மட்டுமே காதல் எனச் சொல்லி காதலைப் புரிந்து கொள்ளாமலும், காமத்தை தாண்டிய காதலை கண்டவர்கள் காதலால் பேருவகையும் அடைகிறார்கள் என்பதுமே நிஜம்.
 
எப்படி கற்சிலையை மட்டுமே கடவுளாக நம்புவதால் கடவுளுக்கு எந்த பழியும் சேரப் போவதில்லையோ, அப்படி காமத்தை மட்டுமே காதல் என நம்புபவர்களால் காதலுக்கும் எந்த பழியும் சேரப் போவதில்லை... நாம் நம்புகிறோமோ இல்லையோ, காதலும் கடவுளைப் போல நேற்று, இன்று நாளை என கால பாகுபாடின்றி என்றும் நிலைத்து நிற்கும்.
 
வாழ்க காதல்... வளர்க மனிதம்...

வீரம் - அதீதத்தில் கடைசிப்பக்கமாக வெளியான கட்டுரை


வீரம் என்பது, தன்னை எதிர்ப்பவரை அழிப்பதா? இல்லை, அடுத்தவரை தன் பலத்தால் அடக்குவதா? உண்மையில் வீரம் என்றால் என்ன? வீரன் என்பவன் யார்? கோபத்தில் ஒருவன் கத்தியால் நான்கைந்து நபர்களைக் கொன்று விட்டால் அவன் வீரனாகி விடுவானா? இல்லை தன் பலத்தால் பிறரை அடக்கி தன் ஆளுமையை அவர்கள் மீது நிலைநிறுத்திக் கொள்ளும் ஒருவன் வீரனாகி விடுவானா?


எது தான் வீரம்? யார்தான் வீரர்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேட விழைகையில் ஆய்விற்காக முன் நிற்பது போர் தானே. நமது நாட்டில் தான் ஆரம்பகாலத்தில் இருந்து இன்று வரை எத்தனை விதமான போர்கள் நடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு போரும் தன்னுள் எத்தனை வீரர்களையும், அவர்களது வீர கதையையும் கொண்டிருக்கிறது. அத்தனையும் ஆய்விற்காக எடுத்து விடை தேடுவது என்பது எளிதான காரியம் இல்லை. ஆதலால், சட்டென என் மனதில் தோன்றும் ஒரு போரின் இரண்டு நிகழ்வுகளை மட்டும் இங்கு காணலாம்.


மகாபாரதப் போர். போர் ஏறத்தாழ முடிந்து விட்டது. பதினெட்டாம் நாள் போரில், துரியோதனன் தன் தொடை முறிந்து உயிர் பிரியும் நிலையில் இருக்கிறான். அன்று இரவு சேனாதிபதியாக பொறுப்பேற்கும் அஸ்வத்தாமன் துரியோதனன் உயிர் பிரியும் முன்னே பாண்டவர்களை அழிப்பதாக சபதம் பூண்டு இரவோடு இரவாக பாண்டவரின் பாசறைச் சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த இளம் பாண்டவர்களை, பாண்டவர்களே உறங்குகிறார்கள் என நினைத்து அவர்கள் தலை கொய்து துரியோதனனிடம் வந்து பாண்டவர்களை வீழ்த்தி விட்டதாக பெருமை கொள்கிறான். அந்த அர்த்த ஜாம இரவில் அஸ்வத்தாமன் கொண்டு வந்து போட்ட தலைகளை கூர்ந்து நோக்கிய துரியோதனன், இளம் பாண்டவர்களை கொன்றதற்காக அஸ்வத்தாமனைக் கடிந்தவாறு உயிர் துறக்கிறான்.


அஸ்வத்தாமனுக்கோ துரியோதனன் கடிந்தது பெரியதாகப் படவில்லை. தனது சபதம் நிறைவேறாமல் போனதே என்று கடும் கோபமுற்று என்ன செய்வதென்று புரியாமல் உலாவிக் கொண்டிருந்தான். அதே நேரம் தனது மக்கள் இளம் பாண்டவர்களை அழித்த அஸ்வத்தாமனை அழிக்க வேண்டும் என்ற பாஞ்சாலியின் கதறலுக்கிணங்க அஸ்வத்தாமனைத் தேடி பாண்டவர்கள் வருகிறார்கள். பாண்டவர்களைக் கண்ட அஸ்வத்தாமன் மேலும் சினமுற்று ஆயுதங்கள் ஏதும் இல்லாததால் அருகில் இருந்த தர்ப்பைப்புல்லை எடுத்து மந்திரத்தால் அதனை பிரம்மாஸ்திரமாக்கி, கண்ணன் தடுத்தும் கேளாமல் பாண்டவர்கள் மேல் எய்து விடுகிறான். 


பிரம்மாஸ்திரத்தை தடுக்கும் வல்லமை இன்னொரு பிரம்மாஸ்திரத்திற்கே உண்டென்பதால் அர்ஜுனன், தானும் பிரம்மாஸ்திரத்தை எய்து அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தை தடுக்கிறான். ஒரு பிரம்மாஸ்திரமே உலகை அழிக்கும் வல்லமை உள்ளது. ஆனால் இங்கு இரண்டு பிரம்மாஸ்திரங்களின் பிரயோகத்தால் அண்டம் நடுங்கிக் கொண்டிருக்க கண்ணன் அர்ஜுனனை பிரம்மாஸ்திரத்தை திரும்ப பெறுமாறு கேட்க அதன்படி அர்ஜுனன்னும் பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறான். ஆனால், அஸ்வத்தாமனோ பிரம்மாஸ்திரத்தை எய்ய மட்டுமே அறிந்தவன், திரும்பப் பெறும் வழி அறியாதவனாதலால். அதனை பாண்டவ வம்சத்தின் கடைசி வாரிசாக இருந்த உத்திரையின் கருவின் மேல் திருப்பி கருவை அழித்து விடுகிறான். 


இந்நிகழ்வில் அஸ்வத்தாமன் தனியொரு ஆளாக நின்று, கோபத்தின் உச்சியில் இரவு நேரத்தில் இளம் பாண்டவர்களை அழித்தான், பிரம்மாஸ்திரம் எய்து உலகையே அழிக்கும் வல்லமை படைத்திருந்தான் என்பதால் அவனை வீரன் என்று சொல்லி விட முடியுமா? ஒரு அஸ்திரத்தை முழுமையாக கற்றுக் கொள்ளாமல் உலகையே அழிக்க நினைத்து பின் அதனை பாண்டவர்களின் இறுதி வாரிசாக வரவிருந்த உத்தரையின் கருவுக்கு திருப்பி விட்ட அஸ்வத்தாமன் வீரனா? தான் எய்த பிரம்மாஸ்திரத்தை திருப்பி எடுத்துக் கொண்டால் அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரம் தமது இறுதி வாரிசை அழித்து விடும் என்றும் தெரிந்தும் உலக நன்மைக்காக, எய்த அஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்ட அர்ஜுனன் வீரனா? இங்கு வீரம் என்பது எதில் அடங்கி இருக்கிறது?


இதே போன்று இன்னொரு நிகழ்வு. துரோணர் கௌரவர்களின் படைக்கு தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரம். துரோணர் துரியோதனனுக்கு தருமரைக் கொல்ல மாட்டேன் ஆனால் அவரைச் சிறைப் பிடித்து தருகிறேன் என்று உறுதி அளித்து அதற்காக அர்ஜுனனை தருமரிடமிருந்து பிரித்து தொலைவே அழைத்துச் செல்லுமாறு பணித்தார். அர்ஜுனனும் போரின் உக்கிரத்தில் தான் தனது அண்ணன் தருமரை விடுத்து நெடுந்தொலைவு வந்து விட்டதை அறியாமல் போர் புரிந்து கொண்டிருந்தான். இதுதான் தக்க சமயம் என துரோணர், தருமரைச் சிறைபிடிக்கும் எண்ணத்துடன் சக்கர வியூகம் அமைத்து தருமரை நெருங்கிக் கொண்டிருந்தார்.


வியூகத்தை உடைக்காவிடில் தருமர் சிறைபிடிக்கப்படுவது உறுதி என்னும் நிலைமையில் என்ன செய்வதென்று தெரியாமல் தருமரும், பீமனும் குழம்பிக் கொண்டிருந்தனர். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் மட்டுமே சக்கர வியூகத்தின் உள்நுழையவும், வெளிவரவும் தெரியும். அர்ஜுனனோ தருமரை விடுத்து நெடுந்தொலைவில் போர் புரிந்து கொண்டிருக்கிறான். நிலைமையை உணர்ந்த அபிமன்யு தருமரிடம் சென்று, பெரியப்பா எனக்கு சக்கர வியூகத்தின் உள் நுழையத் தெரியும் ஆனால் வெளியேறத் தெரியாது எனச் சொல்ல தருமர், அபிமயுவை சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழையச் சொல்கிறார். தருமரின் எண்ணம் அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழையும் பொழுது பீமன் முதலிய பல வீரர்களும் உள் நுழைந்து விட்டால் பின் வியூகத்தை எப்படியும் உடைத்து வெளியேறி விடலாம் என்பதாம். 


சக்கர வியூகத்திற்குள் தன்னைத் தவிர வேறு எவரும் உள் நுழைய இயலாவிடில் தான் வெளியேற இயலாது என்று நன்கு தெரிந்த அபிமன்யு தனது பெரியப்பாவைக் காப்பதற்காக தனது உயிரை பணயம் வைத்து சக்கர வியூகத்துள் நுழைகிறான். நுழைந்தவன் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் அனாயசமாகத் தோற்கடித்து சிதறச் செய்கிறான். அபிமன்யுவின் வீரத்தைப் பார்த்த துரோணர் நேர்மையான முறையில் இவனைக் கொல்லுதல் இயலாதென்பதை உணர்ந்து யுத்த முறைக்குப் புறம்பான முறையில் அவனைக் கொன்றும் விடுகிறார்.


இந்நிகழ்வில் அபிமயுவிற்கு தான் சக்கர வியூகத்தின் உள்நுழைந்தால் வெளியேறுவது இயலாது தனது உயிரை இழக்க நேரிடும் என நன்றாகத் தெரியும். இருந்தும் தனது பெரியப்பாவிற்காக, தான் சார்ந்த படையின் நலனுக்காக தனது உயிரைத் தியாகம் செய்யத் துணிந்த அபிமன்யு, வீரனா? வீரனென்றால், இதில் வீரம் என்பது எதைக் குறிக்கிறது?


இரு நிகழ்வுகளையும் மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்து, வீரம் என்பது என்ன? வீரன் என்பவன் யார் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்களேன்...


இன்றைய நமது அன்றாட அலுவலக வேலைகளிலும் நமக்கு மேலதிகாரிகளாக இருப்பவர்களில் சில வீரர்களைக் காண முடியும். இவர்கள் தமது கீழ் வேலை செய்பவர்களிடம் சில வேலையைக் கொடுத்து அவ்வேலையில் இருக்கும் கடின தன்மையைக் கூறி தாமும் தமது சக பணியாளர்களுடன் சேர்ந்து அவ்வேலையை முடித்து வெற்றி காண்பார்கள். 

இன்னும் சில மேலதிகாரிகளோ, தங்களின் கீழ் பண்புரிபவர்களிடம் சில வேலையைக் கொடுப்பார்கள், வேலையைக் கொடுக்கும் பொழுது இந்த வேலை ஒன்றும் கடினமானது இல்லை, இப்படி இப்படி செய்து எளிமையாக முடித்து விடலாம் என்று வாயாலேயே வேலையை முடித்து, நானே செய்து விடுவேன், இருந்தும் உனக்கு அனுபவம் கிடைக்க இவ்வேலையைத் தருகிறேன் எனச் சொல்வார்கள். இந்த மாதிரி சூழநிலையில் அகப்பட்டுக் கொண்ட சில பணியாளர்கள், தங்கள் வேலையை முடிக்கத் தெரியாமல் தம்மால் முடியவில்லை எனச் சொல்லி மேலதிகாரியிடமே அவ்வேலையைத் திருப்பிக் கொடுத்தாலோ, மேலதிகாரி, தனக்கும் அந்த வேலை தெரியாது. நான் சொல்லிய படிச் செய்தால் முடித்து விடலாம் என்று, தான் நினைத்ததாகச் சொல்லி அவ்வேலையை முடிக்க வேறொருவர் உதவியை நாடுவார்கள். இவர்களும் வீரர்கள் தான். வாய்ச்சொல்லில் மட்டும்.!


நாம் உண்மையில் வீரராக இருக்கப் போகிறோமா, வாய்ச்சொல்லில் மட்டும் வீரராக இருக்கப் போகிறோமா. முடிவு நம் கையில் தான்.

அதீதத்தில் படிக்க லிங்க் :http://www.atheetham.com/?p=2689