Saturday, June 1, 2013

வறட்டு கௌரவம்

கௌரவம் தெரியும். வறட்டு கௌரவம் தெரியுங்களா. எல்லோரும் இந்த வறட்டு கௌரவத்தைப் பத்தி ஓரளவு தெரிஞ்சு வச்சிருந்தாலும் தனக்குன்னு வரும் போது மறந்துடறோம். என்னையும் சேர்த்து எல்லோருமே ஏதாவது ஒரு சமயத்தில் இந்த வறட்டு கௌரவத்தைப் பார்க்காத மனுஷன்னு யாரும் இருக்குறதா எனக்குத் தெரியலை...

சேச்சே, நான் எல்லாம் அப்படி இல்லைப்பா... இந்த வறட்டு கௌரவம், போலி கௌரவத்தோட எல்லாம் நான் இல்லைப்பா அப்படின்னு சொல்றீங்களா... செத்த நேரம் அப்படியே முழுசா இந்த பதிவை படிச்சுடுங்க...

முதல்ல நாம வறட்டு கௌரவத்தோட இருக்குறமா இல்லையானு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னால வறட்டு கௌரவம் அப்படின்னா என்னனு தெரிஞ்சுக்கலாம். உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள முடியாமல், நிஜத்தை நிஜமாக ஒப்புக் கொள்ள முடியாமல் நம்மைத் தடுக்கும் உணர்வு தான் இந்த வறட்டு கௌரவம்.

உள்ளதை உள்ளபடி ஏத்துக்குறது அப்படின்னா என்னனு கேட்குறீங்களா... காலையில் பல் தெய்க்குறதுல ஆரம்பிச்சு படுக்கப போற வரைக்கும் ஆயிரத்தெட்டு உதாரணம் சொல்லலாம்.. அப்படி நாம வறட்டு கௌரவம் பார்க்கும் சில விஷயங்கள் இதோ...

என்னது பல் விளக்க பேஸ்ட் இல்லையா... பேஸ்ட் கூட வாங்கி வைக்காம வீட்ல எல்லாம் அப்படி என்ன வெட்டி முறிக்குற வேலை செய்றீங்க... இப்படி சில பேர் காலையிலேயே சாமியாடுவாங்க... பேஸ்ட் இல்லைன்றதுக்கு அர்த்தம் அவர் உபயோகப்படுத்தும் பிராண்ட் பேஸ்ட் இல்லைன்றதாவும் இருக்கலாம். ஏன்யா, தண்ணியில ஆரம்பிச்சு செங்கல் தூள், சாம்பல், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி பல்பொடி இப்படி பலதை வைச்சு பல் தேய்ச்சது தானே நம்ம முன்னோர் இனம். இப்ப பிராண்டட் பேஸ்ட் இல்லைன்னா குடியா முழுகிடும்... இப்படியே சோப்பு, சீப்பு, டாய்லெட், போட்டுக்குற சட்டை இப்படி எல்லாத்துக்கும் சொல்லிட்டுப் போகலாம்...

இப்படி எல்லாம் நான் செய்றதில்லைப்பா அப்படின்னு இன்னும் சொல்லுறவங்க அடுத்து வாங்க...

அடுத்தது என்ன பயணம் தான்... எங்க வெளியே போகனும்னாலும் வண்டி வேணும்னு சொல்றவங்க... வண்டி கூட தனக்கு விருப்பமானதா இருக்கணும். தப்பித் தவறி பேருந்துல இவங்க ஏறிட்டாலும் பக்கத்துல இருக்குறவங்களை இவங்க பார்க்குற பார்வை இருக்கே... எப்பா, ஆண்டான் அடிமைத்தனம் தோத்துடும் போங்க... என்னோட தகுதிக்கு நான் சேர் ஆட்டோவுல வர்றதா... ஸ்லீப்பர் கோச்தானா, ஏசி இல்லையா... ஏன் அல்ட்ரா டீலக்ஸ்ல புக் செஞ்சிருக்கலாமே இப்படி பல ரகமா பயணத்துல வறட்டு கௌரவம் பார்க்குறவங்க இருக்காங்க...

அப்புறம் ஆபிஸ்ல உட்கார்ர இடத்துல கூட சிலர் வறட்டு கௌரவம் பார்ப்பாங்க... என்னோட கேடர். ரேங்க் தான அவனும்... அவனுக்கு மட்டும் ஏன் தனி ரூம்... எனக்கு ஏன் இல்லை அப்படின்னோ... என்னோட ரேஞ்சுக்கு எனக்கு தனி ரூம் இல்லைனா ஐ பீல் அன்கம்பர்டபில்யா... அப்படின்னு சொல்றவங்களையும் பார்க்கும் போது அப்படியே மூக்குல நச்சுனு குத்தலாம் போலத் தோணும்...

சாப்பாடு... பசிக்கு வயத்தை நிரப்ப எதாச்சும் சாப்பிடுடான்னா அதை விட்டுட்டு டீசன்சி மெயிண்டெயின் செய்றேன்னு சில பேரு ஸ்பூன்ல சாப்பிடத் தெரியாம நுனி நாக்குல நாலு வாய் சாப்டுட்டு, ஐ ஆம் டேன் பா... ஐ ஆம் இன் டயட் யூ நோ... அப்படின்னு பீலா வுட்டுட்டு கொலை பசியோட ஆபிஸ்ல உட்கார்ந்திருந்துட்டு வீட்டுக்குப் போனதும் கைல கெடைச்சதை எல்லாம் வாயில போட்டுக்குறதைப் பார்க்கும் போது... டே, இந்த பொழப்புக்கு அப்படின்னு ஏதாச்சும் திட்டனும் போல இருக்கும்...

அடுத்து, உறக்கம்... ஏசியில பொறந்து வளர்ந்த மாதிரி, தூங்க ஏசி ரூம் இல்லையா, கட்டில் இல்லையா, பெட் இல்லையா அப்படின்னு ஆரம்பிச்சு மொஸ்கிட்டோ லிக்விட் இல்லையா, கையில் தானா அப்படின்னு சொல்லும் போது, டேய், டேய் டேய் கட்டாந்தரையில வேப்பிலை புகையைப் போட்டு உட்டுட்டு படுத்து தூங்குனவங்க வழியில வந்துட்டு ஏதோ வெள்ளைக்காரன் ஊருல பொறந்தாப்புல பேசுறியேடா அப்படின்னு பலதும் கேட்கத் தோணும்... ஹ்ம்ம் என்ன செய்றது...

உண்மையிலேயே மேல சொன்ன மாதிரி உள்ளதை உள்ளபடி எடுத்துகிட்டு வாழாம வெட்டியா பேசுறது மட்டும் தான் நாம எல்லாம் வறட்டு கௌரவம்னு நினைச்சுக்கிட்டிருக்கோம்... அதனால பெரும்பாலும் நாம இதை தவிர்த்துடுறோம்...

ஆனா இதை எல்லாம் விட இன்னொரு விஷயம் இருக்கு வறட்டு கௌரவமா... அது நிஜத்தை நிஜமா ஒப்புக்க மறுக்குறது...

அது என்ன நிஜத்தை நிஜமா ஒத்துக்குறதுண்றீங்களா. நாம் அன்றாடம் செய்யும் பல காரியங்களில் நம்மையே அறியாமல் சில தவறுகளைச் செய்வோம். ஆனால் அந்த தவறை பிறர் முன் ஒப்புக் கொள்ள மறுப்போம். உப்பு சப்பில்லாத விஷயமே ஆனாலும் நாம சரின்னு சொன்ன தப்பான ஒரு விஷயத்தை நமக்கும் தப்புன்னு தெரிஞ்ச பிறகும் ஒத்துக்கிட மாட்டோம்... நாம் செய்த காரியத்தைச் சரியென்று நிரூபிக்க பொய் மேல் பொய்யாய் சொல்லுவதும், தாம் கொண்ட கருத்து தவறென்று தெரிந்த பிறகும், அந்த தவறை பிறர் முன் ஒப்புக் கொள்ள மறுப்பதும் கூட வறட்டு கௌரவம் பார்ப்பது தான்...

இன்னும் சிலர் இதை நாசூக்கா செய்வாங்க... எப்படின்னு கேட்கறீங்களா... தான் செஞ்சது/தனது கருத்து தவறுன்னு தெரியாத வரைக்கும் வாய்கிழிய சண்டை போடுவாங்க... தவறுன்னு தெரிஞ்சுட்டாலோ அப்படியே சைலண்ட் ஆயிடுவாங்க... ஏன்னா இவங்க மனசாட்சி இவங்க தப்பான கருத்தை பேச விடாது... அவங்களோட வறட்டு கௌரவம் தன்னோட கருத்தை தப்புன்னு மத்தவங்க கிட்ட ஒத்துக்க விடாது...

இப்படி எல்லாம் எதுவும் இல்லாம, வறட்டு கௌரவமே பார்க்காம நான் வாழுறேன்னு யாராச்சும் இருந்தா உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக்குங்க... ஏன்னா இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம்  யாரும் உங்களை பாராட்ட மாட்டாங்க...

மேலாண்மை

நமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளில் இருந்து ஏராளமான விஷயங்களை நாம் கற்றுக் கொண்டாலும் நாம் அதனை எப்படி சேர்த்து வைக்கிறோம் என்பதிலேயே நமது வளர்ச்சி இருக்கிறது. இன்று நான் இங்கு பகிரப்போகும் நிகழ்வை நம்மில் பலரும் சந்தித்திருப்போம். சிலர் இந்த அனுபவத்தை அனுபவித்தவர்களாகவும், சிலர் இந்த அனுபவத்தைக் கொடுத்தவர்களாகவும் இருப்பர். நான் எனது அனுபவத்தை மட்டுமே சொல்ல விழைகிறேன். யாருக்கு எது தேவையோ அதனை எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த வாரத்தில் எனது சக ஊழியர் ஒருவர் எனக்கு ஒரு புதிய வேலையைக் கொடுத்தார். நான் அந்த வேலைக்கு புதிது எனத் தெரிந்தே அந்த வேலையைக் கொடுத்தார் என்னிலும் வயதில்/அனுபவத்தில் ஒன்றிரண்டு வருடங்கள் மூத்தவரான அந்த சக ஊழியர். அவர் அடுத்த நாள் விடுமுறை எடுக்கிறார் என்றாலும் வீட்டில் இருந்து நான் செய்து அனுப்பும் வேலையைக் கொண்டு அவர் தனது வேலையைத் தொடர்வதாகச் சொன்னார். அவர் கொடுத்த வேலையைக் குறிப்பெடுத்துக் கொண்டு அடுத்த நாள் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தேன்.

காலையில் அலுவலகத்தில் நுழைந்ததில் இருந்து அந்த வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தேன். மதிய உணவையும் இருந்த இடத்திலேயே சாப்பிட்டு விட்டு வேலையைத் தொடர்ந்தேன். மாலை நாலரை/ஐந்து மணி அளவில் எனக்கு வேலை கொடுத்தவர் அலுவலக தொலைபேசியில் அழைத்தார்.

வேலை முடிந்ததா எனக் கேட்டார்.

இன்னும் மூன்றில் ஒரு பங்கு வேலை மீதம் இருப்பதாகச் சொன்னேன்.

அதனைக் கேட்ட அவர், இந்த வேலையைத்தான் காலையில் இருந்து செய்கிறாயா அல்லது வேறு ஏதேனும் வேலையில் பாதி நேரத்தைச் செலவிட்டு இப்பொழுது தான் இதனை ஆரம்பிக்கிறாயா எனக் கேட்டார்.

நான் காலையில் இருந்து இந்த வேலையை மட்டுமே செய்வதாகச் சொன்னேன்.

என்னது.! இந்த வேலைக்கு இன்று ஒரு நாள் முழுவதும் எடுத்துக் கொண்டாயா??? இந்த வேலையை நான் இரண்டு மணி நேரத்தில் முடித்திருப்பேன். இதற்கு ஒரு நாளா??? சரி, வேலையை முடித்து விட்டு எனக்கு அனுப்பி வை. நான் இரவு சரி பார்த்து எனது வேலையைத் தொடர்கிறேன் எனச் சொன்னார்.

இரண்டு மணி நேரத்தில் அவராலேயே முடிக்க முடியும் என்றால் செய்து கொள்ள வேண்டியது தானே என்று சொல்ல எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும், கோபத்தை விட வேலையைத் தெரிந்து கொள்வது தான் முக்கியம் என்று மறுபேச்சு பேசாமல் முடித்து அனுப்புவதாக மட்டும் சொல்லி அழைப்பை துண்டித்தேன். அந்த வேலையை முடித்து அனுப்ப இரவு ஏழரை ஆனது வேறு கதை.

எனது மனதை அரித்துக் கொண்டே இருந்த விஷயம், இரண்டு மணி நேரத்தில் முடித்திருப்பேன் இந்த வேலையை எனச் சொன்னது தான்... எனது கற்பனை, இரண்டு மணி நேரத்தில் இந்த வேலையை முடித்துக் காட்டுங்கள், நான் வேலையை விட்டே சென்று விடுகிறேன் எனச் சவால் விடலாமா என பல விதமான எண்ணம் ஓடியது. நிற்க.!

நான் குறிப்பிட்ட இந்த நபர் நாளை மேலாளர் போன்ற உயர் பதவிகளுக்குச் செல்லும் போது  அவருக்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணிப் பார்த்தேன். மிகுந்த கவலை உண்டானது.

ஏன் என்று கேட்கிறீர்களா??? மேலாளராக இருப்பவர் தனது கீழ் உள்ளவர்களுக்கு வேலை தெரியாத போது அவர்களை ஊக்குவித்து அவர்களிடம் வேலை வாங்குதலே புத்திசாலித்தனமே ஒழிய, நான் இரண்டு மணி நேரத்தில் முடிப்பேன் என தற்பெருமை பேசுவது கண்டிப்பாக புதிதாக வேலை பார்ப்பவருக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக்கி அவரது வேலை பார்க்கும் திறனை வெகுவாக பாதிக்கும். வேலையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் புதிதாக வந்தவரின் திறமையும் முழு அளவில் வெளிவர விடாமல் பாதிப்பை உருவாக்கும்.

மேற்சொன்ன நபரின் மேலான்மை என்னைப் பொறுத்தவரை தவறானது என்றே சொல்வேன்.

இன்னொரு உதாரணம்.

நான் இங்கிலாந்துக்கு வர காரணமாய் இருந்த வேலை பற்றிய ஆய்வறிக்கை மே முதல் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டிய சூழல். நான் அடுத்து இரு வாரங்கள் இந்தியா வாசம் என்பதால் அவசர அவசரமாய் ஆய்வறிக்கைத் தயார் செய்து கொண்டிருந்தோம் நானும் எனது மேலாளரும். நான் ஆய்வு செய்து கொடுத்த ஒரு தகவல் அட்டவணையின் ஒரு இடத்திற்கான முடிவுகள் சரி வர இல்லையே என வருத்தப்பட்டுக் கொண்டு, முடிவுகளைச் சரி பார்த்தாயா எனக் கேட்டார். சரிபார்த்தேன், எதற்கும் மீண்டும் ஒரு முறை சரிபார்க்கிறேன் எனச் சொல்லி எனது வேலையைச் சரிபார்த்தேன். பிழை ஏதும் இல்லை. பிறகு எதற்கும் இருக்கட்டுமே என நான் செய்த வேலைக்குத் தேவையான தகவல்களை ஆய்வு செய்தால் அதில் பிழை இருந்தது தெரிய வந்தது. பெங்களூருவில் இருக்கும் சக ஊழியர் செய்த தவறு அது. எனது காலின் கீழ் பூமி பந்து நழுவுவது போல இருந்தது. காரணம், அதனை அடிப்படையாக வைத்து நான் கிட்டத்தட்ட ஒரு மாதம் பல வேலைகளைச் செய்திருந்தேன்.

எனது மேலாளரின் முகத்திற்கு நேரே சென்று நடந்த தவறைச் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. ஏனெனில் நடைபெற்ற தவறு மிகவும் கேவலமான தவறு.

என்னுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சரிசெய்த தகவல்களைக் கொண்டு புதிதாக வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். ஒன்றரை நாளில் வேலையை முடித்து எனது மேலாளருக்கு நடந்த தவறுக்கு மன்னிப்போடு சரியான ஆய்வறிக்கையும் அனுப்பி வைத்தேன்.

எனது மேலாளர் எனது புதிய ஆய்வறிக்கை முடிவுகளைப் பார்த்து விட்டு எனக்கு அனுப்பிய மறுமொழி, "நான் ஒரு நாள் எழுதிய ஆய்வறிக்கை மொத்தம் வீன் என்றாலும் நீ இப்பொழுது கொடுத்துள்ள முடிவுகளே அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க ஏதுவானது. நமது கருத்துகளை தரமாக வைக்கவும் இந்த முடிவுகளே உறுதுணையாய் இருக்கும். நான் மனநிறைவுடன் இருக்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம். நான் எனது ஆய்வறிக்கையை மாற்றி விடுகிறேன். நன்றி" என்பதாகும்.

இந்த மறுமொழி எனக்கு எப்படி இருந்திருக்கும் என நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
எனது வயது ஒத்தது எனது மேலாளராக இருப்பவரின் அனுபவம்.

இவரிடம் இருக்கும் பக்குவத்தையும், கடந்த வாரம் எனக்கு வேலை கொடுத்த சக ஊழியரின் பக்குவத்தையும் ஒப்பிட்டு பார்த்தேன்.

நான் உயர் பதவிகளுக்குச் சென்றால் இவ்விருவரில் எவரின் மேலான்மை திறனை எனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

இதனை எழுதும் சமயம் நான் முன்பு பணி செய்த இடத்தில் எனது மனதில் பதித்துக் கொண்ட வாசகமும் நினைவுக்கு வருகிறது. அது, " தலைவன் என்பவன் தன்னை உயர்த்த விரும்புபவனாக இருக்க கூடாது, தன்னைச் சார்ந்தவர்களை உயர்த்தி அதன் மூலம் தான் உயர்பவனாக இருக்க வேண்டும்" என்பதாம்.

இவற்றை விடுங்கள். ஆமாம், நீங்கள் எப்படிப்பட்ட மேலாளராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்???