Sunday, December 25, 2011

இல்லாள் ஒரு பார்வை

இல்லாள், இல்லாள்னு சொல்றாங்களே... அப்படின்னா யாருங்க? ஒரு மனுஷனோட வாழ்வில் இந்த இல்லாளுக்கு அப்பிடி என்ன தான் முக்கியத்துவமுங்க. இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள் மட்டும்தானா... இந்த கேள்விக்கெல்லாம் விடை தேட மூதுரை பாடல்களை கொஞ்சம் பார்க்கலாமா...

இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்னு ஏற்கனவே நாம பார்த்திருந்தாலும், அந்த இல்லாள் பற்றிய முற்போக்குச் சிந்தனையை மூதுரையின் ஒரு பாடல் எளிமையாச் சொல்ல வருதுங்க. அது என்னன்னா, ஔவையார் அந்த காலத்திலேயே உறவில் திருமணம் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியிருக்காருன்றதுதான். அப்படி என்ன தான் பாடலில் சொல்லி இருக்காங்க அந்த அம்மானு பார்க்கையில, நாம் நமது வாழ்வை, உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள், சுற்றம் என்று சுருக்கி கொள்ளக் கூடாது. அது ஏன்னா, எப்படி வியாதிகள், நம்மோட உடலோட இந்த உறவுகளைப் போலச் சேர்ந்து பிறந்தாலும். அதுக்கு மருந்துகளா நம்முடன் பிறக்காத எங்கோ மலைகளில் இருக்கும் மூலிகைச் செடிகள் இருக்கிறதோ, அப்படி நமது வாழ்வில் உடன் பிறந்தவர்களாலும் சுற்றத்தாலும் ஏற்படக்கூடிய மனசஞ்சலமானது நமது உறவுக்கு அப்பாற்பட்டு வரும் உறவான மனைவியால் தீரும். மனைவி என்பவள் நமது மனநோயைத் தீர்க்கும் மருந்துன்னு சொல்லி இருக்காருங்க.

இப்ப இந்த கருத்தை வலியுறுத்தும் பாடலைப் பார்க்கலாமா...

"உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு."

இதுமட்டுமா,

இல்லாள் பற்றி வேறு ஒரு பாடலில் ஔவையார் குறிப்பிடும் போது சொல்றாங்க, இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றுமே இல்லையாம். இதை மேம்போக்காக படிச்சமுன்னா, இல்லத்தரசின்னு ஒருத்தி, ஒரு வீட்டில் இருந்தால், அந்த வீட்டில் அது இல்லை இது இல்லைன்னு சொல்லி வருத்தப்பட ஒன்னுமே இருக்காதுன்னு அர்த்தம் வந்தாலும் மறைமுகமாக இன்னொரு பொருளையும் சொல்றாருங்க ஔவையார். இல்லத்தரசியான மனைவி மட்டுமே ஒருத்தன் மனசுல இருந்துட்டா அவன் கிட்ட இல்லைன்னு சொல்ல முடியாத அளவு எல்லா செல்வமும் அவனை வந்து சேரும்ன்றதுதாங்க அது.

அத்தோட நிறுத்தினாரா ஔவையார், இல்லையே.... எப்படி ஒரு நாணயத்தோட இரண்டு பக்கத்துல ஒரு பக்கம் மட்டும் பார்த்து நாணயத்தை மதிப்பிட முடியாதோ, அப்படி இல்லாள் பற்றிய ஒரு கருத்தை மட்டும் வைச்சு நாம இல்லாள் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியாதில்லையா... அதுக்காக இல்லாளின் மறுபக்கத்தைப் பற்றியும் ஔவையார் சொல்லுறார். அப்படி என்ன தான் சொல்றாருன்னு பார்ப்போமா...

"இல்லாள்னு ஒருத்தி ஒரு வீட்டுல இல்லாம போனாலும் சரி, அல்லது இல்லாளாக அமைபவள் எவர்க்கும் அடங்காமல், அனைவரையும் எதிர்த்து கடுமையான சொற்களைப் பேசி பிறர் மனம் நோகும் வகையில் நடந்து கொள்பவளாக இருந்தாலும் சரி, அந்த வீடு புலி தங்கிப் போன புதர் போல சிதைஞ்சு போயிடுமாமுங்க... கருத்தைப் பார்த்துட்டு இந்த கருத்துச் சொன்ன பாடலைப் பார்க்காமப் போனா எப்படி... இதோ இக்கருத்தை வலியுறுத்தும் மூதுரை பாடல்...

"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலிகிடந்த தூறாய் விடும்."

இத்தோடு நிறுத்தினாரா இந்த அம்மா... ஒரு நல்ல இல்லாளின் பிரிவு தரும் வேதனையைப் பற்றிப் பாடும் போது சொல்றாங்க,

"தாயோடு அறுசுவை போம்
தந்தையோடு கல்வி போம்
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்
மாய வாழ்வு உற்றாருடன் போம்
உடன் பிறப்பால் தோள் வலி போம்
பொற்தாலியோடு எவையும் போம்"

இப்படிச் சொல்லி, ஒருத்தன் வாழ்க்கையில ஒவ்வொரு உறவின் பிரிவும், எதையாச்சும் ஒன்னைத்தான் எடுத்துக்கிட்டு போகும், ஆனா இல்லாள் ஒருத்தியோட பிரிவு ஒரு மனுஷனோட வாழ்க்கையில், எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிடும்ன்றார்.

இதையே தான் கண்ணதாசனும் உன் கண்ணில் நீர் வழிந்தால் அப்படின்ற பாட்டுல, இல்லாளின் பெருமையைச் சொல்லும் போது,

"உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால்
சபையில் புகழும் வளர்ந்ததடி" அப்படின்னு சொல்லி,

பிறகு ஒரு மனிதன் வாழ்க்கையில மனைவின்னு சொல்றவ எத்தனை முக்கியம்னு சொல்ல,

"காலச் சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் இன்னல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்" இப்படியும் சொல்லி இருப்பார்.

தான் ஒருத்தி இருக்கும் வரை தன் கணவனுக்கு எந்த குறையுமே இல்லாம அவனை எப்பவும் தாங்கி நிற்கும் சுமைதாங்கியா வாழ்ந்துக்கிட்டு இருப்பவதான் ஒரு மனைவின்றதை கண்ணதாசன் எவ்வளவு அழகாச் சொல்லி இருக்கார் பாருங்களேன்...

இல்லாள் என்பவள் ஒருத்தனுக்கு நல்லவளாக அமைஞ்சுட்டா, அவ இல்லத்தை ஆள்பவள் மட்டுமில்லைங்க... அவனோட உள்ளத்தையும் ஆள்பவள் தான்...

Tuesday, December 13, 2011

வெண்பாக்கள் சில...

எரியும் நெருப்பாய் தெரியும் சுடரில்
எரிந்தது மீளா மறுமுறை - அஃதாய்;
கடந்த பொழுதில் கிடந்தே தவிக்க
கடந்தது வாராது அறி.

உடலை வருத்தி உளத்தை அடக்கி
குடலைச் சுருக்கி கடுந்தவஞ் செய்தும்
பிரசன்னம் ஆகா இறையவன் பார்க்க
பிறரிடம் காட்டுநீ அன்பு.

விழியால் விடுத்த புதிரை விலக்க
பழியாய் கிடந்தேன் பதிலதைத் தேடி
தவியாய் தவித்து தணலாய் தகித்து
கவியாய் அலையும் மனது.

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 9

நானும் துரை ஐயாவும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பாஸை எந்த கேரேஜுக்கு எடுத்துச் செல்வது யாரை எப்படி உதவி கேட்பது என்று புரியாமல் இருக்க, நரேஷ் அண்ணா சாப்பிட அமர்ந்திருந்ததால், அவர் வெளிவரும் வரை காத்திருப்போம் எனக் காத்திருந்தோம். அதற்கு முன்பாகவே எங்களுடன் காரை மீட்க காலையில் வந்த ஊர்காரர் ஒருவரை நாங்கள் பார்க்க, அவரது துணையுடன் மேட்டூரில் கேரேஜ் ஒன்றைத் தேடி நாங்கள் மண்டபத்திலிருந்து, புறப்படும் போது சொல்லிக் கொள்ளாமல் செல்கிறோமே என்று லேசான மனவருத்தத்துடன் புறப்பட்டோம்.

கேரேஜ் செல்லும் வழியில் மேட்டூர் நீர்த்தேக்கம் வர, துரை ஐயா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, என்னை நமது நண்பர்களுடன் சென்று இருக்குமாறும், தான் வண்டியை கேரேஜில் விட்டு விட்டு வந்து சேருகிறேன் என்றும் சொன்னார். ஒரு வேளை கேரேஜ் மேட்டூரில் கிடைக்காமல் போனால் எனது நேரம் விரயமாகுமே, எனது நண்பர்களுடனான சந்திப்பும் விடுபட்டு போகுமே என்று நினைத்துதான் துரை ஐயா இப்படிச் சொல்கிறார், எதற்கு அத்தகைய தர்மசங்கடமான நிலைமையை அவருக்கு உருவாக்க வேண்டும் என்று எண்ணியவாறு நான் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இறங்கி கொண்டேன்.

உதயனுக்கு போன் செய்து நண்பர்கள் இருக்கும் இடம் கேட்டுக் கொண்டு நானும் நண்பர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டேன். நான் சென்ற சமயத்தில் ச.கி.ந ஐயா, ஸ்டாலின் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு என்று எனக்கு ஐஸ்கிரீம் தர, ஸ்டாலின் அண்ணாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி விட்டு, எனக்கு தோதான இடத்தில் அமர்ந்து கொண்டேன். அங்கிருந்தவர்களின் அனைவரையும் காலை முதல் சந்தித்திருந்தாலும் ஒருவருடன் அறிமுகம் செய்து கொள்ளவில்லை என்பது தெரிந்தது.

அவரை வில்லனிடம் காண்பித்து, அவர்தான் ஆசாத் ஐயாவா எனக் கேட்க, வில்லன் ஆசாத் ஐயாவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான். பரஸ்பரம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் நண்பர்கள் அளவளாவிக் கொண்டிருந்த சமயத்தில், இஜ்ஜீனியோ அண்ணியின் சமையல் குறிப்புகள் ஏன் தற்பொழுதெல்லாம் வருவதில்லை எனக் கேட்ட போது தான் ஸ்டாலின் அண்ணா, நமது நண்பர்களால் அவரது வீட்டில் கஞ்சி மட்டுமே அவருக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யும் பாசத்தை இணையத் துண்டிப்பால் துண்டாக்கி இருக்கிறார் என்ற செய்தி தெரிய வந்தது.

ஆசாத் ஐயா வாசகர் வட்டத்தை ஆரம்பிக்கலாம் எனச் சொல்ல, எப்பொழுதும் சந்திப்பின் இறுதி நிமிடங்களில் மட்டுமே பேச வாயைத் திறக்கும் என்னை அறிமுகம் செய்யுமாறு ஸ்டாலின் அண்ணாவும், விழியன் அண்ணாவும் சொன்னார்கள். அறிமுகத்தோடு வாசிப்பனுபவத்தையும் சொல்லச் சொன்னார்கள். புத்தக வாசிப்பே செய்தி்ராத நான், எங்கு வாசிப்பு அனுபவத்தைப் பகிர? எனது சுய புராணத்தைப் பாடியே எங்களிடம் இருந்த ஒரு மணி நேரத்தில் பெரும்பகுதியை நான் கொன்று விட, விழியன் அண்ணா, நேரம் இல்லாமையைச் சுட்டிக் காண்பிக்க கொஞ்சம் வேகமாக எனது அறிமுகத்தை முடித்துக் கொண்டேன்.

அதன் பின் ஸ்னாபக் வினோத், தனது அறிமுகத்தையும், தான் படித்த வேல்சாமியின் கோவில் நிலம் சாதி புத்தகத்தைப் பற்றியும், ஷோபா அவர்களின் இன்னொருவர் புத்தகத்தைப் பற்றியும் சிலாகித்துப் பேசினார். அவ்விரு புத்தகங்களும் தமிழர்களின் தொன்மையைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் சொல்வதாகவும், தமிழர்கள் தங்களது தொன்மையை எப்படி இழந்தார்கள் என்பதையும் அப்புத்தகங்கள் சொல்வதாகவும் சொன்னார்.

அதன்பிறகு, வேறு யாரேனும், கடந்த வாசகர் வட்டத்திற்குப் பிறகு புத்தகம் ஏதும் படித்திருந்தால் அதைப் பற்றி பேசச் சொல்ல, உதயன் பேச ஆரம்பித்தான். கடந்த வாசகர் வட்டத்தில் கண்மணி குனசேகரன் பற்றி அஞ்சலை என்ற புத்தகத்தால் நிலாரசிகன் மூலமாக அறிய வந்த உதயன், கண்மணி குனசேகரன் எழுதிய இன்னொரு புத்தகமான நெடுஞ்சாலை பற்றிப் பேசினான்.

கண்மணி குனசேகரன் பற்றி உதயன் சொல்லும் பொழுது, கண்மணி குனசேகரன் எழுதியவற்றை யோசிக்காமல் வாங்கலாம் என்று விழியன் அண்ணா சொல்ல, அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை, தனது மனதில் நெடுஞ்சாலை பற்றிய அனுபவத்தைச் சொல்ல ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த உதயனால் புரிந்து கொள்ள முடியாமல் போனது. பின்பு, கண்மணி குனசேகரன் புத்தகத்தை நம்பி வாங்கலாம், அவரது எழுத்தாக்கம் அவ்வளவு அருமையாக இருக்கும் என விளக்கம் கொடுத்ததும் உதயன் அசடு வழிய சிரித்து, நெடுஞ்சாலை புத்தகத்தின் மீதான தனது வாசிப்பனுபவத்தைச் சொல்லலானான்.

உதயன், தனது வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் தான் பணிபுரிந்த பொழுது, பேருந்து பராமரிப்புத் துறையில் தான் கண்ட அனைத்தையும் அப்புத்தகத்தில் மீண்டும் கண்டதாகச் சொன்னான். புத்தகம் முழுவதும் ஒரு பேருந்தின் டிரைவர், கன்டக்டர் மற்றும் மெக்கானிக் வாழ்க்கையைச் சுற்றி சுற்றி அவர்களது அன்றாட வேலையில் இருக்கும் பிரச்சினைகளை அழகாக எடுத்துக் காட்டுவதாகக் கூறினான். அய்யனார் என்ற கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை வலம் வந்தாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து சேவையைத் தரும் டிரைவர், கன்டக்டர், மெக்கானிக் இன்னும் பிறரின் வேலைகளின் அவலங்களை அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை படம் பிடித்துக் காட்டுவதாகக் கூறினான்.

தான் முன்பு வேலைபார்த்த இடத்தில் இருப்பவர்களுக்கு, அப்புத்தகத்தை வாங்கி படிக்கவும், புத்தகம் வாங்க முடியவில்லை என்றால் தானே வாங்கித் தருவதாகவும் சொல்லியிருப்பதாகவும் சொன்னான். இவ்வாறாக வாசிப்பனுபவத்தை உதயன் சொல்லிக் கொண்டிருக்க, நேரம் இல்லாமையால் விழியன் அண்ணா மற்றும் ஸ்டாலின் அண்ணா குடும்பத்தினர் தாம் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று சென்னை கிளம்ப தயாராக வேண்டும் எனப் புறப்பட்டுச் சென்றார்கள். அதன் பிறகு எஞ்சியிருந்த நாங்கள் சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு பிறகு நாங்களும் விடுதி சென்றோம். அங்கு நான் நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.

இங்கு நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது, வாசிப்பனுபவம் என்று சொல்கிறார்களே, என்னடா இது என்று சலிப்போடு நினைக்கும் என்னைப் போன்றவர்களுக்காக, அன்றைய வாசகர் வட்டத்தில் நான் அறிந்து கொண்ட உண்மை இது.

"அனைத்து நிகழ்வையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ள ஆயுள் ஒன்று போதாது என்று உணர்ந்த ஆன்றோர்கள், தங்களது அனுபவங்களை புத்தகமாகத் தருவது, நாம் அனுபவிக்காமல் படிப்பதின் மூலமாக அந்த அனுபவத்தை அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே. அதனால் நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிக்க, அந்த புத்தகத்தின் அனுபவம் உங்களுக்கு நல்லதோர் படிப்பினையும், காலத்தை மிச்சமும் செய்து தரும்."

வாசகர் வட்டத்தில் கண்ட இன்னுமோர் சுவையான நிகழ்வு. அங்கு அமர்ந்திருந்தவர்களின் கண்களில், பேசுபவர் என்ன சொல்ல வருகிறார் என்ற ஆர்வம். நான் பேசும் பொழுது கவனித்தவற்றைச் சொல்கிறேன். டேமேஜர் மேடம் தூக்க கலக்கத்தில் இருந்தாலும் கதைக் கேட்பதைப் போல கேட்டுக் கொண்டிருந்தார். சுதாகர் ஐயாவோ அத்தனை கூர்மையாக ஒவ்வொருவர் பேசுவதையும் கவனித்து வந்தார். தனது மனதில் படுவதை பட்டென்று கேட்டு விடுகிறார். ஸ்னாபக் வினோத், ஆர்வம் மிகுதியாகக் கொண்டுள்ளார். அந்த ஆர்வ மிகுதி எண்ணத்தை வேகமாக பறக்க விடுவதால் சொல்லும் வேகமாக அவசர கதியில் வந்து விழுகிறது. உதயன், என்ன சொல்ல... எப்படி இருந்தவன்? புத்தகத்தைப் படித்த பிறகு அவனுள் அவனை அறியாமலேயே பல மாற்றங்கள் வந்துள்ளது. ஒவ்வொன்றையும் அவன் சிலாகித்துப் பார்க்கும் பார்வை... அப்பப்பா, நிச்சயமாக முயன்றால், நாளை இவனும் எழுத்தை ஆளலாம்.

ச.கி.ந. ஐயாவோ, வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவனைப் போல அத்தனை பவயமுடன் அனைவரின் வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டிருக்க, ஆசாத் ஐயா பார்வையில் தான் எத்தனை தீர்க்கம்... தெரிந்ததில் மட்டுமே தெளிவுடன் தன் கருத்தை வைக்கும் அந்த பாங்கு,ம்ம்ம்... இஜ்ஜீனியோ அண்ணி, ஓவியாவைக் கவனித்துக் கொண்டு நாங்கள் பேசுவதையும் கவனிக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, ஸ்டாலின் அண்ணா தன்
பார்வையில் எதையோ சாதிக்கக் காத்துக் கொண்டிருக்கும் வெறி, எதையோ எப்படி மாற்றப் போகிறோம் என்ற ஏக்கம், அடுத்தவர் பேசும் போது, பேசுபவரை உதாசீனப்படுத்தாமல் கவனிக்கச் சொல்லும் கட்டளைப் பார்வை என இருக்க, விழியன் அண்ணா, நடக்கும் அனைத்தையும் அமைதியாக அதே சமயம் ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருந்தார். வித்யா அண்ணியோ, குழலியுடன் விளையாடிக் கொண்டிருப்பது போல இருந்தாலும் அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டு, தான் ரசித்த வார்த்தைகளுக்கு அளவாய் ஒரு புன்னகைச் செய்தும் வாசகர் வட்டத்தை ரசித்திருக்க, என் பக்கத்தில் வில்லன் எப்பொழுதும் போல விளையாட்டுத்தனமாய் விஷமத்தனமாய் எனத் தனக்கே உரிய பாணியில் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

மொத்தத்தில் நந்தா அண்ணா திருமணமும் சரி, நண்பர் குழாம் சந்திப்பும் சரி, நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் என்னைப் பல மடங்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இணையத்தில் என்ன கண்டாய் என்று கேட்பவர்களிடம், இதயங்கலந்த இனிய உறவுகளைப் பெற்றேன் எனப் பெருமைப் பட்டுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாக்கித் தந்த நந்தா அண்ணாவிற்கும், நண்பர்களுக்கும் எனது மகிழ்ச்சியான வணக்கங்கள்.

(பி.கு: ஒரு பயணம் இன்னொரு பயணத்திற்கு அடிகோலுகிறது என்று விழியன் அண்ணா தனது வலைப்பக்கத்தில் ஒரு முறை சொல்லி இருந்ததைப் போல, நந்தா அண்ணா திருமண பயணத்தின் முடிவு, ரமேஷ் முருகனின் திருமண பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்றால் மிகையாகாது.)

(விடுபட்ட செய்திகள் ஏதேனும் இருந்தால் நண்பர்கள் பகிரவும்)

- முற்றும்.

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 8

முக்கியமான ஒன்றைச் சொல்ல வில்லையே. நாங்கள் திருமண மண்டபத்திற்குத் திரும்பிய பொழுது நேரம் மதியம் இரண்டரையைக் கடந்திருந்தது. பண்புடன் நண்பர்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை நம்மையும் பாஸையும் நலம் விசாரித்து முடிக்க, பாஸை மீட்டு வந்த செய்தியும், பாஸில் இருந்து களவு போன பொருட்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்.

காலையில் ஒற்றை ஹாயுடன் பிறந்த நாளைக் கொண்டாடும் ஸ்டாலின் அண்ணாவிடம் விடைபெற்றுச் சென்ற நான், மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பியதும் தான் பார்க்க முடிந்தது. அதுவும் அழகியதோர் சூழலில். அச்சூழல்...

//ஓவியமொன்று
உயிர்பெற்று மிதந்து வந்தது

என்ன இது அதிசயம்
எட்டித் தொட முயன்றேன்...

மானா
ஒற்றை வார்த்தையில்
எட்டாக்கனியாகி விலகியது...

தேடலின் இன்பம் காண
தேடி விழைந்தபடி நான்

ஓவியமாய் ஓவியா...//

ஆம், ஓவியாவுடன் தான் அண்ணனைப் பார்த்தேன். காலையிலேயே பார்க்க வேண்டும் என நினைத்திருந்த என் தங்கம் ஓவியாவை மதியம் தான் பார்க்க முடிந்தது. எத்தனை அழைத்தும் ஒட்டவில்லை ஓவியா என்னுடன்.

பாஸைப் பார்த்ததும் ஓவியா சொன்ன வார்த்தை, "இந்த அண்டி வாணாம்பா" என்பது தான். ஸ்டாலின் அண்ணா எத்தனைச் சமாதானப்படுத்தியும் அக்குழந்தை மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை...

தேவதைகளின் உள்ளமொழி
இரண்டில் ஒன்று தான்...

வேண்டும்... வேண்டாம்...

எத்தனை தான் மகிழ்வைத் தந்தாலும்
வேண்டுமென விரும்பிய பொருட்கள்
பயம் காட்டி விட்டால்
வேண்டாம்தான் அவர்களுக்கு...

பயம் தெளியும் வரை.!

இது இவ்வாறாக இருக்க, நானோ ஓவியாவை எப்படியும் என் கைகளில் ஏந்த வேண்டும் என்று பிரம்ம பிரயத்தனம் செய்து முயன்று கொண்டிருந்தேன். விளைவு,

பக்திக்கு அவசியம்
பொறுமையும் விடாமுயற்சியும்

போதகரின் வாக்கு
உண்மையானது நேற்று...

தேவதையை ஏந்தும் தவத்தில்
தேவதை மனமிறங்கவில்லை...

தேவதையைத் தந்தவர்கள்
இறங்கினார்கள்...

ஒரே ஒரு முறை சென்றுவர
தேவதையை பணித்தார்கள்...

என்ன அதிசயம்...

தேவதையை நான் ஏந்தவில்லை...
என்னை ஏந்தினாள் தேவதை

உபரியாக
வானத்தில் மிதக்கும் வரமாய்...
கன்னத்திற்கொன்றாய் முத்தம்.!

இப்படியாக ஓவியாவுடன் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தேன்.

நிற்க,

வண்டியை இப்படியே வைத்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது, கேரேஜ் பக்கம் எங்கேனும் எடுத்துச் சென்று ஓரளவு சீர்படுத்தினால் தானே துரை ஐயா தூத்துக்குடி வரை செல்ல முடியும் என்று எண்ணியவாறு, தேடினால் உதவிக்கு வந்திருந்த ஊர்காரர்கள் யாரும் கண்ணுக்குக் கிடைக்கவில்லை.

அப்பொழுதுதான் நமது நண்பர்கள், நம்மை மதிய விருந்துக்கு நினைவுபடுத்தினார்கள். நண்பர்கள் அனைவரும் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் காத்திருப்பதாகச் சொல்லி, என்னையும், துரை ஐயாவையும் சாப்பிட்டு விட்டு அங்கு வந்து தங்களுடன் இணைந்து கொள்ளும்படி அன்புக்கட்டளை இட்டு சென்றார்கள். சரி என்று, நானும் துரை ஐயாவும் சாப்பிட அமர்ந்தோம்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மணமக்கள் எங்களுக்கு எதிராகச் சாப்பிட வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் துரை ஐயாவிற்கு, தன்னால் பிரசாத்தும் மணமக்களைச் சந்திக்க முடியவில்லையோ என்ற வருத்தம் மேலிட, நந்தா அண்ணாவிடம் அறிமுகம் செய்து கொண்டாயா என்று கேட்டார். நான் காலையில் நந்தா அண்ணனைச் சந்தித்ததைச் சொல்லியதும் தான் அவர் மனம் சற்று அமைதியடைந்தது.

மணமக்களை எதிர்புறம் பார்த்ததும் நான் மனமார

"தான்போல் சுயமது தன்துணைக்கு உண்டென்று
நான்விடுத்து என்றுமினி நாமென்(ற) உணர்வோடு
தேனினிய நந்தாநீர் தெள்ளியநற் பாதியொடு
வான்புகழ பல்லாண்டு வாழ்"

என்று மனதிற்குள் வாழ்த்தி விட்டு, மதிய விருந்தை திருப்தியுடன் உண்டு துரை ஐயாவுடன் வெளியே வந்தேன்.

நல்ல விருந்து, ஒரே ஒரு குறை எங்கள் பகுதிக்கு பிரியாணி வராமல் போனது தான்... :))) இருந்த உணவையே முழுமையாகச் சாப்பிட முடியவில்லை என்பது வேறு விஷயம் என்றாலும் பிரியாணி வரவில்லை என்பதால், நந்தா அண்ணன் இன்னொரு முறை எனக்கு மட்டுமேனும் பிரியாணியுடன் விருந்து படைக்க வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 7

வண்டியை ஒரு வழியாக மேலே கொண்டு வந்த பின் வண்டி ஸ்டார்ட் ஆகிறதா என ஸ்டார்ட் செய்து பார்த்தோம். ஒருவழியாக வண்டியைத் தள்ளி ஸ்டார்ட் செய்தால் பத்து அடி தூரம் சென்று வண்டி நின்று விட்டது. டீசல் காலியாகி இருக்கும் என்பதால் டீசல் போட்டால் வண்டி ஓடும் என முடிவுக்கு வந்தோம்.

ஆனால், டீசல் டேங்க் ஓட்டையாகி இருந்ததால் அதனைத் தற்காலிகமாகச் சீர்படுத்த முடியுமா எனப் பார்க்க வண்டியை ஓரங்கட்டி, ஆராய முயன்றார் நம்முடன் வந்த ஊர்காரர் ஒருவர். அவர் வண்டிக்கு கீழாகச் சென்று ஆராய்ந்து பார்த்ததில், டீசல் டேங்க் மட்டுமல்ல, டீசல் டேங்க் பியூரிபையரும் ஓட்டையாகி இருப்பதால் தான் வண்டி ஸ்டார்ட் ஆவதில் பிரச்சினை இருக்கிறது.

பியூரிபையர் ஓட்டையை மட்டும் சரி செய்து வண்டியை எடுத்துக் கொண்டு ஊர் சென்று விடலாம். அங்கு சென்று மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார். மேலும் டீசல் ஒழுகிக் கொண்டே இருப்பதால் டீசல் டேங்க் ஓட்டையை M-seal கொண்டு அடைக்க முடியாது என்பதையும் சொன்னார். அவர் சொல்வது தான் சரியெனப் பட, அப்படியேச் செய்யலாம் என முடிவெடுத்தோம். பியூரிபையரை மட்டும் எப்படியேனும் சரி செய்ய வேண்டுமென்று தீவிரமாக அந்த நபர் யோசித்து ஒரு குச்சியை உடைத்து அதனை ஆப்பை போல அழகாகச் செதுக்கி அந்த ஓட்டையை லாவகமாக அடைத்தார்.

நாலு எழுத்து படித்து விட்டாலே நாம் எல்லாம் தெரிந்தவர்கள் என்று ஆணவமாக இருக்கும் இன்றைய நவநாகரீக உலகில், நடைமுறைச் சிக்கல்களை லாவகமாகச் சமாளிக்கும் திறமை கொண்ட இவர்களின் ஆற்றல் என்னை வியப்படையச் செய்தது. ஒருவழியாக வண்டியைச் சரிசெய்து, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த டீசலை பாஸில் ஊற்றி வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகவில்லை.

இனி காத்தருப்பதில் பயனில்லை என்று, நாங்கள் எடுத்துச் சென்றிருந்த வண்டியுடன் பாஸைக் கயிற்றால் கட்டி toe செய்து இழுத்து செல்லலாம் என்று முடிவெடுத்தோம். இதில் மிகப் பெரியச் சிக்கல் என்னவென்றால் நாங்கள் பயணமாக இருப்பது மலைப்பாதை. துரை ஐயாவின் வண்டியோ ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் பிரேக் பிடிக்காதாம். அப்படி இருக்க வண்டியை இழுத்துச் செல்வது என்பது எப்படிப்பட்ட சவால் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் எங்கள் வண்டியை ஓட்டி வந்த டிரைவரோ, பியூரிபையரில் டீசல் வந்து சேராததால் தான் வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன்கிறது. வண்டி நகர நகர அவ்வப்பொழுது பாஸை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யுங்கள். ஸ்டார்ட் ஆகி விட்டால் வேகமாகச் சென்று விடலாம் எனக் கூற, சிறிது நேரத்தில் அப்படியே நடந்தது. பாஸ் ஸ்டார்ட் ஆகி விட்டது. பாஸ் ஸ்டார்ட் ஆனதும் எங்கள் வண்டியுடன் கட்டி இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு, பாஸை முன்னே போக வைத்து நாங்கள் பின்னே தொடர்ந்தோம்.

தமிழக எல்லை வந்த சில நேரத்தில் நாங்கள் பாஸைக் கடந்து, கடனாக ஆட்டோ ஓட்டுனர்களிடம் வாங்கி வந்திருந்த கயிறைத் திருப்பிக் கொடுத்து திருமண மண்டபத்திற்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு முன்னாக பாஸ் வந்திருந்தது. பாஸை ஆப் செய்து விட்டால் மறுபடியும் ஸ்டார்ட் செய்வது சிரமம் என்றதால் பாஸ் உறுமிக் கொண்டே இருந்தது.

இந்த நேரத்தில், தங்களது ஊர்காரர் திருமணத்திற்கு வந்த உறவுகள் என்ற ஒரே காரணத்திற்காக ஓடி ஓடி உதவி செய்த அந்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய சார்பிலும், துரை ஐயா சார்பிலும் கோடி நன்றிகள்... அவர்களுக்கு நாம் என்றென்றும் கடன்பட்டவர்களாகவே இருப்போம்.

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 6

பாஸ் வலப்புறமாக பைப்லைனுக்காக வெட்டப்பட்ட குழியில் ஒருக்களித்தவாறு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. வண்டி காணாமல் போகவில்லை, வண்டியைச் சுற்றிலும் போலீஸ்காரர் சொன்னபடி எந்த காகிதமும் இல்லை. பார்த்த உடனே எனது மனதில் தோன்றியது, வெறும் ஆள்பலத்தை வைத்து மட்டும் வண்டியை மீட்பது மிகவும் கடினம் என்பதே. இத்தனை நடந்தாலும், துரை ஐயாவிடம் எந்த ஒரு மனக்குழப்பமும் இல்லை. அவரது மனதில் இருந்தது எல்லாம், வண்டியை மீட்கும் சிந்தனையை விட குழந்தைகள் ஓவியாவும், குழலியும் அதிகம் பயந்திருப்பார்களே என்ற வருத்தம் தான். அந்த வருத்தமே அவரை மிகவும் பாதித்திருந்ததாக நான் உணர்ந்தேன்.

துரை ஐயா, வண்டியின் லாக்கை திறந்தார். வண்டியை சுற்றும் முற்றும் பார்த்தோம். வண்டி எவ்வாறு அமர்ந்திருக்கிறது எப்படி மீட்கலாம் என்று ஆராய்கையில் கண்ணுக்கு பட்டது. வண்டியின் டீசல் டேங்கை உடைத்த பெரிய கல் டீசல் டேங்கிற்கு அடியிலேயே சிறிது இடைவெளியுடன். கீழே சரளைக் கற்கள், சிறு சிறு பாறைகள் என வண்டியை சீர்குலைக்க காத்திருந்தது.

வண்டி நடுவிலும், பின் புறமும் அதிகம் பாதிக்காமல் காத்திருந்தது எது என்று பார்த்தால், வண்டியின் முன்புறம் ஒரு கல் ஜாக்கி வைத்து தூக்கியது போன்று் முன்சக்கரங்களை இணைக்கும் பட்டையைத் தூக்கி வைத்திருந்ததே. ஒரு மண்வெட்டியும், கடப்பாரையும் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமே என்று ஊர்காரர்கள் வருத்தப்பட்டார்கள். உண்மையில் மண்வெட்டியும் கடப்பாரையும் கொண்டு வண்டியை மீட்டெடுக்கவும் முடிந்திருக்கும். ஆனால் நேரம் அதிகம் எடுத்திருக்கும்.

பார்த்துக் கொண்டே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று, மீட்பு பணியில் இறங்கினோம். முதலில் வண்டியின் நடுவிலும் பின் புறமும் வண்டியை பதப்படுத்தக் காத்திருந்த கற்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊர்காரர்கள் ஈடுபட்டனர். அனைத்தும் நீக்கிய பிறகு இப்பொழுது மிகப் பெரும் பிரச்சினையாக இருந்தது முன்சக்கரத்திற்கிடையில் இருந்த அந்த ஜாக்கி போன்ற கல் தான்.

அதனை எவ்வாறு எடுக்க என யோசித்து ஒருவழியாக, நமது பாஸில் இருக்கும் ஜாக்கியை வைத்து தூக்கி அக்கல்லை அப்புறப்படுத்தலாம் என முடிவெடுத்து, வண்டியில் இருந்த ஜாக்கியை எடுத்தால் ஜாக்கியை உயர்த்த சுழற்றத் தேவையான லீவர் இல்லை. பிறகு அவ்வழியே போன ஒரு டிராக்டரை நிறுத்தி அவர்கள் தந்த கம்பிகளின் உதவியோடு அக்கல்லை அப்புறப்படுத்தினோம்.

அப்பொழுது தான் எங்களுடன் வந்த ஊர்காரர் ஒருவர் வண்டியை உட்புறமாக பார்த்து, ஆடியோ செட்டைக் கழற்றிக் கொண்டு சென்றீர்களா, இல்லை ஆடீயோ செட் வைத்திருக்கவில்லையா என்ற கேள்வியை துரை ஐயாவிடம் கேட்க, துரை ஐயா இல்லையே இருந்ததே என்று சொல்ல, எல்லாம் புரிந்தது. ஆடியோ செட், ஏசி ரெகுலேட்டர், வண்டியின் ஓரம் ஒட்ட வாங்கி வைத்திருந்த பட்டிகள் இரண்டு, இருக்கைக்கு போடப்பட்ட பாசிமணிகள் என அனைத்தையும் ஒரு கும்பல் களவாடிக் கொண்டு அதற்கு ஈடாக தங்களின் நைந்து போன துண்டையும், கைலியையும் விட்டு விட்டு சென்றிருந்தனர்.

வண்டி ஓரளவு சமநிலையில் இப்பொழுது அமர்ந்திருந்தாலும் ஐந்து பேரால் அதனை மேலே எடுக்க முடியாது என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். டீசல் டேங்கிலிருந்து டீசல் ஒழுகிக் கொண்டே இருந்தது. பிறகு ஒரு ஜேசிபி வண்டி உரிமையாளருக்குத் தெரிந்தவர் என்று நினைக்கிறேன். மூலையில் தான் ஜேசிபி இருக்கிறது, வரவழைத்து மேலே எடுத்து விடலாம் என்று சொன்னார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஜேசிபி யில் வண்டியை மீட்பதா. மண் அள்ளிப் போடும் வண்டியில் எப்படி காரை அள்ள முடியும். கிரேன் வண்டியைத் தான் இப்படிச் சொல்கிறார்களா என்று ஒரே குழப்பம். ஏனென்றால் வண்டியின் வலப்புறக் கண்ணாடி ஒன்றில் கிரேன் உரிமையாளர் ஒருவர் தனது விசிட்டிங் கார்டு ஒன்றைச் சொருகி வைத்துச் சென்றிருந்தார்.

வழியில் போவோர் வருவோருக்கெல்லாம் ஒரே பதிலைச் சொல்லி சொல்லி சமாளிப்பதில் மிகவும் மெனக்கெட வேண்டியதாகப் போனது. ஜேசிபி எடுத்து வரச் சொல்லலாம் என முடிவெடுத்த போது, ஒரு கிரேன் உரிமையாளர், ஜேசிபியில் அதிகம் வண்டி டேமேஜ் ஆகும். கிரேன் உபயோகம் செய்து கொள்ளலாம் என்று சொல்ல ஆனால் உடன் வந்திருந்த ஊர்காரர்கள், ஜேசிபியே போதும் எனச் சொல்லி, எங்களடன் வந்த மூவரில் ஒருவர் ஜேசிபியை அழைத்து வர ஜேசிபி இருப்பதாக எங்களிடம் சொன்னவருடன் புறப்பட்டுச் சென்றார்.

புறப்பட்டு நெடு நேரமாகியும் சென்றவர் திரும்பவில்லை. இதற்கிடையில் வண்டியின் இன்ஷ்யூர் கிளைம் செய்ய போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் என எங்களுடன் வந்த ஊர்காரர் சொல்ல, அதன்படியே துரை ஐயாவின் கூல்பிக்ஸில் விபத்திற்குள்ளாகி இருந்த பாஸை நான் சில போட்டோக்கள் எடுத்தேன். (ஸ்னாப்ஷாட்டுக்குக் கூட தகுதி பெறாது என்றே நினைக்கிறேன்.)

ஒருவழியாக ஜேசிபியும் வந்து சேர்ந்தது. பைப்லைனுக்காக வெட்டியிருந்த குழியை, வண்டியின் முன்புறமாக வண்டி மேலே எடுத்து வருவதற்காக மூடி விட்டு, பாஸை முன்புற சக்கரங்களின் இடையில் கயிற்றால் கட்டி அதனை ஜேசிபியுடன் இணைத்து ஒருவழியாக மேலே ஏற்றி விட்டோம். இதைச் செய்யும் போது பயந்து கொண்டே இருந்தது ஒரு விஷயம் தான்.

அது, அந்த சாலை ஒரு வண்டி மட்டுமே போகக் கூடிய அளவிற்குச் சிறிய சாலை. நாம் மீட்பு பணியில் ஈடுபடும் போது வண்டிகள் வந்தால் அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதே. ஆண்டவன் அருளால் அதிகம் வண்டி எதுவும் வரவில்லை. ஒரே ஒரு வண்டி வந்தது. அதனையும் உதவிக்கு வந்திருந்த ஊர்காரர்கள் காத்திருக்கச் சொல்லி வண்டியை பள்ளத்திலிருந்து மீட்டாயிற்று.

இனி,...

(நமது வண்டி இறங்கியிருந்தது, வலப்புறம் பைப்லைனுக்கான குழியில், மலையை ஒட்டி. இடப்புறம் பார்ப்பதற்கே பயமாக இருக்கும் கிடு கிடு பாதாளம். ஒன்னரை அடி உயரத்திற்கு மட்டுமே பாதுகாப்புச் சுவர் என்ற பெயரில் மேம்போக்காக வைக்கப்பட்டுள்ள கற்கள் தான் அந்த பாதாளத்தில் எதிர்பாராத விபத்துகளில் வண்டியை விழாமல் தடுக்க இருக்கும் சுவராம்.)

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 5

காலை டிபன் முடித்து வெளியே வந்த பின்பு, குழலி என்னுடன் ஒட்டிக் கொண்டாள். நாங்கள் இருவரும் விளையாடிக் கொண்டே இருக்கும் போது விழியன் அண்ணா எங்கேயோ செல்கிறாரே என்று அவரைப் பின் தொடர்ந்தேன். பிறகு தான் தெரிந்தது, அது மணமகனைச் சந்திக்க என்று. நானும் சென்று நந்தா அண்ணனிடம் அறிமுகமாகி (வாழ்த்துகளைச் சொன்னேனா என்று சந்தேகம் உள்ளது) அளவளாவிக் கொண்டிருந்தோம்.

வித்யா அண்ணி, திருமதி நந்தா அவர்களை இப்போது சந்திக்க முடியுமா எனக் கேட்க, எனக்கே அனுமதி கிடையாது என்று நந்தா அண்ணன் வருத்தத்துடன் சொன்னார். :))). எங்கள் அனைவரையும் நந்தா அண்ணன் திருமண வரவேற்பு(ரிசப்ஷன்) முடியும் வரை இருக்கச் சொல்ல, நந்தா அண்ணனிடமிருந்து விடைபெற்று வந்தோம்.

கீழே துரை ஐயாவும், ஊர்காரர்கள் சிலரும் நமது பாஸை(BOSS) மீட்டெடுக்க நரேஷ் அண்ணா உதவியுடன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். விழியன் அண்ணா தானும் அவர்களுடன் செல்வதாகச் சொல்ல, எனது உள்மனத்தின் வேட்கையால், விழியன் அண்ணாவை திருமண மண்டபத்தில் இருக்கச் சொல்லி விட்டு நான் துரை ஐயாவுடன் பயணமானேன்.

நான் துரை ஐயா, ஊர்காரர்கள் இருவர் என பாஸை மீட்க புறப்பட வழியில் மீட்பு பணிக்காக என்னென்ன வேண்டும் என்று தெரியாததால் உத்தேசமாக, துரை ஐயா டீசல் டேங்க் உடைந்திருக்கிறது எனச் சொன்னதால் டீசல் கேன் ஒன்று, வண்டியை கட்டி இழுக்க கயிறு, சில பப்புள் கம், M-seal என பலதையும் வாங்கிக் கொண்டு புறப்படுகையில், இன்னொரு ஊர்க்காரரையும் துணைக்கு ஏற்றிக் கொண்டோம்.

புதிதாக ஏறிய ஊர்காரர், ஆரம்பத்திலேயே வயிற்றில் புளியைக் கரைத்தார், "அன்று காலை, தனது நண்பர் ஒருவர் அவ்வழியில் சென்றதாகவும், ஆனால் அவ்வழியில் ஏதும் விபத்து ஏற்பட்ட கார் அவரது கண்ணுக்கு புலப்படவில்லை என்றும்" சொல்லி. சிறிது தூரத்தில் ஒரு பெட்ரோல் பங்க் வர அங்கு வண்டியை நிறுத்தி டீசல் பிடித்துக் கொண்டோம்.

டீசல் பிடிக்கும் போது, பெட்ரோல் போடுபவரிடம் வண்டியைப் பற்றி எங்களுடன் வந்த ஊர்காரர் விசாரித்தார். அவர்களது உரையாடல் கன்னடத்தில் இருந்தது. இதுதான் அவர்கள் பேசியதின் சாராம்சம்.

ஊர்காரர்: அண்ணே, வண்டி ஒன்னு பைப்லைன் குழியில் இறங்கிடுச்சு. காலையில வேலைக்கு வரும் போது பார்த்தீங்களா...

டீசல் போடுபவர்: ஆமாம்பா, பார்த்தேன். நேத்து கூட அந்த வண்டியில வந்தவங்க நம்ம கிட்ட தான் வழி கேட்டுட்டு போனாங்க. எப்படி ஆச்சுப்பா? யாரு வண்டி?

ஊர்காரர்: நம்ம வண்டி தான்னே... பிரேக்டவுன் ஆகிடுச்சு... அதை எடுத்துட்டு வர தான் போறோம்...

இப்படி அவர்களது பேச்சு போய் கொண்டிருக்க, டீசல் கேனில் டீசல் பிடித்து கொண்டு நாங்கள் அவரிடமிருந்து விடைபெற்று எங்களது மீட்பு பணிக்கான பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் கர்நாடகா செக்போஸ்ட். அங்கிருந்த காவலாளியிடம் ஊர்காரர் விஷயத்தைச் சொல்லி விசாரிக்க அந்த போலிஸ்காரர், ஏன்பா, ஆக்ஸிடென்ட் நடந்தா, போட்டது போட்டபடி எல்லாத்தையும் வெளியே விட்டுட்டு ஓடுவீங்களா என்றார். ஏதோ காகிதங்கள் எல்லாம் வெளியில் போட்டு இருந்ததாகச் சொன்னார் அந்த போலிஸ்காரர்.

சரியென்று, அவரிடம் விடைபெற்று பாஸ் இருந்த இடம் நோக்கி புறப்பட்டோம்... அங்கு....

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 4

அவர்...

அவரைப் பார்த்ததும், என்னடா கல்யாண மாப்பிள்ளையே வரவேற்கிறாரேனு ஒரு கனம் நினைத்து விட்டேன். பிறகு தான் தெரிந்தது அது நரேஷ் அண்ணா என்று. வண்டியிலிருந்து இறங்கிய எங்களை வரவேற்ற நரேஷ் அண்ணா, நேரடியாக காலை டிபனுக்கு அழைத்துச் சென்றார்.

டிபனா அது... அப்பப்பா, சாப்பிட்டு மாளவில்லை. அவ்வளவு அயிட்டங்கள். இதுல வில்லன் வேறு, என்ன அண்ணே அயிட்டங்கள் இவ்வளவு தானா என்று கேட்க பரிமாறுபவரோ மதியம் தான் அதிக அயிட்டங்கள் (சுமார் 22 அயிட்டங்கள்) தம்பி என்று சொல்லி விட்டுச் சென்றார். எனக்கு அப்பொழுதே பாதி வயிறு நிரம்பி விட்டது.

காலை டிபன் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஒருவர் அனைவரிடமும் என்ன வேண்டும் எனக் கேட்டு முகமலர்ச்சியுடன் எங்களைக் கவனித்து வந்தார். அது வேறு எவருமில்லை. திருமதி நரேஷ் அவர்கள் என விழியன் அண்ணா அறிமுகம் செய்து வைத்தார் எனக்கு. திருமண வேலைகள் கொட்டிக் கிடக்கும் நிலையிலும் நண்பர்களுக்காக ஒரு சில நிமிடங்களேனும் நாம் ஒதுக்க வேண்டும் என்ற எண்ணமுடன், முகமலர வரவேற்று என்ன வேண்டும் எனக் கேட்ட அந்த உபசரிப்பை நிச்சயமாக என்னால் மறக்க முடியாது...

எதார்த்தமாக எனது இடது பக்கத்தில் விழியன் அண்ணா, குழலி பாப்பா, வித்யா அண்ணியும், வலது பக்கத்தில் துரை ஐயாவும் அமர்ந்திருந்தார்கள். குழலிக்கு உணவூட்ட விழியன் அண்ணாவும், வித்யா அண்ணியும் பிரம்ம பிரயத்தனம் செய்தார்கள். பாப்பாவோ, சாவகாசமாக தனக்கு பிடித்ததை மட்டும் சிறு சமயம் இருவிரலாலும், சில சமயம் தனது ஐந்து பிஞ்சு விரல்களாலும் அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

குழலி பாப்பாவின் சாப்பிடும் அழகை சில வரிகளில் இப்படிச் சொல்லலாம்.

மோட்சத்திற்குத் தவமாய்
இலையில் காத்திருக்கும் பண்டங்கள்...

மோட்சம் கிடைக்காமல்
மரித்துப் போனவை சில..

இருவிரலின் தீண்டலில்
திரிசங்கு சொர்க்கம் கண்டன சில...

ஐந்து விரலின் பிணைப்பில்
அங்கத்தை நிரப்பி
சொர்க்கம் கண்டன சில...

சொர்க்க வாசல் வரை சென்று
சொர்க்கத்தைப் பாராமலேயே
வம்படியாய் கழுவப்பட்டு உயிர்நீத்த சில...

அடுத்த வேளை தவத்திற்கும்
அடுத்த வேளை தரிசனத்திற்கும்
இடையே ஆரம்பமானது
குழலி விளையாடல்.!


இவ்வாறு விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, விழியன் அண்ணா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அது அதற்கு முந்தைய நாள் அவர்கள் கண்டு மீண்டு வந்த விபத்துச் செய்தி. கேட்டதும் உள்புறமாக என்னையும் அறியாமல் பயம் தொற்றிக் கொண்டாலும் என்ன ஆச்சு, எப்படீ என்று விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அப்பொழுது தான் புரிந்தது ஒரு விஷயம் எனக்கு. அது, வில்லன், துரை ஐயாவின் பாஸ் எங்கே என்று கேட்டதற்கு, துரை ஐயா காரை மேலே பார்க் செய்திருக்கிறோம் என்று சொன்னதின் உள் அர்த்தம்.

நாங்கள் ஐவர்(விழியன் அண்ணா, குழலி பாப்பா, வித்யா அண்ணி, நான், துரை ஐயா) விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே விருந்து முடித்த மற்ற நண்பர்கள் கை அலம்பி விட்டு ரூமுக்குச் சென்று விட்டனர். ஒருவழியாக காலை விருந்து முடிந்தது. மனதிற்குள், ஹப்பாடா திருமணத்திற்கு வந்ததில் ஒரு முக்கியமான விஷயம் திருப்தியாக முடிந்தது என்று வெளியே வந்தோம்...

பிறகு...

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 3

சினுங்கும் அலைபேசியை எடுத்துப் பார்த்தால், எதிர்முனையில் உதயன். அவன் எங்கிருக்கிறான் என விசாரிக்கும் போது லாட்ஜுக்கு கீழ் அவன் இருப்பதாகச் சொல்ல அவனைப் பார்க்க துரை ஐயாவிடமும், ச.கி.ந ஐயாவிடமும் விடைபெற்று கீழே சென்றேன்.

கீழே உதயனும், ஓம்ஸ்ரீயும்(வில்லன்) நின்றிருந்தார்கள். அநியாயத்திற்கு எக்ஸ் மற்றும் ஒய் ஆக்ஸிஸில் வளர்ந்திருக்கும் வில்லனைப் பார்க்க பாவமாக இருந்தது. சிறிது நேர பரஸ்பர நலன் விசாரிப்புக்குப் பின் எதையெதையோ பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேர இடைவெளியில் துரை ஐயாவும், ச.கி.ந ஐயாவும் எங்களுடன் கலந்து கொள்ள, சற்று நேரத்தில் விழியன் அண்ணாவும், விழியன் அண்ணா குடும்பத்தாரும் கீழே வர அனைவரும் திருமண மண்டபத்திற்குச் செல்லக் காத்திருந்த வண்டியில் ஏறி அமர்ந்தோம்.

பேருந்து ஏறப் போகும் முன்பு எனக்கு அறிமுகமில்லாத நபர் என்னை எதிர்கொண்டார். ஆனால், விழாவுக்கு வந்திருந்தவர்களின் பட்டியலை உதயன் என்னிடம் சொல்லி இருந்ததால் எதிர் வந்த நபர் இன்னாராகத் தான் இருக்க வேண்டும் என்று உத்தேசித்து, தைரியமாக ஹாய் வினோத், திஸ் இஸ் பிரசாத்... பிரசாத் வேணுகோபால் என்றேன்... அவரும் ஹாய் என்று சொல்லி அறிமுகமாகிக் கொண்டார். அந்த புதுமுகம் வினோத் என்கிற ஸ்நாபக் வினோத்...

திடீரென ஹாய் ஹாய் என ஒரு அலம்பல். யாரடா என்று பார்த்தால் நம்ம டேமேஜர் மேடம்(அஷிதா அக்கா). எல்லோருக்கும் ஹாய் சொன்னவர்கள், துரை ஐயா பக்கத்தில் துரும்பாய் அமர்ந்திருந்த என்னைக் கண்டு கொள்ளாதது வருத்தமாய் போக நானே அவர்களை அழைத்து ஒரு ஹாய் சொன்னேன். அடுத்தது சுதாகர் (டேமேஜர் மேடத்திற்க வாழ்வளித்த வள்ளல்) ஐயாவுடன் அறிமுகம் ஆக எல்லோரும் வந்து விட்டதாக வண்டி புறப்பட்டது.

சிறிது நேரம் கழித்து ஓவியாவைப் பார்க்கலாமே என்று எண்ணிய போது தான் ஸ்டாலின் அண்ணா நினைவு வர, ஸ்டாலின் அண்ணாவை ஆளைக் காணோமே என்று துரை ஐயாவைக் கேட்க அவர்கள் அடுத்த வண்டியில் வருவதாகச் சொன்னார்.

எனக்கு பின் சீட்டில் குழலி. எத்தனை கெஞ்சியும் ஒட்டவே இல்லை. மிக ஆர்வமாக எதையே படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்கள். குழலி மொழியைக் கேட்டதும் எனக்கு ஐயன் எழுதிய குறளை


குழலினிது யாழினிது என்பஎன் செல்ல
குழலிமொழி கேளா தவர்

என்று மாற்றத் தோன்றியது. அத்துனை இனிமையாக பேசிக் கொண்டு வந்தாள் குழலி. குழலியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. திருமண மண்டபம் வந்து சேர்ந்தோம்...

வண்டியிலிருந்து இறங்கியதும், முகமலர வரவேற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். அவர்....

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்-2

எனது பேருந்து நான் எதிர்பார்த்த நேரத்திற்கும் முன்னதாக ஒன்பது மணியளவில் மேட்டூரை அடைந்து விட்டது. நான் முன்னதாக உதயனிடம் பதினோறு மணி வாக்கில் திருமணத்திற்கு வருவதாகவேச் சொல்லி இருந்தேன்... இரண்டு மணி நேரம் முன்னதாக வந்துவிட்டதால் மனதில் ஒரு நெருடல்...

நண்பர்கள், திருமணம் நடக்கும் கொளத்தூரில் இருப்பார்களா, இல்லை மேட்டூரிலேயே இருப்பார்களா என்று. மேட்டூர் பேருந்து நிலையம் இறங்கினால் எதிரில் கொளத்தூர் செல்லும் பேருந்து. உதயனுக்கு அலைபேசியில் அழைத்தால், எனது பணத்தை விரயமாக்கவே கூடாது என்ற நோக்கத்தில் உதயன் இருமுறை அழைத்தும் எனது அழைப்பை எடுக்கவே இல்லை.

அடுத்ததாக விழியன் அண்ணாவிற்கு அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசிய விழியன் அண்ணா, மேட்டூரிலேயே இருப்பதாகவும், வண்டி இருப்பதால், அருகிலேயே இருக்கும் எஸ் எல் கே லாட்ஜுக்கு வருமாறு பணித்தார். கொளத்தூர் செல்லும் அரசு பேருந்திற்கு டாட்டா காண்பித்து விட்டு லாட்ஜ் நோக்கி நகர்ந்தேன்...

லாட்ஜ் அடைந்ததும் தான் தோன்றியது, லாட்ஜ் பெயரை மட்டும் கேட்டு அறை எண்ணைக் கேட்க மறந்து மடத்தனம் செய்து விட்டோமே என்று. மீண்டும் ஒர் அழைப்பு, தகவல் பரிமாற்றம். இரண்டாம் அடுக்கிற்கு சென்றேன். அங்கு முகம் நிறைய மலர்ச்சியோடு துரை ஐயா, விழியன் அண்ணா, ஸ்டாலின் அண்ணா மற்றும் ச.கி. நடராஜன் ஐயா ஆகியோர் என்னை வரவேற்றார்கள். கூடுதல் வரவேற்பாளராக குழலி.

ச.கி. ந ஐயாவையும் ஸ்டாலின் அண்ணாவையும் ஏற்கனவே சந்தித்திருந்ததால் விழியன் அண்ணாவிடமும் துரை ஐயாவிடமும் பரஸ்பரம் நேரில் அறிமுகமாகிக் கொண்டேன். குழலி ஏனோ என்னிடம் சேர மறுத்தாள்... அழுது அழுது குழலியின் கன்னம் வாடி இருந்ததால் மேலும் அழ வைக்க விருப்பமில்லாமல் எனது பயமுறுத்தலை நிறுத்தவும், விழியன் அண்ணா, திருமணத்திற்கு கிளம்ப குழலியைத் தயார் செய்ய எடுத்துச் செல்லவும் நேரம் சரியாக இருந்தது.

லாட்ஜை நெருங்கும் முன் வரை ஸ்டாலின் அண்ணாவைப் பார்த்தால் நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டுமென்று நொடிக்கொரு முறை நினைத்துக் கொண்டே சென்றாலும், நண்பர்களைப் பார்த்ததும் ஸ்டாலின் அண்ணாவிற்கு வாழ்த்து சொல்ல மறந்து போனேன். நல்ல வேளையாக ச.கி.ந ஐயா நினைவுபடுத்த ஸ்டாலின் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னேன்.

ஸ்டாலின் அண்ணா, தம்பி இரு... என்று ஏதோ பேச ஆரம்பித்து பேசாமலேயே அவரும் ரெடியாக கிளம்பவே ச.கி. ந ஐயாவிடமும் துரை ஐயாவிடமும் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென என் அலைபேசி சினுங்கல்... எடுத்துப் பார்த்தால்....

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்

நந்தா அண்ணா, தனது திருமண அறிவிப்பைச் சொல்லும் போதே எந்த வித முக்கிய வேலையும் அன்றைய தினத்தில் இல்லையேல் கட்டாயம் நான் திருமணத்தில் கலந்து கொள்வேன் எனச் சொல்லி இருந்தேன்...

எனது சூழ்நிலையோ அண்ணனின் திருமணத்தன்று எந்த வேலையும் இல்லாமல் போனாலும், அதற்கு முன்னும் பின்னும் சில முக்கிய நிகழ்வுகளில் நான் இருக்க வேண்டிய கட்டாயம். செல்வதா வேண்டாமா என்று ஒரு வாரம் மனப்போராட்டத்தில் இருந்த நான் ஒருநாள், பல நாட்கள் இணையம் வராமலும், இணையம் வந்தாலும் இன்விசிபிளிலும் இருந்த நான் அன்று அவைலபிள் மோட் வந்தேன்...

அவைலபிள் வந்த ஐந்து நிமிடத்திற்குள்ளாக நந்தா அண்ணன் சாட் வின்டோவில், திருமணத்தைப் பற்றிய நினைவுறுத்தல் செய்து ஒரு குறுந்தகவல்...

படித்ததும், அண்ணா வேலைப்பளு இருக்கிறது. முடிந்தால் திருமணத்தன்று காலை கிளம்பி வரப் பார்க்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம் என்று மறுமொழி அனுப்பினேன்...

பரவாயில்லை, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. திருமணத்திற்கு வர முயற்சி செய் தம்பி என்றார்.

அவரது வருத்தம் தொய்ந்த அந்த மறுமொழி சொன்னது, என்னையும் அவர் எதிர்பார்த்து காத்திருக்கும் பாசம்.

முடிவெடுத்தேன்... பர பர வென்று எனது திட்டமிடலில் சிறு சிறு மாற்றம் செய்தேன், திருமணத்தன்று காலை எப்படியும் திருமணத்திற்கு கிளம்பி செல்வது என்று.

நாள்: 16.11.2011; நேரம்: காலை ஆறரை மணி

சமீப காலமாக அதிகாலை எட்டு மணிக்கு எழுந்தே பழக்கப்பட்ட நான் நள்ளிரவு ஆறரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பத் தயார்.

காவேரிப்பட்டிணத்திலிருந்து தருமபுரியும், தருமபுரியில் இருந்து மேட்டூரும் பேருந்து பயணம்.

தருமபுரியிலிருந்து மேட்டூர் செல்லும் வழியில் எனது பேருந்து தொலைகாட்சிப் பெட்டியில் அந்த அதிகாலை வேளையில் ஒரு அபரிமிதமான பாடல்...

இப்பாடல் பார்த்ததும் நந்தா அண்ணனை நினைத்து வயிறு வலிக்கச் சிரித்தேன், என்னை பைத்தியமோ என்று மற்றவர்கள் முறைத்து பார்க்கும்படி... என்ன பாட்டு என்று தானே யோசிக்கிறீர்கள்... சொல்கிறேன்... சிறிது இடைவேளை விடுத்து... பாடல் காட்சி, விஜயகாந்த் பட்டை சாராயம் குடித்துக் கொண்டு பாடுவதைப் போன்று... முயற்சி செய்யுங்கள்...

மொபைல் காதல் -4

எத்தனை முறை அழைத்தும்
என்னைப் பிடிக்க முடியவில்லை உன்னால்...

மிஸ்டு காலாக என் கால்...
சிரித்து நின்றாள் எதிரே.!

அழைத்தலுக்கும் பிடித்தலுக்கும் இடையே
அலைகழிக்கப்படும் காதல்...

பொறுமையிழந்து வெடிக்கிறது
வண்ணமயமான பட்டாசாய்...

என்றும்.​..
என்னோட அழைப்பில் மட்டும்.!

மொபைல் காதல் -3

காலை எழுந்ததில் இருந்து
பல் துலக்கியது
குளித்தது,​
உடை அணிந்தது...
எல்லாவற்றையும் சொல்லி முடித்து
இனி உறங்க வேண்டும் என்கையில்...


ஹ்ம்ம்ம்​...
செல்லச் சினுங்கலுடன் கொஞ்சி நின்றாள்...

எல்லாம் சரியாகத் தான் செய்கிறீர்கள்...
எனக்​கான அழைப்பை மட்டும் மறந்து.!

சட்டென நினைவுக்கு வந்தது...

இந்த போன்காலைச் செய்தவள் அவள்.!

மொபைல் காதல் -2

பேசச் சொன்னாள்...

பேச ஆரம்பிக்கும் முன்னே
பேசித் தின்றாள்...

மூச்சு வாங்கும் நேரத்தில்
பேச விருப்பமில்லையா...
வை​த்து விடவா...
போரடிக்கிறேனா​...
என மூக்கைச் சிந்தினாள்...

அப்படி இல்லம்மா.....

முடிக்கு​ம் முன்னே
சிரித்துச் சொன்னாள்...
நீ தானேடா எனக்கு எல்லாம்...
உன் கிட்ட தானே இப்படி பேசலாம்...

அவள் பேசிக் கொண்டே போக
பேசாமல் விட்ட என் வார்த்தைகள்
அறை முழுக்க பேசி சிரித்தது
என் காதலை...

மொபைல் காதல் -1

என்ன தான் பேசுவார்கள் அப்படி

ஹ்ம்ம்ம்...
உழை​த்த காசை உறிஞ்செடுக்கிறான்
இந்​த தொலைதொடர்பு தருபவன்...

உணராமல் உரையாடுகிறார்களே...
இ​வ்வளவு நேரம்.!

ம்ஹூம்... இனி ஆகாது...
ஆரம்பிக்க வேண்டியது தான்...

நாமே அழைத்து விடலாம் இன்று...
அவளி(னி)ன் அழைப்பை எதிர்பாராது.!

துறவு

அழியும் உலக சுகங்கள் விடுத்து
பழியாய் தொடரும் உறவை விடுத்து
நிலையாய் இருக்கும் வழிவகைத் தேட
அறமாய் இருத்தல் துறவு.

இருக்கும் உறவை விலக்கிட வேண்டும்
இனியோர் உறவை தவிர்த்திட வேண்டும்
இரண்டுமே பாங்காய் நடந்தால் கிடைக்கும்
வரமாய்என் வாழ்வில் துறவு.

ஆசை அடக்கல் துறவறம் அன்று;வரும்
சாவைத் தவிர்த்தல் துறவறம் அன்று;பெறும்
வாழ்வை இனிய வரமென எண்ணி;தம்
வாழ்வினை வாழ்தல் துறவு.

இல்லத்தைக் காக்கும் வகையிலா மானுடர்
இல்லத்தை வாட்டி இடுகாடாய் மாற்றிட
இல்லறம் ஆகுமோ நல்லறம் கேட்பீர்நீர்
இல்லையோர்;துன் பம்துற வில்.

உறவில் சுகங்கள் கிடைப்பது உண்மை
உறவால் சுகங்கள் கிடைப்பதும் உண்மை
கிடைக்கும் சுகங்கள் நிலைத்திடல் என்றால்
துறவேச் சரியாம் உணர்.

பார்வையை மாற்றிடச் சொன்னீர் சரிசரி
பார்வையை மாற்றினால் மாறுமோ உண்மையும்
வாழ்க்கையின் இன்பம் நிலையிலை என்பதற்கு
வாழ்ந்திடும் வாழ்க்கையேச் சான்று.

சரியெது என்றும் பிழையெது என்றும்
அனைவர்க்கும் சொல்ல அறிந்தவர் யாரோ
அவரவர் செய்கை சரியாம் அவர்க்கு
தவறொன்றும் இல்லை அதில்.

இச்சையதைக் கொள்ளாதல் நன்றென்று சொல்லியதும்
இச்சைதான் என்று அறியுங்கால் வந்ததுவே
இச்சினால் பிழையும் எனக்கு

வெண்பாக்கள் சில

ஹரியென்றும் நல்ஹரன் என்றும் மனதில்
வரித்தார்கள் நல்லிறை என்றே; மனிதர்
நலம்வாழ இவ்விறை என்க;அவன் பேரில்
கலகங்கள் காண்பது ஏன்?

நம்மைமிஞ்சும் சக்திக்கே நாமமிட்டார் பக்தியினால்
இம்மைமறுமை நீக்கிடவே நல்லிறையென்று ஆக்கிவிட்டார்
உண்மையிஃதை தானுணரா சண்டையிங்கு தான்வளர்க்கும்
தன்மைமக்கள் ஏன்கொண்டார் சொல்.

கேட்டால்தான் நான்வருவேன்; கேட்டால்தான் நான்கொடுப்பேன்;
கேட்டால்தான் தாழ்திறப்பேன்; கேட்டால்தான் வாழ்வளிப்பேன்;
எல்லாமே கேட்டால்தான் என்றாலோ கேட்டதெவர்
பொல்லாத பூமியில் வாழ்வு.


எங்கென்று நாம்பிறப்போம் எங்கென்று நாம்;இறப்போம்
என்றான சங்கதிகள் எங்கிங்கே வாழ்கிறதோ
அங்கேதான் வாழ்கின்றான் ஆண்டவனும் சூட்சமமாய்
அங்கவ(த)னைத் தேடி அறி.


சட்டைசெயும் சொந்தமெலாம் பட்டினியால் வாடிநிற்க
பட்டணத்தில் வீடுஒன்று எட்டடுக்கில் கட்டிவைத்து
சட்டெனவே செத்துவிட்டால் சூழவரும் சொந்தமதில்
சொட்டுகண்ணீர் யார்விடுவார் சொல்


உள்ளத்தில் வெள்ளமென பொங்கிவரும் உள்ளெழுவை;
சொல்லிவிட; சொல்லியதை கேட்டமட்டில் உள்ளிழுக்க;
சொல்லாக்கி ஆக்கியதை நல்லெழுத்தாய் வாரிசுக்கும்
சொத்தாக்கி வைத்தார்; மொழி.

சினிமா - மூன்று மணி நேர பொழுதுபோக்கு

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். நமது வேலையின் மனகுழப்பங்களில் இருந்தும், இயந்திரத்தனமான வாழ்வின் இறுக்கத்திலிருந்தும் விடுபட நமக்கு கிடைக்கும் ஒரு சிறு இடைவேளை. அவ்வளவே. அதனைச் சரியாக புரிந்துகொள்ளாமல் சினிமாவை வாழ்வின் எதார்த்தங்களோடு எதற்காக நாம் குழப்பிக் கொள்கிறோம் எனப் புரியவில்லை

சினிமா என்பது எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நாம் எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறோம். ஏன் சினிமா என்பதை, நாம் ஒரு மதத்தைப் போல, ஒரு அரசியல்கட்சியைப் போல மக்களில் மாற்றத்தை ஒரு புரட்சியை உண்டாக்கப் பிறந்தது என்று கருதுகிறோம் ???
நான் சினிமாவைக் குறை கூறவில்லை. சினிமா என்பதும் ஒரு தொழில். ஒரு மளிகைக் கடைக்காரன் தனது மளிகை பொருட்களை விற்க செய்யும் தந்திரங்களைப் போல், ஒரு ஜவுளி கடைக்காரன் தனது துணிகள் விற்க செய்யும் தந்திரம் போல் சினிமாவை வியாபாரம் செய்பவர்களும் செய்யத்தான் செய்வார்கள். அது அவர்களின் தவறு கிடையாது.

சினிமாவை நிஜ வாழ்க்கையோடு காட்சிக்கு காட்சி ஒப்பிட்டுப் பார்ப்பதை நாம் எப்பொழுது தவிர்க்கப் போகிறோம். சினிமா என்பது நிஜ வாழ்க்கையின் சில பிம்பங்களை ஒரு சில காட்சிகளில் காட்டியிருக்கிறது,. இனியும் காட்டும். ஆனால் ஒரு சில நிஜ வாழ்க்கை பிம்ப காட்சிகளைக் கொண்ட படம் என்பதை மறந்து மொத்த படமும் நிஜ வாழ்க்கை என நம்புதல் அசட்டுத்தனமானது என்பதை எப்பொழுது நாம் உணரப் போகிறோம்.

உண்மையில் சொல்லப் போனால், சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில், சினிமாவால் மக்கள் மனதில் ஏற்பட்ட எண்ணங்கள் யாது. மக்களுக்கு உதவி செய்யும் கதாநாயகனைப் பார்த்து சக மனிதனுக்கு உதவி செய்த ரசிகனும் உண்டு. கதாநாயகனின் சில தீய பழக்கங்களைக் கண்டு தன்னை தீய பழக்கத்திற்கு அடிமையாக்கிக் கொண்டவனும் உண்டு என்று பக்கத்திற்கு ஒருவராய் வாதிட்டுக் கொள்ள(ல்ல)லாம்.

ஆனால், உண்மை என்ன? ஒரு மனிதன் தனது உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படுத்த, நல்லதோ தீயதோ அடுத்து வரும் விளைவுகளுக்கு யார் மேலாவது பழி சுமத்தி தான் தப்பித்துக் கொள்ள சினிமாவை ஒரு கருவியாக்கவே, சினிமாவைப் பார்த்து இதைச் செய்ததாகச் சொல்லும் ஒவ்வொரு மனிதனும் விரும்பினான்.

தனது நிஜ வாழ்க்கையின் வேதனைகளை அப்புறப்படுத்தி விட்டு, ஒரு மூன்று மணி நேரம் நம்மை நாம் மறந்து, மகிழ்ந்து விட்டு மீண்டும் எதார்த்தத்திற்குத் திரும்ப வேண்டிய நம்மில் பலர், அந்த சினிமாவைப் பார்க்கும் போதே ஒவ்வொரு காட்சியையும் எதார்த்தத்தோடு ஒப்பிட்டு பார்த்து, அந்த படத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்துக் கொண்டு மூன்று மணி நேர மகிழ்வான தருணத்தையும், தன்னை, தன் மனதை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வதைப் பார்க்கும் போது வருத்தமே மிஞ்சுகிறது.

இறுதியாக, சினிமாவைப் பாருங்கள். கடந்த, நிகழ்கால எதார்த்த வாழ்க்கை சில காட்சிகளாக ஒரு படத்தில் கட்டமைக்கப்பட்டிருந்தால் அதைப் பற்றி உண்மையான விஷயங்களை படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து, ஒரு சில காட்சிகளை மட்டுமே காண்பித்து விளம்பரத்தில் ஏமாற்றி என்னை பார்க்கச் செய்து விட்டான் என்ற புலம்பல்களைத் தவிருங்கள். இதுவும், ஜவுளிக் கடையில் இரண்டு பேன்டு வாங்கினால் ஒரு பேன்ட் இலவசம் என்று வெளியே அறிவிப்பு எழுதி விட்டு உள் நுழைகையில் ஆயிரத்திற்கும் மேலாக இரண்டு பேண்டு வாங்கினால் மட்டுமே ஒரு பேன்ட் இலவசம் என்று சொல்லும் வியாபார தந்திரம் போன்றது தான் என உணருங்கள். முடிந்தால் சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்து விட்டு, வெளிவந்து தத்தமது வேலையைப் பாருங்கள்.

எது அழகு

அழகு இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே உள்ளத்தில் ஏதோ செய்கிறது தானே. அழகென்றால் ஏனோ, ஆண்கள் மனதில் தான் கண்டதில் தன்னைக் கவர்ந்த பெண்ணும், பெண்கள் மனதில் தான் கண்டதில் தன்னைக் கவர்ந்த ஆணுமே முதலில் வருகிறார்கள்.

ஒருவரைப் பார்த்ததுமே சிலாகிக்க வைக்கும் விஷயம் ஒன்னு இருக்குன்னா அது அழகு தானுங்க... என்ன தான் அழகு நிரந்தரமல்ல அப்படின்னு பேருக்கு பேசிக்கிட்டாலும் அழகை ரசிக்காம இருக்க முடியறதில்லைன்றது தான் நிஜம்...

பூவின் அழகு ஒரு நாள். இளமை அழகு முதுமை வரை, வசந்தத்தின் அழகு கோடை வரை இப்படின்னு அழகுக்கு முற்றுப்புள்ளி இருக்குதுன்னாலும் இருக்கும் வரை அழகை ரசிக்காம இருக்க முடியாதில்லை...

ஆனால், நாம பார்க்கப் போறது இந்த அழகைப் பத்தி இல்லைங்க. நாம பார்க்கப் போற அழகு, எது எது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது. எது எது எப்படி இருக்கணும்னு சொல்ற தகுதி நமக்கேது.

காரியாசன் இயற்றிய சிறுபஞ்சமூலத்தைச் சும்மா புரட்டிட்டு இருக்கும்போது எது அழகுன்னு ஒரு பாடல் படிச்சேன். நீங்களுந்தான் தெரிஞ்சுக்குங்களேன்...

படைதனக்கு யானை வனப்பாகும்; பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாம்; நடைதனக்குக்
கோடா மொழிவனப்பு; கோற்கதுவே; சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு

என்ன? யார்யார்க்கு எது அழகுன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா... இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இன்னுமொரு பாட்டோட சந்திக்கிறேன்...