Tuesday, December 13, 2011

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 4

அவர்...

அவரைப் பார்த்ததும், என்னடா கல்யாண மாப்பிள்ளையே வரவேற்கிறாரேனு ஒரு கனம் நினைத்து விட்டேன். பிறகு தான் தெரிந்தது அது நரேஷ் அண்ணா என்று. வண்டியிலிருந்து இறங்கிய எங்களை வரவேற்ற நரேஷ் அண்ணா, நேரடியாக காலை டிபனுக்கு அழைத்துச் சென்றார்.

டிபனா அது... அப்பப்பா, சாப்பிட்டு மாளவில்லை. அவ்வளவு அயிட்டங்கள். இதுல வில்லன் வேறு, என்ன அண்ணே அயிட்டங்கள் இவ்வளவு தானா என்று கேட்க பரிமாறுபவரோ மதியம் தான் அதிக அயிட்டங்கள் (சுமார் 22 அயிட்டங்கள்) தம்பி என்று சொல்லி விட்டுச் சென்றார். எனக்கு அப்பொழுதே பாதி வயிறு நிரம்பி விட்டது.

காலை டிபன் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஒருவர் அனைவரிடமும் என்ன வேண்டும் எனக் கேட்டு முகமலர்ச்சியுடன் எங்களைக் கவனித்து வந்தார். அது வேறு எவருமில்லை. திருமதி நரேஷ் அவர்கள் என விழியன் அண்ணா அறிமுகம் செய்து வைத்தார் எனக்கு. திருமண வேலைகள் கொட்டிக் கிடக்கும் நிலையிலும் நண்பர்களுக்காக ஒரு சில நிமிடங்களேனும் நாம் ஒதுக்க வேண்டும் என்ற எண்ணமுடன், முகமலர வரவேற்று என்ன வேண்டும் எனக் கேட்ட அந்த உபசரிப்பை நிச்சயமாக என்னால் மறக்க முடியாது...

எதார்த்தமாக எனது இடது பக்கத்தில் விழியன் அண்ணா, குழலி பாப்பா, வித்யா அண்ணியும், வலது பக்கத்தில் துரை ஐயாவும் அமர்ந்திருந்தார்கள். குழலிக்கு உணவூட்ட விழியன் அண்ணாவும், வித்யா அண்ணியும் பிரம்ம பிரயத்தனம் செய்தார்கள். பாப்பாவோ, சாவகாசமாக தனக்கு பிடித்ததை மட்டும் சிறு சமயம் இருவிரலாலும், சில சமயம் தனது ஐந்து பிஞ்சு விரல்களாலும் அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

குழலி பாப்பாவின் சாப்பிடும் அழகை சில வரிகளில் இப்படிச் சொல்லலாம்.

மோட்சத்திற்குத் தவமாய்
இலையில் காத்திருக்கும் பண்டங்கள்...

மோட்சம் கிடைக்காமல்
மரித்துப் போனவை சில..

இருவிரலின் தீண்டலில்
திரிசங்கு சொர்க்கம் கண்டன சில...

ஐந்து விரலின் பிணைப்பில்
அங்கத்தை நிரப்பி
சொர்க்கம் கண்டன சில...

சொர்க்க வாசல் வரை சென்று
சொர்க்கத்தைப் பாராமலேயே
வம்படியாய் கழுவப்பட்டு உயிர்நீத்த சில...

அடுத்த வேளை தவத்திற்கும்
அடுத்த வேளை தரிசனத்திற்கும்
இடையே ஆரம்பமானது
குழலி விளையாடல்.!


இவ்வாறு விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, விழியன் அண்ணா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அது அதற்கு முந்தைய நாள் அவர்கள் கண்டு மீண்டு வந்த விபத்துச் செய்தி. கேட்டதும் உள்புறமாக என்னையும் அறியாமல் பயம் தொற்றிக் கொண்டாலும் என்ன ஆச்சு, எப்படீ என்று விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அப்பொழுது தான் புரிந்தது ஒரு விஷயம் எனக்கு. அது, வில்லன், துரை ஐயாவின் பாஸ் எங்கே என்று கேட்டதற்கு, துரை ஐயா காரை மேலே பார்க் செய்திருக்கிறோம் என்று சொன்னதின் உள் அர்த்தம்.

நாங்கள் ஐவர்(விழியன் அண்ணா, குழலி பாப்பா, வித்யா அண்ணி, நான், துரை ஐயா) விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே விருந்து முடித்த மற்ற நண்பர்கள் கை அலம்பி விட்டு ரூமுக்குச் சென்று விட்டனர். ஒருவழியாக காலை விருந்து முடிந்தது. மனதிற்குள், ஹப்பாடா திருமணத்திற்கு வந்ததில் ஒரு முக்கியமான விஷயம் திருப்தியாக முடிந்தது என்று வெளியே வந்தோம்...

பிறகு...

No comments:

Post a Comment