Tuesday, December 13, 2011

வெண்பாக்கள் சில

ஹரியென்றும் நல்ஹரன் என்றும் மனதில்
வரித்தார்கள் நல்லிறை என்றே; மனிதர்
நலம்வாழ இவ்விறை என்க;அவன் பேரில்
கலகங்கள் காண்பது ஏன்?

நம்மைமிஞ்சும் சக்திக்கே நாமமிட்டார் பக்தியினால்
இம்மைமறுமை நீக்கிடவே நல்லிறையென்று ஆக்கிவிட்டார்
உண்மையிஃதை தானுணரா சண்டையிங்கு தான்வளர்க்கும்
தன்மைமக்கள் ஏன்கொண்டார் சொல்.

கேட்டால்தான் நான்வருவேன்; கேட்டால்தான் நான்கொடுப்பேன்;
கேட்டால்தான் தாழ்திறப்பேன்; கேட்டால்தான் வாழ்வளிப்பேன்;
எல்லாமே கேட்டால்தான் என்றாலோ கேட்டதெவர்
பொல்லாத பூமியில் வாழ்வு.


எங்கென்று நாம்பிறப்போம் எங்கென்று நாம்;இறப்போம்
என்றான சங்கதிகள் எங்கிங்கே வாழ்கிறதோ
அங்கேதான் வாழ்கின்றான் ஆண்டவனும் சூட்சமமாய்
அங்கவ(த)னைத் தேடி அறி.


சட்டைசெயும் சொந்தமெலாம் பட்டினியால் வாடிநிற்க
பட்டணத்தில் வீடுஒன்று எட்டடுக்கில் கட்டிவைத்து
சட்டெனவே செத்துவிட்டால் சூழவரும் சொந்தமதில்
சொட்டுகண்ணீர் யார்விடுவார் சொல்


உள்ளத்தில் வெள்ளமென பொங்கிவரும் உள்ளெழுவை;
சொல்லிவிட; சொல்லியதை கேட்டமட்டில் உள்ளிழுக்க;
சொல்லாக்கி ஆக்கியதை நல்லெழுத்தாய் வாரிசுக்கும்
சொத்தாக்கி வைத்தார்; மொழி.

No comments:

Post a Comment