Tuesday, December 13, 2011

சினிமா - மூன்று மணி நேர பொழுதுபோக்கு

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். நமது வேலையின் மனகுழப்பங்களில் இருந்தும், இயந்திரத்தனமான வாழ்வின் இறுக்கத்திலிருந்தும் விடுபட நமக்கு கிடைக்கும் ஒரு சிறு இடைவேளை. அவ்வளவே. அதனைச் சரியாக புரிந்துகொள்ளாமல் சினிமாவை வாழ்வின் எதார்த்தங்களோடு எதற்காக நாம் குழப்பிக் கொள்கிறோம் எனப் புரியவில்லை

சினிமா என்பது எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நாம் எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறோம். ஏன் சினிமா என்பதை, நாம் ஒரு மதத்தைப் போல, ஒரு அரசியல்கட்சியைப் போல மக்களில் மாற்றத்தை ஒரு புரட்சியை உண்டாக்கப் பிறந்தது என்று கருதுகிறோம் ???
நான் சினிமாவைக் குறை கூறவில்லை. சினிமா என்பதும் ஒரு தொழில். ஒரு மளிகைக் கடைக்காரன் தனது மளிகை பொருட்களை விற்க செய்யும் தந்திரங்களைப் போல், ஒரு ஜவுளி கடைக்காரன் தனது துணிகள் விற்க செய்யும் தந்திரம் போல் சினிமாவை வியாபாரம் செய்பவர்களும் செய்யத்தான் செய்வார்கள். அது அவர்களின் தவறு கிடையாது.

சினிமாவை நிஜ வாழ்க்கையோடு காட்சிக்கு காட்சி ஒப்பிட்டுப் பார்ப்பதை நாம் எப்பொழுது தவிர்க்கப் போகிறோம். சினிமா என்பது நிஜ வாழ்க்கையின் சில பிம்பங்களை ஒரு சில காட்சிகளில் காட்டியிருக்கிறது,. இனியும் காட்டும். ஆனால் ஒரு சில நிஜ வாழ்க்கை பிம்ப காட்சிகளைக் கொண்ட படம் என்பதை மறந்து மொத்த படமும் நிஜ வாழ்க்கை என நம்புதல் அசட்டுத்தனமானது என்பதை எப்பொழுது நாம் உணரப் போகிறோம்.

உண்மையில் சொல்லப் போனால், சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில், சினிமாவால் மக்கள் மனதில் ஏற்பட்ட எண்ணங்கள் யாது. மக்களுக்கு உதவி செய்யும் கதாநாயகனைப் பார்த்து சக மனிதனுக்கு உதவி செய்த ரசிகனும் உண்டு. கதாநாயகனின் சில தீய பழக்கங்களைக் கண்டு தன்னை தீய பழக்கத்திற்கு அடிமையாக்கிக் கொண்டவனும் உண்டு என்று பக்கத்திற்கு ஒருவராய் வாதிட்டுக் கொள்ள(ல்ல)லாம்.

ஆனால், உண்மை என்ன? ஒரு மனிதன் தனது உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படுத்த, நல்லதோ தீயதோ அடுத்து வரும் விளைவுகளுக்கு யார் மேலாவது பழி சுமத்தி தான் தப்பித்துக் கொள்ள சினிமாவை ஒரு கருவியாக்கவே, சினிமாவைப் பார்த்து இதைச் செய்ததாகச் சொல்லும் ஒவ்வொரு மனிதனும் விரும்பினான்.

தனது நிஜ வாழ்க்கையின் வேதனைகளை அப்புறப்படுத்தி விட்டு, ஒரு மூன்று மணி நேரம் நம்மை நாம் மறந்து, மகிழ்ந்து விட்டு மீண்டும் எதார்த்தத்திற்குத் திரும்ப வேண்டிய நம்மில் பலர், அந்த சினிமாவைப் பார்க்கும் போதே ஒவ்வொரு காட்சியையும் எதார்த்தத்தோடு ஒப்பிட்டு பார்த்து, அந்த படத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்துக் கொண்டு மூன்று மணி நேர மகிழ்வான தருணத்தையும், தன்னை, தன் மனதை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வதைப் பார்க்கும் போது வருத்தமே மிஞ்சுகிறது.

இறுதியாக, சினிமாவைப் பாருங்கள். கடந்த, நிகழ்கால எதார்த்த வாழ்க்கை சில காட்சிகளாக ஒரு படத்தில் கட்டமைக்கப்பட்டிருந்தால் அதைப் பற்றி உண்மையான விஷயங்களை படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து, ஒரு சில காட்சிகளை மட்டுமே காண்பித்து விளம்பரத்தில் ஏமாற்றி என்னை பார்க்கச் செய்து விட்டான் என்ற புலம்பல்களைத் தவிருங்கள். இதுவும், ஜவுளிக் கடையில் இரண்டு பேன்டு வாங்கினால் ஒரு பேன்ட் இலவசம் என்று வெளியே அறிவிப்பு எழுதி விட்டு உள் நுழைகையில் ஆயிரத்திற்கும் மேலாக இரண்டு பேண்டு வாங்கினால் மட்டுமே ஒரு பேன்ட் இலவசம் என்று சொல்லும் வியாபார தந்திரம் போன்றது தான் என உணருங்கள். முடிந்தால் சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்து விட்டு, வெளிவந்து தத்தமது வேலையைப் பாருங்கள்.

No comments:

Post a Comment