Tuesday, December 13, 2011

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்-2

எனது பேருந்து நான் எதிர்பார்த்த நேரத்திற்கும் முன்னதாக ஒன்பது மணியளவில் மேட்டூரை அடைந்து விட்டது. நான் முன்னதாக உதயனிடம் பதினோறு மணி வாக்கில் திருமணத்திற்கு வருவதாகவேச் சொல்லி இருந்தேன்... இரண்டு மணி நேரம் முன்னதாக வந்துவிட்டதால் மனதில் ஒரு நெருடல்...

நண்பர்கள், திருமணம் நடக்கும் கொளத்தூரில் இருப்பார்களா, இல்லை மேட்டூரிலேயே இருப்பார்களா என்று. மேட்டூர் பேருந்து நிலையம் இறங்கினால் எதிரில் கொளத்தூர் செல்லும் பேருந்து. உதயனுக்கு அலைபேசியில் அழைத்தால், எனது பணத்தை விரயமாக்கவே கூடாது என்ற நோக்கத்தில் உதயன் இருமுறை அழைத்தும் எனது அழைப்பை எடுக்கவே இல்லை.

அடுத்ததாக விழியன் அண்ணாவிற்கு அலைபேசியில் அழைப்பு. எடுத்து பேசிய விழியன் அண்ணா, மேட்டூரிலேயே இருப்பதாகவும், வண்டி இருப்பதால், அருகிலேயே இருக்கும் எஸ் எல் கே லாட்ஜுக்கு வருமாறு பணித்தார். கொளத்தூர் செல்லும் அரசு பேருந்திற்கு டாட்டா காண்பித்து விட்டு லாட்ஜ் நோக்கி நகர்ந்தேன்...

லாட்ஜ் அடைந்ததும் தான் தோன்றியது, லாட்ஜ் பெயரை மட்டும் கேட்டு அறை எண்ணைக் கேட்க மறந்து மடத்தனம் செய்து விட்டோமே என்று. மீண்டும் ஒர் அழைப்பு, தகவல் பரிமாற்றம். இரண்டாம் அடுக்கிற்கு சென்றேன். அங்கு முகம் நிறைய மலர்ச்சியோடு துரை ஐயா, விழியன் அண்ணா, ஸ்டாலின் அண்ணா மற்றும் ச.கி. நடராஜன் ஐயா ஆகியோர் என்னை வரவேற்றார்கள். கூடுதல் வரவேற்பாளராக குழலி.

ச.கி. ந ஐயாவையும் ஸ்டாலின் அண்ணாவையும் ஏற்கனவே சந்தித்திருந்ததால் விழியன் அண்ணாவிடமும் துரை ஐயாவிடமும் பரஸ்பரம் நேரில் அறிமுகமாகிக் கொண்டேன். குழலி ஏனோ என்னிடம் சேர மறுத்தாள்... அழுது அழுது குழலியின் கன்னம் வாடி இருந்ததால் மேலும் அழ வைக்க விருப்பமில்லாமல் எனது பயமுறுத்தலை நிறுத்தவும், விழியன் அண்ணா, திருமணத்திற்கு கிளம்ப குழலியைத் தயார் செய்ய எடுத்துச் செல்லவும் நேரம் சரியாக இருந்தது.

லாட்ஜை நெருங்கும் முன் வரை ஸ்டாலின் அண்ணாவைப் பார்த்தால் நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டுமென்று நொடிக்கொரு முறை நினைத்துக் கொண்டே சென்றாலும், நண்பர்களைப் பார்த்ததும் ஸ்டாலின் அண்ணாவிற்கு வாழ்த்து சொல்ல மறந்து போனேன். நல்ல வேளையாக ச.கி.ந ஐயா நினைவுபடுத்த ஸ்டாலின் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னேன்.

ஸ்டாலின் அண்ணா, தம்பி இரு... என்று ஏதோ பேச ஆரம்பித்து பேசாமலேயே அவரும் ரெடியாக கிளம்பவே ச.கி. ந ஐயாவிடமும் துரை ஐயாவிடமும் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென என் அலைபேசி சினுங்கல்... எடுத்துப் பார்த்தால்....

No comments:

Post a Comment