Tuesday, December 13, 2011

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 6

பாஸ் வலப்புறமாக பைப்லைனுக்காக வெட்டப்பட்ட குழியில் ஒருக்களித்தவாறு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. வண்டி காணாமல் போகவில்லை, வண்டியைச் சுற்றிலும் போலீஸ்காரர் சொன்னபடி எந்த காகிதமும் இல்லை. பார்த்த உடனே எனது மனதில் தோன்றியது, வெறும் ஆள்பலத்தை வைத்து மட்டும் வண்டியை மீட்பது மிகவும் கடினம் என்பதே. இத்தனை நடந்தாலும், துரை ஐயாவிடம் எந்த ஒரு மனக்குழப்பமும் இல்லை. அவரது மனதில் இருந்தது எல்லாம், வண்டியை மீட்கும் சிந்தனையை விட குழந்தைகள் ஓவியாவும், குழலியும் அதிகம் பயந்திருப்பார்களே என்ற வருத்தம் தான். அந்த வருத்தமே அவரை மிகவும் பாதித்திருந்ததாக நான் உணர்ந்தேன்.

துரை ஐயா, வண்டியின் லாக்கை திறந்தார். வண்டியை சுற்றும் முற்றும் பார்த்தோம். வண்டி எவ்வாறு அமர்ந்திருக்கிறது எப்படி மீட்கலாம் என்று ஆராய்கையில் கண்ணுக்கு பட்டது. வண்டியின் டீசல் டேங்கை உடைத்த பெரிய கல் டீசல் டேங்கிற்கு அடியிலேயே சிறிது இடைவெளியுடன். கீழே சரளைக் கற்கள், சிறு சிறு பாறைகள் என வண்டியை சீர்குலைக்க காத்திருந்தது.

வண்டி நடுவிலும், பின் புறமும் அதிகம் பாதிக்காமல் காத்திருந்தது எது என்று பார்த்தால், வண்டியின் முன்புறம் ஒரு கல் ஜாக்கி வைத்து தூக்கியது போன்று் முன்சக்கரங்களை இணைக்கும் பட்டையைத் தூக்கி வைத்திருந்ததே. ஒரு மண்வெட்டியும், கடப்பாரையும் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமே என்று ஊர்காரர்கள் வருத்தப்பட்டார்கள். உண்மையில் மண்வெட்டியும் கடப்பாரையும் கொண்டு வண்டியை மீட்டெடுக்கவும் முடிந்திருக்கும். ஆனால் நேரம் அதிகம் எடுத்திருக்கும்.

பார்த்துக் கொண்டே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று, மீட்பு பணியில் இறங்கினோம். முதலில் வண்டியின் நடுவிலும் பின் புறமும் வண்டியை பதப்படுத்தக் காத்திருந்த கற்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊர்காரர்கள் ஈடுபட்டனர். அனைத்தும் நீக்கிய பிறகு இப்பொழுது மிகப் பெரும் பிரச்சினையாக இருந்தது முன்சக்கரத்திற்கிடையில் இருந்த அந்த ஜாக்கி போன்ற கல் தான்.

அதனை எவ்வாறு எடுக்க என யோசித்து ஒருவழியாக, நமது பாஸில் இருக்கும் ஜாக்கியை வைத்து தூக்கி அக்கல்லை அப்புறப்படுத்தலாம் என முடிவெடுத்து, வண்டியில் இருந்த ஜாக்கியை எடுத்தால் ஜாக்கியை உயர்த்த சுழற்றத் தேவையான லீவர் இல்லை. பிறகு அவ்வழியே போன ஒரு டிராக்டரை நிறுத்தி அவர்கள் தந்த கம்பிகளின் உதவியோடு அக்கல்லை அப்புறப்படுத்தினோம்.

அப்பொழுது தான் எங்களுடன் வந்த ஊர்காரர் ஒருவர் வண்டியை உட்புறமாக பார்த்து, ஆடியோ செட்டைக் கழற்றிக் கொண்டு சென்றீர்களா, இல்லை ஆடீயோ செட் வைத்திருக்கவில்லையா என்ற கேள்வியை துரை ஐயாவிடம் கேட்க, துரை ஐயா இல்லையே இருந்ததே என்று சொல்ல, எல்லாம் புரிந்தது. ஆடியோ செட், ஏசி ரெகுலேட்டர், வண்டியின் ஓரம் ஒட்ட வாங்கி வைத்திருந்த பட்டிகள் இரண்டு, இருக்கைக்கு போடப்பட்ட பாசிமணிகள் என அனைத்தையும் ஒரு கும்பல் களவாடிக் கொண்டு அதற்கு ஈடாக தங்களின் நைந்து போன துண்டையும், கைலியையும் விட்டு விட்டு சென்றிருந்தனர்.

வண்டி ஓரளவு சமநிலையில் இப்பொழுது அமர்ந்திருந்தாலும் ஐந்து பேரால் அதனை மேலே எடுக்க முடியாது என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். டீசல் டேங்கிலிருந்து டீசல் ஒழுகிக் கொண்டே இருந்தது. பிறகு ஒரு ஜேசிபி வண்டி உரிமையாளருக்குத் தெரிந்தவர் என்று நினைக்கிறேன். மூலையில் தான் ஜேசிபி இருக்கிறது, வரவழைத்து மேலே எடுத்து விடலாம் என்று சொன்னார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஜேசிபி யில் வண்டியை மீட்பதா. மண் அள்ளிப் போடும் வண்டியில் எப்படி காரை அள்ள முடியும். கிரேன் வண்டியைத் தான் இப்படிச் சொல்கிறார்களா என்று ஒரே குழப்பம். ஏனென்றால் வண்டியின் வலப்புறக் கண்ணாடி ஒன்றில் கிரேன் உரிமையாளர் ஒருவர் தனது விசிட்டிங் கார்டு ஒன்றைச் சொருகி வைத்துச் சென்றிருந்தார்.

வழியில் போவோர் வருவோருக்கெல்லாம் ஒரே பதிலைச் சொல்லி சொல்லி சமாளிப்பதில் மிகவும் மெனக்கெட வேண்டியதாகப் போனது. ஜேசிபி எடுத்து வரச் சொல்லலாம் என முடிவெடுத்த போது, ஒரு கிரேன் உரிமையாளர், ஜேசிபியில் அதிகம் வண்டி டேமேஜ் ஆகும். கிரேன் உபயோகம் செய்து கொள்ளலாம் என்று சொல்ல ஆனால் உடன் வந்திருந்த ஊர்காரர்கள், ஜேசிபியே போதும் எனச் சொல்லி, எங்களடன் வந்த மூவரில் ஒருவர் ஜேசிபியை அழைத்து வர ஜேசிபி இருப்பதாக எங்களிடம் சொன்னவருடன் புறப்பட்டுச் சென்றார்.

புறப்பட்டு நெடு நேரமாகியும் சென்றவர் திரும்பவில்லை. இதற்கிடையில் வண்டியின் இன்ஷ்யூர் கிளைம் செய்ய போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் என எங்களுடன் வந்த ஊர்காரர் சொல்ல, அதன்படியே துரை ஐயாவின் கூல்பிக்ஸில் விபத்திற்குள்ளாகி இருந்த பாஸை நான் சில போட்டோக்கள் எடுத்தேன். (ஸ்னாப்ஷாட்டுக்குக் கூட தகுதி பெறாது என்றே நினைக்கிறேன்.)

ஒருவழியாக ஜேசிபியும் வந்து சேர்ந்தது. பைப்லைனுக்காக வெட்டியிருந்த குழியை, வண்டியின் முன்புறமாக வண்டி மேலே எடுத்து வருவதற்காக மூடி விட்டு, பாஸை முன்புற சக்கரங்களின் இடையில் கயிற்றால் கட்டி அதனை ஜேசிபியுடன் இணைத்து ஒருவழியாக மேலே ஏற்றி விட்டோம். இதைச் செய்யும் போது பயந்து கொண்டே இருந்தது ஒரு விஷயம் தான்.

அது, அந்த சாலை ஒரு வண்டி மட்டுமே போகக் கூடிய அளவிற்குச் சிறிய சாலை. நாம் மீட்பு பணியில் ஈடுபடும் போது வண்டிகள் வந்தால் அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதே. ஆண்டவன் அருளால் அதிகம் வண்டி எதுவும் வரவில்லை. ஒரே ஒரு வண்டி வந்தது. அதனையும் உதவிக்கு வந்திருந்த ஊர்காரர்கள் காத்திருக்கச் சொல்லி வண்டியை பள்ளத்திலிருந்து மீட்டாயிற்று.

இனி,...

(நமது வண்டி இறங்கியிருந்தது, வலப்புறம் பைப்லைனுக்கான குழியில், மலையை ஒட்டி. இடப்புறம் பார்ப்பதற்கே பயமாக இருக்கும் கிடு கிடு பாதாளம். ஒன்னரை அடி உயரத்திற்கு மட்டுமே பாதுகாப்புச் சுவர் என்ற பெயரில் மேம்போக்காக வைக்கப்பட்டுள்ள கற்கள் தான் அந்த பாதாளத்தில் எதிர்பாராத விபத்துகளில் வண்டியை விழாமல் தடுக்க இருக்கும் சுவராம்.)

No comments:

Post a Comment