Tuesday, December 13, 2011

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 7

வண்டியை ஒரு வழியாக மேலே கொண்டு வந்த பின் வண்டி ஸ்டார்ட் ஆகிறதா என ஸ்டார்ட் செய்து பார்த்தோம். ஒருவழியாக வண்டியைத் தள்ளி ஸ்டார்ட் செய்தால் பத்து அடி தூரம் சென்று வண்டி நின்று விட்டது. டீசல் காலியாகி இருக்கும் என்பதால் டீசல் போட்டால் வண்டி ஓடும் என முடிவுக்கு வந்தோம்.

ஆனால், டீசல் டேங்க் ஓட்டையாகி இருந்ததால் அதனைத் தற்காலிகமாகச் சீர்படுத்த முடியுமா எனப் பார்க்க வண்டியை ஓரங்கட்டி, ஆராய முயன்றார் நம்முடன் வந்த ஊர்காரர் ஒருவர். அவர் வண்டிக்கு கீழாகச் சென்று ஆராய்ந்து பார்த்ததில், டீசல் டேங்க் மட்டுமல்ல, டீசல் டேங்க் பியூரிபையரும் ஓட்டையாகி இருப்பதால் தான் வண்டி ஸ்டார்ட் ஆவதில் பிரச்சினை இருக்கிறது.

பியூரிபையர் ஓட்டையை மட்டும் சரி செய்து வண்டியை எடுத்துக் கொண்டு ஊர் சென்று விடலாம். அங்கு சென்று மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார். மேலும் டீசல் ஒழுகிக் கொண்டே இருப்பதால் டீசல் டேங்க் ஓட்டையை M-seal கொண்டு அடைக்க முடியாது என்பதையும் சொன்னார். அவர் சொல்வது தான் சரியெனப் பட, அப்படியேச் செய்யலாம் என முடிவெடுத்தோம். பியூரிபையரை மட்டும் எப்படியேனும் சரி செய்ய வேண்டுமென்று தீவிரமாக அந்த நபர் யோசித்து ஒரு குச்சியை உடைத்து அதனை ஆப்பை போல அழகாகச் செதுக்கி அந்த ஓட்டையை லாவகமாக அடைத்தார்.

நாலு எழுத்து படித்து விட்டாலே நாம் எல்லாம் தெரிந்தவர்கள் என்று ஆணவமாக இருக்கும் இன்றைய நவநாகரீக உலகில், நடைமுறைச் சிக்கல்களை லாவகமாகச் சமாளிக்கும் திறமை கொண்ட இவர்களின் ஆற்றல் என்னை வியப்படையச் செய்தது. ஒருவழியாக வண்டியைச் சரிசெய்து, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த டீசலை பாஸில் ஊற்றி வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகவில்லை.

இனி காத்தருப்பதில் பயனில்லை என்று, நாங்கள் எடுத்துச் சென்றிருந்த வண்டியுடன் பாஸைக் கயிற்றால் கட்டி toe செய்து இழுத்து செல்லலாம் என்று முடிவெடுத்தோம். இதில் மிகப் பெரியச் சிக்கல் என்னவென்றால் நாங்கள் பயணமாக இருப்பது மலைப்பாதை. துரை ஐயாவின் வண்டியோ ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் பிரேக் பிடிக்காதாம். அப்படி இருக்க வண்டியை இழுத்துச் செல்வது என்பது எப்படிப்பட்ட சவால் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் எங்கள் வண்டியை ஓட்டி வந்த டிரைவரோ, பியூரிபையரில் டீசல் வந்து சேராததால் தான் வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன்கிறது. வண்டி நகர நகர அவ்வப்பொழுது பாஸை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யுங்கள். ஸ்டார்ட் ஆகி விட்டால் வேகமாகச் சென்று விடலாம் எனக் கூற, சிறிது நேரத்தில் அப்படியே நடந்தது. பாஸ் ஸ்டார்ட் ஆகி விட்டது. பாஸ் ஸ்டார்ட் ஆனதும் எங்கள் வண்டியுடன் கட்டி இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு, பாஸை முன்னே போக வைத்து நாங்கள் பின்னே தொடர்ந்தோம்.

தமிழக எல்லை வந்த சில நேரத்தில் நாங்கள் பாஸைக் கடந்து, கடனாக ஆட்டோ ஓட்டுனர்களிடம் வாங்கி வந்திருந்த கயிறைத் திருப்பிக் கொடுத்து திருமண மண்டபத்திற்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு முன்னாக பாஸ் வந்திருந்தது. பாஸை ஆப் செய்து விட்டால் மறுபடியும் ஸ்டார்ட் செய்வது சிரமம் என்றதால் பாஸ் உறுமிக் கொண்டே இருந்தது.

இந்த நேரத்தில், தங்களது ஊர்காரர் திருமணத்திற்கு வந்த உறவுகள் என்ற ஒரே காரணத்திற்காக ஓடி ஓடி உதவி செய்த அந்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய சார்பிலும், துரை ஐயா சார்பிலும் கோடி நன்றிகள்... அவர்களுக்கு நாம் என்றென்றும் கடன்பட்டவர்களாகவே இருப்போம்.

No comments:

Post a Comment