Tuesday, December 13, 2011

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 9

நானும் துரை ஐயாவும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பாஸை எந்த கேரேஜுக்கு எடுத்துச் செல்வது யாரை எப்படி உதவி கேட்பது என்று புரியாமல் இருக்க, நரேஷ் அண்ணா சாப்பிட அமர்ந்திருந்ததால், அவர் வெளிவரும் வரை காத்திருப்போம் எனக் காத்திருந்தோம். அதற்கு முன்பாகவே எங்களுடன் காரை மீட்க காலையில் வந்த ஊர்காரர் ஒருவரை நாங்கள் பார்க்க, அவரது துணையுடன் மேட்டூரில் கேரேஜ் ஒன்றைத் தேடி நாங்கள் மண்டபத்திலிருந்து, புறப்படும் போது சொல்லிக் கொள்ளாமல் செல்கிறோமே என்று லேசான மனவருத்தத்துடன் புறப்பட்டோம்.

கேரேஜ் செல்லும் வழியில் மேட்டூர் நீர்த்தேக்கம் வர, துரை ஐயா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, என்னை நமது நண்பர்களுடன் சென்று இருக்குமாறும், தான் வண்டியை கேரேஜில் விட்டு விட்டு வந்து சேருகிறேன் என்றும் சொன்னார். ஒரு வேளை கேரேஜ் மேட்டூரில் கிடைக்காமல் போனால் எனது நேரம் விரயமாகுமே, எனது நண்பர்களுடனான சந்திப்பும் விடுபட்டு போகுமே என்று நினைத்துதான் துரை ஐயா இப்படிச் சொல்கிறார், எதற்கு அத்தகைய தர்மசங்கடமான நிலைமையை அவருக்கு உருவாக்க வேண்டும் என்று எண்ணியவாறு நான் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இறங்கி கொண்டேன்.

உதயனுக்கு போன் செய்து நண்பர்கள் இருக்கும் இடம் கேட்டுக் கொண்டு நானும் நண்பர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டேன். நான் சென்ற சமயத்தில் ச.கி.ந ஐயா, ஸ்டாலின் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு என்று எனக்கு ஐஸ்கிரீம் தர, ஸ்டாலின் அண்ணாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி விட்டு, எனக்கு தோதான இடத்தில் அமர்ந்து கொண்டேன். அங்கிருந்தவர்களின் அனைவரையும் காலை முதல் சந்தித்திருந்தாலும் ஒருவருடன் அறிமுகம் செய்து கொள்ளவில்லை என்பது தெரிந்தது.

அவரை வில்லனிடம் காண்பித்து, அவர்தான் ஆசாத் ஐயாவா எனக் கேட்க, வில்லன் ஆசாத் ஐயாவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான். பரஸ்பரம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் நண்பர்கள் அளவளாவிக் கொண்டிருந்த சமயத்தில், இஜ்ஜீனியோ அண்ணியின் சமையல் குறிப்புகள் ஏன் தற்பொழுதெல்லாம் வருவதில்லை எனக் கேட்ட போது தான் ஸ்டாலின் அண்ணா, நமது நண்பர்களால் அவரது வீட்டில் கஞ்சி மட்டுமே அவருக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யும் பாசத்தை இணையத் துண்டிப்பால் துண்டாக்கி இருக்கிறார் என்ற செய்தி தெரிய வந்தது.

ஆசாத் ஐயா வாசகர் வட்டத்தை ஆரம்பிக்கலாம் எனச் சொல்ல, எப்பொழுதும் சந்திப்பின் இறுதி நிமிடங்களில் மட்டுமே பேச வாயைத் திறக்கும் என்னை அறிமுகம் செய்யுமாறு ஸ்டாலின் அண்ணாவும், விழியன் அண்ணாவும் சொன்னார்கள். அறிமுகத்தோடு வாசிப்பனுபவத்தையும் சொல்லச் சொன்னார்கள். புத்தக வாசிப்பே செய்தி்ராத நான், எங்கு வாசிப்பு அனுபவத்தைப் பகிர? எனது சுய புராணத்தைப் பாடியே எங்களிடம் இருந்த ஒரு மணி நேரத்தில் பெரும்பகுதியை நான் கொன்று விட, விழியன் அண்ணா, நேரம் இல்லாமையைச் சுட்டிக் காண்பிக்க கொஞ்சம் வேகமாக எனது அறிமுகத்தை முடித்துக் கொண்டேன்.

அதன் பின் ஸ்னாபக் வினோத், தனது அறிமுகத்தையும், தான் படித்த வேல்சாமியின் கோவில் நிலம் சாதி புத்தகத்தைப் பற்றியும், ஷோபா அவர்களின் இன்னொருவர் புத்தகத்தைப் பற்றியும் சிலாகித்துப் பேசினார். அவ்விரு புத்தகங்களும் தமிழர்களின் தொன்மையைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் சொல்வதாகவும், தமிழர்கள் தங்களது தொன்மையை எப்படி இழந்தார்கள் என்பதையும் அப்புத்தகங்கள் சொல்வதாகவும் சொன்னார்.

அதன்பிறகு, வேறு யாரேனும், கடந்த வாசகர் வட்டத்திற்குப் பிறகு புத்தகம் ஏதும் படித்திருந்தால் அதைப் பற்றி பேசச் சொல்ல, உதயன் பேச ஆரம்பித்தான். கடந்த வாசகர் வட்டத்தில் கண்மணி குனசேகரன் பற்றி அஞ்சலை என்ற புத்தகத்தால் நிலாரசிகன் மூலமாக அறிய வந்த உதயன், கண்மணி குனசேகரன் எழுதிய இன்னொரு புத்தகமான நெடுஞ்சாலை பற்றிப் பேசினான்.

கண்மணி குனசேகரன் பற்றி உதயன் சொல்லும் பொழுது, கண்மணி குனசேகரன் எழுதியவற்றை யோசிக்காமல் வாங்கலாம் என்று விழியன் அண்ணா சொல்ல, அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை, தனது மனதில் நெடுஞ்சாலை பற்றிய அனுபவத்தைச் சொல்ல ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த உதயனால் புரிந்து கொள்ள முடியாமல் போனது. பின்பு, கண்மணி குனசேகரன் புத்தகத்தை நம்பி வாங்கலாம், அவரது எழுத்தாக்கம் அவ்வளவு அருமையாக இருக்கும் என விளக்கம் கொடுத்ததும் உதயன் அசடு வழிய சிரித்து, நெடுஞ்சாலை புத்தகத்தின் மீதான தனது வாசிப்பனுபவத்தைச் சொல்லலானான்.

உதயன், தனது வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் தான் பணிபுரிந்த பொழுது, பேருந்து பராமரிப்புத் துறையில் தான் கண்ட அனைத்தையும் அப்புத்தகத்தில் மீண்டும் கண்டதாகச் சொன்னான். புத்தகம் முழுவதும் ஒரு பேருந்தின் டிரைவர், கன்டக்டர் மற்றும் மெக்கானிக் வாழ்க்கையைச் சுற்றி சுற்றி அவர்களது அன்றாட வேலையில் இருக்கும் பிரச்சினைகளை அழகாக எடுத்துக் காட்டுவதாகக் கூறினான். அய்யனார் என்ற கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை வலம் வந்தாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து சேவையைத் தரும் டிரைவர், கன்டக்டர், மெக்கானிக் இன்னும் பிறரின் வேலைகளின் அவலங்களை அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை படம் பிடித்துக் காட்டுவதாகக் கூறினான்.

தான் முன்பு வேலைபார்த்த இடத்தில் இருப்பவர்களுக்கு, அப்புத்தகத்தை வாங்கி படிக்கவும், புத்தகம் வாங்க முடியவில்லை என்றால் தானே வாங்கித் தருவதாகவும் சொல்லியிருப்பதாகவும் சொன்னான். இவ்வாறாக வாசிப்பனுபவத்தை உதயன் சொல்லிக் கொண்டிருக்க, நேரம் இல்லாமையால் விழியன் அண்ணா மற்றும் ஸ்டாலின் அண்ணா குடும்பத்தினர் தாம் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று சென்னை கிளம்ப தயாராக வேண்டும் எனப் புறப்பட்டுச் சென்றார்கள். அதன் பிறகு எஞ்சியிருந்த நாங்கள் சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு பிறகு நாங்களும் விடுதி சென்றோம். அங்கு நான் நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.

இங்கு நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது, வாசிப்பனுபவம் என்று சொல்கிறார்களே, என்னடா இது என்று சலிப்போடு நினைக்கும் என்னைப் போன்றவர்களுக்காக, அன்றைய வாசகர் வட்டத்தில் நான் அறிந்து கொண்ட உண்மை இது.

"அனைத்து நிகழ்வையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ள ஆயுள் ஒன்று போதாது என்று உணர்ந்த ஆன்றோர்கள், தங்களது அனுபவங்களை புத்தகமாகத் தருவது, நாம் அனுபவிக்காமல் படிப்பதின் மூலமாக அந்த அனுபவத்தை அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே. அதனால் நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிக்க, அந்த புத்தகத்தின் அனுபவம் உங்களுக்கு நல்லதோர் படிப்பினையும், காலத்தை மிச்சமும் செய்து தரும்."

வாசகர் வட்டத்தில் கண்ட இன்னுமோர் சுவையான நிகழ்வு. அங்கு அமர்ந்திருந்தவர்களின் கண்களில், பேசுபவர் என்ன சொல்ல வருகிறார் என்ற ஆர்வம். நான் பேசும் பொழுது கவனித்தவற்றைச் சொல்கிறேன். டேமேஜர் மேடம் தூக்க கலக்கத்தில் இருந்தாலும் கதைக் கேட்பதைப் போல கேட்டுக் கொண்டிருந்தார். சுதாகர் ஐயாவோ அத்தனை கூர்மையாக ஒவ்வொருவர் பேசுவதையும் கவனித்து வந்தார். தனது மனதில் படுவதை பட்டென்று கேட்டு விடுகிறார். ஸ்னாபக் வினோத், ஆர்வம் மிகுதியாகக் கொண்டுள்ளார். அந்த ஆர்வ மிகுதி எண்ணத்தை வேகமாக பறக்க விடுவதால் சொல்லும் வேகமாக அவசர கதியில் வந்து விழுகிறது. உதயன், என்ன சொல்ல... எப்படி இருந்தவன்? புத்தகத்தைப் படித்த பிறகு அவனுள் அவனை அறியாமலேயே பல மாற்றங்கள் வந்துள்ளது. ஒவ்வொன்றையும் அவன் சிலாகித்துப் பார்க்கும் பார்வை... அப்பப்பா, நிச்சயமாக முயன்றால், நாளை இவனும் எழுத்தை ஆளலாம்.

ச.கி.ந. ஐயாவோ, வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவனைப் போல அத்தனை பவயமுடன் அனைவரின் வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டிருக்க, ஆசாத் ஐயா பார்வையில் தான் எத்தனை தீர்க்கம்... தெரிந்ததில் மட்டுமே தெளிவுடன் தன் கருத்தை வைக்கும் அந்த பாங்கு,ம்ம்ம்... இஜ்ஜீனியோ அண்ணி, ஓவியாவைக் கவனித்துக் கொண்டு நாங்கள் பேசுவதையும் கவனிக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, ஸ்டாலின் அண்ணா தன்
பார்வையில் எதையோ சாதிக்கக் காத்துக் கொண்டிருக்கும் வெறி, எதையோ எப்படி மாற்றப் போகிறோம் என்ற ஏக்கம், அடுத்தவர் பேசும் போது, பேசுபவரை உதாசீனப்படுத்தாமல் கவனிக்கச் சொல்லும் கட்டளைப் பார்வை என இருக்க, விழியன் அண்ணா, நடக்கும் அனைத்தையும் அமைதியாக அதே சமயம் ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருந்தார். வித்யா அண்ணியோ, குழலியுடன் விளையாடிக் கொண்டிருப்பது போல இருந்தாலும் அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டு, தான் ரசித்த வார்த்தைகளுக்கு அளவாய் ஒரு புன்னகைச் செய்தும் வாசகர் வட்டத்தை ரசித்திருக்க, என் பக்கத்தில் வில்லன் எப்பொழுதும் போல விளையாட்டுத்தனமாய் விஷமத்தனமாய் எனத் தனக்கே உரிய பாணியில் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

மொத்தத்தில் நந்தா அண்ணா திருமணமும் சரி, நண்பர் குழாம் சந்திப்பும் சரி, நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் என்னைப் பல மடங்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இணையத்தில் என்ன கண்டாய் என்று கேட்பவர்களிடம், இதயங்கலந்த இனிய உறவுகளைப் பெற்றேன் எனப் பெருமைப் பட்டுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாக்கித் தந்த நந்தா அண்ணாவிற்கும், நண்பர்களுக்கும் எனது மகிழ்ச்சியான வணக்கங்கள்.

(பி.கு: ஒரு பயணம் இன்னொரு பயணத்திற்கு அடிகோலுகிறது என்று விழியன் அண்ணா தனது வலைப்பக்கத்தில் ஒரு முறை சொல்லி இருந்ததைப் போல, நந்தா அண்ணா திருமண பயணத்தின் முடிவு, ரமேஷ் முருகனின் திருமண பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்றால் மிகையாகாது.)

(விடுபட்ட செய்திகள் ஏதேனும் இருந்தால் நண்பர்கள் பகிரவும்)

- முற்றும்.

No comments:

Post a Comment