Tuesday, December 13, 2011

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 8

முக்கியமான ஒன்றைச் சொல்ல வில்லையே. நாங்கள் திருமண மண்டபத்திற்குத் திரும்பிய பொழுது நேரம் மதியம் இரண்டரையைக் கடந்திருந்தது. பண்புடன் நண்பர்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை நம்மையும் பாஸையும் நலம் விசாரித்து முடிக்க, பாஸை மீட்டு வந்த செய்தியும், பாஸில் இருந்து களவு போன பொருட்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்.

காலையில் ஒற்றை ஹாயுடன் பிறந்த நாளைக் கொண்டாடும் ஸ்டாலின் அண்ணாவிடம் விடைபெற்றுச் சென்ற நான், மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பியதும் தான் பார்க்க முடிந்தது. அதுவும் அழகியதோர் சூழலில். அச்சூழல்...

//ஓவியமொன்று
உயிர்பெற்று மிதந்து வந்தது

என்ன இது அதிசயம்
எட்டித் தொட முயன்றேன்...

மானா
ஒற்றை வார்த்தையில்
எட்டாக்கனியாகி விலகியது...

தேடலின் இன்பம் காண
தேடி விழைந்தபடி நான்

ஓவியமாய் ஓவியா...//

ஆம், ஓவியாவுடன் தான் அண்ணனைப் பார்த்தேன். காலையிலேயே பார்க்க வேண்டும் என நினைத்திருந்த என் தங்கம் ஓவியாவை மதியம் தான் பார்க்க முடிந்தது. எத்தனை அழைத்தும் ஒட்டவில்லை ஓவியா என்னுடன்.

பாஸைப் பார்த்ததும் ஓவியா சொன்ன வார்த்தை, "இந்த அண்டி வாணாம்பா" என்பது தான். ஸ்டாலின் அண்ணா எத்தனைச் சமாதானப்படுத்தியும் அக்குழந்தை மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை...

தேவதைகளின் உள்ளமொழி
இரண்டில் ஒன்று தான்...

வேண்டும்... வேண்டாம்...

எத்தனை தான் மகிழ்வைத் தந்தாலும்
வேண்டுமென விரும்பிய பொருட்கள்
பயம் காட்டி விட்டால்
வேண்டாம்தான் அவர்களுக்கு...

பயம் தெளியும் வரை.!

இது இவ்வாறாக இருக்க, நானோ ஓவியாவை எப்படியும் என் கைகளில் ஏந்த வேண்டும் என்று பிரம்ம பிரயத்தனம் செய்து முயன்று கொண்டிருந்தேன். விளைவு,

பக்திக்கு அவசியம்
பொறுமையும் விடாமுயற்சியும்

போதகரின் வாக்கு
உண்மையானது நேற்று...

தேவதையை ஏந்தும் தவத்தில்
தேவதை மனமிறங்கவில்லை...

தேவதையைத் தந்தவர்கள்
இறங்கினார்கள்...

ஒரே ஒரு முறை சென்றுவர
தேவதையை பணித்தார்கள்...

என்ன அதிசயம்...

தேவதையை நான் ஏந்தவில்லை...
என்னை ஏந்தினாள் தேவதை

உபரியாக
வானத்தில் மிதக்கும் வரமாய்...
கன்னத்திற்கொன்றாய் முத்தம்.!

இப்படியாக ஓவியாவுடன் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தேன்.

நிற்க,

வண்டியை இப்படியே வைத்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது, கேரேஜ் பக்கம் எங்கேனும் எடுத்துச் சென்று ஓரளவு சீர்படுத்தினால் தானே துரை ஐயா தூத்துக்குடி வரை செல்ல முடியும் என்று எண்ணியவாறு, தேடினால் உதவிக்கு வந்திருந்த ஊர்காரர்கள் யாரும் கண்ணுக்குக் கிடைக்கவில்லை.

அப்பொழுதுதான் நமது நண்பர்கள், நம்மை மதிய விருந்துக்கு நினைவுபடுத்தினார்கள். நண்பர்கள் அனைவரும் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் காத்திருப்பதாகச் சொல்லி, என்னையும், துரை ஐயாவையும் சாப்பிட்டு விட்டு அங்கு வந்து தங்களுடன் இணைந்து கொள்ளும்படி அன்புக்கட்டளை இட்டு சென்றார்கள். சரி என்று, நானும் துரை ஐயாவும் சாப்பிட அமர்ந்தோம்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மணமக்கள் எங்களுக்கு எதிராகச் சாப்பிட வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் துரை ஐயாவிற்கு, தன்னால் பிரசாத்தும் மணமக்களைச் சந்திக்க முடியவில்லையோ என்ற வருத்தம் மேலிட, நந்தா அண்ணாவிடம் அறிமுகம் செய்து கொண்டாயா என்று கேட்டார். நான் காலையில் நந்தா அண்ணனைச் சந்தித்ததைச் சொல்லியதும் தான் அவர் மனம் சற்று அமைதியடைந்தது.

மணமக்களை எதிர்புறம் பார்த்ததும் நான் மனமார

"தான்போல் சுயமது தன்துணைக்கு உண்டென்று
நான்விடுத்து என்றுமினி நாமென்(ற) உணர்வோடு
தேனினிய நந்தாநீர் தெள்ளியநற் பாதியொடு
வான்புகழ பல்லாண்டு வாழ்"

என்று மனதிற்குள் வாழ்த்தி விட்டு, மதிய விருந்தை திருப்தியுடன் உண்டு துரை ஐயாவுடன் வெளியே வந்தேன்.

நல்ல விருந்து, ஒரே ஒரு குறை எங்கள் பகுதிக்கு பிரியாணி வராமல் போனது தான்... :))) இருந்த உணவையே முழுமையாகச் சாப்பிட முடியவில்லை என்பது வேறு விஷயம் என்றாலும் பிரியாணி வரவில்லை என்பதால், நந்தா அண்ணன் இன்னொரு முறை எனக்கு மட்டுமேனும் பிரியாணியுடன் விருந்து படைக்க வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment