Thursday, May 31, 2012

அவள்


அருகில் அமர்ந்தவாறு
அவள் மொழியில் சொல்லி கொடுக்கிறாள்...
மாற்று மொழிக்காரி.!

புரிந்தும் புரியாமல்
தலை அசைத்துக் கொண்டிருக்கிறேன்...
அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்...

வேகமாய் பேசிக் கொண்டிருந்தவள்
சட்டென்று நிறுத்தி விட்டு
ஏதோ சொல்ல

வேகமாய் தலையசைக்கிறேன்
சரி சரி என்று?

பேசிக் கொண்டிருந்தவள்
முறைத்த படி மீண்டும் சொன்னாள்...

அவள்
எதுவும் சொல்லவில்லை...

கேள்வி கேட்டிருக்கிறாள்.!

Tuesday, May 29, 2012

சமாதானம்


மனது...
ஒரு புறம்
தவறுகளை தெரிந்தே செய்யும் போழ்து
குமைந்து கொல்கிறது.!


மறுபுறம்
தவறுகளைச் சரியானதாக்கி 
ஏமாற்றிவிட பிரம்மப்பிரயத்தனம் செய்கிறது.!


தவறுகளைச் சரியாக்கிவிட்டதாய்
செயலை முடிக்க
தவறு தவறாகவே நிற்கிறது...


தவறைச் சரியாக்க
கிளம்பியதின் மிச்சங்கள் எல்லாம்
எச்சமாய் மேனியெங்கும்...


அருவருக்கத்தக்க
தவறுகளை மறைத்தபடி...
புண்ணுக்கு பூசிய புணுகாய்.!

Monday, May 28, 2012

காட்சிப் பிழை

தொலைவில் ஒன்றாய் தெரிந்தது
அருகில் வேறொன்றாய்…

அருகில் ஒன்றாய் தெரிந்தது
தொலைவில் வேறொன்றாய்…

தவறென முதலில் பட்டது
சரியானதாய் முடிவில்…

புரியாத விஷயமாய் முதலில்
புரிந்ததாய் முடிவில்…

அவசரம்,
அணுகுமுறையில் தவறுக்கே இழுக்க
பொறுமையே சரியாக…

அவசரமான காலத்தில் கடைபிடித்த பொறுமையோ
அவசரமாய் தவறாக…

சரியான பாதைக்கு என்னதான் செய்ய???
குழப்பத்திற்கு விடைத் தேடுகையில்
தெளிவாக உள்ளம் கேட்டது….

சரியென்று எண்ணும் இன்றைய பதில்
தவறென்று நாளை ஆனால்???

Thursday, May 17, 2012

இனியேனும் சிந்திப்போமா - அதீதம் இதழில் வெளியானது.


இதோ வந்து விட்டது.! மாணவர்களுக்கான விடுமுறை காலம். பள்ளித் தேர்வுகள் அனைத்தும் முடிந்தாகி விட்டது. இன்னும் ஒரு மாதமோ இரண்டு மாதமோ விடுமுறை தான். பொதுவாக விடுமுறை, மாணவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக ஆரம்பித்தாலும் முடிவது எல்லோருக்கும் மகிழ்வாக முடிகிறதா???

தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை இருக்கும் மகிழ்ச்சி, தேர்வு முடிவுகள் வெளியானதும் பல மாணவர்கள் வாழ்வில் காணாமல் போய்விடுகிறது என்பதே நிஜம். ஏன்.! தேர்வு முடிவுகள் சில மாணவர்களின் உயிரையும் கூட வாங்கி விடுகிறது. உயிரை விட்ட மாணவர்களைப் பற்றிய செய்தி, செய்தித்தாள்களுக்கு அன்றைய நாளின் புதுத்தீனி. செய்தியைப் படிப்பவர்களுக்கோ அது ஆண்டுக்கொரு முறை நடக்கும் சாதாரண நிகழ்வு.

உண்மையில் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் உயிரை விடுவது சாதாரண நிகழ்வா? இன்று எங்கோ எவர் வீட்டிலோ நடக்கும் ஒரு இளந்தளிரின் மரணம், நாளை நம் வீட்டிலும் நடக்காது என்று என்ன நிச்சயம்? நம் வீட்டிலும் நடக்கலாம், ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்று கடந்து போகலாமா. இன்னும் ஒரு இளந்தளிரின் மரணம், தேர்வு முடிவுகளால் நடக்காமல் இருக்க என்ன செய்யப் போகிறோம் நாம்.

இது சற்று கடினமான சூழ்நிலை தான். ஆனால், கருவிலிருந்து கல்விக்கூடம் வரை, பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளையை தேர்வின் முடிவு பலியாக்காமல் இருக்க இதனைச் செய்ய வேண்டியது பெற்றோர்களுக்கு அவசியமாகிறது. ஒரு ஐந்து நிமிடமாவது பெற்றவர்கள் தங்கள் பிள்ளையிடம் மனம் விட்டுப் பேச வேண்டிய தருணம் இது. பிள்ளைக்காக ஓடி ஓடி சம்பாதிக்கும் பெற்றவர்கள் அந்த பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக அவர்களிடம் அமர்ந்து வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டிய தருணம் இது.

தேர்வு முடிவுகள் என்பது ஏற்கனவே முடிந்து போன நிகழ்வான தேர்வுகளின் முடிவே. முடிந்து போன ஒன்றின் முடிவுக்காக வருங்காலத்தைப் பலியாக்குதல் என்பது மடமைத்தனம் என்று பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் புரிய வைக்க வேண்டும். பிள்ளைகளின் தேர்வுக் காலத்தில், அவர்களை படிக்க வைக்க எத்தனை கடுமையாக பெற்றவர்கள் நடந்திருந்தாலும், தேர்வு முடிவுகள் வரும் இந்தச் சூழ்நிலையில், முடிவு என்னவாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு ஆதரவாகத் தான் நாம் இருக்கிறோம் என்று பிள்ளைகளை பெற்றவர்கள் நம்ப வைக்க வேண்டும்.

தவழும் குழந்தை, தான் தத்தி நடக்க எடுக்கும் முயற்சியில் எத்தனை முறை கீழே விழுந்தாலும், மீண்டும் நடக்க எடுக்கும் முயற்சி போல நாம் வாழ்வில் சருக்கி விழும் எதுவும் முடிவல்ல; மீண்டும் எழுந்து நடக்க முயன்றால் கண்டிப்பாக எழுந்து நடப்போம் என்ற நம்பிக்கையை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் தோல்வியையே என்றும் கண்டிராதவர்கள் அலுவலக வேலைகளில் தோல்வியைக் காணும் போது அதிகம் துவண்டு போவார்கள். வெற்றியும், தோல்வியும் சமமாகப் பார்த்து, தோல்விகளை வெற்றிக்கான படிகளாக மாற்றும் வாழ்க்கைப் பாடத்தை இவர்கள் தாமதமாகப் பெறுகிறார்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கையிலேயே தோல்விகளைச் சந்தித்தவர்கள் இந்த வாழ்க்கைப் பாடத்தை முன்னதாகவே பெற்று விடுகிறார்கள்.

தேர்வின் முடிவு மட்டுமல்ல, எந்த ஒரு செயலின் முடிவும் என்னவாக இருந்தாலும், தனக்கு ஆதரவாக ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கையும், தன்னால் முடியும் என்று நம்மை நம்பும் ஒருவர் இருக்கிறார் என்கிற உணர்வும் ஒருவனுக்கு கிடைத்து விட்டால் போதும்; அவன், தனக்காக இல்லை என்றாலும் தனக்கு ஆதரவு தெரிவித்தவருக்காகவும், தன்னை நம்புபவருக்காகவும் போராடி வெற்றியை அடைவான். இனியேனும் பெற்றொர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு இதனை புரிய வைக்க முயன்றால் தோல்விக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் அடியோடு காணாமல் போகும்…

இனியேனும் சிந்திப்போமா.!!!