Thursday, January 17, 2013

அச்சாணி

அச்சாணி அல்லது கடையாணி. இதனை நாம் நமது வாழ்வில் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட அதைப்பற்றி கேள்வியாவது பட்டிருப்போம். தெரியாதவர்களுக்காக... அச்சாணி என்பது, மாட்டு வண்டியிலோ குதிரை வண்டியிலோ சக்கரம் வண்டியிலிருந்து கழன்று விடாமல் தாங்கிப் பிடிக்கும் ஆணி...

இந்த அச்சாணி பற்றி பேசுவதென்றால் நிறைய பேசலாம். முன்பெல்லாம் மாட்டு வண்டிகளில், மாட்டின் கழுத்துமணி தரும் தாளத்துக்கு ஜதி சேர்ப்பது போல இந்த அச்சாணியில் கட்டப்பட்டிருக்கும் மணியின் சத்தம் வருவதைக் கவனித்திருக்கலாம். மாட்டு வண்டியில் அதிகம் பயணப்படாதவன் என்றாலும் நானும் சிறுவயதில் சில முறை பயணம் செய்திருக்கிறேன்.
மாட்டுக்கு கழுத்து மணி இருப்பது சரி. இந்த அச்சாணிக்கு எதுக்கு மணி கட்டியிருக்காங்க. அழகுக்காகவான்னா, அழகுக்காக மட்டுமல்ல அச்சாணி கழன்று விழுந்து விட்டதா இல்லையா என அறிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கட்டுமே அப்படின்னு தான்...

அச்சாணி இல்லாத வண்டி அரை கெஜம் தாண்டாதும்பாங்க எங்க ஊருல... ஆனா இது உண்மையா.? முத்து படம் பார்த்திருப்பீங்க. அதுல வடிவேலு அச்சாணியைக் கழட்டி கையில வச்சுகிட்டு இருப்பாரு. வண்டி ஓடும். காருக்கு எதுக்கு அச்சாணி அப்படின்னு கேட்கவும் வண்டி குடை சாயவும் சரியா இருக்கும். இதுதான் அப்படின்னா அயன் படம் பார்த்திருந்தீங்கன்னா பிரபுவும் சூர்யாவும் வில்லனைப் பார்த்துட்டு திரும்புற கடைசிக் காட்சியில் வில்லன் பிரபுவிடம் லட்டுளை வச்சேன்னு பார்த்தியா நட்டுல வைச்செண்டானு, டயரை வண்டியுடன் பிணைத்திருக்கும் நட்டைக் கீழே போடுவார். அதே சமயம் கார் தடுமாறி விபத்துக்குள்ளாகி பிரபு மரணிப்பார். இந்த படத்தின் காட்சிகள் எல்லாம் என்ன சொல்ல வருது...

சின்ன வயதில் அப்பா தான் செய்த வயல் வேலைகளை பற்றி அடிக்கடி எங்களிடம் பேசுவார். அப்படித்தான் ஒருநாள், முத்து படத்தின் மேற்சொன்ன காட்சியைப் பார்த்து சிலாகிச்சு அவர் வாழ்வில் நடந்த நிகழ்வைப் பற்றி பேசினார்.

வயலில் இருந்து நெல்மூட்டைகளை மாட்டு வண்டியில் எடுத்துக் கொண்டு களத்துமேட்டுக்கு வந்திருக்கிறார் அப்பா... களத்து மேட்டில் மூட்டைகளை இறக்கிய பின் தான் கவனித்து இருக்கிறார், வண்டியில் அச்சாணி இல்லையென்று. எங்கு கழன்று விழுந்திருக்கும் என யோசித்தவாறு களத்து மேட்டில் இருந்து வண்டியை வீட்டுக்கு திருப்பலாம் எனத் திருப்பினால் வண்டி திரும்புவதற்குள்ளாகவே சக்கரம் கழன்று விழுந்து விட்டதாம்.
சரி என்று கழன்று விழுந்த அச்சாணியை வந்த வழியே தேடிச் சென்றால் அச்சாணி நெல் வயலில் மூட்டைகளை ஏற்றும் இடத்திலேயே விழுந்து கிடந்ததாம். அப்பாவுக்கு, அச்சாணி இல்லாமல் வண்டி குடை சாயாமல் எப்படி இந்த வயல் வெளிகளின் மேடு பள்ளத்தில் வந்தது என்ற ஆச்சர்யம் ஒன்றுமில்லையாம். ஏனென்றால் அச்சாணி இல்லையென்று நமக்கு தெரிந்த பிறகு மட்டுமே வண்டி அரை கெஜம் கூட தாண்டாது அப்படின்னு சொன்னார். மேலும், இதுதான் உண்மையும் கூட. நான் நிறைய நிகழ்வுகளை இப்படி கண்ணால் பார்த்திருக்கிறேன் எனச் சொன்னார்.

இது எதேச்சையாக நடக்கும் நிகழ்வா, இதற்கு காரணம் என்ன? இதையெல்லாம் ஆராயும் எண்ணம் நமக்கில்லை.

ஆனால் நமது வாழ்க்கையின் தத்துவம் இந்த அச்சாணியில் அடங்கி இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். நமது வாழ்க்கை என்னும் வண்டி ஓட பலவித அச்சாணிகள் அவசியமாக இருக்கிறது. அதில் சில அச்சாணிகள் நம்மை அறியாமல் கழன்று விழும் பொழுது வாழ்க்கை என்னும் வண்டியில் சேதம் ஏற்படுவதில்லை. ஆனால், ஏதாவதொரு அச்சாணியை இழந்து நிற்கிறோம் என நாம் உணரும் பொழுது அது நம்மை மனதளவில் கண்டிப்பாக சேதப்படுத்தி விடுகிறது. அச்சாணியின் இருப்பை அறிந்து கொள்ள அச்சாணிக்கு மணி கட்டுவது போல நமது வாழ்க்கையின் அச்சாணிகளுக்கும் நாம் ஒரு மணியைக் கட்டி விட்டு ஜாக்கிரதையாக இருந்தால் நமது மனதின் சேதத்தை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்....

Wednesday, January 16, 2013

பரிசுச் சீட்டும் பழமொழியும் - அதீதம் கடைசிப்பக்கத்தில் வெளியானது

எனது சின்ன வயதில் எங்கள் வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் மளிகை கடைக்கு எதேச்சையாக நேற்று சென்றிருந்தேன். தொழில் போட்டி காரணமாக சிறிய இடத்திற்கு மாற்றலாகி இருந்த கடையில் எப்பொழுதும் போல கடைக்காரர் சிரித்த முகத்துடன் வரவேற்றார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கையில் இரண்டு சிறுவர்கள் பொருட்கள் வாங்க கடைக்கு வந்தனர். ஒருவன் பத்து ரூபாய் தாளைக் கடைக்காரரிடம் கொடுத்து தக்காளி வாங்கி கொண்டிருந்தான். பக்கத்தில் இருப்பவன், டேய், எட்டு ரூபாய்க்கு மட்டும் தக்காளி வாங்குடா, ரெண்டு ரூபாய்க்கு பரிசுச்சீட்டு வாங்கலாம் என்றான்.

பரிசுச்சீட்டு பற்றி தெரியாதவர்களுக்காக…  பரிசுச்சீட்டு எனும் சீட்டில் ஒன்றிலிருந்து நூறு வரை சில எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். முன்னாட்களில் எண்களுக்கு பதிலாக ஜோக்கர்களும் சில சீட்டுகளில் இருக்கும். ஜோக்கர் வந்தால் பரிசு எதுவும் கிடையாது என்று அர்த்தம். ஆனால் இப்பொழுது வரும் பரிசுச் சீட்டுகள் அனைத்திலும் ஏதாவது ஒரு எண் கண்டிப்பாக இருக்கிறது.

குறிப்பிட்ட எண்களுக்கு குறிப்பிட்ட பரிசு என ஒரு பரிசு விளம்பரமும் இருக்கும். முதல் இருபத்தைந்து எண்களுக்கு நடிகர்களின் ஸ்டிக்கர்கள் அடுத்த இருபத்தைந்து எண்களுக்கு ஊக்கு போன்ற சிறிய சிறிய பரிசுகள் என  எல்லா சீட்டுக்கும் ஏதாவது ஒரு பரிசு இருக்கும்.

தக்காளி வாங்க வந்த சிறுவன், “போடா அம்மா திட்டுவாங்க” என்று சொல்லி விட்டு நகர முற்படுகையில் முன்னவன், “டேய், நான் கூட வீட்டுக்கு பொருள் வாங்கி போகும் பொது இப்படி தாண்டா ஒன்னு ரெண்டு பரிசுச்சீட்டு வாங்குவேன்… ” பரவாயில்லை வாங்குடா எனச் சொல்ல, தக்காளி வாங்க வந்த சிறுவன் பயந்து கொண்டு தக்காளி மட்டும் வாங்கியவாறு வீடு நோக்கி நகரத் தொடங்கினான்…

அந்த நிகழ்வைப் பார்த்ததும் என் மனது சொல்லிக் கொண்டது மேயுற மாட்டை நக்குற மாடு கெடுக்கப் பார்க்குதுன்னு…

மெதுவாய் கடைக்காரரிடம் சொன்னேன்… அண்ணா, இந்த பயலோட அம்மாட்ட நீங்களாச்சும் மளிகை பொருட்கள் வாங்க கொடுக்கும் பணத்தில் பரிசுச்சீட்டு வாங்குறான்னு சொல்லலாமில்லைனு கேட்டேன்…

எங்கப்பா சொல்லுறது, கொடுக்குற பணத்துக்கு மளிகை சாமான் குறைவா ஏன் வருதுன்னு என்னைய வந்து கேட்டா தானே சொல்ல முடியும். அவங்க அம்மா இங்க வர்றதே இல்லை…. நானும் என் பொழப்பைப் பார்க்கனுமில்லைன்னாரு….

ம்ம்ம்…இப்படியே  நாங்கள் பேசிக் கொண்டிருக்க முன்பு வந்த சிறுவர்களில் பரிசுச்சீட்டு வாங்க சொன்ன சிறுவன் பத்து ரூபாய் தாளைக் கொடுத்து இரண்டு சீட்டுகள் வாங்கினான். இரண்டுக்கும் அவன் எதிர்பார்த்த பரிசு கிடைக்காமல் ஏதோ பரிசு விழ வருத்தத்துடன் நகர, நானும் என் மனதில், ” என்னதான் எண்ணையத் தடவிட்டு மண்ணுல புரண்டாலும் ஓட்டுறது தானே ஓட்டும்” எனச் சொல்லிக் கொண்டு எனது வீட்டுக்கு நகர்ந்தேன்…

நம்மால வேற என்ன செய்ய முடியும்… சரிதானுங்களே…

அதீதத்தில் படிக்க : http://www.atheetham.com/?p=3807

 

சாதாரணன் - 2

என்றும் எதிலும் தன தோல்வியை ஒத்துக் கொள்ளத் தயங்கும்/மறுக்கும் இணையப் புலி மனது, வீடியோ எடுக்காமல் போனால் என்ன? என்ன நடக்கிறது என்று பார்த்து வெறும் எழுத்துகளில் எழுதி வைப்போமே, என்று வேடிக்கைப் பார்க்க என்னை உந்தியது..


நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் அப்படி என்ன தான் செய்து கொண்டிருந்தார்கள்...

 சிலர் அந்த காலைப் பொழுதிலும் உறங்கிக் கொண்டு இருந்தார்கள்...

சிலர் கூட்டம் கூட்டமாய் அமர்ந்து ஊர் கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள்..
 
சிலர் தீப்பெட்டியின் பெட்டி பகுதி ஒட்டிக் கொண்டு இருந்தார்கள்(எங்கள் ஊரில் பல பேருக்கு இதுதான் சம்பளம் தரும் வேலை)...

சிலர் சுள்ளி பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள்...


சிலர் விறகு வெட்டிக் கொண்டு இருந்தார்கள்...

ஹ்ம்ம்... நாடு செழிக்கட்டும் என்று மனதுள் சொல்லியவாறு வீட்டுக்குள் நுழைந்தேன்...


இப்பொழுது ஒரு சிறிய விவரம்... கேள்விப்பட்டது மட்டுமே... இது பொய்யாகவும் இருக்கலாம்...

நாளொன்றுக்கு இவர்களுக்கு அரசு தரும் கூலி 130 ரூபாய்.


வேலை செய்யாமலேயே பணம் வழங்குவதற்காக ஒரு ஆளின் தினக் கூலியில் இருந்து இருபது ரூபாய்கள் குறைவாகவே அதாவது 110 ரூபாய்கள் மட்டுமே இவர்களுக்கு தரப்படுகிறதாம்....
 
இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஆண்டொன்றுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடியும்... ஆனால் சில இடங்களில், முதல் 100 நாள் வேலை செய்தவர் இன்னொரு பெயரில் மேலும் 100 நாட்களும் இதே மாதிரி வேலை செய்கிறார்களாம்.. அப்படி நடக்கும் இடங்களில் வேலை செய்பவருக்கு கூலி 70 மிச்சம் வேலை வழங்குபவருக்கு....


இப்படி நடந்தால் எப்படி தேசம் உருப்படும் என்று பலவாறாக யோசித்து பக்கம் பக்கமாக எனது இணையப் புலி மனம் எனது மனதில் தட்டச்சிக் கொண்டிருக்க, சாதாரனான இன்னொரு மனம் உனது அலுவலக வேலை நேரத்தில் எப்பொழுதும் அலுவலக வேலை மட்டும் தான் நீ பார்க்கிறாயா, அலுவலக நண்பர்களுடன் பேசுவது, காபி குடிக்க கேண்டீன் சென்று அரட்டை அடிப்பது, இணையத்தில் பொழுதைக் கழிப்பது, உன்னுடைய சொந்த வேலைகளைச் செய்வது என உனது தகுதிக்கு ஏற்றவாறு நீயும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் தானே. அலுவலகத்தின் நாலு சுவற்றுக்குள் நீ செய்யும் தவறுகள் உனக்கு நியாயம், அதே வேலையை பொதுவில் ஒருவன் செய்தால் உனது மனம் அரசாங்கத்தைச் சாடும்... உனக்கும் அவர்களில் ஒருவரைப் போல அரசாங்கம் சும்மா உட்கார பணம் கொடுத்தால் நீயும் கண்டிப்பாக போக மாட்டாய் என்பது என்ன நிச்சயம் என்று சாட்டையடியாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக மீண்டும் சாதாரனனிடம் தோற்று காணாமல் போனது இணையப் புலி மனம்...

சாதாரணன் - 1எப்பொழுதும் போல வார விடுமுறைக்கு வீட்டிற்க்குச் சென்றிருந்தேன். சுமார் பத்து மணி அளவில் எனது வீட்டிற்கு அருகாமையில் ஆண், பெண் என சுமார் இருபது ஆட்கள் அமர்ந்து இருந்தனர். அதிலிருந்து சில ஆட்கள் மட்டும் ஒரு அரை மணி நேரம் அருகில் இருக்கும் கால்வாயில் இருந்து தூர் வாரிக் கொண்டிருந்தனர்.


ஊரில் அந்த வார நிகழ்வுகள், குடும்ப நிலவரம் இவற்றைப் பற்றி பேசும் காலைச் சிற்றுண்டியுடன் கூடிய குடும்ப மாநாடு அரங்கேறிக் கொண்டிருந்தது எனது வீட்டில். எதற்காக நம் வீட்டிற்கு அருகில் இத்தனை பேர் கூடி இருக்கிறார்கள். என்ன வேலை செய்கிறார்கள் இங்கு கேட்டபடி நான்....


மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்ய வந்தவர்கள் இவர்கள் - இது அப்பா...

இந்த வாரம் முழுக்க இப்படித்தான் வந்து வெறுமனே உட்கார்ந்து விட்டு பொழுதைக் கழித்து விட்டு போகிறார்கள். இப்படி சும்மா உட்கார்ந்திருக்க கவர்ன்மெண்டு காசு கொடுக்கும் பொது யாரு கஷ்டப்பட்டு விவசாய வேலை செய்ய வருவாங்க - சுய புலம்பலுடன் அம்மா...


டேய், நீதான் இணையத்துல அப்பப்ப எதுனா எழுதுறியே, இதை வீடியோ புடிச்சு இதைப் பத்தியும் எழுதேண்டா - அண்ணன்.

கண்டிப்பாக எழுதுகிறேன் - நான்.

எதுக்குப்பா ஊரு பொல்லாப்பு... யாருக்குத் தெரியாது இந்த திட்டம் இப்படி தான் வீணாப் போகுது அப்படின்னு. நீங்க ஏதாச்சும் எழுதி எதுக்கு பிரச்சினையை வேணும்னு இழுத்து தோளுல போட்டுக்குறீங்க.... பாசத்தில் அப்பா அம்மா இருவரும்....


தப்பு செய்யுற அவங்களே பயப்படாம தப்பு பண்ணும் பொது அவங்க செய்யுற தப்பை பொது வெளியில் எழுதப் போறதுக்கு நானு ஏன்பா பயப்படனும்... இணையப் புலியாய் நான்...

மாநாடு முடிந்தது... சாப்பிட்டக் கை கழுவியதும் நேரே என்னிடம் இருக்கும் ஒரு சிறிய கேமராவில் அந்நிகழ்வுகளை படம் பிடிக்க கேமராவைத் தேடி அதற்கு பேட்டரிகளை தயார் செய்து கொண்டிருந்தேன்.

என்னடா பண்ணுற, கேமராவைத் தூக்கி அது இருந்த இடத்துல வை. நான் நாளைக்கு ராஜஸ்தான் புறப்பட்டுடுவேன்... நீ நாளைக்கு பெங்களூர் போய்டுவ... வீட்டுல அப்பா அம்மா மட்டும் தான்... நீ எழுதுனதை யாராச்சும் பார்த்து நாளைக்கு வீட்டுக்கு வந்து கரைச்சல் பண்ணா என்ன பண்ணுவ... நாம வீட்டுப் பக்கம் இருந்தா பிரச்சினையை பார்த்துக்கலாம்... தேவை இல்லாம ஏன் அப்பா அம்மாவுக்கு பிரச்சினையை கொண்டு வந்து போடுவானேன்... - அதே அண்ணன்....


நாட்டை விட வீடு தான் முக்கியம்... இணையப் புலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட இந்த முறையும் என்னுள் இருந்த சாதாரணனே வெற்றி பெற்றான்...

- தொடரும்.

Wednesday, January 9, 2013

வெண்பாவில் கற்கலாம் வெண்பா


வரவேற்பு பா:

பொழுதைக் கழிக்க பழுதின்றி வெண்பா
எழுதிப் பழகுவோம் வா.

பாடம்

பதத்தைப் பிரித்தே அசையை அறிதல்
முதல்வகுப் பாகும் அறி.

அசைகள் வகையினில் நேர்நிரை என்று
பெயரில் இரண்டாம் அறி.

குறில்தனித்தோ அன்றி குறிலுடன் ஒற்றோ
நெடில்தனித்தோ அன்றி நெடிலுடன் ஒற்றோ
வருதலைச் சொல்லிடுவோம் நேர்.

குறிலிணைந்தோ அன்றி குறிலிணைந்து ஒற்றோ 
குறில்நெடிலோ அன்றி குறில்நெடிலோடு ஒற்றோ
வருதலைச் சொல்வோம் நிரை.

ஈற்றடி முச்சீராய் ஏனைய(மற்றவை) நாற்சீராய்
பார்த்துநீ பாடல் அமை.

ஈற்றுச்சீர் தான்தவிர்த்து வெண்பாவில் சொற்களெலாம்
ஈரசையோ மூவசையோ கொண்டிருக்க வேண்டுமப்பா
கூற்றிதனை எண்ணத்தில் கொள்.

ஈரசை தன்னில் முடியும் அசையது
நேரசை என்றால் தொடர்தல் நிரையாம்
நிரையசை என்றால் தொடர்வது நேராம்
உரையிதை நெஞ்சில் நிறுத்து.

மூவசை யாக வரும்சொல் அனைத்தும்
நேரசைக் கொண்டு முடிந்து; தொடர்வதும்
நேரசைக் கொண்டென்று அறி.

நாள்;மலர் காசு பிறப்பிவ் வசையையொத்தே
வெண்பாவின் ஈற்று வரும்.

அடியைப் பொறுத்து குறள்;சிந்து அளவடி
பஃறொடை மற்றும் கலியென வெண்பா
வகைகளில் ஐந்தாம் அறி.

ஈரடி கொண்டே இருந்திடும் வெண்பா
குறளாம் பெயரில் அறி.

மூவடி கொண்டே இருந்திடும் வெண்பாவை
சிந்தியல் என்பர் அறி

நாலடி கொண்டே இருந்திடும் வெண்பா
அளவடி யாகும் அறி.

ஐமுதல் ஈரா றடிகளைக் கொண்டது
பஃறொடை யாகும் அறி.

ஈரா றடியினை வெண்பா கடக்க
கலியென் றழைப்பர் அறி.

இந்த பாக்களை, வெண்பா எழுத ஒரு ஆரம்பப் புள்ளியாக வைத்துக் கொள்ளலாம்... இவைகள் எல்லாம் வெண்பாவிற்கு அடிப்படை விதிகள் மட்டுமே. 

முழுமையான வெண்பா எழுத அடி எதுகை, பொழிப்பு மோனை என இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அவற்றையும் மேலும் வெண்பா வகைகள், அவற்றுக்குண்டான விதிமுறைகள் ஆகியவற்றையும் இன்னொரு பதிவில் ஆரம்பித்து வெண்பா வடிவில் தர முயற்சி செய்கிறேன்...

Sunday, January 6, 2013

தோல்வி வெறி

//
தோல்வி மனிதனுக்கு வெறி மூட்டும்
வெறியில் மதி மாறும்
எதிரி அது சமயம் இடம் கண்டு இடிப்பான்
வெறி மேலும் வீங்கும்
நெறி கெட்டு அறம் விட்டு தடம் மாறி
படுகுழியில் வீழ்வான்... இல்லை
எதிரி வீழ வைப்பான்
//
.
மடிகணினியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது கர்ணன் பட வசனம்.

எத்தனை ஆழமான வார்த்தைகள். எந்த விஷயத்தில் ஆகட்டும், நமக்கு ஏற்படும் தோல்வி நம்முள் ஒரு வெறியை உருவாக்கி விட்டுத்தானே செல்கிறது. மனம் தடுமாறும் அந்த ஒரு நிமிட வெறியை எதிரி கண்டு கொண்டு இடித்து விடுவானானால் மேலும் அவ்வெறி கூடி நாம் இன்னது செய்கிறோம் என அறியாமலேயே படுகுழியில் வீழ்ந்திடுவோம். எதிரி நம்மை வீழ்த்தி இருப்பான்.

வெறி அடங்கி மதி தெளியும் பொழுது மீள முடியாத பழியைச் சேர்த்திருப்போம்.

அட, இதே கருத்தோடு ஏதோ வரிகள் தொலைக்காட்சியில் ஒலிக்கிறதே...

//
காசு பணமெல்லாம் கரைஞ்சா திரும்பும்
பேரு போனா திரும்பாது...
//

உண்மை தானே நமது தோல்வியின் வெறியில் நமது செயல்பாடுகள் காசு பணத்தையா கரைக்கப் போகிறது. பெயரைத்தானே.! ஒரு முறை பெயர் கெட்டு விட்டால் கெட்டுப் போனது தானே...

ஏனோ அப்பாவின் அறிவுரையும் இச்சமயம் நினைவில் வருகிறது...

//
மகனே.! நல்லவன்னு பேரு வாங்கறது கஷ்டமில்லை, அதைக் காப்பாத்தறது தான் கஷ்டம்... ஏன்னா, நீ செய்யும்/சொல்லும் ஒரு செயல்/சொல் கெட்டதா இருந்ததுனா அதுநாள் வரை நீ பாடுபட்டு சேர்த்து வைச்சிருந்த நல்லவன்ற பேரு அத்தோட காணாமப் போயிடும். அதுக்கு பிறகு நீ எப்பவுமே கெட்டவன் தான்...
//

ஹ்ம்ம்... இதுவும் உண்மை தானே... என்ன நான் சொல்றது...