Wednesday, January 16, 2013

சாதாரணன் - 1



எப்பொழுதும் போல வார விடுமுறைக்கு வீட்டிற்க்குச் சென்றிருந்தேன். சுமார் பத்து மணி அளவில் எனது வீட்டிற்கு அருகாமையில் ஆண், பெண் என சுமார் இருபது ஆட்கள் அமர்ந்து இருந்தனர். அதிலிருந்து சில ஆட்கள் மட்டும் ஒரு அரை மணி நேரம் அருகில் இருக்கும் கால்வாயில் இருந்து தூர் வாரிக் கொண்டிருந்தனர்.


ஊரில் அந்த வார நிகழ்வுகள், குடும்ப நிலவரம் இவற்றைப் பற்றி பேசும் காலைச் சிற்றுண்டியுடன் கூடிய குடும்ப மாநாடு அரங்கேறிக் கொண்டிருந்தது எனது வீட்டில். எதற்காக நம் வீட்டிற்கு அருகில் இத்தனை பேர் கூடி இருக்கிறார்கள். என்ன வேலை செய்கிறார்கள் இங்கு கேட்டபடி நான்....


மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்ய வந்தவர்கள் இவர்கள் - இது அப்பா...

இந்த வாரம் முழுக்க இப்படித்தான் வந்து வெறுமனே உட்கார்ந்து விட்டு பொழுதைக் கழித்து விட்டு போகிறார்கள். இப்படி சும்மா உட்கார்ந்திருக்க கவர்ன்மெண்டு காசு கொடுக்கும் பொது யாரு கஷ்டப்பட்டு விவசாய வேலை செய்ய வருவாங்க - சுய புலம்பலுடன் அம்மா...


டேய், நீதான் இணையத்துல அப்பப்ப எதுனா எழுதுறியே, இதை வீடியோ புடிச்சு இதைப் பத்தியும் எழுதேண்டா - அண்ணன்.

கண்டிப்பாக எழுதுகிறேன் - நான்.

எதுக்குப்பா ஊரு பொல்லாப்பு... யாருக்குத் தெரியாது இந்த திட்டம் இப்படி தான் வீணாப் போகுது அப்படின்னு. நீங்க ஏதாச்சும் எழுதி எதுக்கு பிரச்சினையை வேணும்னு இழுத்து தோளுல போட்டுக்குறீங்க.... பாசத்தில் அப்பா அம்மா இருவரும்....


தப்பு செய்யுற அவங்களே பயப்படாம தப்பு பண்ணும் பொது அவங்க செய்யுற தப்பை பொது வெளியில் எழுதப் போறதுக்கு நானு ஏன்பா பயப்படனும்... இணையப் புலியாய் நான்...

மாநாடு முடிந்தது... சாப்பிட்டக் கை கழுவியதும் நேரே என்னிடம் இருக்கும் ஒரு சிறிய கேமராவில் அந்நிகழ்வுகளை படம் பிடிக்க கேமராவைத் தேடி அதற்கு பேட்டரிகளை தயார் செய்து கொண்டிருந்தேன்.

என்னடா பண்ணுற, கேமராவைத் தூக்கி அது இருந்த இடத்துல வை. நான் நாளைக்கு ராஜஸ்தான் புறப்பட்டுடுவேன்... நீ நாளைக்கு பெங்களூர் போய்டுவ... வீட்டுல அப்பா அம்மா மட்டும் தான்... நீ எழுதுனதை யாராச்சும் பார்த்து நாளைக்கு வீட்டுக்கு வந்து கரைச்சல் பண்ணா என்ன பண்ணுவ... நாம வீட்டுப் பக்கம் இருந்தா பிரச்சினையை பார்த்துக்கலாம்... தேவை இல்லாம ஏன் அப்பா அம்மாவுக்கு பிரச்சினையை கொண்டு வந்து போடுவானேன்... - அதே அண்ணன்....


நாட்டை விட வீடு தான் முக்கியம்... இணையப் புலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட இந்த முறையும் என்னுள் இருந்த சாதாரணனே வெற்றி பெற்றான்...

- தொடரும்.

No comments:

Post a Comment