Wednesday, January 9, 2013

வெண்பாவில் கற்கலாம் வெண்பா


வரவேற்பு பா:

பொழுதைக் கழிக்க பழுதின்றி வெண்பா
எழுதிப் பழகுவோம் வா.

பாடம்

பதத்தைப் பிரித்தே அசையை அறிதல்
முதல்வகுப் பாகும் அறி.

அசைகள் வகையினில் நேர்நிரை என்று
பெயரில் இரண்டாம் அறி.

குறில்தனித்தோ அன்றி குறிலுடன் ஒற்றோ
நெடில்தனித்தோ அன்றி நெடிலுடன் ஒற்றோ
வருதலைச் சொல்லிடுவோம் நேர்.

குறிலிணைந்தோ அன்றி குறிலிணைந்து ஒற்றோ 
குறில்நெடிலோ அன்றி குறில்நெடிலோடு ஒற்றோ
வருதலைச் சொல்வோம் நிரை.

ஈற்றடி முச்சீராய் ஏனைய(மற்றவை) நாற்சீராய்
பார்த்துநீ பாடல் அமை.

ஈற்றுச்சீர் தான்தவிர்த்து வெண்பாவில் சொற்களெலாம்
ஈரசையோ மூவசையோ கொண்டிருக்க வேண்டுமப்பா
கூற்றிதனை எண்ணத்தில் கொள்.

ஈரசை தன்னில் முடியும் அசையது
நேரசை என்றால் தொடர்தல் நிரையாம்
நிரையசை என்றால் தொடர்வது நேராம்
உரையிதை நெஞ்சில் நிறுத்து.

மூவசை யாக வரும்சொல் அனைத்தும்
நேரசைக் கொண்டு முடிந்து; தொடர்வதும்
நேரசைக் கொண்டென்று அறி.

நாள்;மலர் காசு பிறப்பிவ் வசையையொத்தே
வெண்பாவின் ஈற்று வரும்.

அடியைப் பொறுத்து குறள்;சிந்து அளவடி
பஃறொடை மற்றும் கலியென வெண்பா
வகைகளில் ஐந்தாம் அறி.

ஈரடி கொண்டே இருந்திடும் வெண்பா
குறளாம் பெயரில் அறி.

மூவடி கொண்டே இருந்திடும் வெண்பாவை
சிந்தியல் என்பர் அறி

நாலடி கொண்டே இருந்திடும் வெண்பா
அளவடி யாகும் அறி.

ஐமுதல் ஈரா றடிகளைக் கொண்டது
பஃறொடை யாகும் அறி.

ஈரா றடியினை வெண்பா கடக்க
கலியென் றழைப்பர் அறி.

இந்த பாக்களை, வெண்பா எழுத ஒரு ஆரம்பப் புள்ளியாக வைத்துக் கொள்ளலாம்... இவைகள் எல்லாம் வெண்பாவிற்கு அடிப்படை விதிகள் மட்டுமே. 

முழுமையான வெண்பா எழுத அடி எதுகை, பொழிப்பு மோனை என இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அவற்றையும் மேலும் வெண்பா வகைகள், அவற்றுக்குண்டான விதிமுறைகள் ஆகியவற்றையும் இன்னொரு பதிவில் ஆரம்பித்து வெண்பா வடிவில் தர முயற்சி செய்கிறேன்...

No comments:

Post a Comment