Tuesday, November 20, 2012

பயணங்கள் முடிவதில்லை

பயணம் ஆரம்பமானது. ஆம் அன்றுதான் நான் என் தாயின் கருவறை விடுத்து அழுதவாறு தரையைத் தொட்டு வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தேன். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் எழுப்பினாலும் இனம் புரியாத பயத்தோடும், பயத்தை வெளிப்படுத்தும் வகை அறியாமலும் எனது பயணம் அழுகையுடன் ஆரம்பமானது. எனது தொடர்ந்த அழுகை, பசிக்காக இருக்குமோ என்று எனது தாய் எனக்கு தாய்ப்பாலைக் கொடுக்க என் பிஞ்சு உள்ளத்தில் ஆழமாய் ஒரு விஷயம் பதிந்தது. “அழுகை, நமது தேவை என்ன என்பதை நம்மைச் சார்ந்தவர்கள் அறிந்துக் கொண்டு அத்தேவையை நிறைவேற்றவே என்பதும் அழுகையே தேவையைத் தீர்க்கும் கர்ப்பத்தரு” என்பதுமாம் அது.
நாட்கள் வாரமாகி, வாரங்கள் மாதமாகி, மாதங்கள் சில வருடங்களாகும் வரை எனக்கு உண்மையில் அழுகை “காமதேனு”வாகவே காட்சி அளித்தது. காமதேனுவாக காட்சி அளித்த அழுகை ஒரு திருவிழாவின் போது, நான் வேண்டும் என்று அடம்பிடித்து அழுது கேட்ட சில பொருட்கள் கிடைக்காததால் எனக்கு காமதேனுவாகத் தெரியவில்லை. அழுகையின் மீதான நம்பிக்கை அவநம்பிக்கையானது. அன்று முதல் நான் எதற்காகவும், எந்த காரணத்திற்காகவும் அழுவதில்லை என்று உறுதி பூண்டேன்.
எனக்கு பள்ளிப்படிப்பின் பயணம் ஆரம்பமான காலம் அது. படிப்பில் சுமாராக இருந்ததால் எனது பெற்றோர்கள் எங்கள் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது எனக்கு வருத்தத்தையும், அழுகையும் தரவில்லை, மாறாக என்னுள் முயற்சியும், போட்டி மனப்பான்மையுமே வளரத் தொடங்கியது. இந்த முயற்சியும் போட்டி மனப்பான்மையும் என்னை பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்தவனாக்கியது. எனது அறிவால் என்னை விஞ்ச யாருமில்லை என்ற அளவில் வளர்ந்த நான் எனது அறிவை மெய்ப்பிக்க என்னை ஒரு அலுவலகத்தில் இணைத்துக் கொண்டேன்.
எனது அறிவாற்றலால் சற்று தலைக்கணத்தோடு இருந்த எனக்கு பேரிடியாக அமைந்தது அலுவலக நிகழ்வுகள். எனது அறிவாற்றல் பொதுமக்களுக்கு பயன்படக்கூடியதாக இருந்த போதிலும், அலுவலகத்தினரால் எனது அறிவாற்றல் நிராகரிக்கப்பட்டது. நான் ஒவ்வொரு முறை என்னை நிரூபிக்க பெருமுயற்சி எடுத்த போதும் எனது மக்களுக்கான சேவையில் நாட்டமில்லாத அலுவலகம் என்னை மட்டம் தட்டிக் கொண்டே இருந்தது. நாளடைவில் நானும் அலுவலகத்துக்கு ஏற்ப என்னை எதிர்நோக்கி வரும் எத்தகைய பிரச்சினைகளையும் பக்குவமாக, நிதானமாக சமாளிக்கும் கலையைக் கற்றுக் கொண்டேன்.
எனது இனிமையான வாழ்க்கைக்கு, மேலும் இனிமை சேர்க்க நான் என் இல்வாழ்க்கைப் பயணத்தில் அடி எடுத்து வைத்தேன். அலுவலகம் கற்றுக் கொடுத்த பொறுமையும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறமையும் எனது இல்வாழ்க்கையின் பிரச்சினைகளை சமாளிக்க எனக்கு உதவியாக இருந்தது. அன்றுதான், நான் “முயற்சியையும், போட்டி மனப்பான்மையையும் விட சகிப்புத் தன்மையும், பிரச்சினைகளுக்கேற்ப சமயோசிதமாக நடந்து கொள்ளும் விதமுமே வாழ்க்கைக்கு அவசியமானது” என்பதை புரிந்து கொண்டேன்.
இல்வாழ்க்கையின் பயணத்தில் எனக்கு கிடைத்த அரிய பிள்ளைச் செல்வங்களும், என்னைப் போலவே அந்தந்த வயதின் போது அழுகையையும், போட்டி மனப்பான்மையும், பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறமையையும் கொண்டிருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்திருந்த போதும், எனக்கு மனம் உறுத்தலாகவே இருந்தது. ஏனோ என்றுமில்லாமல் இன்று என்னைப் பெற்று வளர்க்க கஷ்டப்பட்ட பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்றும், நான் பள்ளியிலும் கல்லூரியிலும் முதலாவதாக வருவதற்கு தடையென நினைத்தவர்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிப்பும், அலுவலகத்தில் முன்னேறுவதற்காக தெரிந்தே பொது மக்களுக்கு செய்த துரோகத்திற்கு இறைவனிடம் பிரார்த்தனையும் செய்ய வேண்டுமென்று எண்ணிய போதும் என்னால் படுத்த இடத்தில் இருந்து எழ முடியவில்லை. என்னைச் சுற்றிலும் எனது உடலைக் கட்டிக் கதறும் உறவினர்களைக் கண்டு என்ன நடந்தது என்று யூகிக்க முடியாமல் மெல்ல மெல்ல காற்றோடு காற்றாக கலந்து கொண்டிருந்தேன் நான்.
நான் பிரிந்த அதே சமயம், எங்கொ ஒரு மூலையில் ஒரு குழந்தை தன் தாயின் கருவறை விடுத்து, அழுதவாறு தரையைத் தொட்டு வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்தது. யாருக்குத் தெரியும், அக்குழந்தை நானாகவும் இருக்கக் கூடும். பயணங்களுக்கு ஏது முடிவு.

Friday, November 2, 2012

பலகீனம்

பலம், பலகீனம் இரண்டுமே மனிதனுள் என்றும் உறைந்து கிடக்கும் ஒன்று. பலகீனத்தை வெளிகாட்டிக் கொள்ளாதவன் பலசாலி ஆகிறான். அப்படி என்றால் நாம் எப்பொழுதும் பலசாலியாகக் காட்டிக் கொள்ள நமது பலகீனத்தை வெளிக் காட்டாமல் இருக்க வேண்டும். நாம் வெளிகாட்டும் நமது உணர்வுகள் நமது பலகீனமா என்று நாம் எப்படி உணர்வது.
 
திரைப்படங்கள் பார்க்காதவர்கள் நம்மில் மிகவும் குறைவு என்பதால் திரைப்படத்தில் இருந்து இங்கு உதாரணம் சொல்வது மிகவும் பொருத்தமாக எளிதில் புரியக் கூடியதாக இருக்கும். திரைப்படத்தில் பார்த்தீர்களானால் ஒரு வன்புணர்வு காட்சியிலோ அல்லது பலம் குறைந்த ஒருவனை பலம் மிகுந்தவன் தாக்கும் போதோ பாதிப்புக்குள்ளாகுபவர்கள் தம் கையில் கிடைப்பதை எல்லாம் எதிராளியின் மீது வீசி எறிந்து தங்களைக் காத்துக் கொள்ள முனைவார்கள். நிச்சயமாய் தெரியும், தாங்கள் எரியும் சிறு கல்லோ, கண்ணாடிக் குடுவையோ அல்லது வேறு பொருட்களோ தன்னைக் காத்துக் கொள்ள உதவாது என்று.
 
இருந்தாலும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எறிவர். அவ்வாறில்லாமல் உணர்ச்சிகளைக் கொஞ்சம் அடக்கி, எதிராளியை எந்த இடத்தில் எப்படி தாக்கி நாம் தப்பிக்கலாம் என்று யோசித்தால் பிரச்சினைக்கு எளிதான தீர்வு கிடைக்கலாம். இதுவே பிரச்சினை வந்த பிறகு, அதற்கு எடுக்க வேண்டிய நல்ல தீர்வு. அதை விடுத்து கையில் அகப்பட்டதை எல்லாம் எறிவது நமது பலகீனத்தை நாமே அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காண்பிப்பது போலாகும்.
 
இந்த பலகீனங்களை நாம் நமது அன்றாட நிஜ அரசியல் நிகழ்வுகளிலும் இணைய அரசியல் நிகழ்வுகளிலும் கண்கூடாகக் காணலாம். மின்சாரப் பிரச்சினை, கூடங்குளப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை என எல்லா பிரச்சினைகளிலும் சிலர் பிரச்சினைக்குண்டான உண்மையான காரணங்களை அறிந்து போராடினாலும் சிலர் நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை எல்லாம் மனம் போன போக்கில் இப்பிரச்சினைகளுக்கான காரணங்களாக்கி உண்மையான போராட்டத்தை நீர்த்து விடச் செய்கிறார்கள். இவர்கள் இவ்வாறு எல்லா நிகழ்வுகளையும் தாங்கள் சார்ந்த கொள்கைக்கான காரணங்களாக்குவது என்பது கையில் கிடைத்த பொருளை எல்லாம் எறிந்து தன்னைக் காத்துக் கொள்ள முனையும் பலகீனமான திரைப்பட கருப்போருள்களைப் போன்றவர். இது அவர்கள் சார்ந்த போராட்டம் பலகீனமானது என்று தம்பட்டம் அடிப்பது போலாகுமே அன்றி போராட்டம் ஆகாது என்று எப்பொழுது உணரப் போகிறார்களோ, அப்பொழுதே போராட்டத்தின் உண்மையான ஆக்ரோஷம் வெளிப்படும்... அதுவரை இவர்கள், இவர்கள் சார்ந்தவர்களின் பிரச்சனைகளை வைத்து வெறும் அரசியல் மட்டுமே செய்ய இயலும்... வேறு எதுவும் இவர்களால் ஆகப் போவது இல்லை...
 
ஹ்ம்ம்... வெற்று அரசியல் நாடகங்கள் உண்மையான போராட்டங்களாக ஆகும் நாளை எதிர்பார்த்தபடி நான்...

Thursday, November 1, 2012

ஒன்னுமே புரியலை ஒலகத்துல


வர வர இந்த ஒலகத்துல ஒன்னுமே புரிய மாட்டேங்குதுங்க... அப்படி என்ன தான் புரியலைன்னு கேட்கறீங்களா... சொல்றேன் கேளுங்க...

வாழைப்பழத்துல ஊசி இறக்குறாப்புல சில விஷயங்களை நம்ம கூட இருக்குறவங்க செய்வாங்கங்க... அது புகழ்ச்சியா, இகழ்ச்சியானு நமக்கு சட்டுனு புரியவே புரியாதுங்க... அப்படி என்ன தான் பேசுறாங்கன்னு கேட்கறீங்களா... கேட்டுட்டு நீங்களாச்சும் சொல்லுங்க இது புகழ்ச்சியா இகழ்ச்சியானு...

ஒருநாள் எதேச்சையா ஒரு பாட்டு பாடிட்டு இருந்தேங்க. பக்கத்துல நான் பாடறதைக் கேட்ட ஒரு நண்பன், மச்சி, எப்படிடா உன்னால மட்டும் இப்படி முடியுது... இத்தனை நாள் உன்கூட இருந்திருக்கேன். உனக்கு பாடத் தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லலை... எத்தனை கச்சேரிடா மச்சி செஞ்சிருக்கனு கேட்டான்...

டேய், நான் ஏதோ சும்மா பொழுது போகாம பாடுவேன். அவ்வளவு தான். ஓவரா பில்டப் செய்யாதடா. நானெல்லாம் கச்சேரி பண்ணா கல்லால தான் அடிப்பாங்க. வாடா பேசாமன்னு சொன்னேங்க...

விட்டானா எமகாதகப் பய, டேய் என்னாடா சொல்லுற நீ... கண்ட கண்ட கழுதைக எல்லாம் பாடுறேன்ற பேர்ல கத்திட்டு இருக்கு... நீ பாடறதுக்கு என்னடான்னு என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க...

நான் அப்படியே ஆடிப் போயிட்டேன். கழுதைக கத்துற கூட்டத்துல நீயும் போய் கத்தேன்டானு சொல்ல வர்ரானா... இல்லை உண்மையாவே என்னைப் புகழ்றானா... ஒன்னுமே புரியலைங்க...

இதுக்கு பதிலை எனக்காக மட்டும் கேட்கலைங்க... உங்களுக்கும் சேர்த்து தான் கேட்கறேன். நீங்க ஒரு நாலு வரி கவிதை மாதிரி எழுதுனாலோ, இல்லை கதை, கட்டுரைன்னு எழுதிட்டாலோ, எதுவுமே இல்லை சும்மா ஒரு நாலு வார்த்தை நறுக்குனு பேசிட்டாலோ உங்களைச் சுத்தியும் இப்படி நாலு பேரு கேட்டிருப்பாங்க இல்லை... அதனால தான் கேட்குறேன்... இவங்க நம்மள புகழ்றாங்களா, இகழ்றாங்களா...

சொல்லுங்க... ஒன்னுமே தெரியாத பசங்க எல்லாம் இணையத்துல எவ்ளோ பில்டப்பு கொடுக்குதுங்க... நீங்க பதில் சொல்லாம போனா எப்படி... ஹலோ சார், எங்க ஓடுறீங்க... பதிலைச் சொல்லிட்டுப் போங்க...