Tuesday, November 20, 2012

பயணங்கள் முடிவதில்லை

பயணம் ஆரம்பமானது. ஆம் அன்றுதான் நான் என் தாயின் கருவறை விடுத்து அழுதவாறு தரையைத் தொட்டு வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தேன். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் எழுப்பினாலும் இனம் புரியாத பயத்தோடும், பயத்தை வெளிப்படுத்தும் வகை அறியாமலும் எனது பயணம் அழுகையுடன் ஆரம்பமானது. எனது தொடர்ந்த அழுகை, பசிக்காக இருக்குமோ என்று எனது தாய் எனக்கு தாய்ப்பாலைக் கொடுக்க என் பிஞ்சு உள்ளத்தில் ஆழமாய் ஒரு விஷயம் பதிந்தது. “அழுகை, நமது தேவை என்ன என்பதை நம்மைச் சார்ந்தவர்கள் அறிந்துக் கொண்டு அத்தேவையை நிறைவேற்றவே என்பதும் அழுகையே தேவையைத் தீர்க்கும் கர்ப்பத்தரு” என்பதுமாம் அது.
நாட்கள் வாரமாகி, வாரங்கள் மாதமாகி, மாதங்கள் சில வருடங்களாகும் வரை எனக்கு உண்மையில் அழுகை “காமதேனு”வாகவே காட்சி அளித்தது. காமதேனுவாக காட்சி அளித்த அழுகை ஒரு திருவிழாவின் போது, நான் வேண்டும் என்று அடம்பிடித்து அழுது கேட்ட சில பொருட்கள் கிடைக்காததால் எனக்கு காமதேனுவாகத் தெரியவில்லை. அழுகையின் மீதான நம்பிக்கை அவநம்பிக்கையானது. அன்று முதல் நான் எதற்காகவும், எந்த காரணத்திற்காகவும் அழுவதில்லை என்று உறுதி பூண்டேன்.
எனக்கு பள்ளிப்படிப்பின் பயணம் ஆரம்பமான காலம் அது. படிப்பில் சுமாராக இருந்ததால் எனது பெற்றோர்கள் எங்கள் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது எனக்கு வருத்தத்தையும், அழுகையும் தரவில்லை, மாறாக என்னுள் முயற்சியும், போட்டி மனப்பான்மையுமே வளரத் தொடங்கியது. இந்த முயற்சியும் போட்டி மனப்பான்மையும் என்னை பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்தவனாக்கியது. எனது அறிவால் என்னை விஞ்ச யாருமில்லை என்ற அளவில் வளர்ந்த நான் எனது அறிவை மெய்ப்பிக்க என்னை ஒரு அலுவலகத்தில் இணைத்துக் கொண்டேன்.
எனது அறிவாற்றலால் சற்று தலைக்கணத்தோடு இருந்த எனக்கு பேரிடியாக அமைந்தது அலுவலக நிகழ்வுகள். எனது அறிவாற்றல் பொதுமக்களுக்கு பயன்படக்கூடியதாக இருந்த போதிலும், அலுவலகத்தினரால் எனது அறிவாற்றல் நிராகரிக்கப்பட்டது. நான் ஒவ்வொரு முறை என்னை நிரூபிக்க பெருமுயற்சி எடுத்த போதும் எனது மக்களுக்கான சேவையில் நாட்டமில்லாத அலுவலகம் என்னை மட்டம் தட்டிக் கொண்டே இருந்தது. நாளடைவில் நானும் அலுவலகத்துக்கு ஏற்ப என்னை எதிர்நோக்கி வரும் எத்தகைய பிரச்சினைகளையும் பக்குவமாக, நிதானமாக சமாளிக்கும் கலையைக் கற்றுக் கொண்டேன்.
எனது இனிமையான வாழ்க்கைக்கு, மேலும் இனிமை சேர்க்க நான் என் இல்வாழ்க்கைப் பயணத்தில் அடி எடுத்து வைத்தேன். அலுவலகம் கற்றுக் கொடுத்த பொறுமையும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறமையும் எனது இல்வாழ்க்கையின் பிரச்சினைகளை சமாளிக்க எனக்கு உதவியாக இருந்தது. அன்றுதான், நான் “முயற்சியையும், போட்டி மனப்பான்மையையும் விட சகிப்புத் தன்மையும், பிரச்சினைகளுக்கேற்ப சமயோசிதமாக நடந்து கொள்ளும் விதமுமே வாழ்க்கைக்கு அவசியமானது” என்பதை புரிந்து கொண்டேன்.
இல்வாழ்க்கையின் பயணத்தில் எனக்கு கிடைத்த அரிய பிள்ளைச் செல்வங்களும், என்னைப் போலவே அந்தந்த வயதின் போது அழுகையையும், போட்டி மனப்பான்மையும், பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறமையையும் கொண்டிருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்திருந்த போதும், எனக்கு மனம் உறுத்தலாகவே இருந்தது. ஏனோ என்றுமில்லாமல் இன்று என்னைப் பெற்று வளர்க்க கஷ்டப்பட்ட பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்றும், நான் பள்ளியிலும் கல்லூரியிலும் முதலாவதாக வருவதற்கு தடையென நினைத்தவர்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிப்பும், அலுவலகத்தில் முன்னேறுவதற்காக தெரிந்தே பொது மக்களுக்கு செய்த துரோகத்திற்கு இறைவனிடம் பிரார்த்தனையும் செய்ய வேண்டுமென்று எண்ணிய போதும் என்னால் படுத்த இடத்தில் இருந்து எழ முடியவில்லை. என்னைச் சுற்றிலும் எனது உடலைக் கட்டிக் கதறும் உறவினர்களைக் கண்டு என்ன நடந்தது என்று யூகிக்க முடியாமல் மெல்ல மெல்ல காற்றோடு காற்றாக கலந்து கொண்டிருந்தேன் நான்.
நான் பிரிந்த அதே சமயம், எங்கொ ஒரு மூலையில் ஒரு குழந்தை தன் தாயின் கருவறை விடுத்து, அழுதவாறு தரையைத் தொட்டு வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்தது. யாருக்குத் தெரியும், அக்குழந்தை நானாகவும் இருக்கக் கூடும். பயணங்களுக்கு ஏது முடிவு.

No comments:

Post a Comment