Wednesday, March 17, 2010

கிறுக்கல் - 33

மனம் முழுதும் வியாபித்து
தொடாத தொட்டாற் சிணுங்கியாய்
சொல்ல துடித்த கவிதைகள்
தென்றலாயுன் பார்வையின் ஸ்பரிசத்தில்
சுருங்கிய தொட்டாற் சிணுங்கிபோல்
பிணைந்து குழறிய வார்த்தைகளாக
பார்வையின் ஸ்பரிசம் மறைய
மெதுமெதுவாய் மீண்டும் கவிதையாகி
மனதை அணுஅணுவாய் ஆக்கிரமிக்க
சொல்லாமல் கொல்லப்படுகிறது நம்காதல்...

கிறுக்கல் - 32

அப்பா இறந்ததும்
அப்பாவின் உருவில்
அப்பாவின் வேட்டி
அம்மாவிற்கு சேலையாய்
விதவைத் தாயை
வெரி(றி)த்திடும் மகன்(ள்)...


கொலை செய்ய புறப்பட்டவன்
திரும்பி வந்து நீர் அருந்துகிறான்
அமங்கலி எதிரில் வந்ததை அப சகுனமென்றே...

Sunday, March 14, 2010

வரிகள் மாற்றப்பட்டது ( இராஜ்ஜியமா இல்லை இமயமா)

ஆஷ்ரமா இல்லை ஆசையா

எங்கிவன் நாளை எங்கிவன்

சாமியா இல்லை பாவியா

யாரிவன் நாளை யாரிவன்

ஆயிரம் ரகசியம்

அமைந்தது நித்தி ஆஷ்ரமம்

ஆயிரம் ரகசியம்

அமைந்தது நித்தி ஆஷ்ரமம்

கேலியாய் வாழ்கிறான்

காமத்தை ஆள்கிறான்

ஆஷ்ரமா இல்லை ஆசையா

ஆஷ்ரமா இல்லை ஆசையா

இறை எங்கே இறை எங்கே எனத்தேட

கதவைத் திறந்திடு என்றவனே

புத்தகம் ஒன்றிலே தொடர் ஆக

இறையைச் சொன்னாய் அழகாக

இறையெங்கு உள்ளது தேடாமல்

இச்சை தீர்த்து நின்றாயே

சுகம் இது சுகம் இது என எண்ணி

கட்டில் பாடம் படித்தாயே

உடல் அழுக்கு ஆனாலும்

தவ றில்லை என்பாயே

மனஅழுக்கு ஒன்றேதான்

தவறு என்று சொல்வாயே

ஆசையும் இன்பமும்

இரண்டையும் கொண்டதேன்

ஆயிரம் கோடி இரகசியம்

அமைந்தது நித்தி ஆஷ்ரமம்

இறைபற்றி மேடையில் நாள்தோறும்

ஆற்றினானே சொற்பொழிவாய்

பாமர மக்களின் பணத்தினிலே

கட்டினானே ஆசிரமம?

திருமகன் வருகிற திருநீரை

கையை அசைத்து தினம் அளித்து

அதிசயம் அதிசயம் என்றேதான்

ஏய்த்துநின்றாய் ஊராரை…

தனதருஞ் சீடரை

தொட்டிடும் ஆசான்தான்

சிந்தையில் இவனென்றும்

மன்மத ராசாதான்

ஏய்ந்தவர் பார்வையில்

முழு மிருகமாய்த் தெரிகிறான்…

ஆஷ்ரமா இல்லை ஆசையா

ஆஷ்ரமா இல்லை ஆசையா …

Friday, March 12, 2010

கிறுக்கல் - 31

நண்பர்கள் நடுவே
நாம் பேசிக்கோண்டாலும்
நம்மை மட்டுமே பார்த்துக் கொள்ளும்
நம்மிருவர் கண்கள்
நண்பர்களின் கேலிப்பேச்சில்
நம் பெயர் வரும்போது மட்டும்
நகைச்சுவையை புன்னகையாக்கும்
நம்மிருவர் இதழ்கள்
எத்துனை நேரம் பேசிய பின்னும்
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்
வழியின் திருப்பத்தில்
கடைசியாக பார்த்துக் கொள்ளும்
நம் பார்வைகள்
நம்முள் நமக்கு நம்மை உணர்த்தும் நம் காதலை
நவிலப்படாமல் நலிவதை உணர்த்தும் நம் மனதில்...

Thursday, March 11, 2010

கிறுக்கல் - 30

அம்மாவின் கோபம்
அப்பாவின் வசை
அண்ணணுடன் சண்டை
அக்காவின் ஆர்ப்பாட்டம்
அடிபட வரும்வலி
நண்பர்களின் கேலி
உறவினர் மரணம்
அனைத்திலும் சிரிக்கிறேன்
பற்றற்ற துறவியாகவில்லை
பற்றாதாரக் காதலால்...

Wednesday, March 10, 2010

கிறுக்கல் - 29

வேலை செய்து களைத்த பின்னும்

நண்பர் குழாம் காண எண்ணி

மடலைப் பார்க்க இனையம் திறக்க

மட்டுனர் பணி இருக்க கண்டு

நன்கு பழகிய நண்பன் என்று

நம்பி மடலை திறவா தனுப்ப

அபத்த மடலை அனுமதித்த தெவரென்று

ஆயிரம் கேள்வி நண்பர்கள் கேட்க

சிந்தியாமல் செய்த தவறை நினைத்து

சிந்தினேன் கண்ணீர் எனக்குள் நானே…

கிறுக்கல் - 28

நீ படித்திருக்கிறாயா நான் பார்க்கவில்லை
நீ பணக்காரியா நான் பார்க்கவில்லை
நீ என்மதமா நான் பார்க்கவில்லை
நீ என்னினமா நான் பார்க்கவில்லை
நீயும் இவையெல்லாம் என்னிடம் பார்க்கவில்லை
நம் குடும்பம் இவற்றைப் பார்த்தது
சிந்தியாமல் செய்த கண்களின் தவறு
சிறைபட்டு நிற்கிறது சுதந்திரத்திற்காய் நம்காதல்

கிறுக்கல் - 27

ஆசிரியர் சொல்லும் பாடம் கேட்டு

ஒருகை தானாய் குறிப்பும் எழுத

மைதானத்தில் ஆடும் ஆட்டம் கண்டு

மறுகை குறுஞ்செய்தி நண்பனுக்கு அனுப்ப

பக்கத்து இருக்கையில் அமர்பவன் உடனே

பலகதை பேசியும் சிரித்தும் மகிழ

உனக்கும் கூட இத்தனை திறமையா

வியந்தவர் இன்றும் வியந்தே பார்ப்பர்

எங்கோ வெறித்திடும் என்னைக் கண்டு

உன்னால் எனக்குள் எத்துனை மாற்றம்…

Tuesday, March 9, 2010

கிறுக்கல் - 26

என்றும் போல அன்றும்
கிடைக்குமா கிடைக்காதா அங்கலாய்ப்போடு
அரக்க பரக்க ஓடினேன்
அம்மன் தேர்போல் அசைந்தே
நகர முடியாமல் நகர்ந்து
நெரிசலோடு வரும் பேருந்தில்
முட்டி மோதியே ஏறி
நேரத்திற்கு செல்லவேண்டி தவிப்போடே
நேரமென்னவென கடிகாரம் பார்க்க
பின்புறமாய் ஒரு குறுகுறுப்பு
திரும்பிட நினைக்கும் முன்னே
சட்டையை யாரோ இழுக்க
சட்டேன கோவத்தோடு திரும்ப
சாந்தமானேன் மழலையைக் கண்டு
எங்கோ பார்த்த முகமாய்
என்னுள் ஏதோ குடைய
மன்னிக்கனும் குழந்தையின் செயலுக்கு
மங்கை சொல்கேட்டு நிமிர
மரமாகி நின்றேன், அவளுந்தான்
நிறுத்தம் வந்ததும் இறங்கினேன்
நில்லாமல் பின்னோடும் மனதுடன்...

Saturday, March 6, 2010

கிறுக்கல் - 25

படிக்க புத்தகங்கள் ஏராளம்
செய்திட செயல்களும் ஏராளம்
அடைய இலட்சியங்களும் ஏராளம்
எதையும் செய்திடாமல் அலுப்புடன்நான்...

உறங்கும் உடலில் விழித்திருக்கும் மனமாய்
உறங்கும் பகலின் ஒளிர்விடும் நிலவு...

கிறுக்கல் - 24

இல்லாத பொருள்களிலே
இன்பமுந்தான் இருக்குதுன்னு
இறைசுகத்தை மற்ந்திட்டே
இடம்பொருளைத் தேடுகிறாய்

இடமென்ன பொருளென்ன
இன்னபிற சுகமென்ன
இந்திரியம் அடக்கிடுவாய்
இறைசுகத்தைக் கண்டிடவே...

Friday, March 5, 2010

கிறுக்கல் - 23

சாமி யார்என உணர்த்தும்

சாமியார் நான் என்றவனை

சாமியே நீயென உரைத்து

சரணான சமூகம் இன்று

சாமியல்ல நம்போல் வெறும்

ஆசாமி என்றதும் அவனை

சன்மானம் தந்த கைகளால்

செருப்பையும் நெருப்பையும் தருது…

தலைமையைச் சென்று பார்க்கும்

தலைவராய் அனுப்பு என்றவனை

தலைமையே நீயாகு என்றே

தலைமையாக்கிய சமூகம் என்று

தலைவன் அல்ல அவன்-நம்

தலையை அடம் வைக்கும்

தறுதலை என்று உணர்ந்து-அவன்

தலையைக் கொய்வதும் என்று…?

Tuesday, March 2, 2010

கிறுக்கல் - 22

அனுபவப் பாடம் பெற

ஆரம்பமாய் தேடும் படலம்

இனியேனும் வேலை செய்து

ஈன்றோரை முகம் மலர்த்த

உள்ளத்தில் உறுதி பூண்டு

ஊர் ஊராய்த் தேடி நின்றேன்

எனக்கான ஒரு வேலை

ஏக்கந்தீர கிடைத்த போதும்

ஐயங்கள் மேலிட மெல்ல

ஒவ்வொன்றாய் களைந்து நானும்

ஓடியே உழைத்து நின்றேன்

ஔசித்திய உயர்வே குறியாய்…

கிறுக்கல் - 21

சாரலாய் வந்த மழை
தூறலாய் மாறி நின்றும்
சொட்டு சொட்டாய்
வீட்டின் கூரையில்
விட்டு விட்டு
ஒழுகும் மழையில்
கை நீட்டி ஆட்டம் போட
மனமிருந்தும் செயலில்லை
ஏழையாய் பிறந்ததாலே
ஏக்கம்நிறை பெருமூச்சோடு
எதிர்வீட்டு பஜ்ஜி வாசம்
பசியாற நுகர்வதால்....