Monday, December 28, 2009

பிறந்தநாள் வாழ்த்து

அம்மா வலியில் துடியாய் துடிக்க
அப்பா அவஸ்தையில் நடையாய் நடக்க
இனியும் தாய்க்குப் பாரம் வேண்டாம்
என்றே எண்ணித் தரையை நீதொட்ட
நாளாம் இன்று நண்பா உனக்கு
துன்பம் வாழ்வில் மலையாய் வரினும்
துனிவை கொண்டு பனிபோல் ஆக்கி
இன்புற்று நீயும் பல்லாண்டு வாழ
இறைவனை வேண்டும் நண்பன் எனது
இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்து….

Saturday, December 26, 2009

பெயரில்லாதது

அழுக்கால் நிறைந்த உடல்
அழுக்கை இழந்த பின்னே
அரிப்பால் அவதி படும்
குற்றங்கள் நிறைந்த உள்ளம்
குற்றத்தை நிறுத்திய பின்னே
குறுகுறுப்பால் அவதி படும்.

அரிப்புக்கு பயந்து
அழுக்குடன் வாழ்ந்தால் – யாரும்
அருகே வரமாட்டார்.
குறுகுறுப்புக்கு பயந்து
குற்றத்துடன் வாழ்ந்தால் – உனது
சுற்றமும் வரமாட்டார்.

குழுமம்-வெண்பா

முகமறியா மக்கள் பலரைநட் பென்னும்
முகத்தால் இணைக்கும் குழுமம் தனிலே
அகமாய் அமையும் எழுத்தாம் அதனை
நயமாய் அமைத்தல் நலம்.

Thursday, December 24, 2009

தாயே வரமருள்வாயே

தண்ணீர் குடத்தினின்று
தரையிலே கால்பதிக்க
தன்னுயிரை பனயம்வைத்து
என்னுயிரை அளித்தவளே

உயிர்கொடுத்த அசதிவிலகி
உணர்வது திரும்பியதும்
உள்ளங்கையில் அள்ளியெடுத்து
உச்சந்தலை முகர்ந்தவளே

உள்ளங்கை சிலிர்ப்பினிலே
உம்மென்று சினுங்கியதும்
உதிரத்தை பாலாக்கி
உணவாகத் தந்தவளே

உணவுன்னும் வேளையிலோ
உடைமாற்றும் வேளையிலோ
உறங்குகின்ற வேளையிலோ
உறக்கத்தில் நான்சினுங்க
உள்ளமது பதறிநீயும்
உடனென்னை பார்த்தவளே

தவழ்ந்துநானும் வந்தபோதும்
தத்திதத்தி நடந்தபோதும்
தவறிவிழ நேரும்பொது
தாங்கியெனைப் பிடித்தவளே

பல்லில்லா வாய்தனிலே
பேசச்செய்த முயற்சியதை
பாடல்நானும் பாடுவதாய்
பார்ப்பவர்க்கு உரைத்தவளே

பாடமது படிப்பதற்கு
பள்ளிக்குச் சென்றுவந்து
பலகதைகள் நான்சொல்ல
பணிவிடுத்து கேட்டவளே

விழாகால கூட்டத்திலே
வீதியிலே நடக்கும்போதும்
வழிதவறி போகாவன்னம்
விரல்பிடித்து சென்றவளே

நடந்துபோன நாட்களிலும்
நடக்கின்ற நாட்களிலும்
வாழ்த்ததனை சொல்லியென்னை
வழிகாட்டி நடத்தியவளே

வாழும்காலம் எல்லாமெனக்காய்
வாழ்ந்துவந்த அன்புத்தாயே
வாரிசாக நீயேயெனக்கு
பிறந்திடவோர் வரமருள்வாயே…

Wednesday, December 23, 2009

காதல் கிறுக்கல்

சூரியனைச் சுற்றும் பூமியாய்
உன்னைச் சுற்றும் நான்
பூமியைச் சுற்றும் நிலவாய்
என்னைச் சுற்றும் அவள்
ஒன்றை விரும்பும் மற்றொன்றாய்
என்றும் இணையா கோள்களாய்…

பார்ப்பவர் பார்வைக்கு
இரவில் பூமியின்
ஒருபாதியில் மறைந்தாலும்
மறுபாதியில் ஒளிவீசும்
பகலவனாய் என்றும்
என்(னில்)னுள் ஒளிவீசும் நீ…

Tuesday, December 22, 2009

எங்கிருந்தாலும் வாழ்க

உன்னைக் கரம்பிடிப்பேன் அன்றேல் உயிரிழப்பேன்
என்றே சிரமடித் துன்மேல் உறுதியிட்ட
மங்கை மணவோலை தந்தபின்னும் காதல்
மனதாரச் சொல்லிடும் வாழ்த்து.

Tuesday, December 15, 2009

புகைப்படமும் வெண்பாவும்பயங்கரவாத
கைகளில்
சிறையுண்டது
சமாதானம்
(அ)
பயங்கரவாத
கைகளில்
சிறையுண்டது
அமைதி…

சிறகை விரித்து கரத்தை விடுத்து
பறக்க விழையும் புறா.

கரத்தில் பிடித்து அடைத்தப் பிறகும்
சிரத்தை உடனே சமயத்தைப் பார்த்து
சிறகை விரித்து சிறையை உடைத்து
பறக்க முயலும் புறா.

Sunday, December 13, 2009

எனது வெண்பாக்கள்

அன்டத்தை காண்பித்து நம்மோடு வாழ்கின்ற
அன்புரு கொண்டவள் தாய்.

பிறப்பின் விதையை அளித்துபுவிக் குன்னைச்
சிறப்பித்த தெய்வம் பிதா.

அறியாமை நீக்கி அழியாதச் சொத்தாய்
அறிவை அளிப்போர் குரு.

விவேகம் இருந்தால் ஒழிய விரயமாகு
மன்றோ செயலில்வே கம்.

Tuesday, December 8, 2009

பரத்தை

கண்ணிற்கு மையால்
கருப்பு கலரடித்து
உதட்டுக்கு லேசாய்
சிவப்பு சாயமிட்டு
முகத்தினை முழுவதும்
ஒப்பனையால் நிரப்பியே
அழகாய் மினுக்கும்
ஆடையை உடுத்தி
விழியால் கனைகளை
வீதியிலே தினம்வீசி
மானம் இழந்து
வாழ்க்கை நடத்தி
பகலில் ஓய்வெடுத்து
அடுத்த இரவிலும்
ஆட்டம் போட
அழகுப்படுத்தும்
மங்கையிவள்
வாழ்க்கைப் போராட்டத்தில்
விளக்கில் விழும்
விட்டில் பூச்சியா அல்ல
சுட்டெரிக்கும் சூரியனைத்
தொட்டுவிட முயலுகின்ற
பீனிக்ஸ் பறவையா…

Sunday, December 6, 2009

கவிஞன்

புள்ளிகளைக் கோர்த்து எழுத்தாக்கி
எழுத்துக்களைக் கோர்த்து சொற்களாக்கி
சொல்லைக் கோர்த்து வரியாக்கி
வரிகளைக் கோர்த்து கவிதையாக்க
புள்ளியைப் புதிதுபுதிதாய்த் தேடுபவன்…

கிறுக்கல்

விதையாய் சேற்றில்
விதைத்தவனை விடுத்து
நாற்றாய் ஈன்ற
நிலத்தையும் விடுத்து
பயிராய் வாழ்ந்த
புதுவயலையும் விடுத்து
மகசூல் தந்து
மரித்த பயிராய்
மகவை ஈன்றதும்
மரித்த தாய்…

Saturday, November 28, 2009

திரும்பி பார்க்கிறேன்

1. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
எதைப் பற்றியும்
கவலை இல்லா
என்னுள் தொலைத்த
கடந்த காலத்தை
திரும்பி பார்க்கிறேன் …
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
அம்மாவின் கைவிடுத்து
அழுதழுது கண்சிவந்து
அப்பாவின் சைக்கிளிலே
பள்ளிக்கு போன அந்த
பழைய நாட்களை
திரும்பி பார்க்கிறேன்…
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
சளி ஒழுகும் மூக்கோடும்
புண் நிறைந்த கையோடும்
பொத்தல் விழுந்த நிக்கரோடும்
பள்ளிக்கு சென்ற அந்த
பழைய நாட்களை
திரும்பி பார்க்கிறேன்…
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பறையின் வாசலிலே
தொங்குகின்ற நெல்லிக்காயை
தொட்டாலே அபராதம்,
அறிவிப்பைக் கேட்டுவிட்டு
தொட்டால் ; தானேயென்று
நண்பர்களுடன் ஓடிவந்து
எக்கி்எக்கி தலையில் முட்டி
நெல்லியை சுவைத்த அந்த
சொர்க்கத்தை திரும்பி பார்க்கிறேன்…

2. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஆரம்ப பள்ளியிலே
அடிவைத்த நாட்களை நான்
அசை போட்டு மெதுவாக
திரும்பி பார்க்கிறேன்

புத்தகத்தை மறந்த நாளில்
அப்பாட ஆசிரியர்
விடுப்பிலே இருக்க வேண்டும்
இறைவனே என்று வேண்டி
பயந்து பயந்து காத்திருந்து
ஆசிரியர் வராவிட்டால்
ஆண்டவனுக்கு நன்றி சொல்லி
ஆசிரியர் வந்திருந்தால்
ஆண்டவனை திட்டி தீர்த்த
பழைய நாளை
திரும்பி பார்க்கிறேன்…


வெள்ளிக்கிழமை மாலைவேளை
உடற்பயிற்சி வகுப்பதனில்
வில்லாக உடலை வளைத்து
வியர்வை வர பயிற்சியதை
செய்திடவே வேண்டுமென்று
பிரம்போடு சுற்றி வரும்
ஆசானை திட்டி தீர்த்த
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்…


வெள்ளிக்கிழமை வகுப்பு முடித்து
வீட்டிற்கு திரும்பும் நேரம்
ஊரிலுள்ள பாட்டி அவள்
வீட்டிற்கு வர வேண்டி
வருகின்ற பாதை முழுதும்
அடி மீது அடி வைத்து
நடந்து வந்த அந்நாளை
திரும்பி பார்க்கிறேன்...


திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்

3. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
எனது இவ்வாழ்க்கையில்
நண்பனுக்கு நான் இழைத்த
முதல் துரோக செயலதனை
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்


மூன்றாவது வகுப்பு முடிய
மூன்று வாரம் இருக்கும்போது
ஆண்டு விழா பற்றியொரு
அறிவிப்பு பள்ளியிலே
இயல்தமிழுக்காய் கட்டுரைப் போட்டி
இசைத்தமிழுக்காய் கவிப்போட்டி
நாடகத்தமிழுக்காய் நாடக போட்டி
விருப்பமுள்ள மாணவர்கள்
விளையாட்டுத் திடலிலே
விரைந்து வந்து பெயர் தருக…


எனதருமை நண்பனவன்
நாடகத்தில் நடிக்க எண்ணி
பெயர் கொடுத்தான் போட்டிக்கு
நாடகத்தின் பெயரதுவோ
பாஞ்சாலி சூளுரைப்பு
என் நண்பன் ஏற்றதுவோ
துரியனின் தம்பி வேடம்
அவன் நடிக்க வேண்டியதோ
இரண்டு பத்தி வசனமும்
துகிலுரியும் படலமும்


ஆரம்பமானதுவே
போட்டிகளின் ஒத்திகைகள்
எனக்கதுவோ வகுப்புகளை
தட்டிக் கழிக்கும் புதுஉத்திகள்
ஆன்டு விழா நாளிற்கு
தூரமோ அதிகம் இல்லை
நண்பனவன் மன்டைக்கு
வசனங்களோ தங்கவில்லை
நாடகத்தின் பொறுப்பாசிரியர்
நண்பனை அருகில அழைத்து
வசனத்தை உன் நண்பனிடம்
மனனம் செய்து ஒப்புவியென்றார்…


நாளெல்லாம் என்னை அமர்த்தி
வசனத்தை ஒப்ப கேட்டு
விளையாட்டாய் ஒருநாள் மாலை
வசனத்தை பேசிக் காட்டி
இதற்கு ஏன் இப்படி திக்குற
என்று நான் கேலிபேச
பின்னால் இருந்த பொறுப்பாசிரியர்
நாளை முதல் நடிக்கநீயே
ஒத்திகைக்கு வந்திடு என்ற
கட்டளையை இட்டு சென்றார்….


திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்…

4. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
பிறந்த தேதி
மாறிப்போக
காரணமான
இரண்டாம் பள்ளியின்
இனிய பொழுதை
திரும்பி பார்க்கிறேன்

நான்கு வருடம் ஓடிஆடிய
பள்ளியை விடுத்து
வேறோர் பள்ளி
புதிய ஆசிரியர்கள்
புதிய நண்பர்கள்
எல்லாம் புதிதாய்
இருந்தும் துனிவாய்
வகுப்பில் நுழைந்த
முதல் முதல் நாளை
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பு முழுவதும்
பேச்சின் சத்தம்
பெசுவோர் பெயரை
எழுதும் ஒருவன்
நுழைந்ததும் கேட்டான்
யார் நீ என்று
நானும் கேட்டேன்
நீ யாரென்று

அவனோ சொன்னான்
வகுப்பின் தலைவன்
நானோ சொன்னேன்
புதிதாய்ச் சேர்ந்தவன்
வகுப்பில் நிற்க
அனுமதி இல்லை
இடத்தைப் பார்த்து
அமரு என்றான்

நிற்க அனுமதி
இல்லை என்றால்
நீயேன் நிற்கிறாய்
என்றேன் நானும்
பேசுவோர் பெயரை
எழுதும் பணியை
ஆசிரியர் தந்தார்
அதையே செய்கிறேன்
பேசாமல் அமர்ந்து
மனனச் செய்யுளை
மனனம் செய்வாய்
என்றான் அவனும்

நான்காம் வகுப்பின்
விடுமுறை நாளில்
மனனம் செய்த
செய்யுளை ஒபபி
என்ன செய்ய
என்றேன் நானும்
ஏதாவது செய் ஆனால்
அமைதியாய் செய்
என்றே சொல்லி
அவனும் அமர்ந்தான்

4 (2) திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஐந்தாம் வகுப்பில்
ஓடி ஆடிய
என்னைப் பிரியா
பழைய நாட்களைத்
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பறைக்கு
செல்லும் முன்னே
பள்ளியின் வெளியே
இருக்கும் கடையிலே
வட்ட வட்ட
பிஸ்கேட் உடனே
சிறுசிறு அல்வா
துண்டுகள் வாங்கி
வகுப்பு இல்லா
நேரந்தனிலே
இரண்டு பிஸ்கேட்
நடுவில் கொஞ்சம்
அளவாய் அல்வா
தட்டி வைத்து
இனிப்பு பிஸ்கேட்
என்றே சொல்லி
அழகு காட்டி
உண்ட நாளைத்
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
மதிய நேர
இடைவெளி போது
உணவு உண்ட
கின்னம் கழுவ
அருகே உள்ள
ஆற்று நீரில்
முட்டிக் கால்
முழுகி நின்று
கின்னம் கழுவி
முடித்த பின்னர்
கின்னம் மூடி
இரண்டையும் தனியே
ஆற்று நீரின்
எதிர்திசை எறிந்து
படகு வருது
என்றே சொல்லி
நீரில் ஆடிய
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஐந்தாம் வகுப்பின்
ஆண்டுத் தேர்வில்
நண்பனுக்காக
தேர்வுத் தாளை
முன்னுக்கு தந்து
எழுதச் சொல்லி
என்னிடம் அத்தாள்
சேரும் வரையில்
வியர்த்து வழிந்த
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்

Wednesday, November 25, 2009

முத்தம்

1. உன்னிதழென்ன
நெப்பந்திஸ்ஸா
தேனையளித்து
உயிருறுஞ்சுதே....


2. ரோஜாவை
முள்குத்தும்
அதிசயம்
என்றேன்

என்னவென்று
எப்போதும்போல்
தெரியாதவளாய்
முகம்வைத்தாய்

என்னிதழை
உன்னிதழில்
பொருத்தி
இதுதானென்றேன்

வெட்கத்தோடு
முள்ளையேற்க
ரோஜாவை
அழுத்தினாய்

மீன்டும்
ஆரம்பமானது
முடிவில்லா
முத்தப்போராட்டம்....

3. வில்லான புருவம்
வளைய
மொட்டான கண்கள்
மூட
குடையான நாசி
துடிக்க
இதழோடு இதழ்
சேர்த்து

அடுத்த நொடி
இல்லையென்று
அமுதுணவை கடைந்
தெடுக்கும்
மத்தான நாவின்
சுழலில்
பித்தானேன் முத்தக்
களிப்பில்….

4. அள்ள அள்ளக் குறையாமல்
அமுதை வழங்கும்
உன் இதழென்ன
அட்சயப்பாத்திரமா….

5. வரவும் செலவும் வைக்க
முத்தமென்ன வியாபாரமா
நேசத்தில் பகிர்ந் துண்ணும்
இதழின் சாறல்லவா…

6. என்னதான்
இதழின் சாறை
தொலைபேசி கொணர்ந்தாலும்
காதலின் சாறை
இதழில் பெற்றிடும்
இன்பம் கிடைத்திடுமா…

7. உச்சி முகர்ந்து
நெற்றியில் இட்ட
முத்தம்
உள்ளக் களிப்பில்
கன்னத்தில் இட்ட
முத்தம்
ஊடல் பொழுதில்
உதட்டில் இட்ட
முத்தம்
அசை போட்டு
கண் அயரும்
நேரம்
ஆர்வத்தோடு
அன்பே உன்னைக்
கேட்டேன்
உறங்கும் நேரம்
எங்கு இடுவாய்
முத்தம்

8. எத்தனை காலம்
ஆனால் என்ன
முத்தக் கடலில்
மறந்து விடுமா
கைகள் நடுங்க
இதயம் படபடக்க
கன்னி இதழிலிட்ட
கன்னி முத்தம்…

9. காதலெனும்
மடலின் பரிமாற்றத்திற்கு
முத்திரையாய்
முத்தப் பரிமாற்றம்…

10. கண்களை மூடி ஓர்
உணவுப் பரிமாற்றம்
அது காதலை திறந்திடும்
முத்தப் பரிமாற்றம்…

11. உமிழ்நீரும் அமிழ்தாகும்
இரகசியம்
நம்மிதழ்கள் இனைவதின்
அதிசயம்...

12. சொந்தங்கள் சூழ்ந்த போது
சந்தோஷம் தந்திடுமே
சத்தம் இன்றி மனைவிக்கு
தருகின்ற திருட்டு முத்தம்...

13. உணவில்
சர்க்கரை கூடாதென்று
சொல்லும் நீயே
உன்னை அறியாமல்
இனிப்பை தருகின்றாய்
இதழின் இரசமாய்...

14. தொண்டைக் குழி
காயும் முன்னர்
இதழில் முத்தமதை
தந்து நீயும்
சண்டை செய்வோம்
வாடி பெண்ணே
நம்மிதழ் இனைத்து
நாவால்
சண்டை செய்வோம்
வாடி பெண்ணே..

15. முத்தம் தர
வரும் போது
வெட்கப்பட்டு
தலை குனிவாய்
பிடிக்கவில்லை(யோ)
என்றே நான்
திரும்பியே
அடி வைத்தால்
முகம் திருப்பி
மெதுவாக
இதழோடு இதழ்
சேர்ப்பாய்
காரனம் நான்
கேட்டால்
களுக் கென்று
சிரித்திடுவாய்...
புரியாமல் தினம்
நானும்
படும் அவஸ்தை
இரசித்திடுவாய்...
புதிராக இருந்த
போதும்
உனைத் தேடி
வருகின்றேன்...
அமிழ்தான உன்
இதழை
ருசி பார்க்க
துடிக்கின்றேன்...

16. பிரியும் போதும்
பிரிய மனமின்றி
பெருமூச்சோடு பிரியும்
நம் இதழ்கள்
அடுத்த ஆட்டத்தின்
எதிர்பார்ப்போடு…

17. தன்னை மொத்தமாய்ப்
பகிரும் புதுத்தம்பதிகளின்
முதலிரவும் ஆரம்பமாகும்
சிறு முத்தத்தோடே...

18. அலுவலகம் முடித்து
அலுப்பாய் வந்தாலும்
அன்பு மகள்(ன்)
கையை ஏந்தி
தத்தி தத்தி
நடந்து வந்தால்
அன்பாய் தூக்கி
மடியில் இருத்தி
முத்தாய் இடும்
முத்தத்தாலே
குளிர்ச்சியின் சிலிர்ப்பில்
ஈரம் ஆக்கும்
இன்பத்திற்கே
ஈடுமுண்டோ …

19. சட்டென்று இட்டுவிட்டு
பட்டென்று எங்கு மறைய
உயிரே உன்னைவிட்டு !
அன்பே என்னை
ஆரத் தழுவி
இதழில் ரசத்தை
ஈந்த உன்னை
உறவின் முன்பும்
ஊரின் முன்பும்
என்னவள் ஆக்குவேன்
ஏன் உனக்கு
ஐயம் என்மேல் ?
ஒன்றாய் கலந்த
உன்னைவிட்டு
ஓடிடேன் நானும்:
உடலை விட்டு
உயிரே போனாலும்…

20. முத்தத்திற்கு மட்டுமா
முகவுரை
என் மொத்தத்திற்குந்தானே
மூச்சாய் நீ இருக்க
முட்டுமோ
உன் பொழிவுரை

21. அடி கள்ளி
என் மேல்
இவ்வளவு விருப்பமா
கன்னத்தில்
முத்தம் கேட்டால்
கடித்து சொல்கிறாய்
கட்டிக்கரும்பாய்
இனிக்குதென்று...
உனக்கு
இனிப்பென்றால்
இதோ எடுத்துக்கொள்
மிச்சமிருக்கும்
கன்னத்தையும்...
கண்ணே மறந்துவிடாதே
கடித்த இடத்தில்
முத்தமென்ற மருந்தைப் போட

22. தொட்டால் மலரும்
மலரென்கிறாய்
உன்னை,
தொட்டுவிட்டாலோ
முகத்தை மூடும்
தொட்டாசினுங்கி ஆகிறாய்...

23. இது உங்களதா ?
தவறாக எண்ண வேண்டாம்
உங்களுக்காய்
இருக்கும் இதழில்
மழைதான் தொட்டதோ
என்றே தான்
தள்ளி விட்டேன்
மழையாய் இதழில்
மறுபடி தொடரு
என் மனாளா...

24. அன்னியமென்று
சொல்லி அமிலத்தை
ஊற்றாதே
இதழின் அமிழ்தெடுக்க
வந்த என்னை
ஏமாற்றலாகாதே...
இதயத்தில்
உள்ளவளே,
பல மலரின்
தேன் உண்ணும்
வண்டாயெனை
பார்க்காதே...

25. சன்டியனாய்
இருந்த என்னை
சாதுவாக மாற்றிய நீயே
இதழின்
சாறெடுக்க இன்று
சன்டியன் ஆக்கி னாயே...

26. இப்பொழுது தான்
வந்தமர்ந்தாய்
என்னருகே
நிலவுக்கென்ன அவசரம்
அதற்குள் உனைக்காண...
இந்த பகலவனுக்கும்
நிலாமகளுக்கும்
நேரமும் தெரிவதில்லை
நம்மை
நெருங்கவும் விடுவதில்லை...

27. நீ மறவா
முதல் முத்தம்
பித்தனாக
என்னை மாற்றி
போனதடி பூமகளே
பித்தத்தை தெளியவேனும்
மிச்சத்தை கொடுத்தென்னை
மீட்டிடுவாய் என்னவளே...

28. கனவிலோ
இதழ் மழையால்
நனைத்தேன் என்கிறாய்
நேரிலோ
இதழ் தூறலே
தரவும் மறுக்கிறாய்...

29. அமிழ்தம் புளிக்குமா
அன்பே,
மகளின் முத்தம்
கிடைக்கப் பெறுவது
மழலையில் மட்டுமே
மானே உனது
இதழின் சுவையோ
மரிக்கும் வரையில்
பொய் கோபம் தவிர்த்து
வருவாய் தொடர்வோம்
புதிதாய் முத்தமழை…

30. நேற்றோடு முடிந்ததா
என் கணக்கு
பொய்யுரை ஏனோ
பெண்மானே
உன்னிலும் என்னை
நேசிப்போர்
எவரிங்கே…
கோபம் தவிர்த்து
இதழின் இரசம்
எனக்களிப்பாய்…
புதிதாய்
தொடர்வோம்
முத்த மழை…

31. முத்தமழை தொடர்ந்திடவே
விரைந்தென்னை வாவென்றாய்
ஓடியே வந்தெனக்கு
இதழால், ஒத்தடமளித்து
பிரிகின்ற பொழுதினிலே
பிசினாக நின்றவளே…
பிரியாமல் முத்தமழை
தொடர்ந்திடவோர் வழியுரைப்பாய்,
சொர்க்கத்தின் சுகமதனை
நில்லாமல் சுவைத்திடுவே…

32. சாகித்ய அகாதமி
சாதித்ததற்காயல்ல
வற்றாத உன்னிதழின்
சாகசத்தை ஊக்குவித்து
இன்னுமொரு சாகசத்தை
இனிதாகத் தொடங்கிடவே….

33. பிரிவிலே உறவு
வளருமேயானாலும்
இதழின் பிரிவிலே
இதயம் துடிக்கவே மறுக்குதே…

34. பள்ளியறைப் பாடத்திலே
முதல் பாட முத்தமதை
இட்டதுமே சூடானேன்
சூடாக சுகமளித்து
மூச்சிரைக்க பிரியும் நேரம்
நெற்றியிலே இட்ட முத்தம்
நெஞ்சமெல்லாம் நிற்குதைய்யா
அடுத்தவொரு பயணத்திற்கு
அது அடிக்கல்லும் இட்டதைய்யா
முடிவொன்று இல்லாத
முத்தமொரு விந்தையய்யா…

35. உன்னிதழில்
கவி எழுத
கம்பனும்
குழம்புவானே
எங்கு தொடங்க
எங்கு முடிக்க
உன் இதழைப்
பதித்து
கற்பிப்பாய்
இம்முத்தக்கலையை…

Thursday, November 19, 2009

காதல்-6

கற்பை மட்டும் கண்டால் காதல் தெரியாது
காதல் மட்டும் கண்டால் கைம்பெண் தெரியாது
கற்பு காதலில் மறையும் என்றும்
காதல் கற்பிலே மறையாது
காதல் தூய்மையை பார்க்கும் நெஞ்சம்
கற்பில் தூய்மையை பார்க்காது
காமக் கண்ணில் பார்த்தால் மாறும் காதல்தான்
காதல் கண்ணில் பார்த்தால் விதவையும் காதலிதான்
விதவையென்று ஆன உடனே வாழ்க்கை முடியாது
வீட்டினுள்ளே அடைந்து அவளும் வாழ்ந்திட கூடாது
விதவை சொல்லினை மாற்றிட முயலும்
மறு மணங்களோ தோற்காது
மக்கள் பேச்சால் பெண்கள் மறுமண
முடிவை மாற்றிட கூடாது
அன்பை மட்டும் பார்ப்பது தூயகாதல் தான்
தூயகாதல் வாழ்வின் அஸ்திவாரம் தான்
நாட்டில் உண்டு ஆயிரம் காம காதல்தான்
காதலிலே சிறந்ததிந்த கைம்பெண் காதல்தான்
கற்பை மட்டும் கண்டால் காதல் தெரியாது
காதல் மட்டும் கண்டால் கைம்பெண் தெரியாது

Monday, November 16, 2009

பாடல் – மாற்றப்பட்டது

ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
பெண் அவளை காதலியாய் பலபேர் நிணைத்துருக
நீயும் சென்று ஏன் விழுந்தாய் அவள் வலையில்
ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
வேலை இல்லா காளையாக வீதியில் நீ இருக்க
நீயும் சென்று ஏன் விழுந்தாய் அவள் வலையில்
ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
செல்போனே இல்லையென்று சிரிப்பாய் சிரித்து விட்டு
கோமாளி ஆக்கிச் சென்றாள் உன்னையடா
கோமாளி ஆன பின்னும் ஏமாளி என்ற போதும்
காதலில் நீ விழுந்த மூடனடா…
ஏன் நிணைத்தாய் மனமே ஏன் நிணைத்தாயோ
ஆராரோ ஆரோ ஆரிரரோ…. ஆராரோ ஆரோ ஆரிரரோ….

Sunday, November 8, 2009

ஜோடிப்புறா


என் னுடலை குடையாக்கி, உனக்கு
நிழலாய் கொடுத் தேனாம்-அறிவிலிகள்
நான் துவண்டு விழும் போது
தாங்கும் சுமைதாங்கி நீயென்று ணராமல்

Saturday, November 7, 2009

குழந்தாய்

அமுதுணவு தந்திடும் அன்னையைப் பார்
ஆசைமுத்தம் தந்திடும் தந்தையையும் பார்
இன்பத்தில் திளைக்கும் உறவினைப் பார்
இப்பாரினில் உன்னை வெறுப்பவர் யார்

இன்று பூத்த புத்தம்புது மலரே
இன்பக் கடலை ஈந்ததுன் வரவே
காண்பவர் நெஞ்சில் களிப்பினைத் தந்தாய்
கவலைகள் இன்றி கண்ணயர்ந் திடுவாய்

Thursday, November 5, 2009

இறைவன் எனக்கு பகைவன்

உனக்கும் மேலே இருக்கும் ஒருவன்
உன்னையும் என்னையும் படைத்திட்ட இறைவன்
(மத)கல்வரத்தை தடுத்திட வேண்டிய தலைவன்
தடுக்காமல் போனதால் எனக்கவன் பகைவன்...

Tuesday, November 3, 2009

காமமில்லா காதல்

அன்பை கொடுத்திட்டு
ஆதரவு காட்டிட்டு
இன்னலில் உடனிருந்து
ஈரேழு ஜென்மத்திலும்
உள்ளத்தால் ஒன்றுபட்டு
ஊடலால் பிரிந்தாலும்
எவ்வித நேரத்திலும்
ஏகமான நெஞ்சத்தில்
ஐயங்கள் இல்லாமல்
ஒன்றுபட்ட வாழ்வதனை
வாழ்வதற்கு ஆதாரம்
காமமில்லா காதலே….

Monday, November 2, 2009

காதல்-5

பெண்ணே பெண்ணே பேதைப் பெண்ணே
பெண்ணே என்னை ஒருமுறை பார்த்து பேசி விடு
மனம் விட்டுப்பேசி உந்தன் காதலைச் சொல்லிவிடு
உன் உள்ளம் எனக்கு கொடு
உடலுக்கு உயிரை கொடு
நீயும் நானும் கோபம் கொண்டால் சண்டை ஆகுமா
சண்டை போட்டு பிரிந்து சென்றாலும் காதல் மாறுமா
பெண்ணே பெண்ணே பேதைப் பெண்ணே
பெண்ணே என்னை ஒருமுறை பார்த்து விடு
மனம் விட்டுப்பேசி உந்தன் காதலைச் சொல்லிவிடு
காதலில் காமம் கிடையாது
காதலில் தோல்வி கிடையாது
காதல் உறவினை பிரிக்காது
காதல் பகையை வளர்க்காது
காதல் என்ற கூட்டினுள்ளே
காதலர் வாழ வழி தேடு
பிரிவு பிரிவு தான் உறவு உறவு தான்
பிரிவின் வழியிலே உறவு வளருமே
பெண்ணே பெண்ணே பேதைப் பெண்ணே
பெண்ணே என்னை ஒருமுறை பார்த்து பேசி விடு
மனம் விட்டுப்பேசி உந்தன் காதலைச் சொல்லிவிடு
உன் உள்ளம் எனக்கு கொடு
உடலுக்கு உயிரை கொடு
நீயும் நானும் கோபம் கொண்டால் சண்டை ஆகுமா
சண்டை போட்டு பிரிந்து சென்றாலும் காதல் மாறுமா

Saturday, October 31, 2009

இழவு வீடு

பிணம் விழுந்ததால்
இறந்தவன் வீட்டில்
அடுப்பு அணைந்தது
பிணம் விழுந்ததால்
எரிப்பவன் வீட்டில்
அடுப்பு எரிந்தது

ஆண்மகன்

இல்லற வாழ்க்கையில்
இல்லாலின் வசவுதனை
இதமாக தவிர்ப்பதாலே
இயலாதவனாக மாட்டான்

இல்லத்தை எதிர்நோக்கும்
இடர்களை களைத்தெறிய
இடைவிடாமல் போராடும்
போராளியான ஆண்மகன்...

Friday, October 30, 2009

காதல் செய்வாய்

கண்களின் மொழியை அறிந்து கொள்ள
மௌனமாய் கதைகள் பேசிக் கொள்ள
மரணம் இல்லா வாழ்க்கை வாழ
மனிதா நீயும் காதல் செய்வாய்….

சொத்து

உன் முகம் கான
நான் பட்ட தவிப்பு
கண்ட பின்பு கண்கள்
பேசிக் கொண்ட துடிப்பு
உன் நினைப்பில் வாழும்
காலம் தரும் களிப்பு
என்றும் என்னை நீங்கா
உந்தன் அழியா சொத்து…

Monday, October 26, 2009

நான் யார்

நான் யாரென்று என்னை மறந்து விட்டேன். என்னைப் பற்றி சொல்கிறேன். யாரேனும் நான் யாரென்று சொல்லுங்களேன்...

உயிர் கொடுத்த நீயே
உதையும் கொடுக்கிறாய்
காயம் பட்ட இடத்தில்
மருந்தும் இடுகிறாய்
மருந் தாறும் முன்னே
மீன்டும் மிதிக்கிறாய்
குற்று யிராய் என்னை
தினமும் சிதைக்கிறாய்
கடும் சுமை தந்தே
தினமும் வதைக்கிறாய்
புது வசதி வந்ததும்
என்னை மறக்கிறாய்
என்பெயர் மறந் தென்னை
புலம்பவும் வைக்கிறாய்
முடிந்தால் நீ எனக்கு
என்பெயரை உரைத்திடுவாய்...

ஆக்சிஜனாய் காதலிக்கிறேன்

1.இதயத்தின் சுவரில்
சுழன்று செல்லும்
வெறும் காற்றா நீ
இதயம் தன்னில்
இரண்டற கலக்கும்
ஆக்சிஜன் அன்றோ நீ...

2.இதயம் உள்ளே சுவாச காற்றாய்
மங்கையர் பலர் வந்த போதும்
இதயம் தன்னில் ஆக்சிஜன் காற்றாய்
மங்கை நீதான் தங்கிப் போனாய்...

Wednesday, October 21, 2009

நிலாப்பெண்ணே...
என்னிரு கைகள்
ஏந்தியே வந்தேன்
நிலவே உன்னை
நிதமும் அனைத்திட...அமுதுணவு நான் உண்ண

ஆசைப் பொருளாய் வந்தாய்

இரவினிலே ஓடி ஆட

வெளிச்சம் தந்து நின்றாய்

ஈசனது தலையில் நீயும்

பிறை நிலவாய் அமர்ந்தாய்

உலகமக்கள் தாகம் தீர்க்க

ஊற்றினைத் தோன்ட எண்ணி

எரிகுண்டை எறிந்த போதும்

ஏசுவாக அமைதி காத்தாய்

ஒற்றையாக நின்று நீயும்

உதவி பல செய்திட்டாய்

உன்னோடு கை கோர்க்க

என்னை நான் தருகின்றேன்

மறுக்காமல் எனை நீயும்

ஏற்பாயோ நிலாப் பெண்ணே…


ஏக்கம்-2

அழுகை உணர்வையும்
ஆனந்தம் ஆக்கி
இதயத்தில் நீயும்
ஈட்டியாய் தைத்து
உலகை மறந்திடும்
ஊடலை அளித்து
என்னை ஏனோ
ஏக்கத்தில் இருத்தி
ஐம்புலன்களை ஆக்கிரமித்து
ஒற்றையில் என்னை
தவித்திட வைத்து
ஓரமாய் நின்று
இரசிப்பது முறையோ!..

அருகில் வருவாய்
ஆனந்தம் தருவாய்
இதயத்தை தந்தே
ஈகையில் சிறப்பாய்
உறவை உணர்த்திட
ஊரார் முன்னே
என்னை நீயும்
ஏற்றுக் கொண்டு
ஐயம் தவிர்த்து
ஒன்றாய் வாழ
சம்மதம் தந்தே
ஓடி நீ வருவாய்....

Saturday, October 17, 2009

தீபாவளி

சூரனின் மரண நாளில்
சூரியன் உதிக்கும் முன்னே
சிரசினில் எண்ணெய் தேய்த்து
சுடுநீரில் தலை முழுகி
சுட்டிகள் பட்டாசு வெடிக்க
சுவைமிகு இனிப்பை உண்டு
சுற்றத்தோடு வாழ்த்தை பகிரும்
சந்தோஷ திருநாளாம் தீபாவளி....

Tuesday, October 13, 2009

காதல்-4

காதல், புரிதலின் போது
கண்கள் கனிமொழி பேசும்
காதல், பிரிதலின் போது
கண்கள் கண்ணீரில் பேசும்

காதல், புரிதலின் போது
மனம் பட்டாம்பூச்சியாய் பறந்திடும்
காதல், பிரிதலின் போது
மனம் பரிதவிப்பால் பிசைந்திடும்...

Monday, October 12, 2009

ஆரம்ப கால கிறுக்கல் இது...

காதலியானவள் தன் பிரிந்து போன காதலனை நினைத்து உருகி பாடுவதாக அமைத்தது

காதலன் நெஞ்சமல்லவா
அது காதலின் உயிரல்லவா
இது இதயத்தின் உறவல்லவா
இதயங்கள் இரண்டும் விழிகளில் பேசி
இணைந்திடும் உணர்வல்லவா
காதல் நிலவ ல்லவா
அது காதலர்தம் கனவல்லவா
கண்களின் மொழியல்லவா
அது காலத்தின் நிணைவல்லவா
பாறைகள் சுரக்கும் நீரினைப்போல்
மனம் தரும் மலரல்லவா
வா வா கனவா, வாழ்வே நீயல்லவா
அணையா விளக்கல்லவா
குறைவிலா நிலவல்லவா
குளிருக்கு இதயமாய் இளமைமூட்டிய
அனலும் நீயல்லவா
தா தா மனம் தா,
மணந்தால் நான் மணையல்லவா
காதலன் நெஞ்சமல்லவா
அது காதலின் உயிரல்லவா
இது இதயத்தின் உறவல்லவா
இதயங்கள் இரண்டும் விழிகளில் பேசி
இணைந்திடும் உணர்வல்லவா

Friday, October 9, 2009

காதல் 3

கண்ணே வந்துவிடு
மௌனம் உடைத்துவிடு
மௌனம் உடைத்திட்டே
மனமதை தந்துவிடு
கானல் நீராய்நம்
காதலை ஆக்காதே
காதல் மனவாழ்வை
கனவாய் மாற்றாதே...

கண்ணால் கதைபேசி
காதலை வளர்த்ததையும்
தோளில் தலைசாய்த்து
துனிவை வளர்த்ததையும்
கையில் கைகோர்த்து
மனமாசை வளர்த்ததையும்
கண்ணே மறந்ததென்ன
என்னை வெறுப்பதென்ன...

Thursday, October 8, 2009

களவு

கடலின் நீரை
கவர்ந்து சென்றது
கதிரவன் கண்கள்
காளையின் மனதை
கவர்ந்து சென்றது
கன்னியின் கண்கள்...

கனவும் மனமும்

உன்னை உயர்வாய்
உருவகப் படுத்தி
உணர்வில் தொலைந்த
உயிர்களுக் கெல்லாம்

உறங்கும் போது
உருவம் கொடுத்து
உள்ளம் தனிலே
உலவும் உணர்வு

விழித்த பின்னே
விளங்கி கொள்ள
விழையும் மனமோ
வியப்பின் விளிம்பு...

Friday, October 2, 2009

சூரியன்

அண்டம் முழுவதும்
ஆட்சி புரிந்திடும்
இருளை அகற்றும்
ஈடினை இல்லா
உழவுத் தொழிலின்
ஊட்டமாய் நின்று
எழில்மிகு இரதத்தில்
ஏவல் ஆளாய்
ஒன்பது கிரகத்தை
ஓட வைப்பவன்…

Thursday, October 1, 2009

காதல்-2

கன்னிப் பெண்ணொருத்தி
கண்ணால் வலைவிரித்தாள்
அடங்கா காளையவனை
மனமென்னும் சிறையிலடைக்க...

காதலைப் பூட்டும்
மௌனத்திற்குத் தெரிவதில்லை
கண்ணெனும் சாவி
தன்னை உடைத்திடுமென்று...

மொட்டான உன்கண்கள் மலர்வதுவும் எப்போது
மலரான உன்னிதழ்கள் திறப்பதுவும் எப்போது
திறந்திட்டே காதலதை உரைப்பதுவும் எப்போது
உரைத்திட்டே எனைநீயும் உயிர்ப்பிப்பதும் எப்போது...

Tuesday, September 29, 2009

தேடல்

கடற்கரை மணலில் கண்மூடி அமர்ந்திருந்தேன்
கண்ணாடி வளையலின் கனைப்பால் கண்திறந்தேன்
காட்சியாய் தெரிந்தாய் கானலாய் மறைந்தாய்
காலடி தடத்தால் கோலங்கள் பதித்தாய்

அலைகள் தடத்தை அழித்த போதும்
அழியா தடமாய் அமர்ந்தாய் என்னுள்
அலைகள் உணர்ந்த காதலை நானும்
அடைந்திட எண்ணி அலைந்திடு கின்றேன்

கண்களும் தேடிப் பூத்துப் போனது
கால்களும் நடந்தே சோர்ந்துப் போனது
அன்பே நீயும் எங்கிருக் கின்றாய்
அலையி டமாவது சொல்லி செல்வாய்…

Monday, September 28, 2009

புதுப்பாடம்

உலகையே ஒன்றாய் திரட்டி
உவகையை தருவோ மென்றெண்ணி
உதறிய உதவா பொருட்களா-என்
மழலையின் மங்கா செல்வம்
மகவின் மகிழ்வை மறந்தேபோன
மடமையால் நானும் சிறுமையானேன்
பாரையே சுற்றி கற்றதென்ன-என்
பாலகனிடம் பயின்றேன் புதுப்பாடம்

Friday, September 25, 2009

சந்தேகம்

ஒன்றான (ஏகம்) உள்ளம் தன்னில்
பிரிவு (சந்து) தனை தருவதாலே
பெயர் இட்டு அழைத்தினரோ
சந்தேகம் என்று சொல்லி...

ஏக்கம்

பாதம்பட்ட மண் துகளின்
பரிகசிப்பை தாளா அலைகள்
பாதமேனும் தழுவிட எண்ணி
பாடியே வருதல் போல்
பார்வைப்பட்ட மாந்தர் எல்லாம்
பரிகசித்துப் பேசும் முன்னர்
பாதமேனும் தழுவிக் கொள்ளும்
பாதுகையாக மாறிட லேனோ...

தயக்கம்

ஆயிரம் கதைகள் சொல்ல
ஆர்ப்பரித்து வந்திட்ட அலைகள்
அன்னமவள் கால்கள் வருடி
அமைதியாக திரும்புதல் போல
ஆசையைச் சொல்ல எண்ணி
ஆர்வமாய் சென்ற நானும்
அன்னமவள் கண்கள் வருடி
அமைதியாய் திரும்பி ட்டேனே...

Monday, September 21, 2009

நிம்மதி

பிறப்புக்கு முன் எங்கிருந்தோம் தெரியாது
இறப்புக்கு பின் எங்கிருப்போம் தெரியாது
பிறப்புக்கு முன் நிம்மதி என்றால்
இல்லாத ஒன்றின் கற்பனை ஊற்று
இறப்புக்கு பின் நிம்மதி என்றால்
தெரியாத ஒன்றின் தெளிவற்ற பேச்சு
வாழும் போது நிம்மதி என்பது
வசந்தம் நிறைந்த பூங்கா போன்றது
அனைவர் மீதும் அன்பை செலுத்து
அகிலமே தோன்றும் நிம்மதியின் உறைவிடமாய்...

வருத்தம்

அன்றும் வருந்தினான்
கருமை நிறம் அவனென்று
காதலதை மறுத்த தற்கு
இன்றும் வருந்தினான்
வெண்சேலை உடுத்தி அவளும்
விதவையென உரைத்த தற்கு

Sunday, September 20, 2009

நல்லவனா கெட்டவனா

நண்பர்களின் கேலி தன்னை
நாசூக்காக கடிந்து கொண்டால்
நீயே கெட்டவன்
நண்பர்களின் கேலி தன்னை
நகைச்சுவையாய் எடுத்துக் கொண்டால்
நீதான் நல்லவன்
காதலியின் கருத்த தற்கு
மறந்தும் மறுத்தா யானால்
நீயே கெட்டவன்
காதலியின் கருத்த தற்கு
மாடுபோல் தலை அசைத்தால்
நீதான் நல்லவன்.

கண் தானம்

அழுகிப்போன பழங்கள் கூட
ஆல்கஹாலைக் கொடுக்கும் போது
இறந்தபின்பு கண்ணை நாமும்
ஈந்திடலில் தயக்கம் ஏனோ!...

மக்கிப்போன மரத்தின் இழைகள்
மரத்திற்கே உரமாய் கொடுக்க
மறைந்தபின் மனிதன் கண்ணை
மனிதனுக்கே ஈந்திட லாமே......

Saturday, September 19, 2009

சென்னை மழை

கன்னிமாரா நூலகத்தில்

காத்திருக்கும் காதலியின்

கோபமான பேச்சுக்கு

காரணம் புரியாமல்

குழம்பியே பேருந்துக்காய்

காத்திருக்கும் எனக்காக

சொல்லாமல் வந்து

குற்றால அருவியாக

கண்ணீரை உதிர்த்திட்டாயோ

சென்னை மழையே!...

ஈரம்

மண்ணில் ஈரம் வேண்டும்
மரம் உயிர் வாழ – பெண்ணே
உன்மனதில் ஈரம் வேண்டும்
நான் உயிர் வாழ

ஊர்

தாயின் கருப்பையில் விதையாய் இருந்திட்டு

தரணியில் விழுந்ததும் கண்ணீரை தண்ணீராக்கி (தனக்கே நீராக்கி)

தங்குமிடம் தழைக்க வேரூன்றி வாழும்

தன்னலமில்லா மனிதனுக்கு தரணியே ஊராகும்.

Wednesday, September 16, 2009

மணமகளாகும் மகளுக்கு

மணமாகப் போகும் பெண்ணே
மனதிலே கலக்கம் ஏனோ
மங்கையாகப் பிறந்து விட்டால்
மறுவீடும் இயல்பு தானே
மகளாய் உனக்கு நான்
மறுப்பு எதுவும் கூறவில்லை
மரியாதை மானம் இரண்டும்
மறுவீட்டில் காப்பாய் பிள்ளை
மகவொன்றை ஈந்தெ னக்கு
மகிழ்ச்சியையும் தருவாய் கண்ணே
மழலையின் முகம் பார்த்து
மறந்திடுவேன் கவலை நானே…பட்டினியால் பரிதவித்து
பாதி உயிர் போக வந்து
குடிக்கும்நீருக்காக
குழாயினுள் சிரம் நுழைத்து
குற்றுயிராய் கிடக்கின்றேன்
குன்டுமணி நீரேனும்
கொடுப்பாயா எனக்கென்று
கடுந்தவும் புரிகின்ற
குருவியின் தின்னம் என்னே!..

Tuesday, September 15, 2009

காதல் சுகமானது

வெறுத்து ஒதுக்கும் போது விதையாகவும்
மறக்க நிணைக்கும் போது மொட்டாகவும்
எதிர்ப்பு வரும் போது மலராகவும்
உள்ளத்தில் மலரும் காதல் சுகமானது

காதல்

காதலித்துப் பார்! அது
உனக்குள் ஒளிந்துள்ள
திறமையை உனக்கு
உணர்த்தும்
காதலித்துப் பார்! அது
உலகுக்கு உன்னை
உன்னத மனிதனாய்
காட்டும்
காதலித்துப் பார்! அது
உள்ளத்தை இணைத்து
உறவை வளர்க்க
செய்யும்
காதலித்துப் பார்! அது
மதங்களை அழித்து
மனித நேயத்தை
வளர்க்கும்

காதல்

அழுகை வந்தால் சொல்லி அனுப்பு
ஆறுதல் சொல்ல வருகிறேன்
தாகம் வந்தால் சொல்லி அனுப்பு
தண்ணீராக வருகிறேன்
உதவி என்றால் சொல்லி அனுப்பு
காற்றாய் ஓடி வருகிறேன்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
கல்லறையிலிருந்தாலும் வருகிறேன்

மனிதன்

அழகை ஆபத்தானதென ஒதுக்குபவன் மடையன்
ஆபத்தையும் அழகாக்குபவன் மனிதன்
கடவுளை தொழுவதே கடமை என்றிருப்பவன் மடையன்
கடமையை கடவுளாய் தொழுபவன் மனிதன்

பிறரை மட்டும் சார்ந்து வாழ்பவன் மடையன்
தன்னை பிறர் சார்ந்து வாழ செய்பவன் மனிதன்
தோல்வியை கண்டு துவன்டு விடுபவன் மடையன்
தோல்வியினின்றும் வெற்றியை தேடுபவன் மனிதன்

அறிவுரை

பெற்றொர் சொன்ன போது
பெரும் எரிச்சலாய் இருந்தது
உறவினர் சொன்ன போது
மனம் எரிமலையாய் பொங்கியது
ஆசிரியர் சொன்ன போது
அறுவையாய் தெரிந்தது
நன்பர்கள் சொன்ன போது
நக்கலாய் தெரிந்தது
அணைத்தையும் உதாசீனப்படுத்தியவனுக்கு
அனுபவிக்கும் போது அறிவுரையின் அர்த்தம் புரிந்தது

ஓரெழுத்து ஓர் மொழி

ஒர் எழுத்தே சொல்லாவது நமது தமிழ் மொழிக்குரிய பெருமைகளில் ஒன்று. இதனை ஓரெழுத்து ஓர்மொழி என்பர். தமிழில் மொத்தம் இவ்வாறு 42 ஓரெழுத்து ஓர் மொழி உள்ளது. இவற்றுள் சில் நாம் பழக்கத்தில் உபயோகப்படுத்துவது. மற்றும் சில இலக்கியங்களில் உள்ளது. இதோ உங்களுக்காக…
எழுத்து பொருள்
ஆ பசு
ஈ பூச்சி, கொடுத்தல்
ஊ இறைச்சி
ஏ அம்பு
ஐ ஐந்து, அழகு, தலைவன்
ஓ மதகு நீர் தாங்கும் பலகை
கா காத்தல்
சா இறத்தல்
தா கொடு
நா நான்
பா பாடல்
மா மாம்பழம், பெரியது
யா ஒரு வகை மரம்
வா அழை, கூப்பிடு
சீ இகழ்ச்சி குறிப்பு, ஒளி
மீ மேல்
தீ நெருப்பு
நீ நீவிர்
வீ மலர்
து உண்
கூ பூமி
மூ மூப்பு
தூ தூய்மை
பூ மலர்
சே எருது
தே கடவுள்
நே அன்பு
பே அச்சம்
மே மேல்
கை கைகள்
தை மாதங்களில் ஒன்று
நை வருத்தம், துன்பம்
பை கைப்பை
மை மசி
வை வைத்தல்
நொ வருத்து
கோ அரசன்
சோ மதில்
நோ துன்பம்
போ செல்
மோ மோத்தல்
வௌ திருடுதல்

ஓடிவா என்னோடு....

அமைதியை இழந்து

ஆடையை கிழித்து

இலக்கை தொலைத்து

ஈனமாய் போனேன்


உள்ளம் தொலைத்த

ஊடலால் இன்று

என்னை நானே

ஏசிக் கொண்டேன்


ஐயம் தொலைத்தென்

பிழையை பொறுத்திடு

ஒன்றாய் ஆவோம்

ஓடிவா என்னோடு....

தர்மசங்கடம்

காதலுக்கு கண்ணில்லை

அவளது கடைக்கண் அவன் மீது விழாத வரை

காதலிக்கும் மணமில்லை

மாற்றான் கையை மணவறையில் பிடிக்கும் வரை

அவனை நட்டாற்றில் விட

என் செய்வாள் மங்கை

பினவறையை தேடுவோம் என பெற்றோர் கூறும் போது

பரதேசி

அன்பை வாரிதந்த அம்மாவை விட்டு

ஆதரவாய் தோள்தந்த அப்பாவை விட்டு

இன்னலில் உதவிய உற்றாரை விட்டு

ஈசன் கோவிலின் இசையை விட்டு

உள்ளம் தொலைத்த ஊரனி விட்டு

ஊர் திருவிழாவின் உவகையை விட்டு

எடுத்து வளர்த்த பூனையை விட்டு

ஏற்றம் இரைத்த நிலத்தை விட்டு

ஒட்டிப் பிறவா நண்பனை விட்டு

ஓடி ஆடிய மைதானத்தையும் விட்டென

பலதையும் தொலைத்து பரதேசம் வந்து

பரதேசி ஆனேன் பாழும் பணத்திற்காக....

காதல்

காதல் ஒரு மடத்தனம் உணராதோர்க்கு

காதல் ஒரு மகத்துவம் உண்ர்ந்தோர்க்கு...

மேகம் என்று தான் எண்ணித் தொட்டேன்

பின்புதான் தெரிந்தது அது அவளின் கூந்தலென்று

மீன்கள் என்று தான் எண்ணி ரசித்தேன்

பின்புதான் தெரிந்தது அது அவளின் விழிகளென்று

கொவ்வைப்பழம் என்று தான் எண்ணி ரசித்தேன்

பின்புதான் தெரிந்தது அது அவளின் இதழ்களென்று

நட்பு என்று தான் எண்ணிப் பழகினேன்

பின்புதான் தெரிந்தது அது அவள் மீது கொண்ட காதலென்று....

மனித நேயம் மலர செய்வோம்.

கண்ணில்லா குருடர்க்கும்
காதுகேளா செவிடர்க்கும்
கிழமான பெரியவர்க்கும்
கீழ்விழுந்தோரை எழும்புதற்கும்
குற்றுயிராய் உள்ளவர்க்கும்
கூன்விழுந்தோர் நடப்பதற்கும்
கேட்காமல் உதவிடவே
மனித நேயம் மலர செய்வோம்.

காதல்

இரந்து கிடைப்பதல்ல காதல்

இரு உள்ளம் இணைவதே காதல்

அணைவரும் அறிவதல்ல காதல்

அவர்கள் மட்டும் அறிவது காதல்...

காதலும் கல்லூரியும்

கானும் பொருளில் உன்னை கண்டு
கண்ணை மூடினால் கனவிலும் கண்டு
உணவைத் தொலைத்து உறக்கத்தையும் தொலைத்து
உறைவிடம் யாதென கனவில் கேட்டால்
உன்னுள்ளம் தானென சிரித்து சென்றாய்
காதல் இதுவென உணர்த்தி சென்றாய்
உணர்ந்த காதலை உரைத்திட எண்ணி
உருகி தவித்தேன் மணி(காலம்)தனை சபித்தேன்
உள்ளம் இளகி மணி(காலம்)யும் கரைந்தது
உன்னைக் கானும் நாளும் வந்தது
பொழுதும் புலர்ந்தது புதியதோர் யுகமாய்
பேருந்தும் தெரிந்தது புதியதோர் ரதமாய்
நாடியே வந்தேன் பரவச களிப்பால்
வாடியே போனேன் பாரா முகத்தால்
காண்போர் அணைவரையும் கடிந்து கொண்டேன்
காரணம் யாதென கலங்கி நின்றேன்
கால்மணி கழித்து திரும்பி பார்த்தாய்
காயமான நெஞ்சில் பால்தனை வார்த்தாய்
கடந்து போன விடுமுறை நாளில்
காணாமல் தவித்த கதைதனை சொன்னாய்
காதலரா என கண்டோர் கேட்ட போதும்
கண்களாலேயெ உணர்வை பரிமாறிய போதும்
காரணமின்றி உன்னிடம் கதைத்த போதும்
நட்பெனும் போர்வையில் திரிந்திட்ட நாமே
கல்லூரி தந்த விடுமுறை பிரிவில்
காதலை உணர்ந்த காதலர் ஆனோம்....