Thursday, December 24, 2009

தாயே வரமருள்வாயே

தண்ணீர் குடத்தினின்று
தரையிலே கால்பதிக்க
தன்னுயிரை பனயம்வைத்து
என்னுயிரை அளித்தவளே

உயிர்கொடுத்த அசதிவிலகி
உணர்வது திரும்பியதும்
உள்ளங்கையில் அள்ளியெடுத்து
உச்சந்தலை முகர்ந்தவளே

உள்ளங்கை சிலிர்ப்பினிலே
உம்மென்று சினுங்கியதும்
உதிரத்தை பாலாக்கி
உணவாகத் தந்தவளே

உணவுன்னும் வேளையிலோ
உடைமாற்றும் வேளையிலோ
உறங்குகின்ற வேளையிலோ
உறக்கத்தில் நான்சினுங்க
உள்ளமது பதறிநீயும்
உடனென்னை பார்த்தவளே

தவழ்ந்துநானும் வந்தபோதும்
தத்திதத்தி நடந்தபோதும்
தவறிவிழ நேரும்பொது
தாங்கியெனைப் பிடித்தவளே

பல்லில்லா வாய்தனிலே
பேசச்செய்த முயற்சியதை
பாடல்நானும் பாடுவதாய்
பார்ப்பவர்க்கு உரைத்தவளே

பாடமது படிப்பதற்கு
பள்ளிக்குச் சென்றுவந்து
பலகதைகள் நான்சொல்ல
பணிவிடுத்து கேட்டவளே

விழாகால கூட்டத்திலே
வீதியிலே நடக்கும்போதும்
வழிதவறி போகாவன்னம்
விரல்பிடித்து சென்றவளே

நடந்துபோன நாட்களிலும்
நடக்கின்ற நாட்களிலும்
வாழ்த்ததனை சொல்லியென்னை
வழிகாட்டி நடத்தியவளே

வாழும்காலம் எல்லாமெனக்காய்
வாழ்ந்துவந்த அன்புத்தாயே
வாரிசாக நீயேயெனக்கு
பிறந்திடவோர் வரமருள்வாயே…

No comments:

Post a Comment