Saturday, November 28, 2009

திரும்பி பார்க்கிறேன்

1. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
எதைப் பற்றியும்
கவலை இல்லா
என்னுள் தொலைத்த
கடந்த காலத்தை
திரும்பி பார்க்கிறேன் …
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
அம்மாவின் கைவிடுத்து
அழுதழுது கண்சிவந்து
அப்பாவின் சைக்கிளிலே
பள்ளிக்கு போன அந்த
பழைய நாட்களை
திரும்பி பார்க்கிறேன்…
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
சளி ஒழுகும் மூக்கோடும்
புண் நிறைந்த கையோடும்
பொத்தல் விழுந்த நிக்கரோடும்
பள்ளிக்கு சென்ற அந்த
பழைய நாட்களை
திரும்பி பார்க்கிறேன்…
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பறையின் வாசலிலே
தொங்குகின்ற நெல்லிக்காயை
தொட்டாலே அபராதம்,
அறிவிப்பைக் கேட்டுவிட்டு
தொட்டால் ; தானேயென்று
நண்பர்களுடன் ஓடிவந்து
எக்கி்எக்கி தலையில் முட்டி
நெல்லியை சுவைத்த அந்த
சொர்க்கத்தை திரும்பி பார்க்கிறேன்…

2. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஆரம்ப பள்ளியிலே
அடிவைத்த நாட்களை நான்
அசை போட்டு மெதுவாக
திரும்பி பார்க்கிறேன்

புத்தகத்தை மறந்த நாளில்
அப்பாட ஆசிரியர்
விடுப்பிலே இருக்க வேண்டும்
இறைவனே என்று வேண்டி
பயந்து பயந்து காத்திருந்து
ஆசிரியர் வராவிட்டால்
ஆண்டவனுக்கு நன்றி சொல்லி
ஆசிரியர் வந்திருந்தால்
ஆண்டவனை திட்டி தீர்த்த
பழைய நாளை
திரும்பி பார்க்கிறேன்…


வெள்ளிக்கிழமை மாலைவேளை
உடற்பயிற்சி வகுப்பதனில்
வில்லாக உடலை வளைத்து
வியர்வை வர பயிற்சியதை
செய்திடவே வேண்டுமென்று
பிரம்போடு சுற்றி வரும்
ஆசானை திட்டி தீர்த்த
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்…


வெள்ளிக்கிழமை வகுப்பு முடித்து
வீட்டிற்கு திரும்பும் நேரம்
ஊரிலுள்ள பாட்டி அவள்
வீட்டிற்கு வர வேண்டி
வருகின்ற பாதை முழுதும்
அடி மீது அடி வைத்து
நடந்து வந்த அந்நாளை
திரும்பி பார்க்கிறேன்...


திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்

3. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
எனது இவ்வாழ்க்கையில்
நண்பனுக்கு நான் இழைத்த
முதல் துரோக செயலதனை
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்


மூன்றாவது வகுப்பு முடிய
மூன்று வாரம் இருக்கும்போது
ஆண்டு விழா பற்றியொரு
அறிவிப்பு பள்ளியிலே
இயல்தமிழுக்காய் கட்டுரைப் போட்டி
இசைத்தமிழுக்காய் கவிப்போட்டி
நாடகத்தமிழுக்காய் நாடக போட்டி
விருப்பமுள்ள மாணவர்கள்
விளையாட்டுத் திடலிலே
விரைந்து வந்து பெயர் தருக…


எனதருமை நண்பனவன்
நாடகத்தில் நடிக்க எண்ணி
பெயர் கொடுத்தான் போட்டிக்கு
நாடகத்தின் பெயரதுவோ
பாஞ்சாலி சூளுரைப்பு
என் நண்பன் ஏற்றதுவோ
துரியனின் தம்பி வேடம்
அவன் நடிக்க வேண்டியதோ
இரண்டு பத்தி வசனமும்
துகிலுரியும் படலமும்


ஆரம்பமானதுவே
போட்டிகளின் ஒத்திகைகள்
எனக்கதுவோ வகுப்புகளை
தட்டிக் கழிக்கும் புதுஉத்திகள்
ஆன்டு விழா நாளிற்கு
தூரமோ அதிகம் இல்லை
நண்பனவன் மன்டைக்கு
வசனங்களோ தங்கவில்லை
நாடகத்தின் பொறுப்பாசிரியர்
நண்பனை அருகில அழைத்து
வசனத்தை உன் நண்பனிடம்
மனனம் செய்து ஒப்புவியென்றார்…


நாளெல்லாம் என்னை அமர்த்தி
வசனத்தை ஒப்ப கேட்டு
விளையாட்டாய் ஒருநாள் மாலை
வசனத்தை பேசிக் காட்டி
இதற்கு ஏன் இப்படி திக்குற
என்று நான் கேலிபேச
பின்னால் இருந்த பொறுப்பாசிரியர்
நாளை முதல் நடிக்கநீயே
ஒத்திகைக்கு வந்திடு என்ற
கட்டளையை இட்டு சென்றார்….


திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்…

4. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
பிறந்த தேதி
மாறிப்போக
காரணமான
இரண்டாம் பள்ளியின்
இனிய பொழுதை
திரும்பி பார்க்கிறேன்

நான்கு வருடம் ஓடிஆடிய
பள்ளியை விடுத்து
வேறோர் பள்ளி
புதிய ஆசிரியர்கள்
புதிய நண்பர்கள்
எல்லாம் புதிதாய்
இருந்தும் துனிவாய்
வகுப்பில் நுழைந்த
முதல் முதல் நாளை
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பு முழுவதும்
பேச்சின் சத்தம்
பெசுவோர் பெயரை
எழுதும் ஒருவன்
நுழைந்ததும் கேட்டான்
யார் நீ என்று
நானும் கேட்டேன்
நீ யாரென்று

அவனோ சொன்னான்
வகுப்பின் தலைவன்
நானோ சொன்னேன்
புதிதாய்ச் சேர்ந்தவன்
வகுப்பில் நிற்க
அனுமதி இல்லை
இடத்தைப் பார்த்து
அமரு என்றான்

நிற்க அனுமதி
இல்லை என்றால்
நீயேன் நிற்கிறாய்
என்றேன் நானும்
பேசுவோர் பெயரை
எழுதும் பணியை
ஆசிரியர் தந்தார்
அதையே செய்கிறேன்
பேசாமல் அமர்ந்து
மனனச் செய்யுளை
மனனம் செய்வாய்
என்றான் அவனும்

நான்காம் வகுப்பின்
விடுமுறை நாளில்
மனனம் செய்த
செய்யுளை ஒபபி
என்ன செய்ய
என்றேன் நானும்
ஏதாவது செய் ஆனால்
அமைதியாய் செய்
என்றே சொல்லி
அவனும் அமர்ந்தான்

4 (2) திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஐந்தாம் வகுப்பில்
ஓடி ஆடிய
என்னைப் பிரியா
பழைய நாட்களைத்
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பறைக்கு
செல்லும் முன்னே
பள்ளியின் வெளியே
இருக்கும் கடையிலே
வட்ட வட்ட
பிஸ்கேட் உடனே
சிறுசிறு அல்வா
துண்டுகள் வாங்கி
வகுப்பு இல்லா
நேரந்தனிலே
இரண்டு பிஸ்கேட்
நடுவில் கொஞ்சம்
அளவாய் அல்வா
தட்டி வைத்து
இனிப்பு பிஸ்கேட்
என்றே சொல்லி
அழகு காட்டி
உண்ட நாளைத்
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
மதிய நேர
இடைவெளி போது
உணவு உண்ட
கின்னம் கழுவ
அருகே உள்ள
ஆற்று நீரில்
முட்டிக் கால்
முழுகி நின்று
கின்னம் கழுவி
முடித்த பின்னர்
கின்னம் மூடி
இரண்டையும் தனியே
ஆற்று நீரின்
எதிர்திசை எறிந்து
படகு வருது
என்றே சொல்லி
நீரில் ஆடிய
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஐந்தாம் வகுப்பின்
ஆண்டுத் தேர்வில்
நண்பனுக்காக
தேர்வுத் தாளை
முன்னுக்கு தந்து
எழுதச் சொல்லி
என்னிடம் அத்தாள்
சேரும் வரையில்
வியர்த்து வழிந்த
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்

No comments:

Post a Comment