Wednesday, December 19, 2012

ஆறறிவா அரை குறை அறிவா

நண்பர் ஒருவர் அறிவைப் பற்றி ஒரு மடல் போட்டிருந்தார். படித்ததும் எனக்கு மிகப் பெரும் சந்தேகம். அறிவு என்றால் என்ன? என்பதே அது. இதைப் பற்றி மேலும் சிந்திக்கும் போது அதைவிட இன்னொரு பெரிய கேள்வி என் முன்னே வந்து நின்றது. அது, ஆறறிவு படைத்தவன் மனிதன் என்று நாம் சொல்லிக் கொள்கிறோமே அந்த ஆறறிவுகள் என்ன? என்பதுதான்.

யோசித்து யோசித்துப் பார்த்தேன். அறிவு இருந்திருந்தால் தானே பதில் கிடைத்திருக்கும். இல்லாத ஒன்றை கொண்டு எதற்கு நாம் கஷ்டப்பட வேண்டும் என்று தேடுபொறியில் ஆறறிவு என்றால் என்ன எனத் தேடிப் பார்த்தேன். தேடுபொறி சொன்னது, ஆறறிவுகள் முறையே பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு மற்றும் பகுத்தறியும் அறிவு என்று.

ஓ.... இதில் இத்தனை விஷயம் இருக்கிறதா என்று மேலும் ஒவ்வொரு அறிவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். முதலில் வந்தது பார்க்கும் அறிவு. அதாவது பார்வைத் திறன் கொண்டு உணரப்படுவது அல்லவா. உண்மையில் சொல்லுங்கள் மற்ற எல்லா உயிர்களினும் பார்க்கும் திறன் மனிதனுக்குத் தான் மேம்பட்டு இருக்கிறதா. கண்டிப்பாக இல்லை தானே. ஏன், மனிதனுக்கு இயற்கையாக இருக்க வேண்டிய பார்வைத்திறனே சரியாக இல்லாமல் தானே நம்மில் பெரும்பாலும் கண்ணாடி என்னும் செயற்கைக் கண்ணைப் பொருத்திப் பார்க்கிறோம். கண்ணாடி பற்றி அறியாத மிருகங்கள் எல்லாமே கண்ணாடி இல்லாமலே நல்ல பார்வைத் திறனை கொண்டிருக்கிறதே... அப்படியானால் பார்வைத் திறன் என்னும் பார்வை அறிவு நம்மிடம் முழுமையாக இருக்கிறதா.... இல்லை அரை குறையாக இருக்கிறதா???

அடுத்தது கேட்கும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு தொடும் உணர்வு என ஒவ்வொன்றைப் பற்றியும் என்னுள் யோசித்த போது தாவர இனமோ, விலங்கினமோ எதுவோ ஒன்று மனிதனைக் காட்டிலும் இந்த அறிவுகளில் சிறந்தே விளங்கி வருகிறது. அப்படியானால் இந்த ஐந்து அறிவுகளிலும் மனிதன் மற்ற உயிர்களிடம் இருந்து அறிவு குறைவானவனாகத் தானே இருக்கிறான். அதாவது அரை குறை அறிவுடன் தானே இருக்கிறான்.

இப்பொழுது ஆறாவது அறிவான பகுத்தறிவுக்கு வருவோம். தாவரம்/விலங்குகளிடம் இருக்கும் ஏனைய ஐந்து அறிவுகளை உணர்ந்த மனிதனால் அவைகளிடம் பகுத்தறிவு இருக்கிறதா இல்லையா என உறுதியாக கூற முடியாததால் முடிவாய்ச் சொல்லி விட்டான் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு இருக்கிறது என்று. உண்மையில் இது சரியா...

உதாரணத்திற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். எங்கள் வீட்டில் நான் சிறு வயதாக இருக்கும் போது ஒரு பூனை வளர்த்து வந்தோம். சில சமயங்களில் அந்த பூனை வெளியே சென்று ஏதோ சில தாவரங்களைத் தின்று விட்டு வந்து கக்கி வைக்கும். எதற்காக அம்மா இவ்வாறு பூனை செய்கிறது என்று கேட்டால், அப்பூனைக்கு உடல் சுகமில்லாமல் இருந்திருக்கும். அதற்கான மருந்தைத் தான் எடுத்துக் கொண்டு இவ்வாறு கக்கி தனது உடலைச் சரி செய்து கொள்கிறது என்றார்கள். எனக்கு மிகப் பெரும் சந்தேகம். இந்த பூனை எங்கு சென்று மருத்துவம் படித்திருக்கும். எப்படி இதற்கு தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் மருத்துவ முறை தெரிந்து கொண்டது என்பது தான் அது.

இது மட்டுமா, எல்லா விலங்குகளுக்கும் விஷ செடிகள் எது நல்ல செடிகள் எது, எது தனக்கு நன்மை விளைவிப்பது எது தனக்கு தீமை விளைவிப்பது என நன்றாய் தெரிந்து வைத்திருக்கிறது. அப்படியானால் இது போன்று பகுத்து அறிந்து கொள்ளும் பக்குவத்தை பிற உயிர்கள் கொண்டுள்ளது எவ்வாறு? அப்படியானால் ஆறறிவு என்பது மனிதனுக்கு மட்டுமில்லையா? பிற உயிர்களிடத்தும் இருக்கிறதா???

மனிதன் கொண்டிருப்பது ஆறறிவா இல்லை, அனைத்திலும் அரை குறை அறிவா?

எனக்கென்னவோ மனிதனிடத்து அரை குறை அறிவு இருப்பதாகவே படுகிறது... அரை குறை அறிவு தான் மனிதனுக்கு இருக்கிறது என்று நீங்களும் என்னுடன் பயணிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கான கேள்வி.

அரை குறை அறிவோடு இருக்கும் போதே இவ்வளவு ஆட்டம் போடும் நாம் ஆறறிவும் ஒழுங்காக கிடைக்கப் பெற்றிருந்தால் இன்னும் என்னென்ன செய்திருப்போம்...

அப்பப்பா.... நினைக்கவே பயமாய் இருக்கிறதே...!

No comments:

Post a Comment