Tuesday, December 13, 2011

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 5

காலை டிபன் முடித்து வெளியே வந்த பின்பு, குழலி என்னுடன் ஒட்டிக் கொண்டாள். நாங்கள் இருவரும் விளையாடிக் கொண்டே இருக்கும் போது விழியன் அண்ணா எங்கேயோ செல்கிறாரே என்று அவரைப் பின் தொடர்ந்தேன். பிறகு தான் தெரிந்தது, அது மணமகனைச் சந்திக்க என்று. நானும் சென்று நந்தா அண்ணனிடம் அறிமுகமாகி (வாழ்த்துகளைச் சொன்னேனா என்று சந்தேகம் உள்ளது) அளவளாவிக் கொண்டிருந்தோம்.

வித்யா அண்ணி, திருமதி நந்தா அவர்களை இப்போது சந்திக்க முடியுமா எனக் கேட்க, எனக்கே அனுமதி கிடையாது என்று நந்தா அண்ணன் வருத்தத்துடன் சொன்னார். :))). எங்கள் அனைவரையும் நந்தா அண்ணன் திருமண வரவேற்பு(ரிசப்ஷன்) முடியும் வரை இருக்கச் சொல்ல, நந்தா அண்ணனிடமிருந்து விடைபெற்று வந்தோம்.

கீழே துரை ஐயாவும், ஊர்காரர்கள் சிலரும் நமது பாஸை(BOSS) மீட்டெடுக்க நரேஷ் அண்ணா உதவியுடன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். விழியன் அண்ணா தானும் அவர்களுடன் செல்வதாகச் சொல்ல, எனது உள்மனத்தின் வேட்கையால், விழியன் அண்ணாவை திருமண மண்டபத்தில் இருக்கச் சொல்லி விட்டு நான் துரை ஐயாவுடன் பயணமானேன்.

நான் துரை ஐயா, ஊர்காரர்கள் இருவர் என பாஸை மீட்க புறப்பட வழியில் மீட்பு பணிக்காக என்னென்ன வேண்டும் என்று தெரியாததால் உத்தேசமாக, துரை ஐயா டீசல் டேங்க் உடைந்திருக்கிறது எனச் சொன்னதால் டீசல் கேன் ஒன்று, வண்டியை கட்டி இழுக்க கயிறு, சில பப்புள் கம், M-seal என பலதையும் வாங்கிக் கொண்டு புறப்படுகையில், இன்னொரு ஊர்க்காரரையும் துணைக்கு ஏற்றிக் கொண்டோம்.

புதிதாக ஏறிய ஊர்காரர், ஆரம்பத்திலேயே வயிற்றில் புளியைக் கரைத்தார், "அன்று காலை, தனது நண்பர் ஒருவர் அவ்வழியில் சென்றதாகவும், ஆனால் அவ்வழியில் ஏதும் விபத்து ஏற்பட்ட கார் அவரது கண்ணுக்கு புலப்படவில்லை என்றும்" சொல்லி. சிறிது தூரத்தில் ஒரு பெட்ரோல் பங்க் வர அங்கு வண்டியை நிறுத்தி டீசல் பிடித்துக் கொண்டோம்.

டீசல் பிடிக்கும் போது, பெட்ரோல் போடுபவரிடம் வண்டியைப் பற்றி எங்களுடன் வந்த ஊர்காரர் விசாரித்தார். அவர்களது உரையாடல் கன்னடத்தில் இருந்தது. இதுதான் அவர்கள் பேசியதின் சாராம்சம்.

ஊர்காரர்: அண்ணே, வண்டி ஒன்னு பைப்லைன் குழியில் இறங்கிடுச்சு. காலையில வேலைக்கு வரும் போது பார்த்தீங்களா...

டீசல் போடுபவர்: ஆமாம்பா, பார்த்தேன். நேத்து கூட அந்த வண்டியில வந்தவங்க நம்ம கிட்ட தான் வழி கேட்டுட்டு போனாங்க. எப்படி ஆச்சுப்பா? யாரு வண்டி?

ஊர்காரர்: நம்ம வண்டி தான்னே... பிரேக்டவுன் ஆகிடுச்சு... அதை எடுத்துட்டு வர தான் போறோம்...

இப்படி அவர்களது பேச்சு போய் கொண்டிருக்க, டீசல் கேனில் டீசல் பிடித்து கொண்டு நாங்கள் அவரிடமிருந்து விடைபெற்று எங்களது மீட்பு பணிக்கான பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் கர்நாடகா செக்போஸ்ட். அங்கிருந்த காவலாளியிடம் ஊர்காரர் விஷயத்தைச் சொல்லி விசாரிக்க அந்த போலிஸ்காரர், ஏன்பா, ஆக்ஸிடென்ட் நடந்தா, போட்டது போட்டபடி எல்லாத்தையும் வெளியே விட்டுட்டு ஓடுவீங்களா என்றார். ஏதோ காகிதங்கள் எல்லாம் வெளியில் போட்டு இருந்ததாகச் சொன்னார் அந்த போலிஸ்காரர்.

சரியென்று, அவரிடம் விடைபெற்று பாஸ் இருந்த இடம் நோக்கி புறப்பட்டோம்... அங்கு....

No comments:

Post a Comment