Sunday, December 25, 2011

இல்லாள் ஒரு பார்வை

இல்லாள், இல்லாள்னு சொல்றாங்களே... அப்படின்னா யாருங்க? ஒரு மனுஷனோட வாழ்வில் இந்த இல்லாளுக்கு அப்பிடி என்ன தான் முக்கியத்துவமுங்க. இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள் மட்டும்தானா... இந்த கேள்விக்கெல்லாம் விடை தேட மூதுரை பாடல்களை கொஞ்சம் பார்க்கலாமா...

இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்னு ஏற்கனவே நாம பார்த்திருந்தாலும், அந்த இல்லாள் பற்றிய முற்போக்குச் சிந்தனையை மூதுரையின் ஒரு பாடல் எளிமையாச் சொல்ல வருதுங்க. அது என்னன்னா, ஔவையார் அந்த காலத்திலேயே உறவில் திருமணம் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியிருக்காருன்றதுதான். அப்படி என்ன தான் பாடலில் சொல்லி இருக்காங்க அந்த அம்மானு பார்க்கையில, நாம் நமது வாழ்வை, உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள், சுற்றம் என்று சுருக்கி கொள்ளக் கூடாது. அது ஏன்னா, எப்படி வியாதிகள், நம்மோட உடலோட இந்த உறவுகளைப் போலச் சேர்ந்து பிறந்தாலும். அதுக்கு மருந்துகளா நம்முடன் பிறக்காத எங்கோ மலைகளில் இருக்கும் மூலிகைச் செடிகள் இருக்கிறதோ, அப்படி நமது வாழ்வில் உடன் பிறந்தவர்களாலும் சுற்றத்தாலும் ஏற்படக்கூடிய மனசஞ்சலமானது நமது உறவுக்கு அப்பாற்பட்டு வரும் உறவான மனைவியால் தீரும். மனைவி என்பவள் நமது மனநோயைத் தீர்க்கும் மருந்துன்னு சொல்லி இருக்காருங்க.

இப்ப இந்த கருத்தை வலியுறுத்தும் பாடலைப் பார்க்கலாமா...

"உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு."

இதுமட்டுமா,

இல்லாள் பற்றி வேறு ஒரு பாடலில் ஔவையார் குறிப்பிடும் போது சொல்றாங்க, இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றுமே இல்லையாம். இதை மேம்போக்காக படிச்சமுன்னா, இல்லத்தரசின்னு ஒருத்தி, ஒரு வீட்டில் இருந்தால், அந்த வீட்டில் அது இல்லை இது இல்லைன்னு சொல்லி வருத்தப்பட ஒன்னுமே இருக்காதுன்னு அர்த்தம் வந்தாலும் மறைமுகமாக இன்னொரு பொருளையும் சொல்றாருங்க ஔவையார். இல்லத்தரசியான மனைவி மட்டுமே ஒருத்தன் மனசுல இருந்துட்டா அவன் கிட்ட இல்லைன்னு சொல்ல முடியாத அளவு எல்லா செல்வமும் அவனை வந்து சேரும்ன்றதுதாங்க அது.

அத்தோட நிறுத்தினாரா ஔவையார், இல்லையே.... எப்படி ஒரு நாணயத்தோட இரண்டு பக்கத்துல ஒரு பக்கம் மட்டும் பார்த்து நாணயத்தை மதிப்பிட முடியாதோ, அப்படி இல்லாள் பற்றிய ஒரு கருத்தை மட்டும் வைச்சு நாம இல்லாள் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியாதில்லையா... அதுக்காக இல்லாளின் மறுபக்கத்தைப் பற்றியும் ஔவையார் சொல்லுறார். அப்படி என்ன தான் சொல்றாருன்னு பார்ப்போமா...

"இல்லாள்னு ஒருத்தி ஒரு வீட்டுல இல்லாம போனாலும் சரி, அல்லது இல்லாளாக அமைபவள் எவர்க்கும் அடங்காமல், அனைவரையும் எதிர்த்து கடுமையான சொற்களைப் பேசி பிறர் மனம் நோகும் வகையில் நடந்து கொள்பவளாக இருந்தாலும் சரி, அந்த வீடு புலி தங்கிப் போன புதர் போல சிதைஞ்சு போயிடுமாமுங்க... கருத்தைப் பார்த்துட்டு இந்த கருத்துச் சொன்ன பாடலைப் பார்க்காமப் போனா எப்படி... இதோ இக்கருத்தை வலியுறுத்தும் மூதுரை பாடல்...

"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலிகிடந்த தூறாய் விடும்."

இத்தோடு நிறுத்தினாரா இந்த அம்மா... ஒரு நல்ல இல்லாளின் பிரிவு தரும் வேதனையைப் பற்றிப் பாடும் போது சொல்றாங்க,

"தாயோடு அறுசுவை போம்
தந்தையோடு கல்வி போம்
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்
மாய வாழ்வு உற்றாருடன் போம்
உடன் பிறப்பால் தோள் வலி போம்
பொற்தாலியோடு எவையும் போம்"

இப்படிச் சொல்லி, ஒருத்தன் வாழ்க்கையில ஒவ்வொரு உறவின் பிரிவும், எதையாச்சும் ஒன்னைத்தான் எடுத்துக்கிட்டு போகும், ஆனா இல்லாள் ஒருத்தியோட பிரிவு ஒரு மனுஷனோட வாழ்க்கையில், எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிடும்ன்றார்.

இதையே தான் கண்ணதாசனும் உன் கண்ணில் நீர் வழிந்தால் அப்படின்ற பாட்டுல, இல்லாளின் பெருமையைச் சொல்லும் போது,

"உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால்
சபையில் புகழும் வளர்ந்ததடி" அப்படின்னு சொல்லி,

பிறகு ஒரு மனிதன் வாழ்க்கையில மனைவின்னு சொல்றவ எத்தனை முக்கியம்னு சொல்ல,

"காலச் சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் இன்னல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்" இப்படியும் சொல்லி இருப்பார்.

தான் ஒருத்தி இருக்கும் வரை தன் கணவனுக்கு எந்த குறையுமே இல்லாம அவனை எப்பவும் தாங்கி நிற்கும் சுமைதாங்கியா வாழ்ந்துக்கிட்டு இருப்பவதான் ஒரு மனைவின்றதை கண்ணதாசன் எவ்வளவு அழகாச் சொல்லி இருக்கார் பாருங்களேன்...

இல்லாள் என்பவள் ஒருத்தனுக்கு நல்லவளாக அமைஞ்சுட்டா, அவ இல்லத்தை ஆள்பவள் மட்டுமில்லைங்க... அவனோட உள்ளத்தையும் ஆள்பவள் தான்...

No comments:

Post a Comment