Sunday, October 14, 2012

இன்னுமா இருக்கிறது காதல்?


"காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல் "
 
என்றான் பாரதி. சாவினைத் தேடிக் கொள்ளத் தூண்டும் அளவிற்கு காதல் கொடுமையானது எனப் பாரதி சொல்லியிருக்கிறானே. அப்படி என்னதான் இருக்கிறது இந்த காதலில்? காதல் என்பது உண்மையில் இருக்கிறதா, இல்லையா? எனத் தேடி புரிந்தவற்றை வகையாகச் சொல்லவே இந்த கட்டுரை.
 
காதலைப் பற்றித் தெரிந்து கொள்ள பாரதிக்கு முன்னர் யாரேனும் சொல்லி இருக்கிறார்களா எனத் தேடித் பார்த்தால், இதிகாசங்கள், புராணங்கள், சங்க இலக்கியங்கள் என எல்லாமே காதலைத் தொட்டு சென்று இருப்பதைக் காண முடிந்தது. ஒவ்வொன்றையும் படிக்க படிக்க காதலில் இத்தனை வகையா என ஆச்சர்யமூட்டும் அளவிற்கு தகவல் குவிகிறது. எல்லாவற்றையும் எழுத நேரம் போதாதாகையால் காதலை பண்டைய நூல்கள் சொல்லிய விதத்தினை மேலோட்டமாக பார்த்து விட்டு நகரலாம்.
 
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"  என்று ஒருவனுக்கு ஒருத்தி எனும் கொள்கையோடு இராமாயணம் சென்றால், இன்னொரு பக்கத்தில் மகாபாரதமோ, அர்ஜுனன் திரௌபதி, சுபத்திரை, உலூபி என பல மாதர்களுடன் காதல் புரிந்ததைச் சொல்கிறது. இராமாயணம், சூர்ப்பனகைக்கு ராமன் மேல் எழும் ஒரு தலைக் காதலைச் சொன்னால், மகாபாரதமும், ஊர்வசிக்கு அர்ஜுனன் மேல் எழும் ஒரு தலைக் காதலைச் சொல்லி இருக்கிறது. இதிகாசங்களைக் கடந்தும் பார்த்தோமானால் முத்தொள்ளாயிரத்தின் பல பாடல்கள் காதலையும், காதலின் பிரிவையும், காதலின் பிரிவால் வாடும் காதலர்க்கு வரும் பசலை நோயையும் எத்தனைப் பாங்காய்ச் சொல்லி இருக்கிறது. இவை மட்டுமல்ல இன்னும் எத்தனை எத்தனையோ இலக்கிய நூல்கள் எடுத்துக் கொண்டாலும் அவை அத்தனையிலும் காதல் இழையோடியிருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
 
பொருந்தும் காதலை மட்டுமல்ல பொருந்தாக் காதலையும் நமது முன்னோர்கள் கைக்கிளை, பெருந்திணை என வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது என்ன பொருந்தும் காதல், பொருந்தாக் காதல்? ஒத்த வயதுடைய ஒரு ஆடவனும் பெண்ணும் காதல் புரிந்தார்கள் என்றால் அது உலக வழக்கத்திற்கு பொருந்துவதாக இருப்பதைக் குறிப்பிட அதனைப் பொருந்தும் காதல் என்றும், ஒரு வயது முதிர்ந்த ஆடவன் இளம் பெண்ணைக் காதலிக்கிறான் என்றால் அதனை பொருந்தாக் காதல் (கைக்கிளை) எனவும், ஒரு வயது முதிர்ந்த பெண், இளம் ஆடவன் மேல் கொள்ளும் மையலுக்கு பொருந்தாக் காதல் ( பெருந்திணை) எனவும் குறிப்பிட்டு வந்துள்ளனர் நமது முன்னோர்கள்.
 
இப்படி பலதரப்பட்டதாக கருதப்பட்ட காதலானது இன்று எப்படி இருக்கிறது அல்லது இன்னுமும் காதல் இருக்கிறதா? என நடைமுறையை நோக்குங்கால் நம்மக்களும் பண்டைய குறிப்பேடுகளில் இருக்கும் காதலுக்கு சளைத்தவர்கள் அல்ல என்னும் சொல்லும் வகையில் பலதரப்பட்ட காதலோடு வாழ்ந்து வருகிறார்கள் என்பதே கூடு. கீழே விழுந்த பெண்ணின் கைக்குட்டையை அவளிடம் எடுத்துக் கொடுக்கும் ஆடவனுக்கு அவள் மேல் காதல் வந்து விடுகிறது. முகவரி கேட்கும் பெண்ணுக்கு முகவரி சொல்ல அப்பெண் மேல் காதல் வந்து விடுகிறது சில காளைகளுக்கு. ம்ம்ம், இன்னும் சொல்லப் போனால் ஒருவரை ஒருவர் பார்த்து சில காதல், ஒருவரை ஒருவர் பாராமல் தொலைபேசி, இணையம் வாயிலாக சில காதல்கள், தடுக்கி கீழே விழப் போனவளைத் தாங்கி பிடிக்க சில காதல்கள் என இன்றைய காலத்திலும் வகைவகையானக் காதல்கள். பண்டையக் காலத்தில் அகத்திணையில் குறிப்பிட்ட கைக்கிளை, பெருந்திணைக் காதல்களுக்கும் இன்று பஞ்சமில்லை.
 
பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை காதலில் காமம் கலந்திருந்தாலும் காதலும் காமமும் வெவ்வேறு என வகைப்படுத்துவது தான் எப்படி? உண்மையில் காதல் என்ற ஒன்று, இன்று இருக்கிறதா, அல்லது காமம் மட்டுமே காதலாக கருதப்படுகிறதா? இன்றைய நாளேடுகளில் காதலைப் பற்றிய செய்தி வராத நாளேடு கிடையாது எனலாம். நாடகக் கலையின் வளர்ச்சியாகக் கருதப்படும் சினிமாவோ அப்பப்பா, புது வகைக் காதல்களை நாள்தோறும் உற்பத்தி செய்த வண்ணம் இருக்கிறது. நாளேடுகளும், சினிமாவும் காதலை ஒரு காமத்திற்கான வடிகாலாக சித்தரித்து இன்றைய தலைமுறையினரை காமத்தையே காதல் என்று நம்பும் வகையில் செய்திருக்கிறது எனச் சொன்னாலும் அது மிகையாகாது. உண்மையில் காமம் மட்டும் தான் காதலா? இன்றைய தலைமுறையிடம் காதல் இருக்கிறதா...
 
இந்த கேள்விகளுக்கு பதிலாக, நாம் ஒன்றைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காமம், காதல் இரண்டும் வெவ்வேறு. காதலில் காமமும் இருக்கிறது என்பதுவே அது. காமத்தின் வடிகாலாக இருக்கும் ஒரு விலைமாதுவிடமோ/ விலைஆடவரிடமோ  ஒரு ஆண்/பெண் காமத்தை மட்டுமே பகிர முடியும். ஆனால் ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆணுக்கும் இடையேயான புரிந்துணர்வுடனும், ஒருவர் பிறர் நலம் விரும்புதலுடனும் கூடிய காமத்தில் மட்டுமே காதலை உணர முடியும். இத்தகைய காதலை இன்றையத் தலைமுறையினர் புரிந்து வைத்துள்ளார்களா என்பதை ஒரு சிறு விளக்கம் கூறி இக்கட்டுரையை முடித்து விடுகிறேன்.
 
கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு இல்லை எனப் பதிலைச் சொல்பவர்களைப் பற்றிய கவலைத் தேவையில்லை நமக்கு. ஆனால் இருக்கிறார் எனச் சொல்பவர்கள் அக்கடவுளை எவ்வாறு காண்கின்றனர் என்பதைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியமாகிறது. வெறும் கற்சிலைகளைக் கடவுள் என்று நினைப்பவனால் எப்படி கடவுளைக் காண முடியாதோ, கற்சிலைக்குள் இருக்கும் கடவுளைக் கண்டவன் எப்படி கடவுளைக் குறித்து பேருவகை அடைகிறானோ அப்படியே காதலும்... காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை எனப் பதில் சொல்பவர்களைப் பற்றிய கவலைத் தேவையில்லை நமக்கு. ஆனால் காதல் இருக்கிறது எனச் சொல்பவர்களுள் சிலர் காமத்தை மட்டுமே காதல் எனச் சொல்லி காதலைப் புரிந்து கொள்ளாமலும், காமத்தை தாண்டிய காதலை கண்டவர்கள் காதலால் பேருவகையும் அடைகிறார்கள் என்பதுமே நிஜம்.
 
எப்படி கற்சிலையை மட்டுமே கடவுளாக நம்புவதால் கடவுளுக்கு எந்த பழியும் சேரப் போவதில்லையோ, அப்படி காமத்தை மட்டுமே காதல் என நம்புபவர்களால் காதலுக்கும் எந்த பழியும் சேரப் போவதில்லை... நாம் நம்புகிறோமோ இல்லையோ, காதலும் கடவுளைப் போல நேற்று, இன்று நாளை என கால பாகுபாடின்றி என்றும் நிலைத்து நிற்கும்.
 
வாழ்க காதல்... வளர்க மனிதம்...

No comments:

Post a Comment