Sunday, October 14, 2012

வீரம் - அதீதத்தில் கடைசிப்பக்கமாக வெளியான கட்டுரை


வீரம் என்பது, தன்னை எதிர்ப்பவரை அழிப்பதா? இல்லை, அடுத்தவரை தன் பலத்தால் அடக்குவதா? உண்மையில் வீரம் என்றால் என்ன? வீரன் என்பவன் யார்? கோபத்தில் ஒருவன் கத்தியால் நான்கைந்து நபர்களைக் கொன்று விட்டால் அவன் வீரனாகி விடுவானா? இல்லை தன் பலத்தால் பிறரை அடக்கி தன் ஆளுமையை அவர்கள் மீது நிலைநிறுத்திக் கொள்ளும் ஒருவன் வீரனாகி விடுவானா?


எது தான் வீரம்? யார்தான் வீரர்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேட விழைகையில் ஆய்விற்காக முன் நிற்பது போர் தானே. நமது நாட்டில் தான் ஆரம்பகாலத்தில் இருந்து இன்று வரை எத்தனை விதமான போர்கள் நடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு போரும் தன்னுள் எத்தனை வீரர்களையும், அவர்களது வீர கதையையும் கொண்டிருக்கிறது. அத்தனையும் ஆய்விற்காக எடுத்து விடை தேடுவது என்பது எளிதான காரியம் இல்லை. ஆதலால், சட்டென என் மனதில் தோன்றும் ஒரு போரின் இரண்டு நிகழ்வுகளை மட்டும் இங்கு காணலாம்.


மகாபாரதப் போர். போர் ஏறத்தாழ முடிந்து விட்டது. பதினெட்டாம் நாள் போரில், துரியோதனன் தன் தொடை முறிந்து உயிர் பிரியும் நிலையில் இருக்கிறான். அன்று இரவு சேனாதிபதியாக பொறுப்பேற்கும் அஸ்வத்தாமன் துரியோதனன் உயிர் பிரியும் முன்னே பாண்டவர்களை அழிப்பதாக சபதம் பூண்டு இரவோடு இரவாக பாண்டவரின் பாசறைச் சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த இளம் பாண்டவர்களை, பாண்டவர்களே உறங்குகிறார்கள் என நினைத்து அவர்கள் தலை கொய்து துரியோதனனிடம் வந்து பாண்டவர்களை வீழ்த்தி விட்டதாக பெருமை கொள்கிறான். அந்த அர்த்த ஜாம இரவில் அஸ்வத்தாமன் கொண்டு வந்து போட்ட தலைகளை கூர்ந்து நோக்கிய துரியோதனன், இளம் பாண்டவர்களை கொன்றதற்காக அஸ்வத்தாமனைக் கடிந்தவாறு உயிர் துறக்கிறான்.


அஸ்வத்தாமனுக்கோ துரியோதனன் கடிந்தது பெரியதாகப் படவில்லை. தனது சபதம் நிறைவேறாமல் போனதே என்று கடும் கோபமுற்று என்ன செய்வதென்று புரியாமல் உலாவிக் கொண்டிருந்தான். அதே நேரம் தனது மக்கள் இளம் பாண்டவர்களை அழித்த அஸ்வத்தாமனை அழிக்க வேண்டும் என்ற பாஞ்சாலியின் கதறலுக்கிணங்க அஸ்வத்தாமனைத் தேடி பாண்டவர்கள் வருகிறார்கள். பாண்டவர்களைக் கண்ட அஸ்வத்தாமன் மேலும் சினமுற்று ஆயுதங்கள் ஏதும் இல்லாததால் அருகில் இருந்த தர்ப்பைப்புல்லை எடுத்து மந்திரத்தால் அதனை பிரம்மாஸ்திரமாக்கி, கண்ணன் தடுத்தும் கேளாமல் பாண்டவர்கள் மேல் எய்து விடுகிறான். 


பிரம்மாஸ்திரத்தை தடுக்கும் வல்லமை இன்னொரு பிரம்மாஸ்திரத்திற்கே உண்டென்பதால் அர்ஜுனன், தானும் பிரம்மாஸ்திரத்தை எய்து அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தை தடுக்கிறான். ஒரு பிரம்மாஸ்திரமே உலகை அழிக்கும் வல்லமை உள்ளது. ஆனால் இங்கு இரண்டு பிரம்மாஸ்திரங்களின் பிரயோகத்தால் அண்டம் நடுங்கிக் கொண்டிருக்க கண்ணன் அர்ஜுனனை பிரம்மாஸ்திரத்தை திரும்ப பெறுமாறு கேட்க அதன்படி அர்ஜுனன்னும் பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறான். ஆனால், அஸ்வத்தாமனோ பிரம்மாஸ்திரத்தை எய்ய மட்டுமே அறிந்தவன், திரும்பப் பெறும் வழி அறியாதவனாதலால். அதனை பாண்டவ வம்சத்தின் கடைசி வாரிசாக இருந்த உத்திரையின் கருவின் மேல் திருப்பி கருவை அழித்து விடுகிறான். 


இந்நிகழ்வில் அஸ்வத்தாமன் தனியொரு ஆளாக நின்று, கோபத்தின் உச்சியில் இரவு நேரத்தில் இளம் பாண்டவர்களை அழித்தான், பிரம்மாஸ்திரம் எய்து உலகையே அழிக்கும் வல்லமை படைத்திருந்தான் என்பதால் அவனை வீரன் என்று சொல்லி விட முடியுமா? ஒரு அஸ்திரத்தை முழுமையாக கற்றுக் கொள்ளாமல் உலகையே அழிக்க நினைத்து பின் அதனை பாண்டவர்களின் இறுதி வாரிசாக வரவிருந்த உத்தரையின் கருவுக்கு திருப்பி விட்ட அஸ்வத்தாமன் வீரனா? தான் எய்த பிரம்மாஸ்திரத்தை திருப்பி எடுத்துக் கொண்டால் அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரம் தமது இறுதி வாரிசை அழித்து விடும் என்றும் தெரிந்தும் உலக நன்மைக்காக, எய்த அஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்ட அர்ஜுனன் வீரனா? இங்கு வீரம் என்பது எதில் அடங்கி இருக்கிறது?


இதே போன்று இன்னொரு நிகழ்வு. துரோணர் கௌரவர்களின் படைக்கு தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரம். துரோணர் துரியோதனனுக்கு தருமரைக் கொல்ல மாட்டேன் ஆனால் அவரைச் சிறைப் பிடித்து தருகிறேன் என்று உறுதி அளித்து அதற்காக அர்ஜுனனை தருமரிடமிருந்து பிரித்து தொலைவே அழைத்துச் செல்லுமாறு பணித்தார். அர்ஜுனனும் போரின் உக்கிரத்தில் தான் தனது அண்ணன் தருமரை விடுத்து நெடுந்தொலைவு வந்து விட்டதை அறியாமல் போர் புரிந்து கொண்டிருந்தான். இதுதான் தக்க சமயம் என துரோணர், தருமரைச் சிறைபிடிக்கும் எண்ணத்துடன் சக்கர வியூகம் அமைத்து தருமரை நெருங்கிக் கொண்டிருந்தார்.


வியூகத்தை உடைக்காவிடில் தருமர் சிறைபிடிக்கப்படுவது உறுதி என்னும் நிலைமையில் என்ன செய்வதென்று தெரியாமல் தருமரும், பீமனும் குழம்பிக் கொண்டிருந்தனர். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் மட்டுமே சக்கர வியூகத்தின் உள்நுழையவும், வெளிவரவும் தெரியும். அர்ஜுனனோ தருமரை விடுத்து நெடுந்தொலைவில் போர் புரிந்து கொண்டிருக்கிறான். நிலைமையை உணர்ந்த அபிமன்யு தருமரிடம் சென்று, பெரியப்பா எனக்கு சக்கர வியூகத்தின் உள் நுழையத் தெரியும் ஆனால் வெளியேறத் தெரியாது எனச் சொல்ல தருமர், அபிமயுவை சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழையச் சொல்கிறார். தருமரின் எண்ணம் அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழையும் பொழுது பீமன் முதலிய பல வீரர்களும் உள் நுழைந்து விட்டால் பின் வியூகத்தை எப்படியும் உடைத்து வெளியேறி விடலாம் என்பதாம். 


சக்கர வியூகத்திற்குள் தன்னைத் தவிர வேறு எவரும் உள் நுழைய இயலாவிடில் தான் வெளியேற இயலாது என்று நன்கு தெரிந்த அபிமன்யு தனது பெரியப்பாவைக் காப்பதற்காக தனது உயிரை பணயம் வைத்து சக்கர வியூகத்துள் நுழைகிறான். நுழைந்தவன் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் அனாயசமாகத் தோற்கடித்து சிதறச் செய்கிறான். அபிமன்யுவின் வீரத்தைப் பார்த்த துரோணர் நேர்மையான முறையில் இவனைக் கொல்லுதல் இயலாதென்பதை உணர்ந்து யுத்த முறைக்குப் புறம்பான முறையில் அவனைக் கொன்றும் விடுகிறார்.


இந்நிகழ்வில் அபிமயுவிற்கு தான் சக்கர வியூகத்தின் உள்நுழைந்தால் வெளியேறுவது இயலாது தனது உயிரை இழக்க நேரிடும் என நன்றாகத் தெரியும். இருந்தும் தனது பெரியப்பாவிற்காக, தான் சார்ந்த படையின் நலனுக்காக தனது உயிரைத் தியாகம் செய்யத் துணிந்த அபிமன்யு, வீரனா? வீரனென்றால், இதில் வீரம் என்பது எதைக் குறிக்கிறது?


இரு நிகழ்வுகளையும் மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்து, வீரம் என்பது என்ன? வீரன் என்பவன் யார் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்களேன்...


இன்றைய நமது அன்றாட அலுவலக வேலைகளிலும் நமக்கு மேலதிகாரிகளாக இருப்பவர்களில் சில வீரர்களைக் காண முடியும். இவர்கள் தமது கீழ் வேலை செய்பவர்களிடம் சில வேலையைக் கொடுத்து அவ்வேலையில் இருக்கும் கடின தன்மையைக் கூறி தாமும் தமது சக பணியாளர்களுடன் சேர்ந்து அவ்வேலையை முடித்து வெற்றி காண்பார்கள். 

இன்னும் சில மேலதிகாரிகளோ, தங்களின் கீழ் பண்புரிபவர்களிடம் சில வேலையைக் கொடுப்பார்கள், வேலையைக் கொடுக்கும் பொழுது இந்த வேலை ஒன்றும் கடினமானது இல்லை, இப்படி இப்படி செய்து எளிமையாக முடித்து விடலாம் என்று வாயாலேயே வேலையை முடித்து, நானே செய்து விடுவேன், இருந்தும் உனக்கு அனுபவம் கிடைக்க இவ்வேலையைத் தருகிறேன் எனச் சொல்வார்கள். இந்த மாதிரி சூழநிலையில் அகப்பட்டுக் கொண்ட சில பணியாளர்கள், தங்கள் வேலையை முடிக்கத் தெரியாமல் தம்மால் முடியவில்லை எனச் சொல்லி மேலதிகாரியிடமே அவ்வேலையைத் திருப்பிக் கொடுத்தாலோ, மேலதிகாரி, தனக்கும் அந்த வேலை தெரியாது. நான் சொல்லிய படிச் செய்தால் முடித்து விடலாம் என்று, தான் நினைத்ததாகச் சொல்லி அவ்வேலையை முடிக்க வேறொருவர் உதவியை நாடுவார்கள். இவர்களும் வீரர்கள் தான். வாய்ச்சொல்லில் மட்டும்.!


நாம் உண்மையில் வீரராக இருக்கப் போகிறோமா, வாய்ச்சொல்லில் மட்டும் வீரராக இருக்கப் போகிறோமா. முடிவு நம் கையில் தான்.

அதீதத்தில் படிக்க லிங்க் :http://www.atheetham.com/?p=2689

No comments:

Post a Comment