Monday, July 9, 2012

பயணங்கள் - 2

கோவில் தரிசனம் முடீத்து விட்டு காலைச் சிற்றுண்டி முடித்து ஓட்டல் அறைக்குத் திரும்ப, நண்பனின் உதவியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார் எங்களுக்காய் காத்திருந்தது. அடுத்து நேராகச் சென்றது ஆரோவில். ஆரோவில் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் என்னுடன் வந்த நண்பர்கள் அதனைப் பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தார்கள்.

ஆரோவில், மரங்கள் நிறைந்திருந்தாலும் காற்று வரவில்லை... முதலில் சென்றது ஆரோவில்லின் முகப்பில் கட்டப்பட்டுள்ள ஆரோவில்லைப் பற்றிய புகைப்படங்களும் புத்தகங்களும் இருக்கும் அலுவலகம் போன்ற ஒரு கட்டிடம். ஆரோவில்லின் உள் சென்று பார்த்து வர ஒரு நாள் முன்னதாகவே முன்பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம் என்று பாதுகாவலர்கள் சொன்னதால் வியூ பாய்ன்டிற்குச் சென்று தொலைவிலிருந்து ஆரோவில்லை ரசித்தோம். மாத்ரி மந்திரை தொலைவில் தான் பார்க்க முடீந்தது... அடுத்த முறை முன்னதாக பதிவு செய்து உள்சென்று பார்த்து விட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டீ விட்டது ஆரோவில்.

ஆரோவில்லின் இயற்கைக் காட்சியை ரசித்து முடித்து அடுத்துச் சென்றது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு. வாவ்... என்ன ஒரு பிரம்மாண்டம். பார்க்க பார்க்க கண்களுக்கு விருந்தாக வானுயர நின்றிருந்தார் ஆஞ்சநேயர். பஞ்சவடி ஆஞ்சநேய்ரை தரிசிக்க கண்கள் இரண்டு எனக்கு போதாதாக இருந்தது. ராம ராம என்று மனம் உச்சரிக்கத் தவறாது அச்சூழ்நிலையில். பஞ்சவடியில் இருந்து வெளியே வர கோவில் பிரசாதம் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். சுடச்சுட இருகையளவு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு ரசித்துச் ருசித்துச் சாப்பிட்டோம். நெய் ஏகத்துக்கும் இருந்தது பொங்கலில். என்ன தான் வீட்டில் நெய் அதிகம் விட்டு பதார்த்தங்கள் செய்தாலும் கோவில் பிரசாதங்களுக்கு ஈடு எங்குமே கண்டதில்லை நான்... ஹ்ம்ம்...

பஞ்சவடி ஆஞ்சநேயருக்கு அடுத்ததாக நாங்கள் சென்றது பாதாள காளி கோவிலுக்கு. பஞ்சவடி ஆஞ்சநேயர் பிரம்மான்டம் என்றாள் பாதாள காளி ருத்ர தாண்டவம் ஆடுகிறாள். பாதாளத்தில் இருக்கும் காளியைத் தரிசிக்க தரைத்தளத்திலிருந்து கீழிறங்கி உள் செல்ல உடலுக்குள் நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு... அப்பப்பா, இப்பொழுதும் நினைக்க புல்லரிக்கிறது...காளியின் உக்கிரமும், கோவிலின் உடுக்கைச் சத்தமும், கோவில் முழுதும் நிறைந்திருந்த சித்த்ர்கள் மற்றும் ரிஷிகளின் புகைப்படமும் நம்மையும் அறியாமல் நம்முளே ஏகத்தக்கும் ஒரு அமைதியை ஏற்படுத்தி விடுகிறது. நிச்சயம் பாதாள காளி கோவிலின் தரிசனம் எனது வாழ்நாளில் மறக்க முடியாதது... அனுபவித்தாலேயே அந்த நிலையை உணர முடியும்... எழுத வார்த்தைகள் இல்லை...

அடுத்ததாகச் சென்றது சுண்ணாம்பாறு படகுத் துறைக்கு. நடுப்பகல் வேளையில் படகுத்துறையில் பெடல் போட் செய்த கூட்டம் நாங்களாகத் தான் இருப்போம். அரை மணி நேரம் பெடல் செய்ய வியர்வை மழையில் தெப்பலாக நனைந்து வெளியே வந்தோம்...

அங்கிருந்து நேராக மதிய உணவுக்காகச் சென்றோம்... ஒரு ஆளுக்கு அறுபது ரூபாய்க்கு ஏசி ரூமில் ஒரு முழு மதியச் சாப்பாடு என்பது தேவாமிர்தமாக இருந்தது... மற்ற நகரங்களை ஒப்பிட மனநிறைவாகவும் இருந்தது சாப்பாடு. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டென்பார்கள்... உண்ட களைப்பு தீர ஓய்வெடுக்க எங்களது அறைக்குத் திரும்பினோம்.

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, அரவிந்தா ஆஸிரமம் சென்றோம். மிகவும் அமைதியான ரம்மியமான சூழல் அது. எல்லோர் முகத்திலும் சாந்தம். பெரும்பாலும் வெளி நாட்டினர் அதிகம் வந்திருந்தார்கள். அங்கு அரவிந்தரின் போதனைகளும், அவரது கருத்துகள் அடங்கிய புத்தகங்களும் விற்பனைக்கு பல்வேறு மொழிகளில் வைத்திருந்தார்கள்...

ஆஸிரம் முடித்து அப்படியே மணக்குள விநாயகரின் தரிசனம். உள்ளே கணபதியை தரிசித்து விட்டு வந்து வெளியே கண்பதியிடம்(யானையார்) காசு கொடுத்து ஆசி பெற்றோம். பாண்டிச்சேரி வரை சென்று கடற்கரை செல்லாமல் இருந்தால் என்னாவது? இறுதியாக பாண்டிச்சேரி கடற்கரைக்குச் சென்றோம். மற்ற கடற்கரைகளைப் போல் நீரில் விளையாட முடியாத படி இருந்தாலும் நாம் தடுப்புச் சுவரைத் தாண்டி கல்லின் மேல் மோதிச் செல்லும் கடலலையைத் தொட்டு வந்த போது ,ஏதோ சிறுகுழந்தை பறக்கும் பலூனைத் தட்டி தட்டி விளையாடுவது போன்ற மகிழ்வைத் தந்தது அந்த நிகழ்வு...

எல்லாம் முடித்து, எந்த வேலைக்காக பாண்டிச்சேரி சென்றோமோ, அதான்பா பிரெண்டோட கல்யாண ரிசப்ஷன் அதையும் போய் அட்டென்ட் செய்துட்டு, திருப்தியா ரிசப்ஷன் சாப்பாடை ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டு பெங்களூரு திரும்பினோம்...

விழியன் அண்ணா, ஒரு பயணக் குறிப்பில் சொல்லி இருந்தது போல, பயணங்கள் பல்வேறு அனுபவத்தையும் களைப்போடு சேர்ந்தே தந்தாலும் ஒரு பயணத்தின் முடிவு இன்னொரு பயணத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறது என்பதை இங்கு நினைவு கூர்ந்து அடுத்த பயணத்திற்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்...

No comments:

Post a Comment